தொடர்கள்
ஆன்மீகம்
பாவங்களைப் போக்கும் துலாக் கட்ட ஸ்நானம்..!! - ஆரூர் சுந்தரசேகர்.

Removes sins Bathing for the Tula katta..!!

நமது பாரத தேசத்தில் புண்ணிய நீர்நிலைகளில் புனித நீராடி, இறைவனை வழிபடுவது இந்துக்களின் இன்றியமையாத கடமையாகச் சொல்லப் பட்டிருக்கிறது. காவிரியில் தினசரியும் நீராடினால் நன்மைதான் என்றாலும் ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது, காசியில் ஓடும் கங்கை நதியில் நீராடுவதற்குச் சமம் என்று புராணங்கள் கூறுகின்றன. ஏனெனில் ஐப்பசி துலா மாதத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான நதி தேவதைகள் அனைத்தும் காவிரியில் நீராடி, தங்களிடம் மானிடர்கள் கரைத்துச் சென்ற பாபக்கறைகளைப் போக்கிக் கொள்கின்றது என்று காவிரி மகாத்மியம் என்னும் நூல் கூறுகிறது.

கங்கையின் பாபம் போக்கும் காவிரி:
மக்கள் தங்களுடைய பாவங்களைப் போக்கக் கங்கையில் நீராடி கங்கைக்கே பாவம் அதிகமாகச் சேர்ந்து தோஷம் ஏற்பட தன் பாவங்கள் தீர என்ன செய்ய வேண்டும்? என்று விஷ்ணு பகவானிடம் கேட்டாள் கங்கை. அதற்கு ஸ்ரீமஹாவிஷ்ணு, "நீ காவேரி நதியில் நீராடு. உன் பாவம் நீங்கும்” என்றார்.
அன்யக்ஷேத்ரே க்ருதம் பாபம்
புண்யக்ஷேத்ரே வினஸ்யதி.
புண்யக்ஷேத்ரே க்ருதம் பாபம்
வாராணஸ்யாம் விநஸ்யதி.
வாராணஸ்யாம் க்ருதம் பாபம்
கும்பகோணே விநஸ்யதி.
கும்பகோணே க்ருதம் பாபம்
காவேரி ஸ்னானே வினய்யதி.

என்று காவேரி ஸ்நானத்தின் மகிமையை வேதம் போற்றுகிறது. அதன்படியே ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் கங்காதேவி காவேரியில் நீராடி மக்கள் தன்னிடம் கரைத்த பாவங்களைப் போக்கிக் கொள்கிறாள் என்று புராண இதிகாசங்களில் போற்றப்படுகின்றது.

துலாக் காவேரி ஸ்நானம்:

Removes sins Bathing for the Tula katta..!!

ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்று போற்றுவர். ஏனெனில் இந்த மாதத்தில் இரவு நேரமும் பகல் நேரமும் சமமாக இருப்பதால், இதற்கு ‘துலா(தராசு) மாதம் என்று பெயர்.‘ஐப்பசி முதல் தேதி அன்று காவிரியில் நீராடுவது புண்ணியம்’ என்கின்றன ஞான நூல்கள். துலா மாதத்தில் இதர நதிகளும் அனைத்து புண்ணிய தீர்த்தங்களும் காவேரியில் சேர்ந்து விளங்குகின்றன. துலா மாதத்தில் ஸ்நானம் செய்பவர்கள் பஞ்ச மகா பாதகங்களிலிருந்தும் விடுபடுவதாகவும், அச்வமேத யாகம் செய்த பலனையும் அடைகின்றனர்.
துலா மாதமாகிய ஐப்பசி பிரம்ம முகூர்த்தத்தில் காவிரி நதியில் நீராடினால், மகாவிஷ்ணுவின் அருள் கிட்டும். மேலும் சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை நேரத்திற்கு முன் காவிரியில் மும்மூர்த்திகளும், முப்பது முக்கோடி தேவர்களும், 68 ஆயிரம் ரிஷிகளும், முனிவர்களும் சித்தர்களும் நீராடுவதாகச் சாஸ்திரம் குறிப்பிடுகிறது.
காவிரி ஓடும் ஸ்ரீரங்கம், திருப்பராய்த்துறை, சங்கமேஸ்வரர் கோயில் படித்துறை, திருவையாறு திருவிடைமருதூர், பூம்புகார், மயிலாடுதுறை துலாக்கட்டம், பவானி, கும்பகோணம், குணசீலம், தலைக்காவிரி, திருச்சி முக்கொம்பு ஆகியன புனித நீராடும் இடமாகக் கருதப்படுகிறது. துலா மாதத்தில் காவேரியில் நீராடி, முன்னோர்களுக்கு பிதுர்பூஜை செய்து அன்னதானம், வஸ்திர தானம் செய்தால் நம்முடைய பித்ருக்கள் மகிழ்ந்தது ஆசி வழங்குவார்கள். துலா மாதத்தில் நாம் ஒருநாளாவது காவிரியில் நீராடி நம் முன்னோர் கடன் செலுத்துவோம்.
துலாக் காவேரி ஸ்நானம் செய்பவர்கள், காவேரி நதிக்குப் பூஜை செய்து வழிபடுவதுடன், அதன் அருகில் அரசமரம் இருந்தால் அதற்கும் நீர் வார்த்து, அதனை வலம் வந்து வணங்குவது புண்ணிய பலனைத் தரும். இதைத்தவிரக் காவேரிக் கரையில் கோமாதா பூஜை செய்வது மிகவும் சிறப்பு. தகுந்த புரோகிதர்களைக் கொண்டு துலா காவேரி ஸ்நான ஸங்கல்பம் செய்துகொள்வது சிறந்தது. முடியாதவர்கள்
“கங்கேச யமுனே சைவ
கோதாவரி சரஸ்வதீ
நர்மதே சிந்து காவேரீ
ஜலேஸ்மின் சன்னிதிம் குரு”

