
ஹரிணி வீட்டைச் சுற்றி சுற்றி வந்தாள். பாவம், அவளுக்கு பொழுது போகவில்லை. அவளின் பிரண்ட்ஸ் சில பேர் வெளியூர் சென்று விட்டனர். அவர்கள் வசிப்பது பெரிய அபார்ட்மெண்ட்; அவரவர் பிளாட் கதவு எப்போதும் சாற்றியே தான் இருக்கும். இவர்கள் மட்டும் சாயங்காலம் சுவாமி விளக்கேற்றி விட்டு, கொஞ்ச நேரம் கதவை திறந்து வைத்து பின்பு மூடி விடுவார்கள்.
“எவ்வளவு நேரம் தான் பொம்மைகளை வைத்துக் கொண்டு தனியாக விளையாடுவது?” என்று அவள் மனதில் நினைத்துக் கொண்டாள். அன்று சனிக்கிழமை மாலை. தாத்தா, பாட்டி தங்களது ரூமில் டிவியில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்பா ஹாலில் உள்ள டிவியில் சினிமா பார்த்துக் கொண்டிருந்தார். அம்மா மொபைல் போனில் நீண்ட நேரமாக பிரண்டுடன் பேச்சு. ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள் ஹரிணி. லேசான மேகமூட்டம், சில்லென்ற காற்று வீசியது. இருட்ட ஆரம்பித்தது. அன்று பௌர்ணமி — ஆனால் நிலவு சரியாக தெரியவில்லை.
இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது, திடீரென ஒரு சப்தம் — ஏதோ வெடித்தது மாதிரி! அவ்வளவுதான் — மொத்த ஏரியாவும் இருளில் மூழ்கியது. டிவி கட், போன் கட்! வீட்டில் உள்ளவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அபார்ட்மெண்ட் ஜெனரேட்டரும் ஏனோ வேலை செய்யவில்லை.
தாத்தா, பாட்டி ரூமில் இருந்து வெளியே வந்து ஹாலில் அப்பாவுடன் உட்கார்ந்தனர். அம்மாவும் வேறு வழியின்றி மொபைலை விட்டு விட்டு அவர்களருகில் வந்து சேர்ந்தார். சட்டென்று ஹரிணி, “அப்பா, நாம எல்லோரும் மொட்டைமாடிக்கு போலாமா? காத்து சூப்பரா அடிக்குது ப்பா… ப்ளீஸ்!” என்று கெஞ்சத் தொடங்கியவுடன், தாத்தா, பாட்டி, “இரண்டு மாடி மேலே ஏறி வரமுடியாது டா குட்டிமா,” என்று மறுத்துவிட்டனர். அவள் முகம் வாடியது.
அதைப் பார்த்த தாத்தா, “அதெல்லாம் ஒன்றும் இல்லை டா, நாங்க மெல்லமா வரோம்… போகலாம். பாவம், குழந்தை ஆசை படறா,” என்று கூறி கதவை சாத்திக் கொண்டு, அனைவரும் மொட்டைமாடிக்குச் சென்றனர். சுற்றிலும் இருள். வானில் உள்ள மேகங்கள் மெல்லக் கலைந்து, அங்குள்ள இருளை நிலா தனது மென்மையான ஒளியால் நனைத்தது.
கரண்ட் இல்லாத காரணத்தால் ஒவ்வொரு குடும்பமும் மெல்ல மாடியேறி வர, அந்த இடமே கலகலப்பாக மாறியது. ஹரிணிக்கு சந்தோஷம் தாங்கவில்லை — அவளின் சில பிரண்ட்ஸும் மாடிக்கு வந்துவிட்டனர்! நிலா வெளிச்சத்தில் ஒரே ஆட்டம், பாட்டம் தான்.
பெரியவர்களும், அவரவர் வேலைப்பளுவின் காரணமாக இதுவரை இருந்த இறுக்கமான சூழலை மறந்து, மனம் விட்டு பேசி மகிழ்ந்தனர். எல்லோரது டிவியும், மொபைல் போன் சத்தமும் இல்லாமல், இரண்டு மணி நேரம் நிலவின் ஒளி மட்டுமே, சில்லென்ற காற்று வீச, மறக்க முடியாத மாலைப் பொழுதை கழித்தனர்.
அன்று மாலை கரண்ட் கட் ஆனதால், ஹரிணி குட்டிக்கு மறக்க முடியாத சந்தோஷமான நாளாக மாறியது.
“இதே மாதிரி அடிக்கடி கரண்ட் போச்சுன்னா, எல்லோரும் மாடியில் ஜாலியா இருக்கலாம் இல்லையா!” என்று ஹரிணி குட்டி மனதில் நினைத்தபடியே, கரண்ட் வந்து விட்டதால் லிப்ட்டில் தாத்தா, பாட்டியுடன் கீழே இறங்கிக் கொண்டிருந்தாள்.

Leave a comment
Upload