துளித் துளியாய்….
- பாகி
கோயில் மணியடிக்கும்போது, வெளியே பலத்த மழை பெய்துகொண்டிருந்தது. நல்ல வேளையாக உள்ளே நுழைந்தவன், கோயில் மணியைக் கேட்டு சன்னதி பக்கம் திரும்பினேன்.
“செம மழை..!” என்று சொன்னபடியே உள்ளே நுழைந்தார் அண்ணன் சோமசுந்தரம். குடையை மடித்து ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு, என்னைப் பார்த்ததும், “மழை வந்தாலும் கஷ்டம், இல்லைன்னாலும் சிரமம்தான்..” என்றார்.
அர்ச்சகர் பெருமாளுக்கு கற்பூர ஆரத்தி காட்டியபோது நாங்கள் இருவரும் பய பக்தியோடு கன்னத்தில் போட்டுக் கொண்டோம்.
துளசியும் தீர்த்தமும் பெற்று இட்டுக் கொண்டு பிராகாரத்தைச் சுற்றி வந்து ஆற அமர்ந்தபோது, தன்னிடம் இருந்த சின்ன துண்டினால் தலையைத் துவட்டிக் கொண்டு செருமினார் சோமசுந்தரம்:
“குடையை வெச்சிருந்தாலும் நனைஞ்சுட்டேன் நாராயணா… அப்படி ஒரு மழை. நம்ம குழந்தைங்க மழையே மழையே வான்னு தமிழ்லே ரைம் பாடுவாங்க. வெள்ளைக்காரப் பசங்க ரெயின் ரெயின் கோ அவேன்னு போகச் சொல்றாங்க.. அவங்களுக்கு மழை வேணாம். நமக்கு வேணும்லே… ஆனா, பெய்யச்சே கஷ்டமாத்தான் இருக்கு..” என்றார்.
“ஆமாண்ணே, ஆயர்பாடியா இருந்தா, கிருஷ்ணன் கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்து தடுத்திருப்பார். இது சென்னையாச்சே…”
உடனே, சோமசுந்தரம் அண்ணன், “நாராயணா, ந்த வருஷம் வழக்கத்தை விட அதிகமா பெய்யும்னு வெதர் ஆபீஸ்லே மட்டுமில்லே தனியார் வெதர் எக்ஸ்பர்ட் கூட சொல்லிட்டாங்க.. அதே சமயம் புயல், காற்றழுத்தத் தாழ்வுநிலையெல்லாம் வரப்போகுதுன்னு பயமுறுத்தறாங்க..” என்றபடி எழுந்து வெளியே கையை நீட்டி மழை பெய்கிறதா என்று உறுதி செய்துகொண்டார்.
மழை நிற்கவில்லை, மீண்டும் கொட்டப் போகிறது என்பதைப் புரிந்து சன்னதி ஓரம் சென்று உட்கார்ந்தார். நானும் அவரைத் தொடர்ந்தேன்.
“இந்த பூமி உருவானபோது, சூடு ஆறினப்புறம் சுமார் 100 வருஷத்துக்கு விடாம மழை பெஞ்சுதுன்னு விஞ்ஞானிகள் பதிவு செய்துருக்காங்க…”
ஃபார்முக்கு வந்துவிட்டார் அண்ணன் என்பதைப் புரிந்து கொண்டேன்.

“நாராயணா, மழைத் துளி எப்படி இருக்கும்?” என்று குவிஸ் மாஸ்டரைப் போல் கேட்டார்.
நான் வழக்கம்போல் “பாஸ்..” என்று கூற நினைத்து, சட்டென்று, “கண்ணீர்த் துளி போலதானே.. ? கவிஞர்கள் பாடியிருக்கிறார்களே…!” என்று சொல்லி முடிப்பதற்குள்,
“அதான் இல்லே.. ஒவ்வொரு துளியும் பன் வடிவத்திலோ, சில சமயம் ஆப்பிள் வடிவத்திலோ இருக்கும்… இதை ovular shape அப்படின்னு சொல்றாங்க” என்றார்.
“அண்ணே, மதன்சார் நிச்சயம் தன்னோட ஹாய் மதன் பகுதியில் மழையைப் பத்தி எக்கச்சக்கமா நிறைய தகவல்களைப் பொழியப் போறார். அதுக்குத்தான் ஆவலா காத்திருக்கிறேன். அண்ணே நமக்கு மழை தேவை. அதனாலதான், மழையைக் கடவுளா வணங்கறார் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள்”
இப்படி இலக்கியம் பேச ஆரம்பித்தேன். சோமு அண்ணன் விழிகள் விரிந்தன.
“சிலப்பதிகார பாயிரத்தில், அதாவது கடவுள் வாழ்த்துப் பகுதியில் மாமழை போற்றுதும்னு இளங்கோவடிகள் பிரார்த்தனை செய்யறார்.. எல்லாருக்கும் தெரியுமே..”
தொடர்ந்து, “சங்க காலத்துலே நல்ல மழை பொழியணும்னு மன்னர்கள் இந்திர விழா எடுக்கிற முறையும் இருந்திருக்கு.. “ என்றேன்.
ஏதோ நினைத்தவர் திடீரென்று கேட்டார் சோமு அண்ணன்:
“நாராயணா, மழை வான வெளியிலேருந்து மணிக்கு 35.5 கி.மீ. வேகத்துலே வந்து விழும். ஒரு துளியின் சைஸ் 0.1 மி.மீட்டர்லேந்து 9 மி.மீ. வரையில் இருக்குமாம்..” என்று சொன்னார்.
உற்சாகமாக அண்ணன் சோமு ஏதாவது பேசும்போது, அவரது வாயிலிருந்து சொற்கள் மட்டுமின்றி எச்சிலும் மழையாகப் பெய்கிறது, அடிக்கடி முகத்தைத் துடைத்துக் கொள்ள நேர்ந்தது எனக்கு.
தொடர்ந்து, “பூமியிலே மட்டுமில்லை. மத்த கிரகங்களும் மழை பெய்யும்னு விஞ்ஞானிங்க சொல்றாங்க. ஆனா, நம்ம மழை மாதிரி இல்லே.. உதாரணத்துக்கு…வெள்ளி கிரகத்துலே கந்தக மழை பெய்யுதாம்..” என்றார் சோமு அண்ணன்.
“அண்ணே, கடந்த 2015லே சென்னையே வெள்ளத்துலே மிதந்ததே, அந்த சமயம் பெய்த மழை நூறாண்டுளுக்குப் பெய்ய வேண்டியது அது சரி உலகத்துலேயே அதிகமான மழை” என்றார்.
“இந்தியாவிலே சிரபுஞ்சியிலே 365 நாளும் மழை பெய்யும்னு கேள்விப் பட்டிருக்கேன்…” என்று நான் சொன்னதும், “தெரியுமா, அங்கே 1861ஆம் வருஷம் பெஞ்ச மழைதான் உலகத்துலேயே ரெகார்டு. அந்த வருஷம் மொத்தம் 22,987 மி.மீ. மழை பதிவாகியிருக்காம்..” என்றார்.
மழை நின்றிருந்தது. வெளியே மட்டுமல்ல, அண்ணன் சோமுவின் வாயிலிருந்தும். மீண்டும் நனையாமல் இருப்பதற்குள் வீடு திரும்ப வேகமாக நடந்தேன்….


Leave a comment
Upload