தொடர்கள்
தேவ மருத்துவம்... தேவன் எழுத்துலகம்... - வேங்கடகிருஷ்ணன்

20190813170423867.jpg

எழுத்தாளர் தேவன் அவர்கள் எழுதிய கதைகள் நாவல்கள் சிலவற்றை பற்றி இந்த வாரம் முதல் ரசிப்போம். சிறு குறிப்புகளாக அவற்றை ஒவ்வொன்றாக உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் எனக்கு பெருமையும் சந்தோஷமும்!

20190813170535504.jpg

முதலில் ஸ்ரீமான் துப்பறியும் சாம்பு.. எல்லாருக்கும் பிடித்தவர், நன்கு அறிமுகமானவர் என்பதால்... சாம்புவைப் பற்றி தேவன் இப்படி அறிமுகம் செய்வார்... “விளாம்பழம் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? கொஞ்சம் பெரிய விளாம்பழத்தை நினைத்துக் கொள்ளுங்கள்; அதுதான் சாம்புவின் தலை! கன்றுக் குட்டிகள் அழகாகக் காதுகளை முன்புறம் வளைத்துக் கொண்டு பார்க்குமல்லவா? அந்த மாதிரி சாம்புவின் காதுகள் துருத்திக்கொண்டு இருக்கும். கண்கள், ஒரு மாதிரியாக அரைத் தூக்கத்தைத் தேக்கிக் கொண்டிருக்கும். இந்த லட்சணங்களுடன் ஒரு பித்தானில்லாத சட்டை, ஒரு பழைய கோட்டு, கிழிசல் குடை இவற்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இதுதான் சாம்புவின் தோற்றம்.” ஆனால் இப்படி ஒரு தோற்றத்தை கொண்டிருக்கும் கதாநாயகனை வைத்துக்கொண்டு அவர் அடித்திருக்கும் லூட்டி, பாகம் பாகமாய் தமிழ் நாட்டையே சிரிக்க வைத்திருக்கிறது. ஒவ்வொரு வழக்கிலும் இவர் செய்ய, அது நடந்ததா? அல்லது அது நடக்க, இவர் ஏதாவது செய்தாரா? என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவு தற்செயல் கோணங்கித்தனங்கள் முடிவை நோக்கி கதையை இழுத்து செல்லும். சற்று பிசகியிருந்தாலும் அபத்தமான சிறுவர் கதைகளாக மாறி இருக்கக்கூடிய வாய்ப்பு இந்த கதைகளுக்கு உண்டு. ஆனால் தேவன் அவர்களின் மேதைமை அதை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்று விட்டது.

இப்போதும் பெரியவர்கள் நாம் ஏதாவது ஆராய்ச்சி செய்யப் புகுந்தால்... “நீ என்ன பெரிய துப்பறியும் சாம்புவா?” என்று கேட்பார்கள். தேவனின் பாதிப்பு அப்படிப்பட்டது. தேவன், அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளரான வுட்ஹவுஸுடன் ஒப்பிடப்படுபவர்.. ஆனால் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் சொல்வதுபோல் தேவன் வேற மாதிரி, அவர் அதையும் தாண்டியவர்.

20190813170624643.jpg

ஜஸ்டிஸ் ஜெகநாதன்... தேவன் இதை எழுதிய காலத்தில், ஜூரி முறை நடைமுறையில் இருந்தது. தேவன் ஒவ்வொரு ஜூரியையும் நமக்கு அறிமுகப்படுத்தும் முறையே நம்மை வியப்பிலாழ்த்தும். நீதிபதி ஜகந்நாதன் நமக்கு அறிமுகமான பொழுதிலிருந்தே நம்மையும் பிடித்துக்கொள்வார். எல்லா தேவன் கதைகளையும் போல பத்து பக்கங்களுக்கும் மேலே நாம் கதைக்குள் புகுந்து கதை மாந்தர்களோடு சஞ்சரிக்க துவங்கி விடுவோம்.


தான் மாமனாரைக் கொன்ற கொலைக்குற்றவாளியாக அறிமுகமாகும் வரதராஜ பிள்ளை, அப்பாவியா..? இல்லை குற்றவாளியா என்பது கடைசி வரை நம்மை பரபரப்பாகவே வைத்திருக்கும்.... மன்னிக்கவும்... முடிவை சொல்வதாயில்லை... ஜஸ்டிஸ் ஜெகநாதன் என்னை மன்னிக்க மாட்டார்.

(இன்னும் வாசிப்போம்...)