தொடர்கள்
நொறுக்ஸ்
உலா வரும் பிரமாண்ட யானை...! - விமலா பரந்தாமன்

202090816455322.jpg

சென்னை நகரில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற ஒரு விவிஐபி வீட்டு திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சியில் ஒரு பிரமாண்ட யானை வாசலில் நின்று அனைவரையும் வரவேற்றது. அதன்பிறகு சென்னை நந்தம்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் அந்த யானையை ஒரு வாகனத்தில் கொண்டு சென்றனர். அந்த யானை பார்ப்பதற்கு, குருவாயூர் கோயிலில் இருந்த கேசவன் யானை உயிரோடு நடந்து வருவதை போல் காட்சியளித்தது.

இந்நிலையில், கடந்த 7-ம் தேதி சென்னை பல்லாவரம், ஜிஎஸ்டி சாலையில் அந்த யானையை வாகனத்தில் கொண்டு சென்றனர். அது, சாலையை எதிர்நோக்கியபடி நடந்து வருவதை பார்த்ததும் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் மிரண்டு போய் நின்றனர்.

பின்னர் அனைவரும் கிட்டே சென்று அதை பார்த்தபோது, ராட்சத வடிவில் அமைக்கப்பட்ட யானை பொம்மை எனத் தெரியவந்தது. அதன் 4 கால்களும் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டதை போல் காட்சியளித்தது. அதன்பிறகு பலரும் பயந்து, தெளிந்து, அந்த யானை பொம்மையின் முன்பு நின்று, ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர்.

இதுகுறித்து உரிமையாளர்களிடம் பேசுகையில், ‘சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உயிருள்ள யானையை வாகனத்தில் கொண்டு செல்வது மிகுந்த சிக்கலை ஏற்படுத்தியது. மேலும், குருவாயூர் கேசவன் யானையை மனதில் வைத்து, சுமார் ₹3.50 லட்சம் செலவில் இந்த யானை பொம்மையை உருவாக்கினோம். தற்போது இந்த யானையை நாள் வாடகைக்கு விட்டு சம்பாதித்து வருகிறோம். திருவிழா, விவிஐபி வீட்டு திருமணங்கள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு யானையை எடுத்து வரும்படி அழைக்கின்றனர். அங்கு வரும் மக்கள், இது நிஜ யானையா அல்லது பொம்மையா என பிரமிப்பில் திகைக்கின்றனர். இதனால் அதன் மவுசு கூடிவருகிறது’ என புன்னகையுடன் கூறுகின்றனர்.