தொடர்கள்
கதை
பணிவுடைமை -கி. ரமணி

20251015080302331.jpeg
சுந்தரும் ரம்யாவும் ஆலமரத்தை தாண்டி நடக்கத் தொடங்கினார்கள்.
டிசம்பர் காலை இள வெய்யில்.

நல்லூர் கிராம ஊராட்சிப் பலகை அவர்களை வரவேற்றது.

"நூறு மீட்டர் போய் லெப்ட் திரும்பினா தெருவோட ரைட்ல எட்டாவது வீடு பெரியப்பாவுது. ஹை ஸ்கூல் முடிக்கிற வரைக்கும் அவர்தான் எனக்கு டீச்சர், ஹீரோ, எல்லாம்.
பெரியப்பா செம்ம அத்தலெட். அப்போ பார்க்க கொஞ்சம் சிவாஜி கணேசன் போல இருப்பார்." என்று சிரித்தான் சுந்தர்.

" நமக்கு கல்யாணம் நடந்த போது வந்தாரா சென்னைக்கு பெரியப்பா?"

" இல்லை.அப்ப அவரு ஸ்கூல் ஹெச்செம் ஆயிருந்தார் இல்லையா? ரொம்ப பிசியா இருந்திருப்பார். முடிஞ்சிருக்காது."

சுந்தர் இடது பக்க தெருவில் திரும்பி அங்கு வலது பக்க வீடுகளை எண்ண ஆரம்பித்தான்.

சோனி தெரு நாய் ஒன்று தன் கட்டுப்பாட்டு எல்லைக்குள் நுழைந்த புதியவர்களை, சந்தேகமாய்ப் பார்த்து, ஆக்ரோஷமாய் ஒரு முறை குரைத்து விட்டுப் பின் ஏனோ பெருந்தன்மையுடன் மன்னித்து நகர்ந்தது.

"... ஆறு.. ஏழு..எட்டு..... எல்லாமே மாறிப்போச்சு..ஆங்...இதுதான்..... சேனாபதி எம்எஸ்சி., எம்எட். னு போர்டு போட்டு இருக்கு."

மாடி வீடு. மங்களூர் ஓட்டுக் கூரை. தாத்தா கட்டின காலத்தில் மேலே பதித் திருந்த 1955 என்ற மங்கிய சிவப்பு சிமெண்ட் எழுத்துக்கள் அப்படியே இருந்தன.
வாசல் இரும்பு அழியில் அழைப்பு மணிப் பொத்தான் இருந்தது. அழுத்தினான்.

"யாரு" என்று வாசலுக்கு பளீர் வெள்ளை வேட்டியில் வந்தார் பெரியப்பா. சட்டை இல்லை. இளைத்துப் பழுத்து இருந்தார். மார்பில் பைபாஸ் தழும்பு. ஒரு மெல்லிய தங்கச் செயின். கூடவே பெரியம்மா வந்தாள்,வைரங்கள் ஜொலிக்க.

" சுந்தர் தானே?இப்பதான் எங்களை எல்லாம் உனக்கும் ஞாபகத்துக்கு வருதா?" என்றாள்.

" என்னடா பெரிய மனுஷா! ஊருக்கு வழி தெரியுதா? நாங்க எல்லாம் உயிரோட தான் இருக்கோம். " என்றார் பெரியப்பா கெத்தாக.

"அப்படி இல்லை பெரியப்பா. உங்க ஆசீர்வாதம் எப்பவும் வேணும்."

வீட்டுக்குள் நுழைந்து கூடத்தில் பெரியப்பா காலை தொட்டு வணங்கினான்.

வேலைப்பாடு நிறைந்த தேக்கு மர ஊஞ்சல். சேனாபதி அதில் நடுவில் அமர்ந்தார். எதிரே இருந்த கருங்காலி மர நாற்காலிகளில் சுந்தரும் ரம்யாவும் அமர, பெரியம்மா ஊஞ்சல் ஓரத்தில் பளபளக்கும் பித்தளைச் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு நின்றாள். சுவரில் பெரிய பிரேம் போட்ட,பெரியப்பா ஜனாதிபதியிடம் நல்லாசிரியர் விருது வாங்கும் படம்.

"இந்தப் பக்கம் யாரையாவது பார்க்க வந்தியா? " பெரியப்பா.

"உங்களைப் பார்க்கத்தான் பெரியப்பா!"

