தொடர்கள்
அனுபவம்
காலமே போதி மரம் - 14 - என்.குமார்

2020908193523181.jpeg

இரண்டு கேள்விகள் இருக்கின்றன. அதற்கு, இரண்டு ‘ஆம்!’ சொன்னால், இந்தப் பூமியில் மூச்சு விட எனக்கும், உங்களுக்கும் தகுதி இருக்கிறது.

இடம்: மலை உச்சி

திருமூர்த்திமலை. ஒரு வார குழந்தைகள் முகாம் நிறைவு நாள். சிறப்பு அழைப்பில் சென்றிருந்தேன். நிகழ்ச்சி ஆரம்பிக்க இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது, தயாராகி விட்டாலும், சுற்றிப் பார்க்க ஆசை வந்தது.

சுற்றிலும் இயற்கை என்று சொல்லமுடியாது. இயற்கை தான் அந்த இடமே.

மலையும் மரம் சார்ந்த அந்தப் பிரதேசம், காற்றுக்குத் தாய் வீடு என்று நினைக்கிறேன். கட்டுப்பாடில்லாத துள்ளலில் வீசிக்கொண்டிருந்தது.

தோட்டம் வைத்த ஒரு தனி வீட்டின் வாசலில், மூங்கில் இருக்கையில் அமர்ந்தேன். நிறைய யோசிக்கும்படியான அமைதிச் சூழல். எதையும் யோசிக்கக் கூடாது என்று கண்மூடி இருந்தேன்.

2020908193626514.jpeg

குழந்தை வாசனை வீசியது. இமைகளைப் பிரித்துப் பார்த்தேன். பக்கத்திலிருந்த இன்னொரு இருக்கையில் ஒரு சிறுமி திடீரென்று பூத்திருந்தாள்.

என்னைக் கேட்டாள்.

“இங்க என்ன பண்ற?”

“ஒண்ணுமில்லம்மா… சும்மா…”

சும்மாவிலிருந்து நிறைய பேச்சு வந்தது.

“இங்க தான் இருந்தோம் ஏழு நாள். சூப்பரா இருந்துச்சு… தெரியுமா?”

“தெரியாதே!”

“அறுபது கிட்ஸ். ஜாலியா இருந்தோம். பேரன்ட்ஸ்லாம் பார்க்காம, நாங்க மட்டும். குரு மகான் நிறைய சொல்லிக் கொடுத்தாங்க. நேச்சர், யோகா, ஃபுட், ப்ரேயர்… சீக்கிரமே ஜில் தண்ணில குளிக்கணும்… எல்லாம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஊர். நான் வேற ஊர். நான் குடைஞ்சுக்கிட்டே இருக்கேன்னு எல்லாரும் என்னை ‘வண்டு’ன்னு தான் கூப்பிட்டாங்க… சரி, நீ என்ன பண்ற இங்க?”

“உங்களையெல்லாம் பார்க்க வந்தேன்.”

“ஓ… உன்ட்ட கேள்வில்லாம் கேட்கலாமா?”

“கேட்டுக்கறேன்” என்றேன்.

“இல்ல… இல்ல… நீ பதில் சொல்லணும்!”

ஒரு நிமிடம் பேசினேன். ஐந்து நிமிடம் பேசினோம். அடுத்த அரை மணி நேரம் அவள் பேசினாள், சீனிப் பட்டாசாய். கேள்வி ஒவ்வொன்றும் பதில் தேவைப்படாத ஆச்சரியங்கள்.

பால் எப்படி வெள்ளையா இருக்கு? சாவி போட்டா பூட்டு ஏன் திறக்கணும்? மாட்டேன்னு சொன்னா என்ன? மரம்லாம் எப்படி நேரா விழாம நிக்குது? மனுஷங்க வாலு எங்க போச்சு?

எல்லாவற்றுக்கும் ஒரே பதிலைச் சொன்னேன்.

“தெரியலையே வண்டும்மா!”

எந்த பதிலும் சொல்ல விரும்பவில்லை. கேள்வியில் இருந்த அழகில் விழுந்தேன்.

கேள்வியின் நாயகி, அவள்!

நான் முழிப்பதைப் பார்த்து எனக்கே ஊர்ஜிதப்படுத்தினாள், “உனக்கு ஒண்ணுமே தெரியலயே. நீ முட்டாள்!”

முகத்தை சோகமாக வைத்துக் கொண்டேன், அவள் மகிழ்வதற்காக.

