
பொழுது விடிந்தும் விடியாதது போன்ற லேசான இருள் சூழ்ந்த ஒரு பிரம்ம முகூர்த்த காலை. கொல்லைப்புறத்து கோழி கூவும் முன்பே புல்லாங்குழல் கீதம் மல்லிகாவை உசுப்பியது. வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தவள் போனில் இருந்த அலாரத்தை நிறுத்தினாள். மணி மூணே முக்கால் என்றது. மெதுவாக எழுந்திருந்து புடவையை உதறிக்கட்டி தலையை கையால் ஒதுக்கியவாறு, மள மளவென்று பின்பக்கம் சென்றாள்.
பல்லை தேய்த்து முகத்தை கழுவி, வாளி நிறைய தண்ணீரை எடுத்துக் கொண்டு வாசல் பக்கம் விரைந்தாள். சற்று நேரத்தில் அழகிய மாக்கோலம் கண்ணை பறித்தது. ஒரு நிமிஷம் அதை ரசித்து விட்டு திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த கணவன் சரவணனை உசுப்பி எழுப்பினாள். "மணியாச்சி மாமா எழுந்திரு... டவுனுக்கு போகணும் "
அன்றைக்கு விநாயகர் சதுர்த்தி. சரவணனுக்கு ஆட்டோ ஓட்டும் வேலை. அந்த வருமானம் அவன் குடும்பத்திற்கு கைக்கும் வாய்க்குமே இருந்தது. அவன் முன்னோர்கள் பரம்பரையாக மண்பாண்டம் செய்து விற்று வந்தார்கள் ஆனால். இந்த நாளில் மண் பாத்திரங்களுக்கு ஏது வேலை! வெயில் காலங்களில் குடிநீர் பானைகள், விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையார் பொம்மைகள், கார்த்திகை தீபத்திற்கு விதவிதமாய் அகல் விளக்குகள், ஆகியவற்றை அவனும் மல்லிகாவும் சேர்ந்து செய்து பக்கத்து டவுனில் விற்பது வழக்கம்.
இருவரும் அவசரமாக குளித்து முடித்து, மண்ணு பிள்ளையார் ஒன்றை எடுத்து வைத்து பூ தூவி விளக்கேற்றி நமஸ்கரித்து , "கணேசா வியாபாரம் நல்லபடியா ஆகணும் நீ தான் துணை இருக்கணும் "என்று மல்லிகா வாய்விட்டு வேண்டியபடி ஒரு பத்து ரூபாய் எடுத்து சாமி மாடத்தில் வைத்தாள்.
"என்ன கணேசனுக்கு லஞ்சமா.. " என்று சற்று கேலியாக கேட்டான் சரவணன்..
" வண்டி எடு மாமா மணி ஆச்சு என்றாள் மல்லிகா.
சிறியதும் பெரியதுமாக அழகான பிள்ளையார் பொம்மைகள். அதோடு புதுசாக செய்து கொடுக்கச் சொல்லி கேட்பவர்களுக்காக களிமண்ணு மூட்டைகள். எல்லாம் வாடகைக்கு எடுத்த வண்டியில் தயாராக இருந்தது.
வழியில் அரச மரத்தடி பிள்ளையாருக்கு அவசரமாக ஒரு கும்பிடு போட்டுவிட்டு வண்டியை விரட்டினார்கள். மணி ஐந்தாகி இருந்தது. டவுனுக்கு போக அரை மணி நேரம் ஆகும். போய் பொம்மை எல்லாம் அடுக்கி வியாபாரம் ஆரம்பிக்க 6 மணி ஆகிவிடும். எடுத்துப் போகும் பொம்மைகளும் செய்யப் போகும் பொம்மைகளும் எல்லாம் நல்லபடியாக விற்று முடிக்கணுமே என்று கவலையாக இருந்தது அவளுக்கு.
இன்னும் பத்து நாளில் அவளது ஒரே தங்கை சுகந்திக்கு திருமணம். வசதி இல்லாத குடும்பம் என்பதால் மல்லிகாவும் சரவணனும் சில செலவுகளுக்கு பொறுப்பெடுத்துக் கொண்டார்கள். தன்னிடம் இருந்த சொற்ப நகைகளை அடகு வைத்தும் அக்கம் பக்கம் கடன் வாங்கியும் சுகந்திக்கு செய்ய வேண்டியதை ஓரளவுக்கு சிறப்பாகவே ரெடி பண்ணி விட்டார்கள்.
