பையவே நிலை!

திருவாய்ப்பாடியில் கண்ணபிரான் ஒவ்வொரு நாள் ஒவ்வொருவிதமாக வெண்ணெய் திருடுவான். அது போலவே ஒவ்வொரு நாள் ஒவ்வொருவிதமாக அகப்பட்டும் கொள்வான். இவற்றை யெல்லாம் ஆழ்வார்கள் ஒவ்வொருவிதமாக அனுபவித்து ஈடுபடுகின்றனர். இப்படியும் ஒரு அறிவிலித்தனம் உண்டோ? இவன்தான் திருடினான் என்று அவர்கள் அறியாதிருக்கச் செய்தேயும் தானாக அவர்களிடம் சென்று, தன் அறியாமையினால் அகப்பட்டுக் கொள்கிறானே! என்று அலமருகிறார்கள்.
திண்ணக் கலத்துத் திரையுறிமேல் வைத்த
வெண்ணெய் விழுங்கி விரைய வுறங்கிடும்
(பெரியாழ்வார் திருமொழி 2-6-3)
மிகவும் கெட்டியான பாத்திரத்தில், கோல்களால் மாறி மாறி அடித்தாலும் உடையாத பாத்திரத்தில் வெண்ணெயை வைத்து, கயிற்றை நன்றாகப் பின்னி, ஒருவராலும் விரல்கூட நுழைக்க முடியாதபடி செய்து பெரிய உறியிலிட்டு, கள்ளக் கயிறும் உருவி மிகவும் பாதுகாப்பாக வைத்தாள் யசோதை. வைத்தவர்களே மறுபடியும் எடுக்க வேண்டுமானாலும் கூட சிரமப்பட்டுத்தான் எடுக்க வேண்டும். அப்படி வைத்த வெண்ணெயை வைத்த குறியழியாமல் உண்டுவிட்டான் கண்ணன். ‘உறியிலிருந்து பாத்திரத்தை எடுத்துக் கண்ணன் வெண்ணெயுண்டான்’ என்று சொல்வதற்கு இடமே இல்லை. ஏனெனில் வைத்த குறி அப்படியே இருக்கிறது. ஆனால் உறியின் கீழேயோ வெண்ணெய் சிதறியிருக்கிறது. ஒரு வேளை கண்ணன் திருடின பின்பு ஏற்பட்ட பதற்றத்தில் அவசர அவசரமாக உண்டதால் சிதறியிருக்கும் போலும். அதைக் கொண்டுதான் வெண்ணெய் திருடு போயிற்றென்று அறிய முடிந்தது. அவ்வளவு சாமர்த்யமாகத் திருடி உண்ட பின்பு கண்ணன் என்ன செய்தான்? இங்கே மணவாளமாமுனிகள் வ்யாக்யானம் மிகவும் ரஸமானது.
(விரையவுறங்கிடும்) உடையவர்கள் காணுவ தற்கு முன்னே கடுகப் போந்து அறியாதவரைப் போலே கிடந்து உறங்கா நிற்கும்; வெண்ணெய் விழுங்குகிற போதைப் பதற்றத்திற் காட்டில் பதறி உறங்கப்புக்கால் கண்ணுறங்குமோ! குறுவிழிக் கொண்டு, வந்தார் போனார் நிழலாட்டம் பார்த்துக் கொண்டு கிடக்கையாலே இதென்ன பொய்யுறக்கம் என்று பிடித்துக் கொள்ளுவர்களிறே.
திரும்பி வந்த யசோதை இவன் கிடந்த கிடையைக் கண்டவாறே சந்தேகம் கொண்டாள். நேரே உறியிருக்குமிடம் சென்றாள். வைத்த பாத்திரத்தில் வெண்ணெய் சிறிதுமில்லை. நன்றாகத் துடைத்து வைத்து விட்டிருக்கிறான் கண்ணன். அவனைத் திரும்பிப் பார்த்தாள். உறங்குவது போல் பாசாங்கு செய்கிறான். உடனே யசோதை “வெண்ணெய்......” என்றாள். இன்னும் வார்த்தையை முடிக்கவில்லை. “நீ தான் களவு கண்டாய்” என்று சொல்லவுமில்லை. அதற்குள்ளாக இவன் “நானல்லேன் நானல்லேன்” என்று அழத் தொடங்கி விட்டான்.
ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றமுண்டழு கூத்தவப்பன்
(திருவாய்மொழி 6-2-11)
என்று இதை நம்மாழ்வார் அனுபவிக்கிறார்.