”ஓ.கே. ஓ.கே. ஃபீல் பண்ணாத… உண்மையாத் தான் சொல்றேன்.”

எனக்கு இந்தப் பட்டம் பிடித்திருந்தது. என்னைப் பொறுத்தவரை எனக்குப் பொருத்தமாகவும் இருந்தது.

விழா ஏற்பாட்டாளர்கள் என்னைத் தேடி வந்து அழைத்துச் சென்றார்கள். வெண்மை அரங்கம் நுழைந்தேன்.

கீழே பார்க்கிறேன். கல்கண்டுத் துகள்கள் போல, குழந்தைகள் கொட்டிக் கிடந்தார்கள். அரங்கச் சுவர் ஓரத்தில் அழைக்க வந்த பெற்றோர்கள். இன்னும் பலர்.

விழா ஆரம்பிக்கப் போகிறது. என் பெயர், தகுதிகள் சொல்லி, சால்வை, மாலையோடு, மேடையில் அமர வைத்தார்கள். அவையை வணங்கிவிட்டு இருக்கையில் அமர்ந்தேன்.

எதிர்பாராமல் ஒரு பிஞ்சுக் குரல்… கேட்ட குரல் தான்… அந்தக் கூட்டத்திலிருந்து கேட்டது.

“ஏய்… ஏன் மேல உட்கார்ந்திருக்க… வா! அங்கெல்லாம் உட்காரக் கூடாது. இங்க வா!” - என்று தன் இருக்கையின் முனையைத் தட்டி அழைத்தாள்.

அந்தச் சிறுமி தான்…. மூங்கில் சேரில் தன் பக்கத்திலிருந்த முட்டாள், திடீரென்று மேடையில் இருந்ததை ஒத்துக்கொள்ள முடியாமல் தவித்தாள்.

நான் வயதில் பெரியவர்கள் கூட்டத்தில் அவமானப்பட்டு விடக்கூடாது என்று அவள் பதறுவது தெரிந்தது.

“உனக்கு ஒண்ணும் தெரியாதுல்ல… இங்க வந்திரு. அங்கெல்லாம் உட்காரக் கூடாது! வா….”

கை நீட்டி, அவள் சிறிதாய் கத்துவதைப் பார்த்து, கூட்டம் அசைந்தது. அவளது பெற்றோர் அவளைக் கண்களால் அமைதிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

மேடையில் என் முறை வந்தது. ஒலி வாங்கியின் முன் நின்று முப்பது நிமிட உரை பேசினேன். மேடையில் குரு மகான், இரு ஆன்மிகவாதிகள், பேராசிரியர், ஊர் பிரபலப் பிரமுகர்… வயதில் மூத்தவர்கள் எல்லோரும்.

பேசி முடித்தேன். அரங்கம் பல இடங்களில் கை தட்டியது. போதாதென்று, நிறைவிலும் எல்லாக் குழந்தைகளும் உற்சாகமாய் கை தட்ட, அந்தச் சிறுமி மட்டும் எந்த உணர்ச்சியும் காட்டாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

கூட்டம் நகர்ந்து கரைந்தது, என் பார்வை முழுக்க அந்த இருக்கை மேல். காரணம், எல்லோரும் எழுந்து, அவரவர் பெற்றோரிடம் ஒட்டிக்கொண்டிருக்க, அவள் மட்டும் பெற்றோர் வந்து அழைத்தும், எழுந்திருக்காமல் இருந்தாள்.

சிறிது நேரத்தில், மதிய உணவு இடைவேளை… அவளை அந்த வராண்டாவில் பார்த்தேன். முகத்தில் காலையில் நான் பார்த்த பறவை குணம் இல்லை. வெயிலுக்கு வாடிய தளிர் போல இருந்தாள்.

நான் காரணமோ? என்ற யோசனை வந்தது. நெருங்கினேன். முகம் திருப்பிக் கொண்டாள்.

வைத்த கண் வாங்காமல், நேருக்கு நேர் உட்கார்ந்து என்னைப் பார்த்துக் கொஞ்சியவள், அப்படி ஒதுங்கியது, வலித்தது. தலையைக் குனிந்து பார்த்தேன். இன்னும் குனிந்து கொண்டாள். தோள் தொட்டேன். இலேசாகத் தட்டி விட்டாள்.

”ஐயோ சாரிங்க சார்…”

அவளின் அம்மா ஓடி வந்தார்.

