தொடர்கள்
பொது
"கொடநாடு கொலை வழக்கு எங்கே சென்று கொண்டிருக்கிறது..?" - ஸ்வேதா அப்புதாஸ்

கொடநாடு என்றாலே ஒரு பரபரப்பு தான்... முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்த எஸ்டேட் பங்களாவை, தன் விருப்பத்திற்கு ஏற்றபடி, 108 அறைகள் இருக்கும் வண்ணம் கட்டப்பட்ட ஒரு மாளிகை.

2020904142943980.jpg
கொடநாடு எஸ்டேட் பங்களாவின் மேல் அதிக பற்று கொண்ட ஜெயலலிதா, அவ்வப்பொழுது தன் தோழி சசிகலாவுடன் இங்கு வந்து போவது சகஜம்.

இவர்களின் வருகையால் கோத்தகிரி, மேட்டுப்பாளையம், ஊட்டி சாலைகள் பளிச் என்று பராமரிக்கப்பட்டு வந்தது. அம்மா வருகிறார்கள் என்றால் மொத்த மாவட்ட நிர்வாகமும் அங்கு தான் இருக்கும். கோத்தகிரி மற்றும் கொடநாடு வழி நெடுகிலும் ஆளும்கட்சியினரால் விழாக்கோலம் பூண்டு விடும்.

2020904143327117.jpg
ஜெயலலிதா வந்து தங்கும் நேரத்தில், அமைச்சர்கள் முதல் அனைத்து அதிகாரிகளும் அம்மா தரிசனத்திற்காக கால் கடுக்க அந்த வாயிலில் காத்து கிடப்பார்கள். நீலகிரி மாவட்டமே அப்போது ஒரு முக்கிய இடமாக கருதப்பட்டது. காரனம், அரசின் முக்கிய முடிவுகள் மற்றும் கட்சி சம்மந்தப்பட்ட முடிவுகள் அனைத்தையும் இந்த கொடநாடு மாளிகையில் தான் ஜெயலலிதா எடுத்து வந்தார்.

202090414350529.jpg
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்... கொடநாடு வெறிச்சோடி போனது. முதல்வரின் தோழி சசிகலா இனி இங்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் சிறை சென்று விட்டதால், யாரும் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதற்கிடையில் கடந்த 23-4- 2017 அன்று இரவு கொடநாடு ஜெயலலிதா மாளிகையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. நள்ளிரவு 12 மணி முதல் 2 மணிக்குள் அங்கு பணிபுரிந்த காவலாளி கூர்க்கா ஓம் பகதூர் தாத்தா யாரோ சில மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். மர்ம கும்பல் இந்த கொலையை செய்து, பங்களாவினுள் சென்று, சில முக்கிய பொருள்களை திருடிச் சென்றதாக கோத்தகிரி காவல் நிலையத்தில் ஓம் பகதூர் தாத்தாவின் தந்தை கிருஷ்ண தாத்தா புகார் அளித்தத்தின் பேரில், குற்றவாளிகளை போலீஸ் வலைவீசி தேடிப் பிடித்தது.

2020904144149861.jpg

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான கனகராஜ், சயான், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயன், வாளையார் மனோஜ், மனோஜ் சாமி, ஜித்தன் ஜாய், ஜம்சீர் அலி, பீஜின் குட்டி ஆகிய 11 பேர் மேல் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. இதற்கிடையே ஜெயலலிதாவின் தனிப்பட்ட ஓட்டுனர் கனகராஜ் ஒரு விபத்தில் இறந்துவிட்டார்... அடுத்த குற்றவாளியான சயான் விபத்தில் சிக்கி, தன் குடும்பத்தை இழந்தார்... எனினும் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு ஊட்டி மாவட்ட நீதி மன்றத்தில் நடந்து வருகின்றது.

2020904144018150.jpg
கொரோனா தொற்றால் இந்த வழக்கு தாமதமானது. குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் லாக் டவுனில் தளர்வு ஏற்பட்டவுடன், மீண்டும் இந்த வழக்கு விசாரணை துவங்கியது.

செப்டம்பர் மாதம் 29 தேதி முதல் இந்த வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது... நீதிபதி வடமலை இந்த வழக்கை விசாரித்து வருகிறார்... குற்றம் சாட்டப்பட்ட பத்து பேரும் ஆஜராக வேண்டி உத்தரவு பிறப்பித்ததின் பேரில், தற்போது அனைவரும் ஆஜர்.

அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட இந்த வழக்கு, அன்று விசாரணைக்கு வந்த போது... அம்மாவுக்கு கண்ணாடியால் செய்யப்பட்ட காண்டாமிருகத்தின் உருவத்தை சென்னை மாநகராட்சி கவுன்சிலர் சேகர் பரிசளித்து இருந்தாராம்... அந்தக் கண்ணாடி காண்டாமிருகம் குறித்து அந்த முன்னாள் கவுன்சிலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

2020904144647930.jpg
ஏன், இந்த கண்ணாடி காண்டாமிருகம் குறித்து விசாரணை என்றால்\.... அந்த பொம்மை காண்டாமிருகம் கண்ணாடியா அல்லது பிளாட்டினமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாம்... அந்த காண்டாமிருக பொம்மையினுள் என்ன மர்மம் ஒளிந்திருக்கிறதோ.... என்ற கேள்வி உலா வருகின்றது.

