தொடர்கள்
கவர் ஸ்டோரி
திமுக முதல்வர் வேட்பாளர் துர்கா ஸ்டாலின்?! - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

கிச்சன் கேபினட் ரகசிய திட்டம்...

2020909195507662.jpeg

“கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக திமுக ஆட்சி தமிழக அதிகாரத்தில் இல்லை. சென்ற தேர்தலில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஜஸ்ட் மிஸ், இருப்பினும் பாராளுமன்றத்தில் 38 உறுப்பினர்கள். ஆனாலும் சட்ட மன்றத்தில் திமுக வெறும் எதிர்க்கட்சிதான்!”. திமுக பற்றி சிறுகுறிப்பு வரைக என்று யாராவது கேட்டால், இது தான் எழுத முடியும்.

தமிழக அரசியல், டெல்லி அரசியல் என்று தன் பங்களிப்பை சற்று அழுத்தமாக பதித்தவர் கருணாநிதி. ஆனால், அவரே ஒரு வருடத்திற்கு மேல் நினைவற்று என்ன நடக்கிறது என்று தெரியாமல், எந்த செயல்பாடும் இன்றி கடைசியில் பரிதாபமாக இறந்து போனார்.

ஜெயலலிதா இறந்த பிறகு ‘ஆட்சி நிச்சயம் கவிழும், திமுகவிற்கு வாய்ப்பு’ என்று பேசப்பட்டது. அது உண்மைதான். ஆனால், அந்த வாய்ப்பை சரிவர பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டார் ஸ்டாலின். காரணம், அவரை சுற்றி ஜால்ரா கூட்டத்தையும், ஆமாம் சாமிகளையும், துதிபாடிகளையும் அவர் கூட வைத்திருந்தது தான்! அரசியல் காய் நகர்த்துவதில், கைதேர்ந்தவர் யாரும் அவருடன் இல்லை. வந்த வாய்ப்பு எல்லாம் கோட்டை விட்டு நிற்கும் தனது மாமனாரின் அரசியல் விளையாட்டில், மருமகன் சபரீசன் நுழைந்தார். அதன்பிறகுதான் திமுக களைகட்டியது. இதுதான் உண்மை.

2020909195543207.jpeg

சபரீசனின் கிச்சன் கேபினட்டில், துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், முரசொலி செல்வம் ஆகியோர் உறுப்பினர்கள். ஏவா வேலு உறுப்பினர் அல்ல... ஆனால், சபரீசன் விருப்பத்தை அவர் கட்சியில் நிறைவேற்ற தகுந்தபடி அவரே காய் நகர்த்தினார். இதன் பொருட்டு கட்சியில் தற்போது அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. தலைமை கழக முதன்மைச் செயலாளர் கேஎன் நேரு, மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விசாரணை செய்கிறார். அதன் பிறகு சபரீசன் ஆலோசனைகளில், களை எடுப்பு நடக்கிறது.

அமமுக-வின் தங்க தமிழ்ச்செல்வன், பாரதிய ஜனதாவின் அரச குமார், பட்டிமன்ற பேச்சாளர் லியோனி, கொள்கை பரப்புச் செயலாளர் போன்ற எல்லாருமே சபரீசன் யோசனைப்படிதான். கட்சியின் முக்கியப் பிரமுகர்கள், சபரீசனின் தொடர்பு எல்லையில் தாங்களும் நுழைய என்ன வழி என்றே முயற்சி செய்கிறார்கள். ஆனால், அது பலருக்கு இன்றுவரை சுலபமாக கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. கட்சியின் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் தற்போது சபரீசன் வசம்தான். ஆன்லைன் உறுப்பினர் சேர்த்தல் சபரீசன் ஐடியாதான். அவர் அது பற்றி தினந்தோறும் விவரங்கள் கேட்டு தெரிந்து கொள்கிறார்.

தவிர சபரீசன், பிரசாந்த் கிஷோர், ஸ்டாலின், துரைமுருகன், டிஆர் பாலு, ஏவா வேலு, சில சமயம் ராசா, சில சமயம் கனிமொழி ஆகியோர் ஸ்டாலின் இல்லத்தில் கூடுவார்கள். இந்தக் கூட்டத்தில் சபரீசன் மட்டுமே பேசுவார்.