“நீங்க மார்னிங் பேசுனது ரொம்பப் பிடிச்சுப் போச்சுங்க அவளுக்கு. வந்து சொன்னா. அந்த தாடி வெச்ச வொய்ட் ஷர்ட் அங்கிளுக்கு ஒண்ணுமே தெரியலம்மா… முட்டாளா இருக்காங்க!”ன்னு…..

”ஆமாம்… என்கிட்டயே சொன்னாளே…”

“அதான்… நீங்க இங்க ஸ்டேஜ்ல இருந்தது, பேசுனதெல்லாம் பார்த்து ஷாக் ஆயிருப்பா!” சிரித்தார் அந்தப் பெண்.

என்னால் சிரிக்க முடியவில்லை. புரிந்து விட்டது.

நான் நிஜமாகவே முட்டாளா, புத்தி உள்ளவனா? என்று புரியவில்லை அந்தக் குழந்தைக்கு. வெள்ளந்தியாய் தன்னோடு உரையாடியவன், மேடையில் வேறு விதமாக இருக்கிறானே… மெல்லிய அதிர்ச்சி அது.

காரில் ஏறிக் கிளம்பினேன். வண்டியின் பின் இருக்கை முழுக்க அந்த ஆன்மிக மையம் கொடுத்த பரிசுப் பொருட்கள்.

ஒவ்வொரு காராக கிளம்பிக்கொண்டிருந்தது. கிளம்பியிருப்பாளா? அல்லது நான் கிளம்பிய பிறகு புறப்படுவாளா? இன்னமும் அவளது வருத்தக் கோபம் அல்லது ஏமாற்ற வலி தீரவில்லையோ? அவளைத் தேடினேன். தென்படவில்லை.

அந்த வண்டு கண்ணை விட்டுப் போனது.

முட்டாளாகவே இருந்திருக்கலாம். அரங்கத்திலிருந்த அத்தனை பேரையும் வசப்படுத்தியிருந்தேன். ஒரு சின்னச் சிரிப்புறவை இழந்துவிட்டேன்.

என் அறிவு ஒரு குழந்தையிடமிருந்து என்னைப் பிரித்ததை அன்று அநுபவித்தேன்.

இன்னொரு தரம் அவளைச் சந்திக்கும்போது சொல்ல வேண்டும்… “வண்டும்மா… நிஜமாவே நான் முட்டாள் தான், அறிவாளியாத் தெரியற முட்டாள்!”

………

இடம்: கடற்கரை

கடற்கரையெங்கும் கண்கள். நண்டுகளெல்லாம் உடலால் போட்ட ஓட்டைகள்… அலைகள் சத்தத்திற்கு அஞ்சாத அவைகள், மனிதக் காலடி பார்த்தால், ஓடி ஓடி ஒளிந்துகொள்ளும் அடைக்கலப் பதுங்கு குழி இல்லங்கள்.

என்னோடு வந்த சின்னக் குழந்தை கேட்டாள்.

“இவ்ளோ இடம் இருக்கே… இவ்ளோ மண்ணு இருக்கே… ஏன் குட்டிக் குட்டியா? எல்லா நண்டுக்கும் அரண்மனை மாதிரி புதுசு புதுசா வீடு கட்டிக்கொடுக்கலாமா?”

காற்று வங்க வந்த இடத்தில் இருவரும் வீடு கட்ட ஆரம்பித்தோம். சின்னதாய் ஆரம்பித்து, சின்ன பெரிதாய், பெரிதாய், பெரிய பெரிதாய்… மண்ணின் வடிவம் மாற ஆரம்பித்தது.

2020908193659148.jpeg

அவளின் சின்ன விரல்கள், பள்ளம் தோண்டி, வீட்டுக்குள் நண்டுக்கு நீச்சல் குளம் கட்ட ஆரம்பித்தபோது கேட்டேன்.

“நண்டு பிடிக்குமா? என்னைப் பிடிக்குமா?”

“பிடிக்கும்… பிடிக்கும்...”

“அப்படின்னா? …யாரைப் பிடிக்கும்?”

“அதான் சொன்னேனே…. பிடிக்கும்னு ரெண்டு வாட்டி.”

“ம்…. சரி என்னை எவ்வளவு பிடிக்கும்?”

பக்கத்திலேயே பதிலை (கடல்) வைத்துக்கொண்டு கேட்டேன். அலைகள் வந்து வந்து நுரை கொடுத்தன. எளிதாகச் சொல்லிவிடுவாள் என்று நினைத்தேன்.

“என்னை எவ்வளவு பிடிக்கும்?”

