கெய்கூபாத்..
'மதுக்கோப்பைகள்... மங்கைகள்!

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுக்கோப்பான ஒரு ஆட்சியை வெற்றிகரமாக நிலை நிறுத்திய டெல்லி சுல்தான் பல்பனின் உடல் ஜில்லிட்ட உடனேயே அரசவைப் பிரதானிகள் சற்று அவசரக்குடுக்கைகளாகச் செயல்பட்டார்கள். பல்பன் தன் வாரிசாக டெல்லி அரியணையில் அமர்த்த ஆசைப்பட்டது அவர் பேரன் கய்குஸ்ரூவை. மங்கோலியர்களால் வஞ்சகமாகக் கொல்லப்பட்ட இளவரசர் ‘ஷாகீத்’ (தியாகி) முகமதுவின் மகன் கய்குஸ்ரூ. ஆனால், வங்காளத்தில் வைஸ்ராயாக பல்பன் நியமித்துவிட்டு வந்த புஹ்ராகானின் மகன் கெய்கூபாத் என்னும் பதினெட்டு வயது இளைஞரை - மறைந்த சுல்தானின் விருப்பத்தை மீறிச் சிம்மாசனத்தில் அமர்த்தினார்கள் பிரபுக்கள்.
கெய்கூபாத் சிறுவயதில் வளர்ந்தது தாத்தா பல்பனிடம்தான். பெரியவர் இறக்கும்வரை பேரன் மதுவையோ, மங்கையையோ தொட்டதில்லை. எப்போது பார்த்தாலும் ட்யூஷன், படிப்பு என்று படுகண்டிப்புடன் பவ்யமாக வளர்க்கப்பட்ட இந்த இளவரசருக்குத் தலைமையேற்கும் திறமை இருக்கிறதா என்று யாரும் சீர்தூக்கிப் பார்க்காததன் விளைவு - சாம்ராஜ்யம் சீரழிவுப் பாதையில் உடனடியாகத் திருப்பிவிடப்பட்டது!
இதுநாள்வரை தான் ‘கட்டுப்பாடாக’ வாழ்ந்ததற்குக் காரணம் - தாத்தாவிடம் தனக்கு இருந்த அச்சம்தான்... ஒழுக்கம் அல்ல என்பதை விரைவில் நிரூபித்தார் புதிய சுல்தான் கெய்கூபாத். முதல் வேலையாக, டெல்லியருகே யமுனை நதிக்கரையில் கேளிக்கைகளுக்காகவே ஒரு மாளிகை கட்டப்பட்டது. அங்கு சுல்தான் அருகில் மதுக்கோப்பைகள் அடுக்கி வைக்கப்பட்டன. படுக்கையைச் சுற்றிலும் மதிமயக்கும் மங்கைகள்! ‘கெய்கூபாத் ஆட்சியில் ஒவ்வொரு மறைவிடத்திலிருந்தும் கேள்விக்குரிய பெண்கள்தான் வெளிப்பட்டனர். ஒவ்வொரு தெருவிலும் கும்மாளம் தலைவிரித்தாடியது. நீதிபதிகள்கூட மதுமயக்கத்துடன் தெருவில் தள்ளாடிக் கொண்டிருந்தார்கள்’ என்று நானூறு ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த பாரசீகச் சரித்திர ஆசிரியர் ஃபெரிஷ்டா குறிப்பிடுகிறார்.
கெய்கூபாத் நெருங்கிய ஆலோசகராக வைத்துக்கொண்டது நிஜாமுதீன் என்கிற விஷப்பாம்பை! சுல்தானைத் தொடர்ந்து மதுமயக்கந்திலும் நினைவுக்கு வந்தபோதெல்லாம் மங்கைகளின் அரவணைப்பிலுமே வைத்திருந்த இந்தப் பாம்புதான் பட்டத்து ராஜாவாக நடந்துகொண்டது எனலாம்.
ஆட்சிப் பொறுப்புக்கு நியாயமாக வந்திருக்க வேண்டிய இளவரசர் கய்குஸ்ரூவைச் சுல்தான் அழைப்பதாக சொல்லியனுப்பி டெல்லிக்கு வரவழைத்தான் வில்லன் நிஜாமுதீன். தலைநகரின் பிரதான வீதியில் நுழைந்த கய்குஸ்ரூவை, நிஜாமுதீன் நியமித்த கொலையாளிகள் வழிமறித்துப் பாய்ந்து தீர்த்துக்கட்டினார்கள்! அதைத் தொடர்ந்து, பல்பன் காலத்திலிருந்து விசுவாசிகளாக வாழ்ந்து வந்த பிரபுக்கள் ஒவ்வொருவராக மர்மமான முறையில் விஷம் வைக்கப்பட்டும் கழுத்து நெரிக்கப்பட்டும் குறுவாள் பாய்ச்சப்பட்டும் மேலுலகம் அனுப்பி வைக்கப்பட்டார்கள். எல்லாக் கொடுமைகளுக்கும் பின்னணியில் கச்சிதமாக இயங்கிய நிஜாமுதீன் என்னும் இந்தக் கபட ஓநாயை டெல்லியில் யாருமே சந்தேகப்படவில்லை என்பது வியப்பான விஷயம்!