அது தவிர எப்போதாவது பிரசாந்த் கிஷோர் பேசுவார். மற்றவர் எல்லாம் கேட்டுக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

15 தினங்களுக்கு முன் இந்தக் குழு கூடியது. அப்போது பிரசாந்த் கிஷோர், திமுக வேட்பாளர் பட்டியல், தொகுதிக்கு மூன்று பேர் என்பதை இறுதி செய்து, ‘வேட்பாளர் பட்டியல் ரெடி, கூட்டணி கட்சிக்கு எந்தெந்த தொகுதி’ என்ற பட்டியலும் ரெடி என்று ஒரு கோப்பை காட்டியபோது, சபரீசன் அதை வாங்கி தன்னிடம் வைத்துக்கொண்டு, ‘இந்த வேட்பாளர் பட்டியல் பல தரப்பில் விசாரித்து சேகரித்து முடிவு செய்யப்பட்டது. கட்சி இந்த முறை வேட்பாளர்களுக்கு செலவு செய்யாது. கட்சி, பல கோடி ரூபாய் செலவு செய்து வலுவான தளத்தை எல்லா தொகுதிகளிலும் தயார் செய்து வைத்துள்ளது. அதை வேட்பாளர் சரியாக பயன்படுத்தி வெற்றி பெறும் வழியை பார்க்க வேண்டும். சிறிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு மட்டுமே கட்சி செலவு செய்யும். கூட்டணிக் கட்சிகளில், தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் இரண்டு கம்யூனிஸ்டுகள் அவர்கள் சின்னத்தில் போட்டியிடலாம். மதிமுகவை தவிர மற்ற கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும். தொகுதிப் பங்கீடு பொருத்தவரை, காங்கிரஸ் கட்சிக்கு 15 இடங்கள் ஒதுக்கப்படும். மற்ற எல்லா கட்சிகளுக்கும் ஒற்றை இலக்கத்தில் தான் தொகுதி பங்கீடு இருக்கும். இதில் நீங்கள் எந்த மாற்றமும் செய்ய முயற்சிக்க வேண்டாம், இது இறுதி முடிவாகும்’ என்று கரார் ஆகவே சொல்லியிருக்கிறார் சபரீசன். அப்போது மூத்த தலைவர்கள் ஸ்டாலின் முகத்தை பார்த்தார்கள், அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

பாரிவேந்தர், எர்ணாவூர் நாராயணன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி வேல்முருகன், பொன் குமார், ஜவஹருல்லா தமிமுன் அன்சாரி, அதியமான் போன்ற லெட்டர் பேட் கட்சிகளையும் கூட்டணியில் இணைத்து, அவர்களுக்கும் சட்டமன்றத்தில் போட்டியிட வாய்ப்பு என்று ஒரு மெகா கூட்டணியை உருவாக்கி இருக்கிறார் சபரீசன்.

அதே சமயம், யார் யாரை கூட்டணியில் சேர்க்கக்கூடாது என்ற பட்டியலையும், ஐபேக் டீம் பரிந்துரை செய்துள்ளது. அந்த வகையில் தேமுதிக, பா.ம.க, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளை அவை வேண்டாம் என பரிந்துரை செய்துள்ளதாம்!.

202090919571827.jpeg

டிசம்பர் மாதம் திமுகவின் தேர்தல் பிரச்சாரம் துவங்கும், அதற்குள் கட்சியில் அதிரடியாக நிர்வாகிகள் மாற்றம் இருக்கும். சீனியர் மாவட்ட செயலாளர்களை மாநில பொறுப்புக்கு இழுத்து விட்டு, புதியவர்களை மாவட்டத்தில் நியமிக்க வேண்டும் என்பது சபரீசன் திட்டம். அதன் முதல் படிதான் பொன்முடியை மாநில பதவிக்கு இழுத்தது.

ரஜினி அரசியலுக்கு வருவது பற்றியும் சபரீசன் தீவிரமாக விசாரித்து வருகிறார். ரஜினி அரசியலுக்கு வருவது சந்தேகம் என்பதுதான் அவருக்கு கிடைத்துள்ள தற்போதைய உறுதியான தகவல். அப்படியே வந்தாலும், அவரை சமாளிக்கத் தக்க வியூகங்களையும் தடபுடலாகவே வகுத்து வருகிறார். திமுகவைப் பொறுத்தவரை ரஜினி பிரவேசம் குறித்து பெரிய பயமில்லை என்பதே திட்டம்! .

2020909195750549.jpeg

ஆனால், அவர்களுக்கு வேறு ஒரு பயம். இதற்காகத்தான் சபரீசன் நிறைய யோசிக்கிறார். ஆம்..பாரதிய ஜனதாவின் பிரச்சார திட்டம்தான் அவர்களின் பிராதான பயம்.

பாரதிய ஜனதா தமிழ்நாட்டில் வரும் சட்டமன்ற தேர்தலின் போது, இந்த தேர்தலை ‘இந்து ஆதரவு.. இந்து எதிர்ப்பு’ என்று கொண்டு செல்ல விரும்புகிறது. பாரதிய ஜனதாவின் அடிப்படை கொள்கையே இதுதான். தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு அது எடுபடும் என்று தெரியவில்லை. சபரீசன், இது பற்றி பலரிடமும் பேசியிருக்கிறார். ‘இது பெரியார் மண், இங்கு இந்த பிரசாரம் எடுபடாது’ என்றே சிலர் அவருக்கு சமாதானம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், பிரசாந்த் கிஷோர் ஐபோக்டீம் ‘இதை அவ்வளவு எளிதாக சமாளிக்க முடியாது. பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை தான் நினைத்ததை சாதிக்க எதையும் செய்யத் துணியும். இதை நான் அனுபவ ரீதியாக பார்த்தவன்’ என்று சபரிசனிடம் சொல்லியிருக்கிறார்கள்.