மேற்கண்ட ஸ்லோகத்தைக் கூறி துலா ஸ்நானம் செய்து சிவனைத் தரிசித்தல் பெரும் புண்ணியம் என்பது ஐதீகம்.
துலா மாதத்தில் காவேரியில் நீராடுவது புனிதமானது என்று சாஸ்திரம் சொல்லும் அதே வேளையில் 'கடைமுகம்' என்று சொல்லப்படும் ஐப்பசி 30ம் தேதி நீராடி பலனைப் பெறலாம். அன்றும் நீராட முடியாதவர்கள், 'முடவன் முழுக்கு' என்று சொல்லப்படும் கார்த்திகை முதல் தேதி நீராடினாலும் அதே பலனைப் பெறலாம் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

முடவன் முழுக்கு:

Removes sins Bathing for the Tula katta..!!

புராணகாலத்தில் முடவன் ஒருவர் எப்படியாவது ஐப்பசி மாதத்தில் துலா காவேரி ஸ்நானம் செய்யவேண்டும் என்று நீண்ட தூரத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு நடந்து வந்துகொண்டிருந்தார். அவர் கால் ஊனத்துடன் நடந்து வந்ததால் அவர் மெதுவாக நடந்து மாயவரம் எனும் மயிலாடுதுறையை அடைவதற்குள் ஐப்பசி மாதத்தின் கடைசி நாளான கடைமுகமும் வந்துவிட்டது. அன்று இரவுதான் அவரால் மயிலாடுதுறையை அடைய முடிந்தது. தன்னால் துலா ஸ்நானம் செய்ய முடியவில்லையே என்று வருந்தி மயூரநாதரிடம் பிரார்த்தனை செய்தார். அவருடைய பிரார்த்தனைக்கு மனமிறங்கி, "இன்றைய தினம் கார்த்திகை முதல் தேதியாக இருப்பினும் இக்காவிரியில் நீராடு, உனக்கு முழுமையான துலா ஸ்நான செய்த பலன் கிட்டும்" அத்துடன் கார்த்திகை முதல் நாள் எவர் ஒருவர் காவிரி ஸ்நானம் செய்தாலும் அது துலா மாதம் முழுவதும் ஸ்நானம் செய்த பலனையே அளிக்கும் என்றும் கூறி அருள்பாலித்தார். இந்த நிகழ்வின் காரணமாகவே முடவன் முழுக்கு என்று பெயர் பெற்றது.

Removes sins Bathing for the Tula katta..!!

துலாக் கட்ட கடைசி நாளான 'கடைமுழுக்கு’ மற்றும் ‘முடவன் முழுக்கு’ வைபவத்தில் நீராடி, “ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது” என்ற புகழுடன் திகழ்கின்ற மயிலாடுதுறை அபயாம்பிகை சமேத மயூரநாதரையும் வழிபட்டால், நம்முடைய அனைத்து பாவங்களும் நீங்கி, மோட்சம் கிட்டும்..!!