"பரவாயில்லையே!உன் பேர் என்னம்மா?" என்றார் சேனாபதி.

"ரம்யா! கல்யாணம் முடிஞ்சு பதினாறு வருஷம் ஆயிடுச்சு பெரியப்பா. " என்றான் சுந்தர்.

"குழந்தைகள் இருக்கா?" பெரியம்மா.

"ஒரு பொண்ணு.ஒரு பிள்ளை. பதிமூணு வயசு,பத்து வயசு."

"தீர்க்காய்ஸா இருக்கணும்." என்றாள் பெரியம்மா.

ஒரு நிமிஷ நேர அசாதாரண மௌனத்துக்குப் பின் "ஏதாவது குடிக்க வேண்டுமா? காப்பி,டீ, மோர்? " என்றாள் பெரியம்மா

"ஒண்ணும் வேண்டாம்மா" என்றாள் ரம்யா.

"ஆமாம். இப்ப நீ என்ன பண்ற? இங்க பிளஸ் டூ முடிச்சப்புறம் ஏதோ டிப்ளமோ பண்ண போலிருக்கு. இல்லையா? உனக்குத் தான் பிளஸ் டூ மார்க் ரொம்ப குறைஞ்சுடுத்தே." ஊஞ்சலை ஆட்டிக் கொண்டே சுந்தரிடம் கேட்டார் பெரியப்பா.

" ஆமாம் பெரியப்பா. அப்புறமா ஒரு மாதிரி பிஇ யும் முடிச்சிட்டேன் எம்பிஏவும் பண்ணிட்டேன்."

சிரித்தார் சேனாபதி.
" அட்ரா சக்கைன்னானாம். எங்க பண்ண?"

"சென்னைக்கு பக்கத்துல ஒரு காலேஜில் தான்.

" இந்தக் காலத்துல இங்கெல்லாம் படிச்ச படிப்புக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை என்கிறார்களே? தடுக்கி விழுந்தால் எம்பிஏ இல்லையோ?"

ரம்யாவுக்கு சம்பாஷணை போகும் தடம் சுத்தமாக பிடிக்கல. தரையைப் பார்த்தாள்.

" ஆமாம் பெரியப்பா"

"ஆனா ஒன்னு! நீ பிளஸ் டூ பாஸ் பண்ணதே ஆச்சரியம்! உனக்கு கணக்கு சுத்தமா வராதே! என் கையாலேயே எவ்வளவோ அடி வாங்கி இருக்க நீ? எப்படிடா இவ்வளவு டிகிரி வாங்கின? பரவால்லையே!" கடகட என்று சிரித்தார் பெரியப்பா.

"ஆமாம் பெரியப்பா பிளஸ் டூ ல கணக்குல நான் பாஸ் பண்ணதுக்கு உங்க டியூஷன் தான் காரணம். இன்னைக்கு நான் ஓரளவுக்கு நல்லா வந்து இருக்கேன் என்றால் உங்க புண்ணியம் தான். "

" இங்கிலீஷ்ல ஒரு நாலு வார்த்தையானும் சேர்ந்து பேசுவியா இப்பவாச்சும்.? "

"ஓரளவுக்கு பேசுவேன் பெரியப்பா"

ரம்யா சுந்தரைக் கடுப்புடன் பார்த்தாள். சுந்தர் அவள் பக்கமே திரும்பவில்லை.

"சரி. நீ என்ன பண்ற இப்போ?"

"இ-காமர்ஸ்" ஆன்லைன் ரீடைல் விற்பனை"

"அப்படின்னா?"

"வீட்டுக்கு வேண்டிய சாமான்களை போன் மூலமே விற்கும் /வாங்கும் முறை."

" உங்கப்பன் நடத்தின மளிகை கடை பிசினஸை வேற மாதிரி நடத்துறியா? "

சிரித்தான் சுந்தர் "அப்படியும் வச்சுக்கலாம் பெரியப்பா"

அவங்கவங்களுக்கு அமைய வேண்டியது அமையும். பைசா எல்லாம் வருது இல்ல? உங்க அப்பன் அந்தக் காலத்துல ஒரு மளிகை கடை திறந்து, நடத்த முடியாமல் போண்டியாகி, போயே போயிட்டான். அப்புறம் எவ்ளோ கஷ்டம் உங்களுக்கு? ஏதோ பார்த்து பண்ணு. "

"சரி பெரியப்பா! ரம்யாவும் எம்பிஏ. என் கம்பெனியிலேயே என் கூட இருக்கா."

