தொடர்கள்
கதை
கொல்லாமல் விடுவேனோ? - ஆர்னிகா நாசர்

2020909152952317.jpeg

நம்பிக்கையாளர்களே! கொலை செய்யப்பட்டவர்களுக்காக பழி வாங்குவது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது.

(ஆகவே கொலை செய்யப்பட்டவன்) சுதந்திரமானவனாயின் (அவனை கொலை செய்த) சுதந்திரமானவனையே.

(கொலை செய்யப்பட்டவன்) அடிமையாயின் (அவனை கொலை செய்த அந்த அடிமையையே,

(கொலை செய்யப்பட்டவள்) பெண்ணாயின் (கொலை செய்த அந்தப் பெண்ணையே நீங்கள் கொலை செய்து விடுங்கள்.

(ஆயினும் பழிவாங்கும் விஷயத்தில்) ஒரு சிறிதேனும் அ(க்கொலையுண்ட)வனுடைய சகோதரரால் மன்னிக்கப்பட்டு விட்டால் கண்ணியமான முறையை பின்பற்றி (அவனைக் கொலை செய்யாது விட்டு) விடவேண்டும். (பழி வாங்குவதற்கு பதிலாக கொலையாளி ஒரு தொகையை தருவதாக ஒப்புக்கொண்டிருந்தால் அந்த நஷ்ட ஈட்டை) தயக்கமின்றி நன்றியோடு அவன் செலுத்தி விடவேண்டும். இவ்வாறு நஷ்ட ஈட்டை அனுமதித்திருப்பது) உங்கள் இறைவனுடைய சலுகையும் அருளுமாகும்.. இவ்வாறு நஷ்டஈட்டை பெற்றுக் கொண்டதற்கு பின் எவரேனும் வரம்புமீறி (நஷ்டஈடு கொடுத்த கொயாளியைத் துன்புறுத்தினால் அவனுக்கு (மறுமையில்) மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு.

- அல்குர்ஆன் (2 :178)

அண்ணாசாலை போக்குவரத்து அனுமார் வால் போல் நீண்டிருந்தது. ஆயிரம் விளக்கு மசூதியில் ஜும்மா தொழுக காரில் விரைந்து வந்த மக்தூம் போக்குவரத்தில் சிக்கிக் கொண்டான். கார் ஜன்னலுக்கு வெளியே தலைநீட்டி எட்டினான் மக்தூம். ஏறக்குறைய இருநூறு வாகனங்கள் சிக்கியிருந்தன. உதடு பிதுக்கிக் கொண்டான் மக்தூம். பின்னாடி நின்றிந்த கார் விடாமல் ஹாரன் அடித்தது. அந்த காரிலிருந்து ஒரு தொப்பி இளைஞன் எட்டி கத்தி “முன்னாடி போ... நான் தொழ போகனும்!”

“நானும்தான் போகனும்... போக வழியில்லையே...”

“இடப்பக்கம் ஒடித்து சந்துக்குள் போய் வெளியேறு. மசூதிக்கு பாதை கிடைக்கும்!”

“போக முடியாது!”

“எவன் சொன்னது? வலப்பக்கம் சற்றே ஒதுங்கு. நான் போய் விடுகிறேன்!”

‘பள்ளிவாசலுக்கு ஆத்திர அவசரமில்லாமல் தொழ வரத்தான் அல்லாஹ் சொல்லுகிறான். பொறுமையாக இரு!”

“ஒதுங்குறியா? காரை உன் காரின் மீது மோதட்டுமா?”

“முஸ்லிமுக்கு முஸ்லிம் இப்படி குரோதமா பேசலாமா பாய்?”

“இந்தக் கதையெல்லாம் எனக்கு வேணாம். வழி விடுகிறாயா இல்லையா?”

“வழி இல்லை!”

இரண்டாவது கார்காரனின் மூளைக்குள் ஷைத்தான் சாமர்சால்ட் அடித்தான். காரை அங்குமிங்கும் அலைக்கழித்து முதல் கார் மீது னங்கார் என மோதினான்.

மக்தூம் கூவினான். “மோதாதே. பம்பர் நெளிஞ்சிருச்சு!”

“இப்பப்பார்!”

முதல் முட்டலை விட வீரியமாக மோதினான். மக்தூம் காரின் பின் விளக்குகள் நொறுங்கி ஜிலிங்ஜிட்டாரின.

