ஆன்மீகம்
குலம் தழைக்க, குலதெய்வ வழிபாடு... - ஆரூர் சுந்தரசேகர்

20190820210911350.jpg

“நாள் செய்யாததை கோள் செய்யும். கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்” என்பார்கள்.


குலதெய்வ வழிபாட்டை ஒழுங்காக செய்து கொண்டு வருகிறவர்களுக்கு கிரகங்களால் எந்த கெடுதலும் வராது. குலதெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி உண்டு.


ஒவ்வொருவருக்கும் குலதெய்வங்கள் மாறலாம்.. ஆனால் சக்தி எல்லோருக்கும் ஒன்றாகத்தான் இருக்கும்.

இலக்கியத்தில் குலதெய்வ வழிபாடு:

குல தெய்வ வழிபாடு என்பது இந்துக்களிடம் பழங்காலம் தொட்டே நடைமுறையில் இருந்து வருகிறது. ஒரு தெய்வத்தை அவர்களது முன்னோர் பின்பற்றி வழிவழியாக வணங்கி வருதல் ஆகும்.


குல தெய்வ வழிபாடு பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது.


தொல்காப்பியத்தில் நடுகல் நடும் முறை பற்றி கூறப்பட்டுள்ளது. எனவே குலதெய்வ வழிபாடு, பழங்காலம் தொட்டே நடைபெற்று வந்துள்ளது என்பதை அறியலாம்.

குல தெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம்:

'குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது'.


'குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்கக்கூடாது'.


'குல தெய்வ வழிபாடு ஏழு தலைமுறைகளைக் காக்கும்' என்பது பழமொழிகள்.


குலதெய்வம் தெரியாதவர்கள் அவற்றை கண்டறிந்து, அதற்குப் பிறகாவது குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் அவசியம்.


பூர்வீக ஊரில் இருப்பவர்களுக்கு குல தெய்வத்தை வழிபட எந்த சிக்கலும் இருக்காது. ஆனால், ஊரை விட்டு வெளியேறி நகரங்களில் குடியேறி விட்டவர்களுக்கு, குல தெய்வ வழிபாடு செய்வது என்பது அரிதான ஒன்றாகிவிட்டது.


முன்பெல்லாம் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் நமது குலதெய்வம் பற்றியும், குலதெய்வ வழிபாட்டின் அவசியம் பற்றியும் நமக்கு எடுத்துச் சொல்வார்கள். ஆனால், இன்று சிலருக்கு குலதெய்வம் எது என்றே தெரியாமல் போய்விட்டது. இப்போது கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை மாறிவிட்டதால், குலதெய்வம் பற்றிய விவரங்களை குடும்பப் பெரியவர்களிடம் கூட கேட்டுத் தெரிந்துகொள்ள முடியாத சூழ்நிலை எற்பட்டுள்ளது.


தெய்வங்களில் மிக்க வலிமையுள்ள தெய்வமும் குலதெய்வம்தான். குலதெய்வமே நமக்கு அருளைத் தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களும் வேண்டுமெனில், குலதெய்வ வழிபாடு முக்கியம்.


ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிகவும் முக்கியம்.

குல தெய்வ வழிபாடு முறை எதற்கு:

குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம் கூடவே இருந்து வழிநடத்தும் சக்தி கொண்டது.


ஒரு குடும்பத்தில் குழந்தைக்கு முதல் மொட்டை அடித்து, முடி காணிக்கை செலுத்துவது, குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குவது இன்றுவரை வழக்கமாக வந்துள்ளது. சுப நிகழ்ச்சிகளை துவங்குபவர்கள் குலதெய்வம் கோயிலுக்கு உடனே செல்ல முடியாவிட்டால், குலதெய்வத்தை நினைத்து அவர்கள் குடும்ப வழக்கப்படி பணத்தை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் போது செலுத்தி வருவது நடைமுறையில் உள்ளது.