"எல்லாம் நல்லா இருந்தா சரி" என்றார்.

பெரியப்பாவின் பைபாஸ் சர்ஜரி பற்றியும், பெரியம்மாவின் இருநூறுக்குக் குறையாத வளமான ஷுகர் பற்றியும் விசாரித்தான். நாகப்பழக் கொட்டையைப் பொடி செய்து சாப்பிடப் பரிந்துரைத்தான். அரை மணி ஆனது.
சுந்தரின் அம்மா மறைவு பற்றி சம்பிரதாயமாக ஒரு வார்த்தை மட்டும் கேட்டாள் பெரியம்மா. வேறு பேச்சு இல்லை.

பின்னர் ரொம்ப யோசித்து கேட்டான் சுந்தர்.

"குமார் நல்லா இருக்கான் இல்லையா?"

" குமாருக்கு என்ன அமெரிக்கால சியா ட்டல்ல நல்லா இருக்கான். என் பிள்ளை ரொம்ப இன்டெலிஜென்ட் என்று உனக்கும் தெரியுமே."

"ஆமாம் பெரியப்பா! குமாருக்கு பயங்கர மூளை."

" இல்லாட்டி ஐஐடியில படிச்சு ஸ்டான் போர்ட்ல டாக்டரேட் இருபத்திமூணு வயசுல வாங்க முடியுமா?"

"ஆமாம் பெரியப்பா அவன் ஜீனியஸ்"

"இப்போ ஒரு பெரிய கம்பெனியில் வைஸ் ப்ரெசிடெண்ட். நாலு கோடி ரூபாய் இருக்கும் சம்பளம். கம்பெனி பேரு ஞாபகம் வரல.வைஃப்க்கும் பெரிய வேலை."

"வெரி குட் பெரியப்பா!"

" உன் வயசு தானே குமார். உனக்கு படிப்புல ரெண்டு வருஷம் சீனியர் இல்லையா?. ரம்யா! குமாரும் சுந்தரும் நல்ல நண்பர்கள் தெரியுமா? குமார் கிரிக்கெட்ல பெரிய ஆல் ரவுண்டர். இங்கிலீஷ்ல நல்லஆரேட்டர்."

"ஆமாம் பெரியப்பா! இங்கிலீஷ்ல பிரமாதமா பேசுவான்.ஐ ஐடி படிப்புக்காக கிரிக்கெட் ஆடறத விட்டுட்டான்.இல்லாட்டி இந்தியாக்கு ஆடி இருப்பான். "

" பார்க்க கவர்ச்சியா ஏதோ ஹிந்தி ஆக்டர் ஒருத்தன் போல இருப்பான்."

" ஹிரித்திக் ரோஷன்" என்றான் சுந்தர்.

"அவனேதான்"

ரம்யா கேட்டாள்,
"குமார் இங்க அடிக்கடி வருவாரா?"

மனைவியைப் பார்த்து" அம்மா வந்தவங்களுக்கு காப்பி, கீப்பி கொடும்மா. " என்றார் பெரியப்பா.

பெரியம்மா எழுந்து உள்ளே சென்றாள். நசுங்காத வெள்ளி டம்ளர் டபராவில் காபி கொண்டு வந்தாள்.

காப்பிக்குப்பின் சுந்தரம் ரம்யாவுடன் கிளம்பினான்.

பெரியம்மா குங்குமம், ரவிக்கை துண்டு கொடுக்க,சுந்தரம் பெரியப்பாவுக்கு ஒரு நல்ல பேனாவும் பெரியம்மாவுக்கு ஒரு மைசூர் சில்க் புடவையும் கொடுத்தான்..
"எப்படிப் போகப் போறீங்க? டாக்ஸி ஆட்டோ கூப்பிடணுமா? சில சமயங்களில் கிடைக்காது."..பெரியப்பா.

" வேண்டாம் பெரியப்பா!ஆலமரத்தடியில் வண்டி இருக்கு.போயிட்டு வரோம். "

பெரியம்மா பெரியப்பா முகத்தில் எந்த சலனமும் இல்லை.

திரும்பி நடக்கும் போது ரம்யா கேட்டாள்.