மக்தூம் கோபத்துடன் காரை விட்டு இறங்கி பின்னுக்கு ஓடினான்.

“காரை விட்டு இறங்குடா. சொல்லச் சொல்ல மோதுறியே... முட்டாள்!”

“முட்டாளா? நீ முட்டாள் உங்கத்தா முட்டாள் உங்க நாணா முட்டாள்!”

“நான் உன்னைத்திட்னா நீ ஏன்டா என் பரம்பரையையே திட்ற?”

இருவரும் ஒருவரின் சட்டைக்காலரை ஒருவர் கொத்தாய் பற்றிக் கொண்டு குத்துகள் வெடித்தனர். இரண்டாம் வாகன இளைஞன் குத்துகள் படாமலிருக்க மக்தூமை பிடித்து தள்ளினான். தூரத்தே சிதறிய மக்தூமின் பின்னந்தலை நடைமேடை இரும்பு கம்பியில் மோதி நொறுங்கியது. மக்தூம் இரத்தவெள்ளத்தில் இறந்தான். மக்தூமை தள்ளிவிட்ட இளைஞன் பின்னுக்கு திரும்பி இலக்கில்லாமல் ஓட ஆரம்பித்தான். ஏழெட்டு பார்வையாளர்கள் அவனை துரத்திக் சென்று கோழிக்குஞ்சை அமுக்குவது போல் அமுக்கினர்.

கொல்லப்பட்ட மக்தூமின் அண்ணன் ரசாக்கும் கொலைகாரன் அல்தாப்பின் அண்ணன் குர்ரம் முராத்தும் எதிர்எதிரே அமர்ந்திருந்தனர்.

“அஸ்ஸலாமு அலைக்கும் நான் குர்ரம் முராத்”

“அலைக்கும் ஸலாம். நான் ரசாக்!”

“என்னுடைய பேச்சுக்கு நீங்க மன்னிக்கனும். என் தம்பி அல்தாப் திட்டமிட்டு உங்க தம்பி மக்தூமை கொல்லல. வாக்குவாதத்தின் உஷ்ணத்தில் தகாதவை அரங்கேறி விட்டன. என்தம்பி ஜாமீனில் இருக்கிறான் வழக்கு கீழ் கோர்ட்டில் நடந்து வருகிறது!”

“ஆமா... அதற்கென்ன?”

“அரபு நாடுகளைப் போல நாம் இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை பின்பற்றுவதில்லை. நாம் இந்திய குற்றவியல் சட்டத்தை தான் பின்பற்றுகிறோம். கொலையை பார்த்த ஆறுபேர் சாட்சியம் கூற இருக்கின்றனர். உங்களுக்கு ஆதரவாக அரசுதரப்பு வக்கீல். நாங்கள் எங்கள் தரப்புக்காக வாதாட ஒரு வக்கீலை அமர்த்தியுள்ளோம். நம் இரு குடும்பங்களுமே ஓரளவு பணக்காரக் குடும்பங்கள். இந்த கேஸை உச்சநீதிமன்றம் வரை நடத்தினால் இறுதி தீர்ப்பு கிடைக்க முப்பது நாற்பது வருஷமாகும். நடந்த குற்றத்துக்காக எங்கள் குடும்பம் உங்கள் குடும்பத்திடம் மன்னிப்பு இறைஞ்சுகிறது. திருக்குர்ஆனின் 2:178 வசனம் உங்களுக்கு தெரிந்திருக்கும். நீங்கள் எங்களை மன்னித்து நாங்கள் தரும் நஷ்டஈட்டை பெற்றுக் கொள்ளலாம். நீங்க முதலில் என் தம்பியை மன்னிக்கத் தயாரா? மன்னிக்கத்தயார் என்றால் நீங்கள் எங்களிடம் எதிர்பார்க்கும் நஷ்டஈடு எவ்வளவு?”

“என்ன உளறுறீங்க? கொலை கேஸை நாங்களே விரும்பினாலும் வாபஸ் பெறுமுடியாது தெரியாதா உங்களுக்கு?”

“எங்களை மன்னிக்க உங்களுக்கு மனமிருந்தா மார்க்கத்தை நான் கூறுகிறேன்!”

