
சினிமாவின் மகத்துவமே, அது எல்லாவிதமான கலைகளையும் உள்வாங்கித் தன்னை புதுப்பித்துக்கொள்கிற தன்மை தான் என்பதை அறிவோம் அல்லவா. அப்படியாக, இலக்கியத்தின் வளர்ச்சியாக வந்த பல வகையான இசங்களையும் சினிமா உள்வாங்கி, செறித்து செழுமையான படைப்பாக தன்னை வெளிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் நியோ-ரியலிசம், சர்ரியலிசம், எக்சிஸ்டென்சியலிசம், மேஜிக்கல் ரியலிசம், ஸ்பிரிச்சுவலிசம் என்கிற பல வகையான இசங்களையும் சினிமா அநாயாசமாக உள்வாங்கி தன்னை வீரியத்துடன் வெளிப்படுத்தும் தன்மை கொண்டிருக்கிறது.
நியோ-ரியலிசம் என்பது நெருக்கடியான காலக்கட்டங்களில் உண்டாகிற கையறுநிலை குறித்து ஆழமாக அதன் தன்மைகளை அலசுவது. ஒவ்வொரு நாடுகளுக்கும் இடையே இங்கே தவிர்க்கப்படவேண்டிய அதிகார போட்டயானது, இன்ன பல காரணங்களால் தவிர்க்க இயலாமல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதை விட்டுவிட்டு, அதிகாரத்தை பெருக்கு யத்தனிப்பதன் காரணமாக இங்கே ஏற்பட்டுக்கொண்டிருக்கிற அவலங்களை, அதனால் ஏற்படுகிற மரபியல் சார்ந்த மனித பிம்பங்களுக்குள் நிகழ்கிற சிதைவை இந்த வகை இலக்கிய முறைமை தனக்கே உரித்தான புதிய பாணியில் அலசுகிறது. அப்போது நாம் உருவாக்கி வைத்திருக்கிற பிம்பங்கள் சிதைந்து, நாம் சற்றும் எதிர்பார்த்திராத வேறுவேறு மாதிரியான பிம்பங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய நெருக்கடி நிலைமை வரும் என்பதை உணர்த்துகிறது. இதன் சித்தாந்தம் அப்படியான அனுபவத்தை கலாப்பூர்வமாக வெளிப்படுத்துகிறது. விக்டோரியா டெசிகா இயக்கிய ‘பை சைக்கிள் தீவ்ஸ்’ மற்றும் சத்யஜித் ராய் இயக்கிய ‘பதேர் பாஞ்சாலி’ போன்றவை இந்த வகைமையை சேர்ந்த திரைப்படைப்புகள் என்று சொல்லலாம்.
இரண்டாம் உலக யுத்தத்தை தொடர்ந்து, இத்தாலியில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து தாண்டவமாடிக்கொண்டிருந்த நேரம் அது. அப்போது நாயகனுக்கு ஒரு வேலை கிடைக்கிறது. போஸ்டர் ஒட்டுகிற வேலை. அதற்கு சொந்தமாக ஒரு சைக்கிள் வைத்திருக்க வேண்டும். அது தான் அந்த வேலை நிர்ணயிக்கிற தகுதி. அதற்காக அவனும், அவன் மனைவியும் சேர்ந்து படாதபாடுபட்டு ஒரு பழைய சைக்கிள் வாங்குகிறார்கள்.
முதல் நாள். முதல் வேலை. கையோடு சைக்கிளை ஓட்டிக்கொண்டே தோளில் எடுத்துச்செல்லும் எடை குறைந்த மர ஏணியை எடுத்துக்கொண்டு, சுவரின் உச்சத்திற்குப் போய், முதல் போஸ்டர் ஒட்டுகிறபோதே அந்த சைக்கிள் திருடு போகிறது.
அவனும், அவனுடைய பத்து வயது மகனும் சேர்ந்து அந்தச் சைக்கிளை தேடுவது தான் கதை. அவர்கள் படம் முழுவதும் அந்த சைக்கிளை தேடிக்கொண்டே இருக்கிறார்கள். அப்போது அவர்களுக்கு கிடைக்கிற அனுபவம் அப்படியே நம்மை அறியாமலே நமக்குள் இறங்குகிறது.