“ம்…. அண்டா நிறைய பிடிக்கும்!”

திகைத்தேன். அண்டா நிறைய? அதென்ன அண்டா நிறைய?

இடம்: திருமண மண்டபம்

இதே குழந்தை இரு வருடங்களுக்கு முன்பு இடுப்பில் உட்கார்ந்திருந்தாள். மண வீட்டு மதிய சாப்பாடு. பரிமாறும் அறை வழியாகத் தெரிந்த சமைக்கும் அறைக்கு அழைத்துச் சென்றேன்.

விதவிதமான உணவுகள், நிறங்கள், வாசனைகள், காய்கறிகள், சமையல் பொருட்கள், மூட்டைகள், பாத்திரங்கள்… கண்ணில் காட்ட ஆசைப்பட்டேன்.

கீழே இருந்த அரட்டைச் சத்தம், நகை, புத்தாடை மனிதர்களைக் காட்டிலும் இந்தச் சூழல் குழந்தைக்குப் பிடித்துப்போக, சமையல் அறை ஒரு கலையரங்கம் போல அவளை பிரமிக்கச் செய்தது.

யாரோ ஒரு பாத்திரம் கேட்க, ஒருவர் ஒன்றை எடுத்துப் போக, அது மறுக்கப்பட்டு, இன்னொன்று கேட்கப்பட்டது. எடுக்க வந்தவருக்குப் புரியவில்லை. கேட்டவரே உள்ளே வந்தார்.

எல்லா பாத்திரங்களையும் விடப் பெரிய ஒன்றைக் காட்டினார். அது ஒரு அண்டா…

“அதோ… அந்த அண்டாவை எடுத்திட்டுப் போங்க!”

மூன்று பேர் வந்து கஷ்டப்பட்டு தூக்கிக்கொண்டார்கள். எங்களைத் தாண்டிப் போனார்கள். குழந்தை அதைப் பார்த்தாள்.

…..

கடற்கரையில்….

இன்னமும் அந்த வீட்டைக் கட்டும் ஆர்வம் குறையாமல் இருந்தாள்.

“உங்களை எனக்கு அண்டா நிறையப் பிடிக்கும்!” – அவள் கொஞ்சமும் யோசிக்காமல் சொன்னது, என்னை நிறைய யோசிக்க வைத்தது.

அண்டம் தானே பெரியது? இல்லை…. இல்லை…. அண்டா தான் பெரியது. அவள் பார்த்தவரையில் எல்லாவற்றையும் விட அண்டா தான் பெரியது.

அந்த அண்டா நிறைய அன்பு என்றால், வேண்டாமென்றா சொல்வேன்?

…..

இடம் : ஓடும் இரவு இரயில்

ஊருக்குச் சென்று, மொத்த அழுகையையும், உயிர் கொடுத்தவரின் உயிர்ப்பிரிவில் வடித்துவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்தேன்.

மனதின் வெறுமையை எதை வைத்து நிரப்பிக்கொள்வதென்று தெரியாமல், ஜன்னல் வழியாக வரும் இரவுக் காற்றுக்கு முகத்தை இரவல் கொடுத்திருந்தேன்.

கூட வந்த உறவுப் பெரியவர்கள் விளக்கணைத்து உறங்கிவிட்டார்கள்.

அடுத்திருந்த இருக்கைகள் முழுக்கக் குழந்தைகள். கை பிடித்து ஒரு சிறுவன் இழுத்தழைத்துச் சென்றான்.

“தூக்கம் வரலை. நீங்க தான் தூங்கலையே…. ஏதாவது பேசலாம். வாங்களேன். ஜாலியா இருக்கலாம்.”

எழுந்து அங்கே சென்றேன். குழந்தைகளை மேற்கொண்டு கெஞ்ச விடாமல் நடு இரவு வரை ஏதேதோ கதைகள்…. மகிழ்ச்சியான உரையாடல்கள்….

தூங்க மறுத்த குழந்தைகள், சிரித்த களைப்பில், ஒருவர் பின் ஒருவராய் தனித்தனியாய்… தூங்கிப் போனார்கள்.

மீண்டும் என் இருக்கை ஜன்னல் கம்பிகளிடம் வந்தேன். முகத்தை முட்டுக் கொடுத்தேன். தூக்கம் கவிழ்ந்தது என் மேல்.

