.
சந்திராயன் 2 விண்கலம் அண்டத்திற்கு சென்று தோல்வி அடைந்து விட்டது என்ற தொய்வில் இறுகிய விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் சொல்ல நேரடியாக பெங்களூரு சென்ற பிரதமர் மோடி, விஞ்ஞானி சிவனை அரவணைத்து ஆறுதல் கூறி... “தோல்வி இல்லை இது வெற்றி தான்” என்ற பிரதமரின் ஆறுதல் வார்த்தைகள் நம் பொறியியல் விஞ்ஞானிகளை விண்ணைத் தாண்டி உயர்த்தியது பெருமையான விஷயம்.
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 15 ஆம் தேதி பொறியாளர்கள் தினம் அனுசரிக்கப் படுகிறது. இந்தியாவில் இந்த தினத்தில் தான், உலகத்தின் சிறந்த இந்திய பொறியாளர் விஸ்வேஸ்வரைய்யா பிறந்த நாள். அவர் பிறந்த தினத்தை இந்திய பொறியாளர் தினமாக கடந்த வருடம் பிரதமர் மோடி அறிவித்தார்.
அதே நாளில் இந்த வருடம் பிரதமர், விஸ்வேஸ்வரைய்யாவை புகழ்ந்து பேசியது மட்டும் அல்லாமல் அனைத்து பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளையும் புகழ்ந்து வாழ்த்தினார்.
கடந்த வாரம் நாம் மைசூர் கிருஷ்ணா சாகர் அணையை காண சென்றோம். தென் மேற்கு பருவ மழையின் தாக்கத்தால் குடகில் இருந்து பெருக்கெடுத்து வந்த காவேரி தண்ணீர் அளவுக்கு மீறி அணையில் நிரம்ப, நாற்பது மதுகுகளையும் திறந்து விட்டதால் ஆக்ரோஷமாக ஆர்ப்பரித்து பெருக்கெடுத்து ஓடி கொண்டிருந்த காட்சி பிரமிப்பை ஏற்படுத்தினாலும் சற்று பயமும் நம்மை கவ்விக் கொண்டது. விகடகவிக்காக நம் கரங்கள் அந்த கண்கவர் திகில் காட்சியைப் படம் பிடித்தது. பெருக்கெடுத்து ஓடின காவேரி தமிழ்நாடு மேட்டூரை அடைந்து வீணாக கடலில் கலந்ததுதான் மிகவும் வருத்தமான விஷயம்.
.
கர்நாடகாவில் அதிகமான தடுப்பு அணைகள் கட்டப்பட்டு, தண்ணீர் சேகரிக்கப் பட்டுள்ளது என்பது பாராட்டுக்குறிய விஷயம். தடுப்பு அணைகளையும் மீறி மதுகுகளை திறந்து விடும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆக்ரோஷமாக பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை பார்த்து மெய்சிலிர்த்துப் போனோம்.
அப்படிப்பட்ட தடுப்பு அணைகள் தமிழகத்தில் இல்லை. முதல்வர் காமராஜர் என்ற மாபெரும் தலைவர் தந்த வரப்பிரசாதம்தான் தமிழகத்தின் அணைகள். அவருக்கு பின் எந்த அணை உருவாகியது என்பது தான் மிகப் பெரிய கேள்வி குறி!
கர்நாடகாவில் பெரிய அணையை கட்ட காரணகர்த்தாவாக செயல்பட்ட பொறியாளர் விஸ்வேஸ்வரைய்யாவின் நினைவுகள் ஏராளம்...!
பாரத் ரத்னா விருதை பெற்ற விஸ்வேஸ்வரைய்யாவின் முழு பெயர் மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரைய்யா. 1861 செப்டம்பர் 15 ஆம் தேதி கர்நாடகாவில் உள்ள முண்டநல்லி கிராமத்தில் பிறந்தார்.
மைசூர் வளர்ச்சிக்கு தன் உழைப்பை கொடுத்தவர், அதனால் நவீன மைசூரின் தந்தை என்று அழைக்கப்பட்டவர்.
கிருஷ்ணா ராஜா சாகர் அணையை கட்டி எழுப்பின முக்கிய முதன்மை பொறியாளர் விஸ்வேஸ்வரைய்யா. அவரின் இந்த சாதனைக்கு தான் பாரத் ரத்னா விருதை வழங்கியது இந்திய அரசு.
மேலும் பிரிட்டிஷ் அரசு இவருக்கு சர் பட்டத்தையும், அரசர் ஐந்தாம் ஜார்ஜ் 1917 வழங்கி கௌரவித்தார் என்பது பெருமையான விஷயம். ஹைதராபாதில் இவரின் பொறியியல் முயற்சியால் வெள்ளம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.
விஸ்வேஸ்வரைய்யாவின் பொறியியல் பணியை பாராட்டி, 1912 முதல் 1918 வரை மைசூர் திவானாக பதவி கொடுக்கப்பட்டு, மைசூர் வேளாண்மை, தொழிற்சாலைகள், கல்வி, வங்கி, வணிகம் மற்றும் நீர்ப்பாசனம் கட்டுமான பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு உலக அரங்கில் மைசூர் உயர்த்தப்பட்டது.
இந்த மாமனிதர் தன் பட்டப்படிப்பை மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் முடித்து, பொறியியல் படிப்பை புனே அறிவியல் கல்லுரியில் பயின்றார்.
1903 ஆம் ஆண்டு தானியங்கி தண்ணீர் வெள்ள வாயில்களை முதன் முறையாக புனாவில் உள்ள கடக்கவாசலில் பொருத்தின பெருமை இவரை சாரும். இந்தியப் புதிய பொருளாதார திட்டத்தை தீட்டியவர் விஸ்வேஸ்வரைய்யா.
1917 ஆம் ஆண்டு விஸ்வேஸ்வரைய்யா பெங்களுருவில் அரசு பொறியியல் கல்லுரியை துவக்கினார். நாளடைவில் இந்த கல்லூரி விஸ்வேஸ்வரைய்யா பொறியியல் பல்கலைக்கழகமாக மாறியது ஒரு சிறந்த தகவல்.
விஸ்வேஸ்வரைய்யா 1962 ஆம் வருடம் ஏப்ரல் 12 ஆம் நாள் பெங்களுருவில் தன் 101 வது வயதில் காலமானார். அவரின் நினைவுகள் இன்றும் இந்தியா முழுவதும் உள்ளது.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க கிருஷ்ணா ராஜா சாகர் அணையில் இருந்து மதகுகளை தாண்டி ஆர்ப்பரித்து ஓடும் வெள்ளத்தில் விஸ்வேஸ்வரைய்யா என்ற மாபெரும் பொறியாளர் நம் கண்ணில் அரூபமாக தென்பட்டார்.
Leave a comment
Upload