ஆனால், வங்காளத்தில் டெல்லி சுல்தானின் பிரதிநிதியாக ஆட்சிபுரிந்து வந்த தந்தை புஹ்ராகானை (பல்பன் மகன்) கவலை பீடித்தது. நிஜாமுதன் மீது சந்தேகம் கிளம்ப... மகனைத் திருத்த ஒரு படையுடன் டெல்லிக்குக் கிளம்பிச் சென்றார் தந்தை. அங்கே வில்லனின் முழுநேரக் கைப்பாவையாக மகன் மாறிவிட்டிருந்தது கண்டு மனம் வருந்தி, ஊர் திரும்புவதற்குமுன் மகனைத் தனியாக அழைத்து எச்சரித்துவிட்டு வேதனையோடு விடைபெற்றார் புஹ்ராகான். அப்பாவை அனுப்பிவிட்டு கெய்கூபாத் அரண்மனைக்குத் திரும்புவதற்குள் வஞ்சக அமைச்சரின் ‘திட்டம்’ சுல்தானை வழிமறித்தது - மயங்கவைக்கும் ஒரு பெண் உருவில்!
கெய்கூபாத் சென்ற பாதையில் ஒரு அரபுக் குதிரையில் அமர்ந்து குறுக்கிட்டாள், நிஜாமுதீனால் அனுப்பப்பட்ட ஒரு அழகு தேவதை. அரண்மனைக்குத் திரும்பும் திட்டத்தை அந்தரத்திலேயே விட்ட சுல்தான், அங்கேயே அவளுடன் கூடாரம் போட்டுத் தங்கிவிட்டதாகத் தகவல். பிறகு குதிரை அழகியையும் அழைத்துக் கொண்டு அரண்மனைக்கு வந்த சுல்தான் கெய்கூபாத், அமைச்சர் நிஜாமுதீனை அழைத்து ஆர்வத்துடன் “அமைச்சரே! வரும் வழியில்...” என்று ஆரம்பிக்க, “அவசரப்படாதீர்கள் சுல்தான்!” என்று நிஜாமுதீன் கண்சிமிட்டியவாறு அந்தப்புரக் கதவுகளை திறந்தான். அங்கே புத்தம் புதிதாக வரவழைக்கப்பட்ட அழகிகளின் அணிவகுப்பே நடந்தது. பேதலித்துப்போய் நின்ற சுல்தான் கெய்கூபாத் மனதில் ‘இவனல்லவோ அமைச்சன்!’ என்ற எண்ணம்தான் மேலோங்கி நின்றிருக்க வேண்டும்! தந்தையின் அறிவுரைகள் தலைதெறிக்க ஓடிப்போயின. மலர்க்கூட்டத்துக்குள் காணாமல் போன வண்டைப்போல அந்தப்புரத்து அழகிகளின் மென்மையான உடல்களுக்கிடையே மறைந்துபோனார் சுல்தான்.
ஒரு தனிமனிதனின் விஷயம் என்பது வேறு. ஆனால், ஒரு தலைவனுக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு, பொறுப்பு உணர்ச்சி இல்லாமல் போனால் சாம்ராஜ்யமே சிதறிப் போய்விடும் என்பதற்கு கெய்கூபாத் ஓர் உதாரணம்!
முழுசாகக் கெட்டுப்போன இந்தச் சுல்தானின் ஆட்சி மூன்றாண்டுகளே நீடித்தது. ஆட்டம் போட்ட அரசரின் உடல் ஆட்டம் காண ஆரம்பித்தது. கொண்டாட்டமாக வாழ்ந்த மன்னரின் உடலில் இப்போது முடக்குவாதமும் வேறு பல நோய்களும் கும்மாளமிட்டன. குடிநீருக்குக்கூடக் குரல் கொடுக்க முடியாத நிலையில் கொற்றவன் முடங்கிக் கிடக்க, கலவரங்களும் பிரபுக்களின் கோஷ்டிச் சண்டைகளும் வெடித்தன. ஆப்கானிய கில்ஜி பிரபுக்களின் கோஷ்டியும் பதவிச் சண்டையில் இறங்கின. கில்ஜி பிரபுக்களின் கை ஓங்கியது!