காலை நான்கரை மணி ஆகியிருக்கும். எழுந்துவிட்டேன். கதவருகே சென்று நிற்கத் தோன்றியது. நடந்தேன். திடீரென்று, மிடில் பெர்த்திலிருந்து போர்வை வழியாக ஒரு குட்டிக் கை தொட்டு நிறுத்தியது.

சின்னக் கண்ணாடியை கண்களுக்குத் தோதாய் மாட்டிக்கொண்டு, அந்தக் கேள்வியைக் கேட்டாள்.

“ஏய்… குமார்… பேசாம நீயும் நானும் மட்டும் ஒரு வீட்டுல இருக்கலாமா?”

இன்ப அதிர்ச்சியை மறைத்துக்கொண்டு,

“ஹே… என்ன…. தூங்கலியா… தூங்குங்க…” என்றேன்.

“சொல்லு… நீயும் நானும் மட்டும் இப்படியே ஜாலியா சிரிச்சு சிரிச்சு கதைல்லாம் பேசிக்கிட்டே…. ஒரு வீட்டுல இருக்கலாமா?”

“ம்… சரி… ஆனா, எனக்குப் பசிக்குமே!”

“நான் உனக்குச் சமைச்சுத் தர்றேன். நீ சாப்பிடு. வேணும்னா, ஒரு பெரிய இடத்துல, எல்லாருக்கும் ஒவ்வொரு ரூம் கட்டிக்கொடுத்து…. எல்லாரும் ஒரே இடத்துல தங்கி, எல்லாரும் ஒண்ணா சாப்பிட்டு…. எல்லாரும் ஒண்ணா….”

அவளின் “ஒண்ணா… ஒண்ணா….” பட்டியல் நீண்டுகொண்டே போனது.

“இதெல்லாம் முடியுமா?” என்றேன்.

“ஏன்… முடியாது? நேத்து எல்லாரும் எவ்ளோ ஹேப்பியா இருந்தோம்… அப்படி டெய்லி இருக்கலாம்ல?”

“அப்படி இருக்கலாம்… ஆனா, அதுக்கெல்லாம் நிறைய வேணும். ம்…. நிறைய விஷயம் இருக்கு….” - சொல்லிப் புரிய வைக்க முடியாமல் திணறும்போது, அவள் கேட்டாள்,

“வேறேன்ன வேணும்? நேத்து ராத்திரி மாதிரியே எப்பவும், அன்பா… ஜாலியா இருக்கலாமே?”

எதுவும் பேசாமல், அவள் முகத்தையே பார்த்தேன். கண்ணாடி வழியாகத் தெரிந்த அந்தக் கண்களில் இன்னமும் அந்தக் கேள்வி தீர்க்கமாய் இருந்தது. நின்ற இடத்திலேயே நின்றேன். இரயிலின் ‘தடக்… தடக்’ மட்டும் ஒலித்தது.

“சரிம்மா… தூங்குங்க… ஆவடி வந்தா நீங்க அம்மா அப்பா கூட இறங்கணும்.” என்று போர்த்திவிட்டு நகர்ந்தேன்.

… எல்லோரும் உறக்கத்திலிருக்கும்போது, அதிகாலை விழிப்பில், அந்த ஆறு வயசு சொன்னது, என் ஆயுசுக்கும் மறக்காது போலிருந்தது.

எந்த உலகியல் பதிலையும் சொல்லி அந்த தேவதையின் பரிசுத்த விருப்பத்தைக் குழப்ப விரும்பவில்லை.

இரயில் கதவைத் திறந்து என்னைச் சாய்த்தேன். காற்று பலமாகத் தாக்கியது. கால்களில் முழு பலம் கொடுத்து நின்றேன்.

இன்னமும் பல ஊர்கள் தாண்ட வேண்டும்… அப்போதுதான் நான் இறங்க வேண்டிய இடம் வரும்.

வெளிச்சம் வானைத் தொட ஆரம்பித்தது.

2020908193755816.jpeg

………

இரண்டு கேள்விகள் இருக்கின்றன, என்றேனே… அதற்கு, இரண்டு ‘ஆம்!’ சொன்னால், இந்தப் பூமியில் மூச்சு விட எனக்கும், உங்களுக்கும் தகுதி இருக்கிறது, என்றேனே….

அந்த இரண்டு கேள்விகள்!

“உங்களுக்கு குழந்தைகளைப் பிடிக்குமா?”

“குழந்தைகளுக்கு உங்களைப் பிடிக்குமா?”

……….

காலத்தை அழகாக்கும் காரணங்கள், குழந்தைகள்!