தொடர்கள்
அரசியல்
பணிந்தாரா பன்னீர்?!.... ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

202090920023879.jpeg

‘இந்த வருடம் அக்டோபர் ஏழாம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் சேர்ந்து அறிவிப்பார்கள்’ என்று சென்ற மாதம் 28ஆம் தேதி அதிமுகவின் கேபி முனுசாமி அறிவித்தார். ஆனால் அந்த இடைப்பட்ட ஒன்பது நாட்கள் அவர் பட்ட பாடு சொல்லி மாளாது.

2020909200309174.jpeg

ஒரு கட்டத்தில் ‘இப்போது எடப்பாடியை அறிவிப்பு செய்வோம், தேர்தல் முடிந்து சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் உங்களுக்கு ஆதரவு இருந்தால் நீங்களே முதல்வர் ஆகி விடுங்கள்’ - இப்படி கேபி முனுசாமி, ஓபிஎஸ்-ஐ பார்க்கும்போதெல்லாம் புதுப்புது யோசனையை சொல்லி வந்தார். எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்ட ஓபிஎஸ்-ஸிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதன் நடுவே இரண்டுநாள் தனது சொந்த ஊரான தேனிக்கு போய்விட்டார் ஓபிஎஸ். அங்கு அவர் தனது பண்ணை வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்தார். அதில் சில சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.

திடீரென வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் வந்து அவருடன் சேர்ந்து ஆலோசனை செய்தார். ஆனால், ஆலோசனை முடிந்து வெளியே வந்த அமைச்சர் உதயகுமார், மறுநாள் திறக்க இருக்கும் ‘மூக்கையா தேவர் சிலை திறப்பு நிகழ்ச்சி பற்றி பேசினேன்’ என்று மட்டுமே சொல்லிவிட்டு புறப்பட்டு விட்டார். ஓபிஎஸ்-ஸின் தேனி நடவடிக்கைகளை உளவுத்துறை உடனுக்குடன் சேகரித்து, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றது. இதன் நடுவே, கேபி முனுசாமி மற்றும் அமைச்சர் வேலுமணி இருவரும் இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி என்று யோசித்தார்கள். அந்த ஒன்பது நாட்களில், ஏழு நாட்கள் ஓபிஎஸ் - இபிஎஸ் இடைவெளி அதிகமாகியது. ஒரு கட்டத்தில் கேபி முனுசாமியிடம் பிரிந்து சென்றவர்களை திரும்ப அழைத்து, ஒன்றுபட்ட அதிமுக-வாக இந்தக் கட்சி இருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக ஓபிஎஸ் சொன்னார். அப்போதுதான் சசிகலா வகையறாக்களுடன் ஓபிஎஸ் ஏதோ பேசி வருகிறார் என்ற சந்தேகம் கேபி முனுசாமிக்கு வந்தது. அப்புறம் சுதாரித்துக் கொண்டு ‘வேண்டவே வேண்டாம் அந்த கும்பல் மட்டும்’ என்று முடிவு செய்து, எடப்பாடியிடம் ‘நீங்கள் வழிகாட்டுதல் குழுவுக்கு மட்டும் சம்மதம் என்று சொல்லுங்கள், உங்களை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டியது என் பொறுப்பு’ என்றார். இதற்கு அமைச்சர் வேலு மணியும் ஆதரவு தெரிவித்தார்.

2020909200415605.jpeg

ஓபிஎஸ் முகாமில் நடக்கும் எல்லா விஷயங்களையும் கேபி முனுசாமி எடப்பாடியிடம் சொல்லவில்லை. ஆனால், வேலுமணியிடம் எல்லா தகவல்களையும் சொன்னார். வேலுமணிக்கு தினகரனை அறவே பிடிக்காது, எனவே அவரும் அதை விரும்பவில்லை. எப்படியோ வழிகாட்டுதல் குழுவுக்கு எடப்பாடியை சம்மதிக்க வைக்க அமைச்சர் வேலுமணி கட்டாயப்படுத்தினார். அதன் பிறகு எடப்பாடி சம்மதித்தார். 11 பேர் கொண்ட குழுவில் ‘என் ஆதரவாளர்கள் ஆறு பேர் இருப்பார்கள்’ என்றார் எடப்பாடி. ‘மீதி 5 பேர் அவருடைய விருப்பம்’ என்று சொன்னார். ‘அதெல்லாம் பார்த்துக்கொள்ளலாம்’ என்று இருவரும் குஷியாக பிரச்சனை முடிவுக்கு வரும் போலிருக்கிறது என்றே நினைத்து சந்தோஷப்பட்டார்கள்.

எடப்பாடி முன்னிலையில் கேபி முனுசாமி ஓபிஎஸ்-க்கு செல்பேசியில் இந்த தகவலை சொல்லிவிட்டு, ‘நானும் அமைச்சர் வேலுமணியும் உடனே தேனிக்கு கிளம்பி வருகிறோம், மற்றவற்றை நேரில் பேசிக் கொள்ளலாம்’ என்று சொன்னபோது... ஓபிஎஸ் ‘வேண்டாம், நானே சென்னைக்கு வருகிறேன்’ என்று இறங்கி, அன்று இரவே சென்னை திரும்பிவிட்டார் ஓபிஎஸ்.