(அன்று வெண்ணெய் வார்த்தையுள்) “ஊரிலே வெண்ணெய் களவு போயிற்று” என்றார்கள். அவ்வளவிலே “நாமிறே இதுக்கிலக்கு” என்று அழப் புக்கான். “மடம் மெழுகுவார் ஆர்” என்ன “அச்ரோத்ரியன்” என்றார்கள். “இப்பரப்பெல்லாம் என்னாலே மெழுகப்போமோ?” என்றான். அது போலே.
என்பது இங்கே நம்பிள்ளை ஈடு. இங்கே இரண்டே வரிகளில் வேடிக்கையாக ஒரு கதை அருளிச் செய்கிறார் நம்பிள்ளை. ஒரு ஊரிலுள்ள ஒரு பெரிய மடத்திற்கு யாரோ சில யாத்ரிகர்கள் வந்தார்களாம். அப்போது ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். “இவ்வளவு பெரிய மடத்தை தினமும் யார் பெருக்கி மெழுகுவார்கள்?” என்று ஒருவன் கேட்டானாம். அதற்கு மற்றொருவன் “எவனோ ஒரு மடையன் செய்து விட்டுப் போகிறான். அதைப்பற்றி நமக்கென்ன விசாரம்?” என்றானாம். உடனே வாசல் திண்ணையில் அமர்ந்திருந்த ஒருவன் ஓடிவந்து “ஐயய்யோ! இவ்வளவு பெரிய சத்திரத்தை என்னால் மெழுக முடியாது!” என்றானாம் ‘எவனோ ஒரு மடையன்’ என்று குறிப்பிட்டது தன்னைத்தான் என்று நினைத்துக் கொண்டு வந்து தன்னுடைய மடைத்தனத்தைத் தானே நிரூபித்து விட்டான். அதுபோல யசோதை “வெண்ணெய்...” என்றபோது, ‘நானல்லேன்’ என்று கண்ணன் அழத்தொடங்கியவுடனே அவன்தான் திருடன் என்பது அவனாலேயே வெளிப்பட்டு விட்டது. உடனே யசோதை அவனை அடிப்பதற்காகக் கோலை யெடுத்தாள்.
நெய்யுண்வார்த்தையுள் அன்னை கோல்கொள்ள நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்க
பையவே நிலையும் வந்து என் நெஞ்சையுருக்குங்களே
(திருவாய்மொழி 5-10-3)
வெண்ணெய் களவு போயிற்று என்ற வார்த்தை காதில் விழுந்தவுடன் அழத் தொடங்கிய கண்ணனை மிரட்டுவதற்காக கோலையெடுத்தாள் யசோதை. ஆனால் கண்ணனோ அவள் அடிக்கப் போகிறாள் என்றெண்ணி பயப்பட்டு விட்டான். அவள் தாய்தானே! தந்தையல்லளே! அடிக்க மாட்டாள். அச்சமுறுத்துவதற்காகத் தான் கோலை எடுக்கிறாள் என்பது கூடத் தெரிந்து கொள்ளவில்லையாம். உண்மையில் அவள் கண்ணனைப் பார்த்துச் சொல்லும் வார்த்தையென்ன?
உந்தமடிகள் முனிவர் உன்னை நானென்கையில் கோலால்
நொந்திட மோதவும் கில்லேன் (பெரியதிருமொழி 10-4-8)
“இப்படி நீ தீம்புகள் செய்வதை உன்னுடைய தகப்பனார்அறிந்தால் மிகவும் கோபித்துக் கொள்வார். ஆனால் நானோ என் கையிள்ள கோலால் உன்னை நன்கு அடிக்க மனம் வராதவளாக இருக்கிறேன்” என்றன்றோ சொல்லுகிறாள்! ஆயினும் அவள் கையிலுள்ள கோலைக் கண்டு பயந்தான் கண்ணன். அந்தக் கோல் தான் எப்படிப்பட்டது என்னில்,
தாயெடுத்த சிறுகோலுக்குளைந்தோடி (பெரியதிருமொழி 8-3-5)
என்று திருமங்கையாழ்வார் அருளிச் செய்தபடியே அது சிறுகோல் (சிறுகோல்-வைக்கோல் என்று அரும்பதம்). இது பயமுறுத்துவதற்காகவே; பட்டாலும் நோகாது என்பதை அறியாதவனாய் பயப்படுகிறான் கண்ணன். அவளைப் பார்த்துக் கண்ணீர் விடுகிறான்; உடம்பு வெளுத்து நிற்கிறான். அவள், தன்னைப் பார்த்துக் கொண்டு நிற்கும் போதே அங்கிருந்து ஓடி விடலாமா என்று ஒரு கணம் நினைக்கிறான். ஓடுவதற்குத் தயாராக ஒரு காலையும் தூக்கி விட்டான். ஆனால் ஓடுவதற்கும் தைரியம் பிறக்க வில்லை. இப்படித் தரையில் காலை ஊன்றமாட்டாமலும் ஓடமாட்டாமலும் நிற்கின்ற நிலை - பையவே நிலை -நடனமாடுவது போல் இருந்தது. இந்த நிலையில் ஈடுபட்ட ஆழ்வார் “பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே” என்கிறார்.