இறுதியில் நம்பிக்கை இழந்தவனாய், நாமும் ஒரு சைக்கிளை திருடினால் என்ன என்று நினைத்து திருடி, அதில் பாண்டித்யம் இல்லாததால் மாட்டிக்கொள்கிறான். மகன் முன்பே அவமானப்படுத்தப்படுகிறான். மகன் வந்து கதறியழுது அப்பாவை மீட்கிறான். மகனுக்குள் இருந்த அப்பா குறித்த பிம்பம் மாறத்துவங்குகிறது. பசி வருகிறபோது, சமூகம் சொல்லி வைத்திருக்கிற புனிதங்கள், மதிப்பீடுகள் உதிர்ந்து போய் விடுகிறதை உணர்த்துகிறது இந்தப் படைப்பு.
பதேர் பாஞ்சாலியும் இப்படியான அதியுண்மையின் பரிமாணங்களையே நம்முன் காட்சிக்கு வைக்கிறது. ஒரு குடும்பஸ்தன் தன் வயோதிக தாய், மனைவி, மகள், மகனை விட்டுவிட்டு, வேலை தேடி கிராமத்திலிருந்து, நகரத்திற்குச் செல்கிறான் தந்தை. தந்தையின் தாய், மனைவி, பதின்பருவத்திலுள்ள மகள், மகன் வறுமையோடு சமர் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு காட்சியில், தம்பி பக்கத்து வீட்டிலிருந்த ஒரு சிறிய கைவினைப்பொருளை எடுத்துக்கொண்டு வந்துவிடுவான். கேட்கிறபோது, கடைசிவரை தான் எடுக்கவில்லை என்று சொல்வான். அன்றிரவு அவனின் அக்கா அவன் தூங்கும்போது அந்த பொருள் அவனிடம் இருப்பதை தற்செயலாய் கவனித்து விடுவாள். உடனே யாருக்கும் தெரியாமல் அதை எடுத்துக்கொண்டு போய் வீட்டிற்கு அருகில் உள்ள குளத்தில் எறிந்து விடுவாள். மிக நுட்பமான மனோவியல் காட்சி இது.
மற்றொரு காட்சியில் குழந்தைகளின் அம்மா கொஞ்சமாக இருந்த உணவை அந்த பாட்டிக்கு தெரியாமல் கொடுப்பாள். அவர்கள் மட்டும் அதை சாப்பிடுகிறதை தற்செயலாக அந்த மூதாட்டி பார்த்துவிடுவாள். அவளால் அதற்குமேல் அங்கே இருக்க முடிவதில்லை. அப்போது அந்த மூதாட்டி ஒரு பரிதாபகரமாக ஒரு பார்வை பார்ப்பார். அந்த பார்வையை உலகத்தில் மனிதம் உள்ள எவராலும் எதிர்கொள்ள முடியாது. அதன் பிறகு அந்த குடிசையின் திண்ணையில் வாழப்பிடிக்காமல், அருகிலுள்ள பாழடைந்த மண்டபத்தில் போய் தங்கி, சில நாட்களில் மரித்துப்போகிறாள். அதனைத்தொடர்ந்து, காய்ச்சல் வந்து சரியான சிகிச்சை கிடைக்காததால் அக்கா மரித்துப்போகிறாள். திரும்பி வரும் தந்தை மனைவி, மகனோடு கிராமத்தை விட்டு கிளம்பிச்செல்கிறார். அவர்கள் வசித்த வீட்டில் ஒரு பாம்பு வந்து குடியேறுவதோடு அந்த கதை நிறைவடைகிறது. இந்த இடங்களில் எந்த உரையாடல்களும் தேவைப்படுவதில்லை. முகபாவங்களே நமக்குள் உணர்வுகளை பக்கம்பக்கமாக உணர்த்திவிட்டுப்போகும். சினிமா உணர்வின், உணர்ச்சியின், நெகிழ்வின் சங்கமம். அந்த உணர்வு பார்வையாளர்கள் இதயத்தை தொட்டுவிட்டால் அதன் வெற்றி அங்கே உத்தரவாதமாகி விடுகிறது.

Leave a comment
Upload