மீண்டும் அக்டோபர் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட வழக்கில்... குற்றவாளிகளான பத்து பேரும் ஆஜர் படுத்தப்பட்டனர். கோத்தகிரி போலீஸ் ஏட்டு ரிச்சர்ட் ஜேக்கப், கோத்தகிரி ஊராட்சி முன்னாள் கவுன்சிலர் செல்வம், எஸ்டேட் பங்களா ஊழியர் லட்சுமி, தேயிலை ஏஜென்ட் கருப்புசாமி, மற்றும் விஜயன் என்பவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு.... கூடுதலாக இந்த வழக்கு விசாரணை 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விரைவில் முடிக்க ஆளும்கட்சி தரப்பில் அழுத்தம் கொடுப்பதாகவும் தகவல்... ஊட்டி ஆளும்கட்சி பெண் உறுப்பினர் ஒருவர், இந்த வழக்கை விரைவில் முடிக்கவென்றே சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாராம்.

2020904145532292.jpg
இதற்கிடையில் இந்த வழக்கை வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர் ஒரு தரப்பினர்.... எதிர் வரும் சட்டமன்ற தேர்தலுக்கு இந்த வழக்கு இடைஞ்சலாக இருக்கலாம் எனும் உயர்மட்ட எண்ணமும் உள்ளதாம்!

எல்லாம் கிடக்கையில், இந்த வழக்கு ஒரு பெரிய கேள்விக் குறியாக நடந்து கொண்டிருக்க... ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை அவ்வப்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்னவோ நிஜம்!.

இதற்கிடையில் கடந்த வாரம் ஆளும்கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற நாடகம் நடந்து கொண்டிருக்க.... பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா பிப்ரவரி மாதம் விடுதலை ஆகலாம் என்று இருக்கும் தருணத்தில், வருமானவரித் துறை கொடநாடு பங்களா எஸ்டேட்டை சீல் செய்து தன் கட்டுப்பாட்டிற்குள் அதிரடியாக கொண்டுவந்து விட்டது ஒரு புதிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பல மர்மங்களை கொண்ட காட்சிப் பொருளாக மாறி வருகிறது இந்த அழகான கொடநாடு எஸ்டேட்... இந்தப் பகுதி சுவிட்ஸர்லாந்து கிளைமேட்டை போன்றது... காரணம், பாலக்காடு காணுவாயில் இருந்து கேரளாவின் சூடு காற்று நேராக கொடநாடு மலையை வந்தடைந்து... இங்கு உள்ள குளிர் காற்றுடன் கலக்க.. ஒருவித இதமான கால சூழ்நிலை இங்கு தானாக ஏற்படுகிறது. அந்த கிளைமேட் தான் சுவிட்ஸர்லாந்து சீதோஷண நிலையை நினைவுபடுத்துகிறது...

2020904145714271.jpg

இது ஒரு புறமிருக்க...கொடநாடு தேயிலை சத்தானது மற்றும் சூப்பராக வளரக்கூடியது. கோத்தகிரி முழுவதும் இந்த காலநிலை இருப்பதால், காய்ச்சல், ஜலதோஷமெல்லாம் அவ்வளவு சீக்கிரமாக இங்கு பரவாது. இந்தப் பகுதியில் வாழும் மக்கள் நல்ல உடல் நலத்துடன் இருப்பது என்னவோ உண்மை...

2020904150056633.jpg

கொடநாடு பங்களாவிற்கு ஜெயலலிதா எப்போது வந்தாலும் அது அவரின் உடல் நிலையில் புதிய தெம்பை கொடுத்து வந்ததாம். அதனால் தான் அம்மாவிற்கு இங்கு வந்து தங்க கொள்ளை ஆசை....

900 ஏக்கர் கொடநாடு எஸ்டேட்டை 1995 ஆம் ஆண்டு ஜெயலலிதாவும் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் கூட்டாக சேர்ந்து கிரேக் ஜோன்ஸ் என்பவரிடம் இருந்து வாங்கியுள்னர், ஒரு நீண்ட பேரத்திற்கு பின்..... இந்த எஸ்டேட் வாங்கியதில் கிரேக் ஜோன்ஸும் ஒரு நிலை பெற்ற பார்ட்னர் என்பது குறிப்பிடத்தக்கது...

2020904145903369.jpg

ஜெயலலிதா, சசிகலா மற்றும் இளவரசி பங்குதார்களான பின், பல மர்ம முடிச்சுகளை கொண்ட இந்த எஸ்டேட் பக்கம் இதன் ஒரிஜினல்
முதலாளியான கிரேக் ஜோன்ஸ் தலையை காட்டவில்லை என்பதும் இன்று வரை ஒரு பெரிய மர்மம்.

