அது ஒரு பொன்மாலைப் பொழுது..
ரம்மியமான தென்றல் காற்று வீசிக்கொண்டிருந்தது. திருமலையில் குடில் அமைத்து வாழ்ந்து வந்தார் பாவாஜி.
தினமும் அதிகாலையிலேயே எழுந்து, அங்குள்ள திருமலை உள் குளத்தில் நீராடி விட்டு ஏழமலையானை தரிசனம் செய்து விட்டு, தன் வீட்டு திண்ணையில் வந்தமர்ந்து தனியாக எதிரில் யாருமில்லாமல் தாயக்கட்டை விளையாடுவார் பாவாஜி. உண்மையில் அவர் மட்டும் தனியாக விளையாடுவதில்லை. எதிரில் ஏழுமலையானும் அமர்ந்து விளையாடுவார். ‘இது என் ஆட்டம்.. இது சுவாமி வேங்கடநாதன் ஆட்டம் என்று இடம் மாறி மாறி அமர்ந்து தாயம் உருட்டுவது பாவாஜியின் வழக்கம். விளையாட்டில் தனக்கு வெற்றி கிடைத்தால் மகிழ்ச்சி அடைபவர், எதிர்புறம் வேங்கடநாதன் வெற்றி பெற்று விட்டால் பேரானந்த அடைவார்.
ஒருநாள்.. பாவாஜி தான் மட்டும் தனியாக, வழக்கம் போல தாயம் விளையாடிக் கொண்டிருந்தபோது……சற்றும் எதிர்பாராத அந்த தருணத்தில் பாவாஜி வீட்டின் உள்ளே தீடீரென ஒரு பிரமாண்டமான பளிச்சென, பிரகாசமான ஒளியும், மிக ரம்மியமான நறுமணமும் சட்டென பரவியது. தொடர்ந்து அங்கு திருமலை வேங்கடநாதன் விக்கிரகம் தோன்றியது.
பாவாஜி திக்குமுக்காடி போய் வந்திருப்பது திருமலை அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகன் வேங்கடநாதன் என்று உணர்வதற்குள். அந்த விக்ரத்திலிருந்து ஒரு குரல், “என்ன பாவாஜி! என் விளையாட்டை நான் விளையாடலாமா?”
உற்சாகமும், மகிழ்ச்சியின் உச்சிக்கும் போன பாவாஜி, அந்த விக்கிரகத்தை கையில் எடுத்து மார்போடு சேர்த்து அணைத்து எடுத்துச் சென்று மான் தோல் ஒன்றின் மீது நிற்க வைத்தார்.
பக்திப் பரவச நிலையில் மெய்மறந்து அமர்ந்திருந்த பாவாஜியைப் பார்த்த இறைவன், “என்ன பாவாஜி.. விளையாடப் போகிறாயா அல்லது நான் கிளம்பட்டுமா?” என்று சிரித்தவாறே கேட்டிருக்கிறார். அவசர அவசரமாக தாயக்கட்டையை உருட்டத்தொடங்கினார் பாவாஜி.
தன் எதிரே வந்திருப்பது எம்பெருமான் என்பதால், பாவாஜியின் மனம் இறைவனை ரசிப்பதிலும், அவர் அழகிய ரம்மியமான தேவக் குரலைக் கேட்பதிலுமே ஆழ்ந்திருந்ததால், தாய விளையாட்டில் கவனம் செலுத்த முடியவில்லை. தாறுமாறாக தவறாக விளையாடினார். எதிரில் இருக்கும் வேங்கடநாதனின் நிலை அதைவிட படுமோசமாக இருந்தது!. தன் பக்தனின் பக்தியையும்,ஆனந்தத்தையும் நினைத்து அளவில்லா இன்பத்தில் திளைத்திருந்த சுவாமியும், பாவாஜியை விட மோசமாக விளையாடிக்கொண்டிருந்தார். கடைசியில் எம்பெருமான் வேங்கடநாதன் தோற்றுப் போனார்!.
“பாவாஜி.. நீ வென்று விட்டாய். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்” என்றார் இறைவன்.
“வேங்கடநாதா! அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகா!! உன் குரலைக் கேட்பதை விடவும், உங்களையே தரிசித்துக் கொண்டிருப்பதை விடவும் பெரிய வரம் என்ன வேண்டும்? உங்களுடைய பிரமாண்ட விஸ்வரூப வடிவத்தை எனக்குக் காட்டினால் அதுவே எனக்குப் போதும்” என்றார்.
அவருடைய ஆசையை நிறைவேற்றினார் ஏழுமலையான்.
பாவாஜியும், இறைவனும் சேர்ந்து தாயம் விளையாடுவது தொடர்ந்தது. தன் பக்தன் பாவாஜியின் பக்தியை உலகம் உணரச் செய்ய விரும்பினார் வேங்கடநாதன். அதற்காக வழக்கம்போல் விளையாட்டு முடிந்து, தான் புறப்படும்போது, தன் கழுத்தில் இருந்த எம்பெருமானின் ரத்தின மாலையை பாவாஜியின் வீட்டிலேயே விட்டுச் சென்று விட்டார்.இதை தாமதமாகக் கவனித்த பாவாஜி, எம்பெருமானே வந்து எடுத்துச் செல்வார் என்று நினைத்தார். இறைவன் எம்பெருமான் வரவே இல்லை!!.
