கவிதை
சீருடையேனும் அணிந்தாள் இன்று...! - பாலா

20190821012848881.jpeg

சுள்ளி பொறுக்கடி..
தாய்குரல் ஒலிக்கிறது..!

புத்தகப்பை எடுத்து
புத்தகங்கள் அடுக்கி
சீருடை உடுத்தும்முன்
சிறுமியின் தாயவள்
சிற்றேவல் சொன்னாளோ..!

புதியதொரு நாள்பிறக்க
புத்தகங்கள் தோள்சுமக்க
தன்பள்ளி பிள்ளைகள்
தன்னைக் கடந்த போது
தன்நிலை எண்ணிச்
சிறுமி சிதைந்தாளோ..!

இன்னும் போகலையாடி..?
தாய்குரல் ஒலிக்கிறது..!

சுள்ளி காணலையே..!
உன்அப்பன் வந்திடுவான்
உலையே வைக்கலையோ
எனகொலையே செய்திடுவான்..!

புத்தகப்பை வைத்தாள்..‌!
சுள்ளிக்கூடை எடுத்து
கள்ளிக்காடு சென்று
அள்ளியதை நிரப்பினாள்..!

தாய்சொல் தட்டாமல்
தன்வேலை முடித்திட்டாள்..!

சீருடை அணிந்தவள்
செருக்காக வீதியிறங்க...

பசுஞ்சாணி பொறுக்கடி..!
தாய்குரல் ஒலிக்கிறது..!

பள்ளிப் பொழுதெல்லாம்
இன்று இனியில்லை..!
நல்ல பொழுது இனி
நாளை வருமென்று
நம்பிக்கை கொள்கிறாள்..!

நன்றி சொல்கின்றாள்...
சீருடையேனும் இன்று
அணிந்தேன் என்று..!!