“உனக்கானால் தப்பியாவது ஓடலாம். ஆனால் உன்னுடையது இந்த சேஷ்டிதமானது என்னை இதிலிருந்து தப்ப முடியாமல் அகப்படுத்திக் கொண்டு நலிகிறது என்கிறார் ஆழ்வார்.”
என்பது இங்கே நம்பிள்ளையுரை. கண்ணனுடைய இந்த நிலையையனுபவிக்கும் தேசிகன் அருளிய சுலோகமொன்று:
ஹர்தும் கும்பே விநிஹித கர: ஸ்வாது ஹையங்கவீநம்
த்ருஷ்ட்வாதாமக்ரஹணசடுலாம் மாதரம்ஜாதரோஷாம்ஞு
ப்ராயாதீஷத் ப்ரசலிதபதோ நாபகச்சந் நதிஷ்டந்
மித்யா கோப: ஸபதிநயநே மீலயந் விச்வகோப்தா ஞுஞு
(கோபாலவிம்சதி)
“உலகையெல்லாம் காப்பவனான கண்ணபிரான் வெண்ணெயைத் திருட வேண்டும் என்று நினைத்துக் குடத்திலே கையிட்டவளவிலே, யசோதை அவனைக் கண்டு கோபத்துடன் மிரட்ட அங்கிருந்து ஓடிவிட வேண்டுமென்று எண்ணி சற்றே காலைத் தூக்கிய, ஓடவும்மாட்டாமல், நிற்கவும் மாட்டாமல் பொய்யாகக் கண்களில் கண்ணீர் பெருக நின்று அழுதான்” என்று இந்தச் சரிதத்தில் ஈடுபடுகிறார் வேதாந்த தேசிகர்.
இங்கே அழகான ஸ்ரீபாகவதச்லோகம் ஒன்று நினைவு கூரத்தக்கது. பரீக்ஷித் அழியாமல் காப்பாற்றப்பட்டதைத் தொடர்ந்து பாண்டவர்களின் தாயான குந்திதேவி கண்ணனைத் தோத்திரம் செய்யும் போது கூறுகிறாள்.
கோப்யாததே த்வயி க்ருதாகஸி தாம தாவத்
யாதே தசாச்ருகலிலாஞ்சன ஸம்ப்ரமாக்ஷம்ஞு
வக்த்ரம் நிநீய பயபாவநயா ஸதிதஸய
ஸா மாம் விமோஹயதி பீரபி யத்பிபேதிஞுஞு (ஸ்ரீபாகவதம் 1-8-31)
“கண்ணபிரானே! உன்னுடைய தீம்பினால் கோபம் கொண்ட யசோதை உன்னைக் கட்டுவதற்கு ஒரு தாம்பைக் கையில் எடுத்துக் கொண்டபோது அவள் முன்னால் நீ பயத்தோடு தலையைக் கவிழ்த்துக் கொண்டு நிற்க உன் கண்களிலிருந்து பெருகிய கண்ணீரால் உன் கண்களில் இடப்பட்ட மையானது கரைந்து உன்கரிய திருமேனியில் வழிய, உன் அச்சமெல்லாம் உன் கண்களில் வெளிப் படும்படியாக நீ நின்ற நிலை இப்போதும் என் நெஞ்சை உருக்குகின்றது. பயமும் கூட எவனிடத்தில் பயப்படுமோ அப்படிப்பட்ட நீயும் கூட பயப்பட்டாயே!” என்கிறாள் பாண்டவர்களின் தாயான குந்தி.
இதையேதான் ஆழ்வாரும் “அன்னை கோல் கொள்ள நீயுன் தாமரைக் கண்கள் நீர் மல்க பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே” என்றருளிச் செய்கிறார்.

Leave a comment
Upload