தொடர்கள்
பொது
ஹத்ராஸ் சம்பவம்.. ஒரு ஃபாலோ அப்... - தில்லைக்கரசி சம்பத்

2020909210615413.jpeg

உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்து போன ஹத்ராஸ் பெண்ணின் விவகாரத்தில், தினமும் குழப்பம் விளைவிக்க கூடிய அளவுக்கு புதிது புதிதாக செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.

இறந்த பெண்ணின் குடும்பத்தார் தவறான தகவல்களை அளித்தனர் என்றும் காவல்துறையினர் எதையோ மறைக்க நாடகம் ஆடுகின்றனர் என்றும், அரசியல் கட்சிகள் இதை வைத்து அரசியல் செய்து ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர் எனவும் செய்திகள் வெளியாகின்றன.

இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான சந்தீப் தானும் அந்த பெண்ணும் நட்புடன் இருந்ததாகவும் அடிக்கடி செல்பேசியில் பேசிக்கொள்வோம். சம்பவம் நடந்த அன்றைக்கு தான் அதே போல் அவளை சந்திக்க சென்றதாகவும், அதை பார்த்துவிட்ட அவளின் தாய் மற்றும் சகோதரன் இங்கேருந்து போய்விடு என கோபமாக கூறியதால் தான் வந்து விட்டதாகவும், வீட்டில் கால்நடைகளுக்கு உணவு வைத்துக் கொண்டிருந்த போது அப்பெண்ணை அவள் குடும்பத்தாரே அடித்து காயப்படுத்தியதாக கிராம மக்கள் தெரிவித்தனர் என்றும் “நாங்கள் அப்பாவிகள்” என்று ஹிந்தியில் தெளிவாக ஒரு கடிதம் எழுதி, மற்ற மூன்று குற்றவாளிகளோடு சேர்ந்து கைநாட்டு வைத்து ஹத்ராஸ் காவல்துறை கண்காணிப்பாளருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.

கைது செய்து 10 நாட்களுக்கு மேல் ஆகின்ற நிலையில், எழுதப்படிக்க தெரியாத இவர்கள் தீடிரென இன்று கைநாட்டு வைத்து ஒரு கடிதத்தை அனுப்புகின்றார்கள். கோர்ட்டில் சொல்ல வேண்டிய சாட்சியை, எதற்காக ரிமாண்டில் இருக்கும் நிலையில் காவல்துறைக்கு அனுப்பி, பின் அந்தக் கடிதத்தை காவல்துறையினர் மற்றும் பத்திரிகை மீடியாக்களுக்கு வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்ற கேள்விகள் எழுகின்றன. குற்றவாளிகளின் சார்பில் அவர்களுக்கு சாதகமான செய்திகள் பரப்பப்படுகின்றன என்று சந்தேகங்களும் இதனால் சரமாரியாக எழுப்பப்படுகின்றன.

பாதிக்கப்பட்ட பெண்ணை, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன்னரே காவல்நிலையத்திற்கு கூட்டிக்கொண்டு போயிருக்கின்றனர். அங்கு சந்தீப் என்பவர் தன் கழுத்தை நெறித்ததாக அந்த பெண் தன் தாயாருடன் சேர்ந்து புகார் அளித்திருந்தார். பாலியல் வன்முறை என்று பதியாமல் கொலை முயற்சி என்றே முதலில் பதிவாகி இருக்கிறது. ஆனால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது தான், ‘நான்கு பேர்களால் நான் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டேன். அவர்கள் சந்தீப், லவ்குஷ், ரவிசிங் மற்றும் ராமுசிங்’ என்று தெளிவாக கூறுவது வீடியோவில் பதிய பட்டிருக்கிறது.