202090920044170.jpeg

இப்படியாக...கேபி முனுசாமி, வேலுமணி இருவரும் சசிகலாவோ, அமமுகவோ இந்த சண்டையில் பலன் அடையக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள்.

பதினோரு பேர் கொண்ட பட்டியல் பன்னீர்செல்வத்திடம் கொடுக்கப்ப்பட்ட போது, ‘அமைச்சர்கள் பொறுப்பில் இருப்பவர்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அப்போதுதான் கட்சி வேலையை அவர்கள் கவனிக்க முடியும். கட்சி வேலை, அமைச்சர் வேலை இரண்டையும் எப்படி பார்ப்பார்கள்?. எனவே வழி காட்டுதல் குழுவில் உள்ள அமைச்சர்கள் அவர்கள் பதவியை ராஜினாமா செய்யவேண்டும்’ என்றார். அப்போது அமைச்சர் வேலுமணி நிதானமாக “அண்ணே அமைச்சர்களாக இருப்பவர்கள் இப்போது மாவட்ட செயலாளர்கள் ஆகவும் இருக்கிறார்கள்... இதனால், மாவட்டத்தில் கட்சி வேலை பார்க்காமல் இருந்தோமா..? அப்படி எந்த மாவட்டத்தில், எந்த அமைச்சர் கட்சி வேலை செய்யவில்லை என்று சொல்லுங்கள்?! அமைச்சர்களாக இருப்பதால்தான் கட்சிக்காரர்களுக்கு அவங்க மாவட்டத்தில் நாலு நல்லது செய்ய முடிகிறது” என்று சொல்ல... அதன் பிறகு அந்தப் பிரச்சனையை அப்படியே விட்டுவிட்டார் ஓபிஎஸ்.அவருக்கான புரிதல் வகுப்பு!

வழிகாட்டுதல் குழுவிலிருந்த பட்டியலில் இருந்தவர்கள் பெயரை இருவருமே மூன்று நான்கு முறை நீக்கி, திருத்தி, மாற்றி, அதிகாலை 3:00 மணிக்கு தான் பட்டியல் இறுதி ஆக்கப்பட்டது. அப்போதே ‘வழிகாட்டுதல் குழு பெயரை முதல்வர் அறிவிப்பார், முதல்வர் வேட்பாளர் பெயரை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிவிப்பார்’ என்று தீர்மானிக்கப்பட்டது. இப்படி எந்தச் சிக்கலும் இல்லாமல் இந்தப் பிரச்சனையை கேபி முனுசாமியும் வேலுமணியும் படு சுமுகமாக தீர்த்தனர்.

2020909200508445.jpeg

அதே சமயம், பாரதிய ஜனதா கட்சி என்னதான் அதிமுகவின் உட்கட்சி விஷயம் என்று சொல்லி வந்தாலும், இருவருக்கும் சில முக்கிய பிரமுகர்கள் மூலம் ரகசியமாக உத்தரவுகளை பிறப்பிக்கும் வேலையையும் செய்தனர். அதனால்தான் இல கணேசன், ‘இருவரும் ஒற்றுமையாக இல்லை என்றால் அது திமுகவின் வெற்றிக்கு சாதகமாகி விடும்’ என்று எச்சரித்தார். எல்லாம் சுமுகமாக முடிந்ததும், ஓபிஎஸ் வீட்டிற்கு சென்று ஈபிஎஸ் நன்றி சொன்னார். இப்போது பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட்டது போல் இருந்தாலும், வேட்பாளர் தேர்வு, தேர்தல் செலவு போன்றவற்றில் இருவரின் கணக்கு என்ன என்பது அவர்கள் இருவருக்கும் மட்டும் தெரிந்ததே.

எடப்பாடி முதல்வர் வேட்பாளர் என இறுதியாக அறிவிக்கப்பட்டது என்றாலும், வெற்றி பெற்ற ஆட்சியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் எனும் கத்தி, அவர் தலைக்கு மேல் அக்டோபர் ஏழாம் தேதி முதல் தொங்கத் தொடங்கிவிட்டது என்பதும் இன்னொரு உண்மையே!.

அதேசமயம் எடப்பாடி ஆதரவாளர்கள், அமைச்சர் பெருமக்கள், பன்னீர்செல்வத்தை இந்த பாடு படுத்தும் எடப்பாடி, ‘நாளை நமக்கும் இதே நிலைதான். நாம் உஷாராக தான் அவரை கவனிக்க வேண்டும்’ என்று யோசிக்கத் தொடங்கி விட்டார்கள்.

இந்த முறை முதல்வர் வேட்பாளர் என்பது எடப்பாடிக்கான நுழைவுத் தேர்வு. நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டார். மெயின் தேர்வு சட்டமன்ற தேர்தல். அதில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களோ, எடப்பாடி ஆதரவாளர்களோ ஒன்றும் செய்ய முடியாது. அங்கு மதிப்பெண் போட வேண்டிய இடத்தில் மக்கள்தான் இருக்கிறார்கள். அவர்கள் மனசு யாருக்குத் தெரியும்?! எடப்பாடி ஆதரவாளர்களோ ‘அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்’ என்கிறார்கள். ஆனால் ஆட்சி பறிபோனால், கட்சி பன்னீர்செல்வம் கைக்கு போய்விடும் என்பது எடப்பாடிக்கு தெரியாமலா இருக்கும்?!