மறுநாள் அதிகாலையிலேயே எம்பெருமான் நகையை அவரிடம் சேர்ப்பிக்க அவசர அவசரமாக திருமலை கோவிலை நோக்கி ஓடினார் பாவாஜி.
அங்கோ ஒட்டு மொத்தக் கோவிலும் பதட்டத்தின் உச்சியில் இருந்தது. “வேங்கடநாதன் கழுத்தில் இருந்த விலை மதிப்பற்ற ரத்தின மணி மாலையைக் காணவில்லை” என்ற தகவல் ஊருக்குள்ளும் காட்டுத்தீயாய் பரவியது. ஒட்டு மொத்த ஊரும் அங்கே திரண்டிருந்தது.
அதற்குள் திருமலை கோயில் எககளேபரம் நிகழ்ந்து….பதற்றத்தின் உச்சியில் கோயில் நிர்வாகத்தினர் இருந்தனர்!
பாவாஜியின் கையில் இருந்த ரத்தின மாலையைப் பார்த்து விட்ட பக்தர் ஒருவர், “திருடன்.. திருடன்” என்று சப்தமெழுப்பினார். அவரைப் பிடித்து வைத்து, “ஏன் நகையைத் திருடினாய்?” என்று ஆளாளுக்கு கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். நிலைகுலைந்து போனார் பாவாஜி. இதயமே நின்று விடும் போலிருந்தது. நடந்த உண்மையை எவ்வளவோ எடுத்துக் கூறியும் யாரும் கேட்பதாக இல்லை. திருட்டுப் பட்டம் கட்டி மன்னரிடம் இழுத்துச் சென்றனர்.
நடந்ததைச் சொன்னார் பாவாஜி. மன்னனால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. குழம்பிப் போனான்.
பாவாஜியைப் பார்த்து, “பாவாஜி.. இறைவன் நிஜமாகவே உன்னுடன் வந்து தாயம் விளையாடியது உண்மை என்றால் அரண்மனையில் உள்ள நிலவறையில் ஒரு வண்டி நிறையக் கரும்பு உள்ளது. அதனை இன்று இரவுக்குள் நீ முழுவதும் தின்று தீர்த்து விட வேண்டும். அப்படிச் செய்தால் நீ நிரபராதி என்று ஏற்றுக் கொள்கிறேன். இல்லையென்றால் திருட்டு குற்றத்திற்காக பெரிய தண்டனை நிச்சயம்” என்று உத்தரவிட்டார் மன்னர்.
பாவாஜி கூறியது உண்மை என்றால் வேங்கடநாதனே வந்து உதவட்டும் என்று மன்னன் நினைத்தான்.
நிலவறைக்குள் அடைக்கப்பட்ட பாவாஜி வேங்கடநாதனை மனதுக்குள் நினைத்து தியானித்தான். “நான் நிரபராதி என்பது உனக்குத் தெரியும். எம் பெருமானே.. இனி என்ன நடந்தாலும் அது உன் விருப்பம்” என்று கூறிவிட்டு அங்கேயே ஒரு மூலையில் படுத்து ஆழ்ந்து உறங்க ஆரம்பித்தாஅர்.
ஒட்டு மொத்த அரண்மனையும் ஆழ்ந்த உரக்கத்திலிருந்த போது யானை உருவத்தில் நிலவறைக்குள் நுழைந்தார் ஏழுமலையான். அத்தனைக் கரும்பையும் உற்சாகத்துடன் தின்று தீர்த்து விட்டு ஆனந்தப் பிளிறலையும் எழுப்பினார். பூட்டிய அறைக்குள் இருந்து யானை பிளிறும் ஓசை எப்படி வரும் என்று வெளியில் இருந்த காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்தக் கதவை உடைத்துத்தள்ளி வெளியே வந்த யானை, மன்னன் இருந்த ராஜ சபை வரை வேகமாகச் சென்று திடீரென மாயமாக மறைந்தது.
இது எதுவுமே தெரியாமல் பாவாஜி நன்கு ஆழந்து தூங்கிக் கொண்டிருந்தார். மன்னருக்குத் தகவல் சென்றது. அவர் ஆனந்தக் கண்ணீர் வடித்து பாவாஜியை விடுதலை செய்து, ராஜமரியாதையுடன் அனுப்பி வைத்தார்.
அதுமுதல் அவரை அ(ஹா)திராம் என்று அழைக்க ஆரம்பித்தனர். அ(ஹா)தி என்றால் யானை என்று பொருள்.
அவருடைய நினைவாக திருமலை கோவிலுனுள் தெற்குப் புறத்தில் ஒரு மண்டபம் கட்டப்பட்டது. இன்றும் அது உள்ளது.
- ஆர். ராஜேஷ் கன்னா.


Leave a comment
Upload