வீட்டில் எந்த விதமான சுபகாரிய பத்திரிக்கையில் குலதெய்வத்தின் பேரைக் குறிப்பிடுவது சம்பிரதாயம்.


அண்ணன், தம்பி குடும்பத்தினர் எல்லாரும் ஒற்றுமையாக நின்று வழிபாடு செய்யும்போது குலதெய்வங்கள் மட்டுமின்றி குலதெய்வங்களை வழிபட்ட முன்னோர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்து, அவர்களின் பரிபூரண ஆசி எளிதாக வந்து சேரும்.


குலதெய்வத்தை வழிபடாமல் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. என்ன தான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் முழுமையான பலன் கிடைப்பது என்பது அரிது.

வீடுகளில் குலதெய்வத்தின் படம்:


உங்கள் வீடுகளில் உள்ள பூஜை அறையில் உங்கள் குலதெய்வத்தின் படம் இடம் பெற வேண்டும். உங்களின் வேண்டுதல்களை உங்களின் குலதெய்வத்திடம் சொல்லி வேண்டினால் அனைத்து வேண்டுதல்களையும் அந்த குலதெய்வம் உங்களுக்கு தீர்த்துவைக்கும்.


உங்கள் வீட்டிலேயே மாதந்தோறும் பெளர்ணமி அன்று குலதெய்வ படத்தை வழிபாடு செய்யுங்கள். நிச்சயமாக உங்கள் குலதெய்வத்தின் அருளாசி உங்கள் குடும்பத்துக்கு கிடைக்கும்.

குலதெய்வ பிரார்த்தனை:

“ரோகாச் சோகாச் ச தாரித்ர்யம் தெளர்பல்யம் சித்தவிக்ரியா
நச்யந்து குலதேவஸ்ய சக்தி மந்த்ரேண தாடிதா:”


பொருள்:
ரோகம், துக்கம், வறுமை, பலவீனம், மனநோய் ஆகியவற்றை அழிக்கக்கூடிய சக்தி வாய்ந்த மந்திர வடிவாகத் திகழும் குல தேவதையை வணங்குகிறேன்.


அவரவர் குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து கொண்டு தினமும் இத்துதியை பாராயணம் செய்து வந்தால் குலதெய்வ அருள்கிட்டும்.


பெண்களுக்கு இரண்டு குலதெய்வம்:


பெண்கள் அனைவரும் தங்களின் திருமணம் முடிந்த பிறகு, பிறந்த விட்டு குலதெய்வத்தையும், புகுந்த வீட்டு குலதெய்வத்தையும் வணங்கி வந்தால் பலன்கள் இரட்டிப்பாகும். பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வாழ வழி வகுக்கும்.

குலதெய்வ வழிபாட்டின் நம்பிக்கைகள்:

குலதெய்வ வழிபாட்டினை மேற்கொள்வதால் தங்கள் குடும்பத்திற்கு எவ்வித குறையும் ஏற்படாது. வளமையான வாழ்க்கை கிடைக்கும். வருடத்திற்கு ஒரு முறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்தை வழிபட்டால், நம்முடைய குலம் தழைத்து, வரும் சந்ததியினருக்கு சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கும்.


நீங்கள் ஒருவேளை குலதெய்வ வழிபாட்டை மறந்து இருந்தால், முதலில் மீண்டும் தொடங்குங்கள். வேறு எந்த தெய்வமும் அதற்கு இணை இல்லை.

குல தெய்வ வழிபாடு குறித்து மகா பெரியவா:

குலதெய்வ வழிபாடு எவ்வளவு அவசியம் என்பதை பற்றி காஞ்சி மகா பெரியவா ஒரு பக்தரிடம் எடுத்துக் கூறியதை இங்கே பார்ப்போம்...