இந்த கொடநாடு எஸ்டேட் 1831 வருடம் சிறிய தேயிலை தோட்டமாக உருவாகி, பின் 1868 ஆம் ஆண்டு தான் கொடநாடு எஸ்டேட் என்று உருவாகி, பல பிரிட்டிஷ் முதலாளிகளை சந்தித்து, பின் இந்திய ரஜினிகாந்த் மதானி போன்ற பெரிய இந்திய முதலைகளின் கரத்தில் வளர்ந்து. 1995 பிப்ரவரி மாதம், மைசூர் உடையார் இந்த எஸ்டேட்டை வாங்கி சில மாதங்களே ஆன பின் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் கரத்திற்கு மாறிவிட்டது, இந்த வரலாற்று சிறப்புமிக்க கொடநாடு எஸ்டேட்...

இந்த எஸ்டேட் இன்று வெறிச்சோடி, இருள் சூழ்ந்த நிலையில் இருப்பதை சகித்து கொள்ள முடியாமல் வருத்தமுடன் இருக்கிறார், இந்த எஸ்டேட்டில் 1980 முதல் 1995 வரை மேனேஜராக பணியாற்றிய தோடர் இனத்தை சேர்ந்த ஆல்வாஸ். அவர் நம்மிடம் கூறும்போது...

2020904151605378.jpg
“ஒரு வரலாற்று சிறப்புமிக்க தேயிலை எஸ்டேட்... அதன் அழகை ரொம்பவே ரசித்தவன். பதினைந்து வருடம் இந்த எஸ்டேட் மேனஜராக பணியாற்றியதால், பல புதிய அனுபவங்களை கற்றவன்... ஆயிரம் ஏக்கர் எஸ்டேட். பல வெளிநாட்டு மற்றும் உள் நாட்டு முதலாளிகளை அடையாளம் கண்ட ஒரு டீ எஸ்டேட் என்று சொன்னால் மிகையாகாது... ஒரு சுவிட்ஸர்லாந்து கால சூழ்நிலையை இந்த எஸ்டேட்டில் அனுபவித்தவன் நான். மாயார் பள்ளத்தாக்கை தொடும் இந்த எஸ்டேட்.

2020904152054303.jpg

13 ஏக்கர் பரப்பளவில் ரம்மியமான ஒரு ஏரி உள்ளது. அதில் படகு சவாரி செய்வது அலாதியானது. ஒரு அழகான எஸ்டேட்டின் முதலாளி நம் மாநில முதல்வர் என்ற போது பெருமையான ஒன்றாக கருதியவன் நான். பின் அந்த அம்மா மறைவுக்கு பின் இந்த பெரிய எஸ்டேட் களையிழந்து போயுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஜெயலலிதா இந்த எஸ்டேட்டை உலகப் புகழாக்கினார். அவருக்கு பின்... என்ன ஆனது..? கொலை, கொள்ளை... வருமானவரி சோதனை என்று தற்போது இந்த எஸ்டேட்டை சுற்றி ஏகப்பட்ட மர்மங்கள்... எஸ்டேட் இருண்டு போய்விட்டது. இந்த வார அதிர்ச்சிச் செய்தி... இந்த எஸ்டேட்டினை வருமானவரித் துறை சீல் செய்துள்ளது என்பது... இந்த எஸ்டேட்டின் நிலைமையை நினைத்தால் எனக்கு கண்கலங்குகிறது. தேயிலை ஒரு அந்நிய
செலாவணியை ஈட்டுத் தரும் என்பதை அரசும் மற்ற எல்லோரும் புரிந்து கொள்ளவேண்டும். இந்த எஸ்டேட்டில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கெடக்கூடாது. இந்த நிலைமை, இங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏதேதோ மர்மங்கள், குழப்பங்கள், இந்த அழகிய டீ எஸ்டேட்டை சுற்றி ஏற்பட்டுள்ளது. அதெல்லாம் களையப்பட்டு, மீண்டும் அந்த எஸ்டேட்டுக்கு ஒரு புதிய மாற்றம் எப்பொழுது ஏற்படும் என்று காத்து இருக்கிறேன்...” என்று முடித்தார்.

2020904152829967.jpg

கொடநாடு கொலை வழக்கு எவ்வளவு தூரம் பயணிக்கப் போகிறதோ... என்னவெல்லாம் நடக்கபோகிறதோ.. இந்த எஸ்டேட்டை சுற்றியுள்ள மர்ம முடிச்சுகள் எப்பொழுது அவிழ போகிறதோ என்று பொறுத்திருந்து பார்ப்போம்...

2020904153306576.jpg
அது வரை ‘இந்த வழக்கின் விசாரணையை வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கிறேன்’ என்ற குரல் ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தினுள் இருந்து தினசரி நாளிதழ்களில் பதிவாகிக் கொண்டிருக்கும்...