

காவிரி மைந்தன்

இமை மூடவா.. திறக்கவா?
பூங்குயில்.. பூந்தென்றல்.. பூபாளம்.. இவை யாவும் உன்னை நினைவூட்டும் வடிவங்கள்!
புன்னகை, புருவவில், இதழ் சுழிப்பு இவை யாவும் நீ நடத்தும் வைபவங்கள்!!
கண்ணசைவு, கதகதப்பு, கார்குழல், காதோரம் இவைதானே காதல் விழாவிற்கு தோரணங்கள்!!
நெஞ்சத்தின் அருகே நின்று நீ தரும் சுகம்தனை நெகிழ்ந்தபடி பெற்றுக்கொள்வேன்.. அறிவாயோ மானே! மானே!!
நேற்றிரவு கனவினிலும் நெருக்கம் குறையாமல் அணைத்திருந்தாய் நீயேதானே!!
பார்த்திருந்தேன் அதை நானும் இமை திறந்து விடாமல்!!
பகல்வேளை வந்ததுமே.. உன்னைப் பார்த்திருந்தேன் இமைக்கதவே மூடாமல்!!
உள்ளும் வெளியும் நீயென்றானபின் உறவின் பெருமைக்கு வேறேதும் நிகருண்டா?
உன் கடைவிழிப்பார்வையொன்று போதும் இவ்வாழ்வை நான் கடந்தேறுவதற்கு!
அகத்துறை இலக்கணங்கள் வகுத்தவன் யாரிங்கே.. அடடா அவனை நான் பாராட்ட வேண்டும்!!
தென்பொதிகைத் தென்றல் என்னை தன்வசத்தில் கொண்டபோது.. என்னவளே நீயும் அங்கே என்னுடனே நின்றிருந்தாய்!
அன்பில் மூழ்கி இன்பம் காண்பதைவிட என்ன இன்பமிங்கே என்றே நான் உன் மடியில் தலைவைத்தேன்!
அன்றொரு நாள் இதே நிலவில் பாடல் நினைவில் வந்தது! இதயம் தழுவும் இன்பமயக்கம் தந்தது!!
விண்ணிலங்கே வெண்ணிலா வந்து நின்றதுபோல் காட்சி!
விடியல்வரை கொண்டாட்டமா என்று அது கேட்டது என்றேன்!
‘நிலா உங்களோடு பேசுமா?’ என்றாய்!
‘ம்’ என்றேன் நான் என் பங்கிற்கு!
பெண்ணிலா என்னுடனே பேசும் ரகசியம் கேட்க வந்த நிலாவல்லவா என்றே கூடுதல் தகவல் சொன்னேன்!
அன்றுமுதல் தொன்றுதொட்டு காதலர்தம் துணையாக வந்த நிலாவல்லவா?
நிலவோடு வான்முகில் விளையாடுதே என்று ஒரு கவிஞன் பாடிவைக்க.. நிலவைப்பற்றிப் பாடாத கவிஞர்கள் எவரிங்கே என்று சொன்னாய்!
கற்பனைக் களஞ்சியமாய் கவிஞர்களை ஆக்கிவிடுவது வெண்ணிலாவா.. பெண்ணிலவா என்று பட்டிமன்றம் வைக்கலாமா என்றேன்!
‘தீர்ப்பு எந்தப் பக்கம் இருக்கும்?’ என்றாய்!
‘உன் பக்கமில்லாமல் போனால் தீர்ந்தேன் அல்லவா நான்!’ என்றேன்!!
கண்ணிமைகள்தான் கவிழ்ந்து புன்னகையில் நீ தந்த மயக்கம் இன்றுமென்றும் எனக்குள்ளே இருக்கும்!!

Leave a comment
Upload