ஒருமுறை மகா பெரியவா யாத்திரை மேற்கொண்டிருந்தார். ஒரு கிராமத்தில் அவர் முகாமிட்டிருந்தபோது, ஒரு விவசாயி அவரை மிகுந்த சோகத்துடன் தரிசிக்க வந்திருந்தார்.


வந்திருந்த விவசாயி முகத்தைப் பார்த்ததுமே மகா பெரியவா அவருடைய நிலைமையைப் புரிந்துகொண்டார். அவரை அருகில் அழைத்து “என்ன பிரச்னை உனக்கு?” என்று கேட்டார் மகா பெரியவா.


பெரியவா கேட்ட உடனேயே, விவசாயியின் கண்ணில் இருந்து வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவர் பேச ஆரம்பித்தார்...


“சாமி, குடும்பத்திலும் ஏகப்பட்ட பிரச்னைகள், விவசாயமும் சரி இல்ல, இதை எல்லாம் போக்க நீங்கதான் ஒரு வழி சொல்லணும்” என்றார்.


அதற்கு மகா பெரியவா, “குலதெய்வக் கோயிலுக்கெல்லாம் அடிக்கடி போய் வர்றியா”என்று கேட்டார்.


விவசாயியோ, “என்ன சாமி சொல்றீங்க? குலதெய்வக் கோயில் எங்க இருக்குன்னே எனக்குத் தெரியாது” என்றார். “எங்க முன்னோர்கள் எல்லாம் பர்மாலதான் இருந்தாங்க. அங்க இருந்து எங்க குடும்பம் மட்டும்தான் இங்க திரும்பி வந்தோம். எங்க பாட்டனார் ஒருத்தருக்கு இந்த சாமி நம்பிக்கை எல்லாம் இல்லை. அவருக்கு அப்புறம் வந்தவங்களும் அப்படியே இருந்துட்டாங்க. ஏதோ எங்க தலைமுறையிலதான் கோயில், கடவுள்னு கொஞ்சம் போயிட்டு இருக்கோம் சாமி” என்றார்.


“வீட்டுல வேற பெரியவங்க யாருமே இல்லையா?” என்றார் மகா பெரியவா.


“சாமி, எங்க பாட்டனார் ஒருவர் இன்னும் உயிரோடத்தான் கிராமத்தில் இருக்கார்” என்றார் விவசாயி.


“சரி, நீ போயி அவர்கிட்ட கேட்டு குலதெய்வத்தை வழிபடுப்பா” என்றார் மகா பெரியவா.


விவசாயியோ “சாமி, எவ்வளவோ சாமி இருக்கு. அதையெல்லாம் கும்பிடாம எங்க இருக்குன்னே தெரியாத குலசாமியைத் தேடிப் புடிச்சு கும்பிடணுமா” என்றார்.


மகாபெரியவா, “பாத்திரத்துல அடிப்பக்கம் இல்லாம நீ அதுல எவ்வளவு தண்ணி புடிச்சாலும் பாத்திரத்துல ஒரு சொட்டு தண்ணி கூட நிக்கப் போறது இல்ல. அந்த மாதிரிதான் நீ எத்தனை தெய்வத்த கும்பிட்டாலும், குலதெய்வ வழிபாடு இல்லைன்னா, எந்த பலனும் கிடைக்கப் போறது இல்லை. அதுக்கு என்ன காரணம்னு உனக்கு நான் அப்புறமாச் சொல்றேன்... முதல்ல நான் சொல்றதச் செய்” என்று சொல்லி பிரசாதம் கொடுத்து அனுப்பினார்.


அந்த விவசாயியும் ஒரு மலை அடிவாரத்துல இடிஞ்சு போய் புதர் மண்டிக் கிடந்த இடத்தில் குலதெய்வமான பேச்சியம்மனை கண்டுபுடிச்சு, வணங்கிட்டு மகா பெரியவாளை தரிசிக்க வந்தார்.


நடந்ததை எல்லாம் மகா பெரியவாகிட்ட சொன்னார்...