சுகந்திக்கு பிள்ளையார் என்றால் கொள்ளை இஷ்டம். தூங்கும்போது கூட ஒரு சின்ன பிள்ளையார் பொம்மையை பக்கத்தில் வைத்துக் கொண்டு தூங்குவது வழக்கம்.
அவளுக்கு கல்யாணப் பரிசாக வெள்ளியில் ஒரு அழகான விநாயகர் விக்ரகம் வாங்கித்தர மல்லிகாவிற்கு ரொம்பவும் ஆசை. கடைக்கு போய் விசாரித்ததில், கண்ணை பறிக்கும் அழகோடு பளபளவென்று வெள்ளி விக்ரகம் 5000 - 6000 என்றது. மண்ணு பிள்ளையார்களை விற்ற காசில் அந்த வெள்ளி விக்கிரகத்தை வாங்கி விட வேண்டும் என்று மல்லிகாவின் ஆசை மலை போல் வலுப்பெற்றது.
டவுனுக்கு போய் வழக்கமான இடத்தில் கடையை விரித்து, பிள்ளையாருக்கு ஒரு சூடத்தை ஏற்றிவிட்டு ஆறு மணிக்கு வியாபாரம் தொடங்கி விட்டது. எட்டு மணி வரை வியாபாரம் சுமாராக ஓடியது. 9 மணிக்கு மேல் சூடு பிடிக்கும் என்று மல்லிகா நினைத்துக் கொண்டிருக்க, மள மளவென்று மேகம் கறுத்து, இருட்டிக் கொண்டது.
பதறிப்போன மல்லிகா பொம்மைகளுக்கு பாதுகாப்பு கொடுக்க முயற்சித்த நேரத்தில், பெரும் இடியோசையோடு பெருமழை பிடித்துக் கொண்டது. அரை மணி நேரத்தில் கொண்டு வந்த களிமண்ணெல்லாம் கொழ கொழவென்று ஆகிவிட்டது... செய்து வைத்திருந்த பொம்மைகளும் அழகிழந்து போனது.
அவளுக்கு துக்கமும் அழுகையும் பீறிக் கொண்டு வந்தது.
பொம்மை விற்ற காசு, வண்டி வாடகைக்கும் மண்ணுக்கும் போக 500 ரூபாய் தான் நின்றது.. கனத்த நெஞ்சோடு வீட்டுக்கு வந்தவள், பிள்ளையாரப்பா, நான் என்ன தப்பு செஞ்சேன்? உனக்கு இன்னைக்கு தான் கிடைச்சதா மழை பெய்ய.. என்று மருகினாள்.புயலோடு சேர்ந்த மழை ரெண்டு நாள் வெளுத்து விட்டு நின்றது. சுகந்தி கல்யாண பரிசாக வெள்ளிப் பிள்ளையாரின் நினைவாகவே இருந்தாலும் கையில் பணம் இல்லை.
மறுநாள் காலை வெயில் அடித்தது.வாசலுக்கு வந்தவள் தெருவோரம் நின்ற கப்பல் போன்ற காரைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். காரில் இருந்து இறங்கிய இரண்டு பெண்மணிகள் அவள் வீட்டை நோக்கி நடந்து வந்தனர். சிறுவயதாக இருந்த பெண்மணியை அவளுக்கு எங்கோ பார்த்த ஞாபகம் வந்தது. சிவந்த நிறம், ஓடிசலான மேனி, களையான முகம்.!
வந்த பெண்" நீங்கதான மல்லிகா"என்றாள் இனிய குரலில்!
பளிச்சென்று மின்னல் அடித்தது போல் மல்லிகாவிற்கு நினைவு வந்து விட்டது. போன வருஷம் சதுர்த்தி அன்று கோவில் வாசலில் வைத்துப் பார்த்தது.
"ஆமா நான் தான் மல்லிகா... வாங்க உட்காருங்க.. எப்படி என் வீட்டை கண்டு பிடிச்சீங்க.?"..என்று உபசரித்தாள். தண்ணீர் எடுத்து குடிக்கக் கொடுத்துவிட்டு,
"உங்கள பாத்து இருக்கேன் மா பேரு தான் மறந்து போச்சு.. என்று இழுத்தாள்.
"அதனால பரவாயில்லைம்மா, ஒருமுறைதான் பார்த்து இருக்கோம். நீங்க வியாபாரத்துக்கு எத்தனையோ பேர பாப்பிங்க. எல்லாரும் நினைவிருக்காது. என் பேரு காவியா. ஆனா நான் உங்களை மறக்க முடியாது...கோவில் வாசலில் விசாரித்து உங்க இடத்தை தெரிஞ்சுகிட்டேன்..." "
"இருங்க காபி கொண்டு வரேன்" என்று உள்ளே ஓடினாள் மல்லிகா. ஐந்து நிமிஷத்தில் சூடான காபி வந்தது. அதைக் குடித்தபடி தொடர்ந்தாள் காவியா.