ஜலாலுதீன் பிரோஷ் ஷா என்னும் கில்ஜி பிரபு தலைமையில் ‘கமாண்டோ படை’ ஒன்று டெல்லி அரண்மனையைச் சுற்றி வளைத்துக்கொண்டது. இவர்கள் கையில் சிக்கினான் வஞ்சக அமைச்சர் நிஜாமுதீன். அவன் வாயில் பலவந்தமாகக் கடும் விஷம் ஊற்றப்பட்டது. செத்து வீழ்ந்த நிஜாமுதீனைத் தாண்டிக்கொண்டு சுல்தானின் படுக்கையறையில் புகுந்தார்கள் வீரர்கள். கண்களில் பீதியோடு, வாய் குழற, உடல் நடுங்கப் படுத்திருந்த சுல்தானின் முடியைப் பிடித்துக் கீழே தள்ளிய ஒரு வீரன் ஆவேசத்துடன் குனிந்தான். “என்னை நினைவிருக்கிறதா சுல்தான்? அந்த அயோக்கியன் நிஜாமுதீன் சொன்னான் என்பதற்காக, ஒரு தவறும் செய்யாத என் தந்தையின் தலையைச் சீவச் சொன்னீர்களே... நினைவிருக்கிறதா?” என்று கேட்டுவிட்டு, ஒரு ஆயுதமும் பயன்படுத்தாமல் தொடர்ந்து காலால் எட்டி உதைத்தே சுல்தானைக் கொடூரமாகக் கொன்றான் அந்தக் கில்ஜி வீரன். பிறகு, படுக்கையோடு சுல்தானின் உடலைச் சுற்றி உப்பரிகை வழியாக யமுனை நதியில் வீசியெறிந்தார்கள் கில்ஜி படையினர்.
மாமன்னர் பல்பன் சிரமப்பட்டு நிலைநிறுத்திய பெருமைவாய்ந்த ‘அடிமைகள் சாம்ராஜ்யம்’ இந்த வகையில் கொடூரமாக முடிவுபெற்றது!
ஜூன் 13, 1290-ம் ஆண்டு ஜலாலுதீன் பிரோஷ் ஷா, செத்துப்போன சுல்தானின் குழந்தையை எச்சரிக்கை உணர்வோடு கொன்றுவிட்டு டெல்லி சுல்தானாக முடிசூட்டிக்கொண்டார்.
ஜலாலுதீன் பிரோஷ் ஷா ஒரு வித்தியாசமான சுல்தான். எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படுகிற, கண்ணீர் விடுகிற டைப்! சுல்தானிடம் காரியம் சாதித்துக் கொள்ள விரும்பிய எல்லோருமே ஒரு சோகக் கதையைத் தயாராகக் கொண்டுசெல்வதை வழக்கமாகக் கொண்டார்கள்! எடுத்த எடுப்பிலேயே சிம்மாசனத்தில் உட்கார மறுத்து, “பக்கத்தில் எளிமையாக ஒரு நாற்காலி போடுங்கள், போதும்... புகழ்பெற்ற பெரும் மன்னர் பல்பன் அமர்ந்த அரியணையில் இந்த எளியவன் அமருவதா?” என்று கண்ணீர் விட்டார் ஜலாலுதீன். சிரமப்பட்டுச் சிம்மாசனத்தில் சுல்தானை அமர்த்த வேண்டியிருந்தது.
சுல்தான் ‘மென்மையான டைப்’ என்பதைக் கேள்விப்பட்ட உடனேயே மாலிக் சஜ்ஜு என்னும் ஒரு வைஸ்ராய், படையோடு டெல்லியை முற்றுகையிட... ஜலாலுதீன் சுல்தானின் மகன் ஆர்காலிகான் தலைமையில் வெளிக்கிளம்பிய டெல்லிப்படை எதிரிகளைத் தோற்கடித்தது. மாலிக் சஜ்ஜுவையும் மற்ற சேனாதிபதிகளையும் கழுத்துக்குப் பின்னால் மரக்கட்டைகளை வைத்துச் சங்கிலிகளால் பிணைத்துத் தந்தையின்முன் நிறுத்தினார்கள். அது தவறாகப் போய்விட்டது! பரிதாபமான நிலையில் எதிரிகளைப் பார்த்தவுடனே மன்னர் கண்களில் நீர்! “வைஸ்ராய் என்று நல்ல பெயர் எடுக்க வேண்டாமா? ஏன் இப்படித் தவறான வழிக்குப் போகிறீர்கள்?” என்று கேட்டு, அவர்களை விடுவித்து நல்ல புத்தி சொன்னார் சுல்தான் ஜலாலுதீன்.