“மார்க்கம் என்ன என்பதனை முதலில் கூறுங்கள். பின் மன்னிப்பதை யோசிக்கிறோம்!”

“நாமிருவரும் நீதிமன்றத்துக்கு வெளியே சமாதானமாகி விட்டால் வழக்கு புஸ்வாணமாகி விடும். சாட்சியம் பல்டியடித்து விடுவர். பப்ளிக் பிராஸிக்யூட்டரும் டிபன்ஸ் லாயரும் கூட்டணி அமைத்து விடுவர். சரசரவென காய்களை நகர்த்தி வழக்கை அடுத்த சில நாட்களில் தள்ளுபடி செய்ய வைத்து விடுவர். அதன் பின் நாம் அப்பீலுக்கு போனால் தானே?” குர்ரம் முராத்.

“யோசிக்க ஒரு மணி நேர அவகாசம் கொடுங்கள் பாய்!”

-ஒரு மணி நேரத்துக்குப் பின் ரசாக் வாய்திறந்தான். “அலைபேசி மூலம் என் பெற்றோரிடமும் என் சகோதர சகோதரிகளிடமும் ஆலோசித்து விட்டேன். எல்லோருமே உங்கள் தம்பியை மன்னிக்க தயாராய் இருக்கிறார்கள் நஷ்டஈடு பெறாமலேயே நாங்கள் மன்னிக்கலாம். தம்பியே போனபிறகு நஷ்டஈடு பணம் வந்து எதை நிரப்பி விட போகிறது? இருந்தாலும் நீங்க குடுக்கும் நஷ்டஈட்டை நல்ல காரியங்களுக்கு செலவழிக்கலாம் என தோன்றுகிறது. பேரம் பேசக்கூடாது நீங்க ஐம்பது லட்ச ரூபாய் பணத்தை நீங்க நஷ்டஈடாக கொடுத்தால் உங்கள் தம்பியை மன்னித்து வழக்கை முடித்துவிடலாம்!”

குர்ரம் முர்ரத் பலமாக யோசித்தார். “சரி. நீங்க கேட்ட தொகையையே நஷ்டஈடா தந்துவிடுகிறேன். இருதரப்பு வக்கீல்களின் முன் நாம் அவுட் ஆப் கோர்ட் செட்டில்மென்ட் எழுத்துப்பூர்வமாய் பண்ணிக் கொள்வோம்.”

“ஓகே!”

“ஒரு சிறு விண்ணப்பம். நம்மிரு தரப்புமே முழு மனதுடன்தான் சமாதானம் பேசியுள்ளோம். ஆகவே எதிர்காலத்தில் நம் குடும்பத்து அங்கத்தினர்கள் யாருமே மக்தூம் கொலையை வைத்து வன்முறையில் இறங்கக்கூடாது!”

“சரி!’

இருவரும் எழுந்து கை குலுக்கிக் கொண்டனர்.

“அஸ்ஸலாமு அலைக்கும்!”

“அலைக்கும் ஸலாம்!”

-அடுத்த இரண்டே வாரங்களில் ஐம்பதுலட்ச ரூபாய் நஷ்டஈட்டை பெற்றுக் கொண்டு சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டான் ரசாக்.

அந்த ஐம்பது லட்ச ரூபாயை அப்படியே சென்னையின் செயற்கை கோள் நகர் ஒன்றில் புதிதாக பள்ளிவாசல் கட்ட நன்கொடையாய் கையளித்து விட்டான் ரசாக்.

ஒரு வருடம் கழித்து...

உடன் பிறந்த தம்பியின் மரணத்தை நினைத்து நினைத்து அழுதுஅழுது வீங்கிப் போயிருந்தான் ரசாக்.

தனிமையில் அமர்ந்து யோசித்து யோசித்து மண்டை வெடிக்கும் நிலைக்கு வந்திருந்தான் ரசாக். நஷ்டஈடு வாங்கியது தப்பு. வழக்கை தீவிரமாய் நடத்தியிருக்க வேண்டும். பப்ளிக் பிராஸிக்யூட்டருக்கு கூடுதல் பணம் கொடுத்து நன்கு வாதாட சொல்லியிருக்க வேண்டும். தம்பியை இழந்து குடும்பம் வாடும் சோகத்தை நீதிபதியிடம் கொட்டி தூக்குத்தண்டனையை தீர்ப்பாய் பெற்றுத்தந்திருக்க வேண்டும்.

