சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டத் தலைநகரங்களில் தனியார் குழும பங்களிப்புடன் இயங்கி வரும் பிரமாண்ட பிரபல ஜவுளிக் கடைகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள், மல்ட்டி பிளக்ஸ் திரையரங்கங்கள், மருந்தகங்கள், ஷாப்பிங் மால்களில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் காலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் நின்றுகொண்டே, வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.
நீண்ட நேரம் நின்றபடியே பணி செய்யும் பெண்களுக்கு, உடல்நலக் கோளாறு மற்றும் மனநல பாதிப்பினால் பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற விற்பனையகங்களில் பெண்கள் அமர்ந்து விற்பனை செய்ய வசதியான இருக்கைகள் வழங்கப்பட வேண்டும் என கடந்த சில வருடங்களாகவே பல்வேறு பெண்கள் நல அமைப்புகள் வலியுறுத்தி வந்துள்ளன.
இந்நிலையில், இத்தகைய பிரச்னைகளுக்கு தீர்வு கொண்டு வரும் வகையில் கடந்த வாரம் தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தமிழக தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில், அமைச்சர் நிலோஃபர் கபில் தலைமையில் இருதரப்பினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பல்வேறு வணிக, வர்த்தக நிறுவனங்களில் நின்றபடியே பணிபுரியும் பெண் ஊழியர்கள் அமருவதற்கு இருக்கை வசதி ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு சட்டத்திருத்தம் கொண்டுவர முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க பிரத்யேக சட்டம், ஜவுளி தொழிலில் ஈடுபடுபவர்கள், டேட்டா என்ட்ரி தொழிலில் உள்ளவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயித்தல், தொழிற்சாலைகளில் ஆதார் அட்டையை வயது ஆதாரமாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தில் கேரள மாநிலம் ஒரு முன் மாதிரி மாநிலமாக திகழ்வதால் அங்கு போலவே தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தும்படி அமைச்சர் உத்தரவிட்டிருப்பதாகத் தெரிகிறது.
தற்போது, சென்னையில்.... மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில பிரபலமான ஜவுளிக் கடைகளில் ஊழியர்கள் அமர்ந்தே வேலை செய்யும் வகையில் நிர்வாக தரப்பினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment
Upload