ஏன் கொலை முயற்சி என்று முதலில் பதிந்தீர்கள் என கேட்டதுக்கு பெண்ணின் தாயார், “அவளால் சரியாக பேச முடிவில்லை. வயல்வெளியில் அவளை கண்டபோதே அவள் மயக்கத்தில் இருந்தாள். காவல் நிலையத்திற்குள் பைக்கில் வைத்து அவளை அரை மயக்கத்துடன் கூட்டி வந்தோம். பின் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற பின் சுயநினைவு வந்த போது, பாலியல் வல்லுறவு மற்றும் யார் அதை செய்தார்கள் என்பதை தெளிவாக கூறினாள்” என்று கூறுகிறார்.
அப்பெண்ணின் இன்னொரு சகோதரர் பெயரும் சந்தீப் தான். கழுத்தை நெறித்தது அவராக இருக்கலாம் என சந்தேகங்கள் எழுப்பப்பட்டாலும், அவர் சம்பவம் நடந்த நேரத்தில் நொய்டாவில் இருந்ததாக கூறப்படுகிறது. அங்கேயே தங்கி வேலைப்பார்த்து வரும் சந்தீப் தன் சகோதரி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபின், அவர் கூடவே தங்கி இருந்து பின் அப்பெண் இறந்த பின் அவரது உடலோடு ஆம்புலன்சில் ஹத்ராஸ் வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவம் நடந்த 10 நாட்களுக்கு பின்னரே போலீஸார் ஆக்ராவில் உள்ள தடயவியல் பரிசோதனை கூடத்தைச் சேர்ந்தவர்களை அழைத்து, அவரது ரத்த மாதிரி உள்ளிட்ட பிற தடயங்களை சேகரிக்க வைத்தனர். பாதிக்கப்பட்ட பெண், மருத்துவமனையில் சேர்ந்த அன்றே பாலியல் வன்முறை நடந்திருக்கின்றதா என்று அதற்கான சோதனைகளை உடனடியாக செய்யாமல் ஏன் இவ்வளவு தாமதமாக செய்தீர்கள் என காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த விக்ராந்த் வீரை கேட்டபோது, அவரிடம் அதற்கு பதிலில்லை. பெண்ணின் உடலை அவரது குடும்பத்தினர் சம்மதம் இல்லாமல் அவசரமாக நடு இரவில் எரித்த சம்பவத்தில், உபி அரசால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர் தான் இந்த விக்ராந்த் வீர்.

அடுத்ததாக... பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம், அப்பெண்ணின் மருத்தவ அறிக்கையோ, பிரேத பரிசோதனை நகலையோ காவல்துறை இன்னும் வழங்கவில்லை.

CDR எனப்படும் தொலைபேசி பேச்சுகள் பதிவில் அக்டோபர் 2019-லிருந்து மார்ச் 2020 வரை 100 முறைகளுக்கு மேல் இறந்த பெண்ணின் சகோதரனுக்கும் குற்றம் சாட்டப்பட்ட சந்தீப்புக்கும் பேச்சுகள் பரிமாற்றம் நடந்ததாக, அப்பெண்ணின் சகோதரனின் கைப்பேசியில் பதிந்திருக்கிறது என செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் உச்சநீதிமன்றம் செவ்வாய் அன்று ஹத்ராஸ் வழக்கினை, அசாதாரண மிகுந்த அதிர்ச்சி அளிக்கும் சம்பவமாக கூறியிருக்கிறது. இந்த வழக்கில் சாட்சியம் அளிப்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கை அடங்கிய விவரத்தை தாக்கல் செய்யுமாறு அம்மாநில அரசுக்கு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தனது ஆட்சியில் குழப்பம் உண்டுபண்ணி, பெரும் கலவரங்கள் ஏற்படுத்தி, மாநிலத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதற்காகவே வெவ்வேறு செய்திகள் பரப்பப்படுகின்றன எனவும் இதில் சர்வதேச சதிகள் ஈடுப்பட்டு இருக்கின்றன என உபி முதல்வர் யோகி குற்றம் சாட்டியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் உபி அரசு பாதிக்கப்பட்ட பெண் இறப்பதற்கு முன் அளித்த சாட்சி அறிக்கைகள் பற்றி 3 பிரமாண பத்திரிகையாக தாக்கல் செய்திருக்கிறது.

அதில் முதல் அறிக்கையில்... இறத்த பெண்ணும் அவரது தாயாரும், பெண்ணின் கழுத்தை தவிர வேறு எங்கும் காயம் ஏற்படவில்லை என்று தெளிவாக கூறி இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இரண்டாம் அறிக்கையில்... சந்தீப் என்பவர் தன் கழுத்தை நெறித்தார் என்று அந்த பெண்ணும், அவளின் சகோதரர் இது குடும்ப பகை காரணமாக நிகழ்ந்தது எனவும் கூறி இருக்கிறார்கள்.

மூன்றாம் அறிக்கையில்... அந்த பெண் தன்னை 4 பேர் (யார் யார் என பெயர்களுடன் கூறி) பாலியல் பலாத்காரம் செய்ததாக சாட்சி அளித்தது இடம் பெற்றுள்ளது.

இதை தொடர்ந்து... இன்னொரு திருப்பமாக, புதனன்று ரூ. 100 கோடிகளுக்கு மேல் மொரீஷியஸிலிருந்து உபிக்கு சட்டவிரோதமாக வந்திருப்பதாக அமலாக்க துறை அறிவித்துள்ளது. அதில்
ரூ 50 கோடிகள் பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியா (PFI) வால் ஹத்ராஸில் சாதிக்கலவரங்கள் உண்டு செய்ய பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இதைத் தொடர்ந்து PFI உடன் தொடர்பு உடையவர் என குற்றம் சாட்டப்பட்டு, கேரளா பத்திரிக்கையாளர் சித்திக் கப்பன் மற்றும் அவரது சகாக்கள் மூவர் ஹஸ்ராத் செல்லும் வழியில் மதுராவில் தேச துரோக சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கையின் கீழ் உபி அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்களை விடுவிக்கும் படி
6 கேரள எம்பிக்கள் பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் கடிதம் எழுதி உள்ளார்கள்.

