இந்தியாவின் உள்துறை அமைச்சர் என்கிற விதத்தில் தான் ஒரு நெஞ்சுரமிக்க தலைவர் என்பதை நிரூபிக்கும் எண்ணத்தில் இருப்பவர் அமித்ஷா. சர்ச்சை எழும் என்பது தெரிந்திருந்தும் முடிவான கருத்தாக அழுத்தம் திருத்தமாக எதைப் பற்றியும் சொல்பவர் அவர்.
‘இந்தி’ பற்றியும் சமீபத்தில் அவர் அப்படித்தான் சொன்னார். “சர்வதேச அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும். இந்தியாவுக்கு பொது மொழியாக ‘இந்தி’ தான் இருக்க முடியும். பெருவாரியான மக்கள் பேசும் மொழி அதுதான்” என்று அமித்ஷா கூறியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல. அனைத்துத் துறைகளிலும் ‘இந்தி’யின் பயன்பாடு அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்!
அவரது உறுதியான இந்த கருத்துக்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி இதர தென் மாநிலங்களிலும் எதிர்ப்புகள் கிளம்பின. மத்திய அரசு மாநில மொழிகளை பின்னுக்குத் தள்ளி இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது என்று அமித்ஷா உடனே புது விளக்கம் தந்திருக்கிறார்.
இந்தியாவின் அடையாளம் என்ன என்பதை உலகம் நன்கு அறிந்ததுதான்! பல மொழிகள், பல பண்பாடுகள், பல கலாச்சாரங்கள், பல மதங்கள் இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை மிளிர்கின்ற நாடாக உலகம் இந்தியாவை புரிந்து கொண்டிருக்கிறது. இந்திய அரசியல்வாதிகள் தான் இன்னமும் அதை புரிந்து கொள்ளவில்லை!
இது ஒரு விஞ்ஞான யுகம். கணினியின் ஆதிக்கத்தில் கற்பனை செய்ய முடியாத சாதனைகள் ஒரு நொடியில் நடக்கும் காலம். மாநிலங்களை இணைக்கவும், மத்திய அரசை மாநிலங்களுடன் இணைக்கவும் கணினியை தகுந்த முறையில் பயன்படுத்த முடியும்! மத்திய மாநில அரசுக்கு கணினியே மொழிகளின் இணைப்புப் பாலமாக அமைக்க முடியும். மக்களைப் பொறுத்தவரையில் தங்களுக்கு தேவையான மொழியை அவர்களாகவே கற்றுக் கொண்டு விடுவார்கள். மத்திய அரசு இதில் தலையிடத் தேவையில்லை.
சுதந்திரம் அடைந்த நாட்டில், ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக்கி அந்நியர் ஆண்டது போல ஒரு மொழி ஆதிக்கம் தேவையற்றது. ‘ஆங்கிலம் கட்டாயமாக திணிக்கப்பட்டால், இந்திய மக்களின் நடை, உடை, பாவனை மாற்றப்படும்! தங்கள் அடையாளங்களை கலாசாரத்தை இந்தியர்கள் மறப்பார்கள்’ என்று அந்நிய ஆட்சி எதிர்பார்த்தது. அதுவே நடந்தது. இந்திய மொழிகள் புறக்கணிக்கப்பட்டன.
அந்த அனுபவம்தான் இன்று ஒரே மொழி பேச்சுக்கு பெரும் எதிர்ப்பு!
மத்திய அரசு, இணைப்பு மொழிக்கு விஞ்ஞான ரீதியில் தீர்வு காண வேண்டும். காலத்துக்கு ஒவ்வாத முயற்சி கூடாது! திணிப்பதற்கு பதிலாக புது அணுகுமுறை பற்றி பாஜக அரசு சிந்திக்க வேண்டும்!
தவமிருந்து பிறந்தவள்!
பெற்றோர் ஆறு வருடம் தவமிருந்து பெற்ற ஒரே பெண் அந்த சுபஸ்ரீ. அவர் ஸ்கூட்டரில் வந்த போது, காற்றில் ஆடிய கட்சி பேனர் பீய்த்துக் கொண்டு அவர் மீது விழ, நிலை தடுமாறி கீழே விழ, தண்ணீர் லாரி அவர் மீது ஏறிவிட்டது! அந்தோ! பரிதாபமாக இறந்து போனார். ரத்த வெள்ளத்தில் இரண்டு மணி நேரம் அந்த அருமைப் பெண்ணின் உடல் சாலையில் கிடந்திருக்கிறது! நெஞ்சு கனக்கிறது. தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாக வந்தும் நடந்த விபத்து இது!
இப்படி கட்சி பேனர்களை சாலைகளில் வைப்பதால் உயிர் பலி நடப்பது இது இரண்டாவது தடவை. மக்கள் வசவும் சாபமும் இப்படி பேனர்களை வைப்பவர்களை சும்மா விடாது!
ஓர் அமைச்சர் பதவி இருக்கும் தைரியத்தில் கூறுகிறார், சாலையில் போவோர் கவனமாக இருக்க வேண்டுமாம்! ஆறுதல் கூற வேண்டிய நேரத்தில், ஏன் இந்த அகம்பாவ பேச்சு? இப்படி அமைச்சர்கள் அலட்சியமாக பேசினால், பேனர் வைத்த ஆளும் கட்சி பிரமுகர் போலீசிடம் சிக்குவாரா?
பேனர்கள் விஷயத்தில், நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். இனி இப்படி சாலைகளில் பேனர் வைத்தால், செல்போனில் வீடியோ எடுத்து, உயர்நீதிமன்ற நீதிபதிகள் பார்வைக்கே மக்கள் அனுப்ப வேண்டும்.
Leave a comment
Upload