தவிர, அந்தத் துரோகிகளுக்கு விருந்தளித்துப் பரிசுகளும் தந்து அன்புடன் சுல்தான் அனுப்பியதைக் கண்டு அரசவையே தலையிலடித்துக் கொண்டது. துணிச்சலான ஒரு கில்ஜி பிரபு, “மேன்மைதாங்கிய சுல்தான் அவர்களே! தாங்கள் மதிக்கும் மன்னர் பல்பன்கூட துரோகிகளை மட்டும் எக்காரணம் கொண்டும் மன்னிக்கக்கூடாது என்று சொல்வது வழக்கம். இந்த வஞ்சகர்களின் கண்களையாவது தோண்டியெடுக்க அனுமதியுங்கள். இல்லாவிடில் நாளைக்கு எல்லோருக்கும் துணிச்சல் வந்து விடும். அது ஆபத்து!” என்று வேண்டினார்.
“நியாயமான வாதம். ஆனால், எனக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது. கல்லறையை நோக்கி நடந்து கொண்டிருக்கும் நான், மற்றவர்கள் ரத்தத்தை மிதித்துக்கொண்டு செல்ல விரும்பவில்லை!” என்று புன்னகையுடன் ஜலாலுதீனிடமிருந்து பதில் வந்தது.
பிடிபட்ட ஒரு பெரும் கொள்ளைக்காரக் கூட்டத்துக்குக்கூடப் புத்திமதி வழங்கி, விடுதலை தந்த இந்த ‘இளகிய’ சுல்தானுக்கும் ஒரு நாள் திடீரென்று ‘மூட் அவுட்’ ஆனது. ஸித்தி மெளலா என்ற இஸ்லாமியச் சித்தர் ஒருவர் தனக்கெதிராகச் சதியாலோசனைகள் செய்கிறார் என்று கேள்விப்பட்ட மாத்திரத்தில், அவரை இழுத்துவரச் செய்தார் மன்னர். அரசவையில் எல்லோர் முன்னிலையிலும் சித்ரவதை செய்யப்பட்டார் அந்தச் சித்தர் (சுல்தானையே எதிர்த்து அகம்பாவத்துடன் பேசியதும் ஒரு காரணம்!) பிறகு, அரசு ஆணைப்படி அவரை டெல்லி வீதியில் கிடத்தி, யானையின் காலால் இடறச் செய்தார்கள்.
“நிராயுதபாணியான நாடோடி நான். இறைவனின் தொண்டனான என்னை இப்படி நடத்திய ஒரே குற்றத்துக்காக உன் கதியும் உன் வாரிசுகளின் கதியும் என்ன ஆகப்போகிறது பார், சுல்தான்!” என்று இறப்பதற்குமுன் ஆவேசமாகச் சாபம் தந்தார் சித்தர்.
ஸித்தி மெளலாவின் தலைசிதறிய மறுகணம், கரும் மேகங்கள் தலைநகரைச் சூழ்ந்துகொண்டன. திடீரென்று வெறித்தனமாக வீசிய புழுதிக்காற்றில் டெல்லி மேலும் இருண்டது. அன்றிலிருந்து ஓராண்டு (கி.பி.1291-ல) மழை அடியோடு இல்லாமல் பெரும் பஞ்சத்தில் மக்கள் தவித்தனர். பலர் பட்டினியில் இறந்தனர். சுல்தானின் மூத்த வாரிசு கான்கனான் என்பவரும் நோய்வாய்ப் பட்டு இறந்தார். இதற்கெல்லாம் சித்தரின் சாபம்தான் காரணம் என்போரும் உண்டு.
ஸித்தி மெளலாவுக்கு மட்டுமே ஏனோ கடுமையான தண்டனை வழங்கிய சுல்தான் மற்றபடி மிகுந்த இரக்கக் குணத்தோடுதான் ஆட்சிபுரிந்தார். அதே சமயம் படையெடுத்து வந்த மங்கோலியர்களை வெற்றிகொண்டு, தனக்கு வீரமும் உண்டு என்று நிரூபித்தார். தோல்வி கண்ட மங்கோலியர்களில் ஒரு பெரும்பகுதியினர் முஸ்லிம்களாக மதம் மாறி டெல்லியிலேயே நிரந்தரமாகக் குடியேறினார்கள். அவர்களின் தளபதிகளில் ஒருவனுக்குத் தன் மகளையும் இரக்கத்துடன் மணம் செய்து வைத்தார் சுல்தான் ஜலாலுதீன்!
அமைதியை விரும்பிய இந்த மென்மையான சுல்தானையும் விதிவிட்டு வைக்கவில்லை. அளவு கடந்த, தேவையில்லாத இரக்கக்குணமே அவருக்கு ஆபத்தாக முடிந்தது!

Leave a comment
Upload