பாரதி யார்?
அவன் ஒரு அதிசயம்..
அவன் ஒரு அவசியம்..
அவன் ஒரு அவதாரம்..
அவன் ஒரு லட்சியம்..

முப்பத்தொன்பது வயதிற்குள்ளே முன்னூறு பேர்களின் வாழ்க்கையை வாழ்ந்தவன்.! மூச்சுக்கு மூச்சு தேசமென்ற பாடியவன். தேசமே தெய்வமென்று வணங்கியவன், சாதிக்கொடுமைகளை சகிக்காதவன், மூடநம்பிக்கைகளை சாடியவன் ,பராசக்தியின் செல்லமகன், பாரதத்தாயின் தவப்புதல்வன் ,எட்டையபுரத்தில் சுப்பையாகவாகப் பிறந்தவன், பாரதியாக வளர்ந்தவன்,, மகாகவியாக மலர்ந்தவன்!
வீணை எஸ்.பாலசந்தர் வீட்டு மொட்டை மாடியில் ‘பாரதி யார்?’ நாடகத்துக்கான இந்த ரிகர்சலில், நாடகக் குழுவினர் வட்டமாக கூடி நின்று மேற்கண்ட வரிகளை உணர்ச்சிபூர்வமாக பேசும்போது, நமக்கு மெய்சிலிர்த்தது!
என்ன மாதிரி ஒரு ஆளுமை.. என்னவொரு கம்பீரம்? காலம்கடந்தும் உயிர்ப்புடன் நம் நினைவில் வாழும் மகாகவி பாரதியாருக்கு வருகின்ற டிசம்பர் மாதம் 11ந்தேதி 135 வது பிறந்த நாள்! அதை கொண்டாடும் வகையில் பாரதியார் பற்றிய நாடகத்தை வீணை எஸ் பாலசந்தரின் மகன் எஸ்.பி.எஸ்.ராமன் இயக்கி, வருகிற 09/12/17 ந்தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை தியாகராயர் திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி வளாகம் பாரத் கலாசார் மையத்தில் நடைபெற உள்ளது.
பாரதியின் மரணத்தோடு துவங்கும் நாடகம், பிளாஷ் பேக் முறையில் பின்னோக்கி சென்று அவரது வாழ்க்கையின் அனைத்து சாரம்சங்களையும் சுருக்கமாகவும் சுவையாகவும் தருகிறது. பாரதி பற்றி நமக்கு தெரிந்த விஷயங்களுடன் நமக்கு தெரியாத பல விஷயங்களையும் இந்த நாடகம் தருகிறது. உதாரணத்திற்கு ஒன்று சொல்வதனால் கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக்கொன்ற வாஞ்சி நாதனின் மரணம் பாரதியாரிடம் எப்படி எதிரொலித்தது என்பது போன்ற விஷயத்தை சொல்லலாம்.
வறுமைக்கும் புலமைக்கும் நடுவே எப்போதும் பாரதிக்கு வாழ்க்கை போராட்டம்தான்! அதை அப்படியே கம்பீரமாக பிரதிபலித்தார், பாரதியாக நடித்த இசைக்கவி ரமணன். வாய்ஸ் மாடுலேஷன், நடை உடை பாவனை அனைத்தும் அவ்வளவு அற்புதம்! மழைக் கவிதையிலும், மரணக் கவிதையிலும் அவர் நடிப்பும் பாட்டும் சூப்பர்ப்!

இதுல் பாரதியாரின் மனைவி செல்லம்மாவாக நடித்தவர், நாடக இயக்குநர் ராமனின் மனைவி தர்மா! வழக்கமாக செல்லம்மாவை அரிசிக்கும் பருப்புக்கும் அல்லாடுபவராக சித்திரித்துவந்த நிலையில், இதில் பாரதியின் கவிதையை கண்டு சிலிர்ப்பவராகவும்,அவர் குழந்தைகளோடு மகிழ்ந்திருப்பதை பார்த்து சிரிப்பவராகவும்,பாரதியின் ஆரோக்கியத்திற்காக துடிப்பவராகவும்,கணவரின் சகல இன்ப துன்பங்களிலும் பங்கேற்பவராகவும்,பாரதியோடு வாதப்பிரதிவாதம் செய்யும் புத்திசாலியாகவும் நாடகம் முழுவதிலும் செல்லம்மாவாக வரும் 'தர்மா ராமன்' நம் மனதை ஆட்சி கொள்கிறார்.
பாரதியின் வளர்ப்பு மகள் யதுகிரியாக வரும் கிருத்திகாவை ஒரு ’பெண் பாரதி’ என்றே சொல்லலாம். நடிப்பிலும் பாட்டிலும் அவ்வளவு பலே! இதுதவிர, பாரதியின் நண்பனாக, துணைவனாக, போலீசாக, ஜாமீன்தாராக, மைத்துனராக வந்த மற்ற நாடக பாத்திரங்களும்கூட அவரவர் பங்கை செம்மையாக செய்திருந்தனர்.
ஒத்திகையே இவ்வளவு பிரமாதப் படுத்தினால், ஒரிஜினல் நாடகம் எந்தளவு களைகட்டும் என்ற பிரமிப்பிடன் வெளியில் வந்தேன்.
பாரத் கலாசரில் நடக்கவுள்ள இந்த நாடகத்துக்கு அனுமதி இலவசம்!
- மதராஸிவாலி.

Leave a comment
Upload