இந்தக் குற்ற சம்பவத்தை தொடர்ந்து, பல கதைகள் வெளியாகும் நிலையில் இந்த கதைகளின் நம்பகத்தன்மை குறித்து தாராளமாக நம்பிக்கையுடன் அலசி இருக்கலாம், ஒரே ஒரு விஷயம் மட்டும் நடக்காமலிருந்திருந்தால். அந்தப் பெண்ணின் அவசர உடல் எரிப்புதான் அது.

சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் அளவிற்கு பெருங்கலவரங்கள் உண்டாக இருந்ததை தடுப்பதற்காகவே உடலை எரித்ததாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. கலவரங்கள் வந்தால் அதை அடக்க பலம் பொருந்திய காவல்துறையினர் மற்றும் அரசு நிர்வாகம் என அனைத்தையும் கையில் வைத்திருக்கும் உபி அரசு, பாதிக்கப்பட்ட பெண்ணை எரிக்காமல் புதைத்து கூட இருக்கலாம். அதை செய்யாமல் உடலை எரித்துவிட்டு பின்பு வரும் கதைகளை எவ்விதம் நம்புவது என்பது நியாயத்தின் பக்கம் நிற்கின்ற எல்லாருடைய மனதில் எழுகின்ற கேள்வி.

விருப்பமின்றி நடந்த பாலியல் சம்பவத்தை வெளியில் சொல்வது பொதுவாக படிப்படியான செயல்பாடாக உள்ளது. நடந்த கொடுமையை நினைவுபடுத்துவதைத் தவிர்க்கும் மனப் போக்கு அல்லது உணர்வு தான் இதற்கு காரணம் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். அந்த பெண் ஏன் இதை முதலிலேயே கூறாமல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கூறினார் என்பதற்கு இது தான் பதிலாக இருக்க முடியும்.

எவ்வளவு சீக்கிரமாக பாலியல் வன்கொடுமையை புகாராக பதிவு செய்கிறார்கள் என்பதற்கும், எந்த அளவுக்கு அது உண்மையாக இருக்கும் என்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

சமூக மற்றும் மன ரீதியிலான பல விஷயங்களால் பாதிக்கப்பட்ட பெண்ணை, பலாத்காரம் செய்து, பின் கடுமையாக அடித்து நொறுக்கப்பட்ட நிலையில்... உடனடியாக சம்பவங்களை நினைவுபடுத்திப் பார்க்க முடியாமல் இருந்திருக்கலாம். கழுத்து மட்டும் தான் அடிப்பட்டது என அப்பெண் காவல்நிலையத்தில் முதலில் கூறினாலும் கூட... பிற்பாடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் ஸ்கேன் செய்து முதுகெலும்பு உடைக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மை தெரியவந்தது. இதை முதலில் சொல்லவில்லை என்கிற காரணத்தால் முதுகெலும்பே முறியவில்லை எனக் கூறுவது எவ்வளவு அபத்தமோ... அதே போல் பாலியல் வல்லுறவு பற்றி முதல் அறிக்கையில் அப்பெண் சொல்லவில்லை, மூன்றாவது அறிக்கையில் தான் சொன்னார் என்பதற்காக பாலியல் வல்லுறவே நடக்கவில்லை என்று சொல்வது போல அபத்தமானது.

ஏழை தலித் இன பெண்கள், பாலின பாகுபாடு, சாதிய பாகுபாடு மற்றும் பொருளாதார ரீதியில் ஒடுக்கப்பட்டவர்கள் என பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளாகிறார்கள் என இந்திய தலித் பெண்களின் நிலை குறித்து ஆய்வு செய்பவர்கள் கூறுகிறார்கள்.

ஹத்ராஸ் சம்பவத்தில், புது புது கதைகள் வந்து கொண்டிருந்தாலும் ஒரு சிறு பெண் உயிரிழந்து இருக்கிறார். இதில் உச்சநீதிமன்றமும் கவனம் செலுத்தி, சிபிஐ மற்றும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடந்து கொண்டிருப்பதால், கண்டிப்பாக உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவார்கள் என்ற நம்பிக்கையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தோடு சேர்ந்து தேசமும் அவர்களுடன் காத்திருக்கின்றது.