கல்யாணம் பண்ணவேண்டிய வயதில் என் தம்பி இறந்து மண்ணறைக்கு போய் விட்டான். கொலைகாரன் அல்தாப்போ ஒரு பேரழகியை திருமணம் செய்துகொண்டு ஓர் அழகிய கைக்குழந்தையுடன் சென்னையை சுற்றி திரிகிறான்.

‘விடக்கூடாது அல்தாப்பை வாழ விடக்கூடாது!’

-தனது படுக்கையறைக்குள் அவனை வரவேற்றான் ரசாக். “இந்தா நீ கொல்ல வேண்டிய ஆசாமி அல்தாப்பின் புகைப்படம். புகைப் படத்துக்கு பின்னால் அவனது வீட்டு மற்றும் அலுவலக முகவரி. அவனை இன்னும் ஒரு வாரத்துக்குள் நீ மணல்லாரி ஏற்றிக் கொன்று விட வேண்டும். அவனை கொல்ல உனக்கு நான் கொடுக்கும் கூலி ஐந்து லட்ச ரூபாய். இதோ அட்வான்ஸ் ஒரு லட்சம்!”

“டோண்ட் ஒர்ரி பாய்... இன்றிலிருந்து எட்டாவது நாள் அல்தாப் உயிரோட இருக்கமாட்டான்!”

வாடகைக் கொலையாளி கிளம்பினான். படுக்கையறைக் கதவை நெட்டித்தள்ளிக் கொண்டு ரசாக்கின் தந்தை உட்பட்டார். “அடப்பாவி! உன் சதி திட்டம் என் காதுல விழுந்திருச்சுடா. என்ன காரியம்டா பண்ண துணிஞ்ச? நீ அந்த கொலைகாரன் அல்தாப்பை விட மோசமானவன். அவன் ஆத்திரத்தாலும் முன் கோபத்தாலும் அறிவை இழந்தான். நீயோ ஒரு வருஷம் திட்டமிட்டு அவனை கொல்ல பார்க்கிறாய். அவனை நீ மன்னித்து நஷ்டஈடு பெற்றுக் கொண்ட பிறகு பழி வாங்க புறப்படுவது அநியாயம். அல்தாப்பை அல்லாஹ் மன்னிப்பான். உன்னை அவன் மன்னிக்கமாட்டான். (வாடகைக் கொலையாளியிடம் திரும்பி) அய்யா! இவன் ஏதோ புத்திக்கெட்டு உங்களையும் பாவசேத்துக்குள்ள இழுக்க பாக்ரான். என மகன் குடுத்த புகைப்படத்தை திருப்பி குடுத்திருங்க. அவன் கொடுத்த பணத்தை நீங்களே வச்சுக்கங்க. இங்க நடந்தது நமக்குள்ளேயே இருக்கட்டும்!” இறைஞ்சினார்

வாடகைக் கொலையாளி பணத்தையும் புகைப்படத்தையும் மேஜையில் வைத்தான். “பெரியவர் சொல்றது சரி. இந்த பழி வாங்கல் வேணாம் தம்பி. நல்ல முஸ்லிமாகவே இருந்துட்டு போங்க!”

கொலையாளி வெளியேற குலுங்கிகுலுங்கி அழுதான் ரசாக். தந்தையின் அகண்ட மார்பில் ஒடுங்கினான். “என்னை மன்னிச்சிருங்கத்தா பழிவெறி என்னை மிருகமாக்க பாத்துச்சு. என்னை தக்க நேரத்தில் தடுத்து இஸ்லாம் பக்கம் திருப்பி விட்டுட்டீங்க...”

“கோபமாய் இருக்கும் போது செயல்படாமல் ஓய்வாய் அமர். அப்போதும் கோபம் குறையாவிட்டால் படுத்துக்கொள். நற்செயல்களே ஒரு தந்தை ஒரு மகனுக்கு கொடுக்கும் சிறந்த வெகுமதி என்கிறது நமது திருமறை. உன் நன்நடத்தையே நான் உன்னிடமிருந்து எதிர்பார்க்கும் வெகுமதி!”
ரசாக்கின் கண்ணீர் முதியவரின் மார்புச்சட்டையை நனைத்தது.