
துரோணரின் மகனான அஸ்வத்தாமன் அஸ்தினாபுரத்தில் கௌரவர்களுடனும் பாண்டவர்களுடனும் வளர்ந்து துரியோதனன் பால் அன்பும், மரியாதையும் கொண்டிருந்தான். பாண்டவர் அணிக்கு திருஷ்டத்யும்னன் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டான். கௌரவ அணியில் பீஷ்மர், துரோணர், கர்ணன், சல்லியன் ஆகியோருக்கு பின் இறுதியில் தலைமை தளபதியாக அஸ்வத்தாமன் (முன்னரே படைத்தலைவனாக ஆக்கி இருந்தால்...) நியமிக்கப்பட்டான்.
குற்றுயிரும் குலையிருமாய் கிடந்த துரியோதனன் அஸ்வத்தாமனை தலைவனாக அபிஷேகம் செய்வித்தான். துரியோதனனை அந்த நிலைக்கு ஆளாக்கிய பீமனையும் அவன் சகோதரர்களையும் கொன்று குவிப்பதாக வீர உரை பேசினான்.
துரோணரை கொன்றதற்கும், துரியோதனனை வீழ்த்தியதற்கும் (அதர்மமாக கருதி) கடன் தீர்ப்பதற்காக பாண்டவர்களையும் திருஷ்டத்யும்னனையும் அன்றிரவே கொல்ல சபதம் செய்தான். (ஆலமர கிளைகளில் உறங்கிக் கொண்டிருந்த காக்கைகளை கோட்டான் கொத்தி கொன்றதைக் கண்டு) . கிருபர் துக்கம் அடைந்து, "புகழ் கெடும்" என உணர்த்தியும் அஸ்வத்தாமன் பார்வையில் எதிரணியினர் செய்த தர்மம் அல்லாத செயல்களால், விளைவுக்கு பயப்படாது பாசறையில் உறங்கிய திருஷ்டத்யும்னனை கொன்றான். அவனுடன் பாவம் என அறிந்தும் துணையாக கிருபரும் பாசறைக்கு தீ வைத்தார்கள். இவ்வாறு பாஞ்சாலர்களையும் திரௌபதியின் புத்திரர்களையும் கொன்றான். இதை துரியோதனனும் அறிந்த பிறகு உயிர் நீத்தான்.
அஸ்வத்தாமன் கங்கை கரையில் முனிவர்களோடு முனிவராக வியாசருடன் மறைவாக இருந்தான். சோகத்தில் ஆழ்ந்த திரௌபதியின் குமுறல் கேட்ட பாண்டவர்கள் அவனை தேடிச் சென்றனர். அஸ்வத்தாமனும் ஒரு துரும்பை எடுத்து பாண்டவ வம்சத்தை முற்றிலும் அழிக்க அஸ்திரம் ஏவினான். கண்ணனின் அருளால் அபிமன்யு மனைவி உத்தரையின் கரு காப்பாற்றப்பட்டது. அந்தக் குழந்தை பரீட்சித் என்னும் பெயருடன் நல்லாட்சி செய்தான். Survival of the fittest என்ற இலக்கணப்படி பாண்டு -அருச்சுனன் – அபிமன்யு- பின் பரீட்சித்ஆண்டனர். சாகாவரம் பெற்ற சிரஞ்சீவியான அஸ்வத்தாமன் கருவையும் அழிக்கத்துணிந்ததால் சாபம் பெற்று இன்றும் மனிதர்களின் தொடர்பின்றி உலவுவதாக ஐதீகம்.
குறளும் பொருளும்
சமம் இல்லாதவர்களிடமும் தோல்வியை ஒப்புக் கொள்வது பெருந்தன்மைக்கு உரைகல்.
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலை அல்லார் கண்ணும் கொளல். 986
அன்பு, பழிபாவங்களுக்கு நாணுதல் உதவி, கருணை, உண்மை இவை ஐந்தும் நற்குணத்தின் தூண்கள்.
அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்து சால்பு ஊன்றிய தூண் 983
மற்றவர் வெட்கப்படும் செயலை செய்ய தான் வெட்கப்படவில்லை எனில் அவனைக் கண்டு தர்மம் வெட்கப்படும்.
பிறர் நாணத்தக்கது தான் நாணான் ஆயின்
அறம் நாணத்தக்கது உடைத்து 1018
சான்றாண்மைக் கொள்கையில் தவறினால், அது குடிப்பிறப்பின் சிறப்பைக் கெடுக்கும். ஆனால் பழிபாவங்களுக்குக் கூசாதவனாகி நாணுடைமை தவறிவிட்டால் அவனுடைய நல்வாழ்வு கெட்டுப்போகும்.
குலம் சுடும் கொள்கை பிழைப்பின்
நலம் சுடும் நாணின்மை நின்றக் கடை 1019
பெரியவர்களின் நற்குணங்கள் குறையும் பாரத்தை உலகம் தாங்காது.
சான்றார் சான்றாண்மை குன்றின் இருநிலம்தான்
தாங்காது மன்னோ பொறை 990

Leave a comment
Upload