அதற்கு ஏற்றார்போல் பாரதிய ஜனதா சமூக வலைதளங்களில் விநாயகர் சதூர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து சொல்லாதது, முஸ்லிம், கிறிஸ்தவ பண்டிகைகளுக்கு அவர் வாழ்த்து சொன்னது, பெரியார் பேசியது, அண்ணா பேசியது என தொடர்ந்து பதிவேறுகிறது. தவிர..இந்துக்களுக்கு எதிராக அவர்கள் பேசிய பழைய குப்பைகளை கிளறி... மீண்டும் மீண்டும் மறு பதிவு செய்யும் வேலைகளையும் தொடர்ந்து செய்கிறார்கள். இது போதாதென்று, கந்தர் சஷ்டி கவசம் சர்ச்சை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது கண்டு உஷாரான சபரிசன் கருப்பர் கூட்டத்தை கண்டித்து, ஆர்எஸ் பாரதியை ஒரு அறிக்கை விட செய்தார். அவர் மூலமாகவே ஒரு கோடி இந்துக்கள் திமுகவில் இருக்கிறார்கள் என்று சொல்ல வைத்தார். ‘நானே கோயிலுக்குப் போகிறேன், திமுகவினர் தான் அர்ச்சகர் தட்டில் ஆயிரம் ஐநூறு என்று காணிக்கை செலுத்துகிறார்கள்’ என்றெல்லாம் பாரதியை விட்டு சொல்ல வைத்தார்.

2020909195823860.jpeg

சபரீசனின் அடுத்த அதிரடி, துர்கா ஸ்டாலினை முதல்வர் வேட்பாளர் ஆக்குவது என்பது தான். இது மிகமிக ரகசியமானதொரு ஏற்பாடு! இதற்கான வேலைகளை அவர் வெகு ரகசியமாகவே செய்து வருகிறார். இதற்காக இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது.... முதல் காரணம் ஸ்டாலின் ஜாதகத்தில் முதல்வருக்கான வாய்ப்பு அவ்வளவு பிரகாசமாக இல்லை, இரண்டாவது ஸ்டாலினின் உடல்நிலை.

தங்களது குடும்ப உறுப்பினர்களை தாண்டி வேறொரு ஒரு அந்நியரை முதல்வர் வேட்பாளராக நிறுத்த வேண்டாம் என்பதில் சபரீசன் உறுதியாக இருக்கிறார். இதற்கு ஸ்டாலினும் சம்மதம் தெரிவித்து விட்டார். சபரீசனின் சாய்ஸ், துர்கா ஸ்டாலின் என்பதற்கு வேறு சில காரணங்களும் உண்டு. துர்கா ஸ்டாலின் கடவுள் நம்பிக்கை உள்ளவர். வீட்டில் பூஜை செய்வார், எல்லா கோயில்களுக்கும் போவார். ஸ்டாலின் உடல் நலம் பெற, திருமதி துர்கா ஸ்டாலின் போகாத நரசிம்மர் கோயில் இல்லை. திருப்பதி, காசி என்று நிறைய திவ்ய தேசங்களுக்கு ஸ்டாலின் மனைவி சென்று பிரார்த்தனைகள் செய்திருக்கிறார். இப்போதும் எப்போதும் எல்லா கோயில்களுக்கும் சென்று வருகிறார். பொன்னேரி அருகே தச்சூர் கூட்ரோடுக்கு அருகில் ஆண்டார்குப்பம் என்ற ஒரு சிறு கிராமம். அங்கு உள்ள சாய்பாபா கோயிலுக்கு வியாழக்கிழமை தோறும் வந்து பிரார்த்தனை செய்வார் துர்கா ஸ்டாலின். ஆக...பாரதிய ஜனதாவின் இந்து எதிர்ப்பு பிரச்சாரத்தை, துர்கா ஸ்டாலின் மூலம் சமாளிக்க சபரீசன் முடிவு செய்துள்ளார். தற்போது சமூக வலைதளங்களில் துர்கா ஸ்டாலின் கோயிலுக்குப் போவது, சாமி கும்பிடுவது போன்ற படங்களை திமுகவின் ஐடி விங் வெகுவாகவே பரப்பி வருகிறது.

2020909195910986.jpeg

ஆனால், இது தெரியாமல் திமுகவின் கூட்டணி கட்சிகள் ‘எங்களின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் தான்’ என்று வெள்ளந்தியாக சொல்லி வருகிறார்கள். அய்யோ பாவம்தான்!