" போன வருஷம் விநாயகர் சதுர்த்தி அன்னிக்கு, டவுன்ல இருக்குற அம்மன் கோவிலுக்கு வந்து என் குறையை சொல்லி அழுதேன். அங்க இருக்கிற பிள்ளையார் சக்தி உள்ளவர் அப்படின்னு கேள்விப்பட்டு பூமாலை வாங்க வெளியே வந்த போது, பக்கத்துல நீங்க அழகான பொம்மைகளை வச்சு வியாபாரம் பண்ணிக்கிட்டு இருந்தீங்க..". கொஞ்சம் நிறுத்தினாள் அவள்...
"கலங்கின கண்ணோட இருந்த என்ன பாத்து.. "மேடம் இந்த அழகுப் பிள்ளையாரை வாங்கிக் கொண்டு போயி வீட்டில் வைத்து பூஜை பண்ணுங்க உங்க குறை எல்லாம் தீர்ந்து விடும்.." அப்படின்னு நீங்க சொன்னீங்க...
"ஓ ஆமாம் அம்மா.. ஞாபகம் வந்துருச்சுமா எனக்கு .. ரொம்ப வருஷமா எந்த வைத்தியம் பார்த்தும் குழந்தை இல்லைன்னு சொன்னீங்க இல்லையா".. என்றாள் மல்லிகா தயக்கத்தோடு..
" கரெக்ட்.. நீங்க செஞ்சு கொடுத்த பொம்மை எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது.. மெய்யோ பொய்யோ ஏதோ ஒரு நம்பிக்கை.. அந்த பிள்ளையார் பொம்மையை வாங்கி கோவில்ல சுவாமிபாதத்துல வச்சுட்டு.. வீட்டுக்கு போயி பூஜை பண்ணினேன்.. என் நம்பிக்கை வீண் போகல.. ஏதோ கொடுப்பினை இருக்கு... அதிசயம் நடந்தது...அழகா ஒரு ஆண் குழந்தை பிறந்து இப்போ ரெண்டு மாசம் ஆகுது... உங்க ஊரு பிள்ளையாருக்கு என் நன்றிக் கடன செலுத்திட்டு அப்படியே உங்களையும் பார்த்துட்டு போலாம் னு வந்தேன்." என்றாள்
உணர்ச்சி பெருக்கில் இருவருக்கும் கண் கலங்கிவிட்டது. மல்லிகாவின் கையை இறுகப் பற்றிய காவியா, கொண்டு வந்த பையை தட்டில் வைத்து மல்லிகாவிற்கு கொடுக்க அவள் வேண்டாம் என்று மறுக்க.... இறுதியில் காவியாவே ஜெயித்தாள்.
தன்னால் முடிந்த அளவு அவர்களை உபசாரம் செய்து விட்டு வெத்தலை பாக்கு பழத்தோடு தன் கையில் எஞ்சியிருந்த 500 ரூபாய் பணத்தையும் காவியாவிற்கு வைத்துக் கொடுத்து அனுப்பிய மல்லிகாவிற்கு மனசு லேசாகி மகிழ்ச்சி அடைந்தது.இதற்குள் போன் அடிக்கவே எடுத்துப் பேசியவள் கல்யாண விஷயமாக அவசரமாக வெளியில் போக வேண்டிய வேலை வந்தது. பிறகு வீட்டுக்கு வரும் போது இருட்டி விட்டது. உள்ளே வந்தவள், நாற்காலியில் இருந்த, காவியா வைத்து கொடுத்த பையை அப்போது தான் நினைவு வந்து பிரித்தாள்
. உள்ளே அவளுக்கு மிகவும் பிடித்த பச்சை நிறத்தில் வயலட் பார்டர் போட்ட விலை உயர்ந்த ஒரு பட்டுப் புடவை, தாலியில் கோர்த்துக்கொள்ளும் அரைக் காசு,.. ஒரு கவரில் "உங்கள் தங்கை சுகந்தி கல்யாணத்திற்கு" என்று எழுதி பத்தாயிரம் ரூபாய் .!
அத்தோடு அழகிய பெட்டியில் பளிச்சென்று, கொழு கொழுவென்று விநாயகர் சிரித்துக்கொண்டிருந்தார், கனமாய், பெருசாய்... வெள்ளியில்!

Leave a comment
Upload