மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் - தமிழ்நாட்டுக்காரர்.
எதிர்வரும் தமிழக சட்டசபைத்தேர்தலின் போது தமிழக பாரதிய ஜனதாக் கட்சிக்கு வலுவானதொரு தலைமை தேவை என்றொரு குரல் அந்தக் கட்சியினரிடையே பெருமளவில் எழுந்து வருகிறது.

அனைவருடனும் ஒத்துப் போகும் (அடங்கிப் போகும்?) தலைவராக தற்போதைய தலைவர் தமிழிசை செளந்தரராஜன் இருக்கிறார். ஆனால் அனைவரையும் அடக்கி ஆளும், களத்தில் ஆக்ரோஷத்தைக் காட்டும் ஒரு வசீகரத் தலைமைதான் கட்சிக்குத் தேவை. ‘ரஜினி களத்தில் இறங்குவார். அவர் பாரதிய ஜனதாவில் இணைவார்’ என்றெல்லாம் பரவலான பேச்சு எழுந்தது. ஆனால் அவர் அரசியலில் குதித்தாலும் பாரதிய ஜனதாவில் இணைவதற்கான வாய்ப்பு அறவே இல்லை என்பதால் அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்று யோசிக்கும் மத்திய தலைமை, நிர்மலா சீதாராமனை தலைவராக அறிவித்தால் என்ன என்று முடிவெடுத்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரத் தகவல்.
அதற்கு ஈடு கொடுக்கும் விதமாக சமீப சில மாதங்களாக வாரம் ஒரு தடவையாவது தமிழ்நாட்டுக்கு விசிட் அடித்து விடுகிறார் நிர்மலா.
பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார்.. பொதுமக்களைச் சந்திக்கிறார்.. பிரமுகர்களைச் சந்திக்கிறார். உள்கட்சிப் பிரச்னைகளையும் காது கொடுத்து கேட்க ஆரம்பித்துள்ளாராம் அவர்.

ஓரிரு வாரங்களில் அவரை தமிழக பாரதிய ஜனதாக் கட்சியின் கண்காணிப்புக்குழுத் தலைவராக அறிவித்து விட்டு அதன் பிறகு சில மாதங்களில் தமிழக பாஜக தலைவராகவும் அறிவிக்கவுள்ளார்களாம்.
ஆனால் அவருடைய ஜாதியைக் காரணம் காட்டி ‘அவர் தலைவரானால் வோட்டே வாங்க முடியாது’ என்று ஏனையோர் பயமுறுத்தி வருகிறார்களாம். ‘என்னவோ இப்போ நீங்கல்லாம் இருந்து வோட்டுகளை வாங்கிக் குவித்து விட்ட மாதிரியே பேசுறீங்களே?’ என்று டெல்லி ‘ஷா’ நக்கலடித்திருக்கிறார் என்றும் பட்சி தகவல்.
- குருவாயூரப்பன்

Leave a comment
Upload