அதைக் கேட்ட மகா பெரியவா, “அந்தக் கோயிலை அப்படியே விட்டுடாத, நல்லா சீரும் சிறப்புமா அங்க ஒரு கோயிலைக் கட்டு. உனக்கு எந்தக் கஷ்டமும் வராது. பேச்சியம்மன்தான் உனக்கும் உன் குடும்பத்துக்கும் இனி எல்லாம். பேச்சியம்மன் மனசு குளிர்ந்தா உன் வாழ்க்கை ஒளிரும்னு” சொல்லி அனுப்பி வைத்தார்.


ஒரு வருடம் ஆனது, ஒரு தட்டில் பூ, பழம், பணம் என்று செல்வச் செழிப்போடு மகா பெரியவாளைப் பார்க்க வந்தார் அந்த விவசாயி.


“சாமி, இப்ப நான் சந்தோஷமா இருக்கேன். உங்க வழிகாட்டல்தான் என்னோட இந்த நிலைமைக்கு காரணம். பேச்சியம்மன் புண்ணியத்துல ரொம்ப செல்வச் செழிப்போட இருக்கேன் சாமி” என்றவர் தொடர்ந்து,


“சாமி, எப்படி சாமி என் வாழ்க்கையில இவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டுச்சு? அந்த ரகசியத்த மட்டும் கொஞ்சம் சொல்லுங்க சாமி'” என்றார் ஆவலோடு.


மகா பெரியவாளும் குலதெய்வ வழிபாடு பற்றி கூற ஆரம்பித்தார்... “நம் முன்னோர்கள் வணங்கிய தெய்வம்தான் நம் குலதெய்வம். முன்னோர்கள் என்றால், நம் தந்தை வழி முன்னோர்களையே நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதுதான் ‘கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிப்பாதை. நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாக வந்த நம் பாட்டிகள் வேறு கோத்திரத்தில் இருந்துதான் வந்திருப்பார்கள். அதனால் ஆண் வழியாகவே குலதெய்வம் அறியப்படுகிறது. இந்த ரிஷி பரம்பரை ஒரு சங்கிலித் தொடர் போல அறுபடாமல் இருக்கும்.


எனவே குலதெய்வத்தை வணங்கும்போது, மற்ற எல்லா கோயில்களுக்கும் சென்று வழிபட்டும் கிடைக்காத பலன்கள் கிட்டும். பக்தி என்னும் ஒன்று உருவாவதற்கு முன்பே நாம் குலதெய்வத்தை வணங்கியிருப்போம். குலதெய்வக் கோயிலில் நாம் நிற்கும்போது, நம் பரம்பரையின் வரிசையில் நிற்பதாக அர்த்தம். இந்தத் தொடர்பை வேறு எப்படியும் உருவாக்கிட முடியாது” என்றார்.


தொடர்ந்து, “மேலும் ஒரு குடும்பத்துக்கு இறை சக்தியானது குலதெய்வ வடிவில்தான் கிடைக்க வேண்டும் என்று வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வேறு, நாம் வேறு அல்ல. எனவே அவர்களைத் தொழும்போது பித்ருக்களாக விண்ணில் இருந்து நம்மை நம் முன்னோர்கள் ஆசிர்வதிப்பார்கள். நாமும் நலமுடன் வாழலாம்” என்று குலதெய்வத்தின் மேன்மையைச் சொல்ல, விவசாயி மட்டும் அல்லாமல் வந்திருந்த அனைவரும் குலதெய்வ வழிபாட்டின் மேன்மையை உணர்ந்து கொண்டனர்.


நாமும் குலதெய்வ வழிபாட்டின் மேன்மையைப் புரிந்துகொண்டு குலதெய்வத்தை வழிபட்டு, நமக்கும் நம் சந்ததியினருக்கும் நன்மைகள் தழைத்திட வேண்டுவோம்.