"நீங்க இவ்வளவு மரியாதை வச்சிருக்கீங்களே உங்க பெரியப்பா கிட்ட! அவர் ஏன் உங்க கிட்ட அவ்வளவு அலட்சியமாகவும் குதர்க்கமாகவும் பேசுறாரு?எனக்கு பொறுக்கல."

"அப்பா தன் சொத்தை எல்லாம் இழந்து மரியாதை குறைந்து இறந்தபோது எனக்கு பன்னண்டு வயசு தான். எங்க அம்மாவுக்கு முப்பத்திரண்டு.அந்த சமயத்தில் இந்த ஊரில் பெரியப்பா தான் எங்களுக்கு கார்டியன் மாதிரி.
பெரியப்பா சொத்துக்காரர். ஊரில் நல்ல செல்வாக்கு உண்டு . நல்லவர் தான். கொஞ்சம் எங்களை அலட்சியம் செய்வார் என்பது உண்மைதான்.. ஆனால் பெரியப்பாவின் பங்கு எங்கள் குடும்பம் முன்னேறியதில் கொஞ்சம் உண்டு. என்பதும் உண்மை. நன்றி மறப்பது நன்றன்று.


" உங்க வெற்றியை நீங்கள் அவரிடம் பறைசாற்றிக் கொள்ள வேண்டாம்.
ஆனால், சாதாரணமாகச் சொல்வதில் ஒன்றும் தவறு இல்லையே! விற்பனை யில் 20 ஆயிரம் கோடி ரூபாய் கடந்த, இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய இ காமர்ஸ் கம்பெனியின் ஸ்தாபகர் நீங்கள் என்ற உண்மையைச் சொல்ல வேண்டாம்.அட்லீஸ்ட் நம்ம ஃபெராரி கார்லாவது பெரியப்பா வீட்டு வாசலில் இறங்கி இருக்கலாமே!" என்று சிரித்தாள்.

" செய்திருந்தால், அவர் இத்தனை காலம் அவருக்குள் சேர்த்து வடித்து வைத்திருக்கும் பெருமையின் உருவம் எல்லாம் நொறுங்கிப் பொடிப் பொடியாக போயிருக்கும்.

எல்லா விதத்திலும் சராசரி என்று அவர் நம்பும் நம்மைக் காட்டிலும், தன்னை,தன் குடும்பத்தை ஒசத்தியாக நினைத்துக் கொண்டிருக்கும் பெரியப்பா, இந்த முதிய வயதில் இனிமேலும் அப்படியே இருந்து விட்டு போகட்டுமே! அதை மாற்ற முயல்வது நமக்கு எந்த வகையிலும் பெருமையைச் சேர்க்காது இல்லையா?

குமார் ஒரு பாகிஸ்தானிய அமெரிக்க பெண்ணை பத்து வருஷம் முன், பெரியப்பாவின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்ட போது அவர் சிதைந்து போய் விட்டார் என்று கேள்விப்பட்டேன். பாவம்! மகனுடன் இப்போ அவ்வளவாக பேச்சு வார்த்தை இல்லையாம்.

"சாரி நான் கூட அவரிடம் குமார் பற்றி கேட்டிருக்கக் கூடாது."

"பரவாயில்லை.இப்போ குமாரின் திருமணம் உடைந்து விட்டது. குழந்தைகள் இல்லை.இந்தியாவுக்கு திரும்பி வருகிறான் அடுத்த மாதம். இது எதுவும் பெரியப்பாவுக்கு இன்னும் தெரியாது."

" உங்களுக்கு எப்படி தெரியும்? "

"குமார் என் நெருங்கிய நண்பன் கூட.அடுத்த மாதம் அமெரிக்காவில் இருந்து சீனியர் வைஸ் ப்ரெசிடெண்ட் ஆக நம் " பை இந்தியன்" கம்பெனிக்கு வந்து சேரப் போகிற கிருஷ்ணகுமார் அவன் தான்."

ஆலமரத்தடியில் வெளிர் நீல ஃபெராரி வண்டியின் பின் கதவை வெள்ளை யூனிபோர்ம் போட்ட டிரைவர் மரியாதையுடன் திறக்க, சுந்தரமும் ரம்யாவும் ஏறினார்கள். பின் டிரைவரும் செக்யூரிட்டியும் முன்னால் ஏற, மானசரோவர் ஏரியில் மிதக்கும் அன்னம் போல ஃபெராரி கிளம்பியது.