தொடர்கள்
Daily Articles
வாசி யோசி.. - 8 - வேங்கடகிருஷ்ணன்

2020908202455586.jpg

வெற்றிக்கு சில புத்தகங்கள்...

வாருங்கள் வாசிப்போம்; வாசிப்பை நேசிப்போம்...

2020915125248352.jpg

மன்னிப்பு - தமிழில் பிடித்த வார்த்தை.

மன்னிப்பு அப்படின்னு சொன்ன உடனே, விஜயகாந்த் டயலாக் உங்களுக்கு காதுல கேட்கும், தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை.
சினிமால மட்டுமல்ல.... நிஜ வாழ்க்கையிலும் மன்னிப்பு கேட்பது நிறைய பேருக்கு பிடிப்பது இல்லை. நாமே தப்பு செஞ்சிருந்தா கூட, ஒரு வீம்பு பிடிவாதம், மன்னிப்பு கேட்டா நம்மோட கௌரவம் குறைஞ்சிடும் அப்படின்னு ஒரு எண்ணம், அதனால கேட்பதில்லை. ஆனா, இது மாதிரி மன்னிப்பு கேட்காததால், நாம் இழக்கும் உறவுகள், நட்புகள், வாய்ப்புகள் மிக அதிகம். அதைப்பற்றி யாரும் நினைத்துக்கூட பார்ப்பதில்லை. தப்பு செய்யாதவர்கள் அப்படின்னு யாருமே இல்லைங்க, வேண்டும் என்றால் இப்படி வைத்துக்கொள்ளலாம். தவறு செய்துவிட்டு, அதை சொல்லாமல் இருப்பவர்கள் அல்லது அதை மறைப்பதற்கு பொய் சொல்லுபவர்கள். தவறு செய்துவிட்டேன் என்று மனதிலிருந்து சொல்லி மன்னிப்பு கேட்பதற்கு நிறைய தைரியம் வேண்டும், தன்னம்பிக்கை வேண்டும். இதையே சினிமாவிலும் சொல்லியிருக்கிறார்கள். மன்னிக்கிறவன் மனுஷன், மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன். அந்த பெரிய மனுஷத் தன்மை நம்மிடம் இருக்கிறதா? அதை வளர்த்துக் கொள்ளும் வழி என்ன? அதை சொல்வது தான் கென் ப்ளன் சார்ட் மார்க்ரெட் மெக் பிரைட் இணைந்து எழுதிய the one minute apology (வெளியீடு harpercollins.)
மன்னிப்பு கேட்பதற்கு முதல்படி அந்தத் தவறை தவறு என்று நாம் மனமார உணரவேண்டும். இனிமேல் நான் இதை செய்ய மாட்டேன் என்று நமக்கு நாமே உறுதிமொழி அளிக்க வேண்டும். அடுத்தபடி வெறும் பேச்சு மட்டும் போதாது, அந்தத் தவறை உணர்ந்து அதை சரி செய்ய மாற்று வழி யோசித்து, அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் மட்டுமே இந்த மன்னிப்பு கேட்கும் விஷயம் முழுமையடைகிறது. கடைசி படி மன்னிப்பு கேட்பதை தள்ளிப் போடாதீர்கள், நாளைக்கு வேறொரு நாள் என உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் தாமதப்படுத்தினால் நீங்கள் தட்டிக் கழிக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். ஒவ்வொரு வினாடியும் பிரச்சனை இன்னும் பெரியதாக ஆகிக் கொண்டிருக்கும். தாமதப்படுத்தி மன்னிப்பு கேட்டு விமோசனமே இல்லை. ஆகவே மன்னிப்பு கேட்பது என்று முடிவு செய்தவுடன், கேட்டு விடுங்கள். நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டிய அவசியமில்லை, உடனே செயல்படுங்கள். முடிவாக ஒரு விஷயம் நீங்கள் மன்னிப்பு கேட்கப் போகும் நபர், உங்களைவிட தாழ்ந்த நிலையில் இருக்கலாம் அல்லது உயர்ந்த நிலையில் இருக்கலாம். உறவினராகவோ, நண்பராகவோ இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக உங்களுக்கு கீழ் வேலை செய்யும் ஒருவரிடம் நீங்கள் மன்னிப்பு வேண்டும் போது உங்கள் மனசாட்சி “என்கிட்ட வேலை செய்கிறவன்கிட்ட போய், அவனோட பாஸ் நான் மன்னிப்பு கேட்பதா?” அப்படின்னு சீன் போடும். அதை கண்டுக்காதீங்க... நிச்சயமாக தப்பு செய்தவர்கள் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். இல்லாவிட்டால் அந்த உறவு முறை, அது எதுவானாலும் சிதைந்து போய்விடும்.

இதற்கு என் வாழ்க்கையில் இருந்தே ஒரு உதாரணத்தை சொல்ல முடியும். நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, விடுதிக்கு முதல் முறையாக பணம் கட்ட வேண்டி என் அப்பா வந்திருந்தார். என் நண்பர்களை அவருக்கு அறிமுகப்படுத்திவிட்டு நான் அவரிடமிருந்து பணத்தை வாங்கிக்கொண்டு விடுதி அலுவலகத்தில் கட்டுவதற்காக சென்றுவிட்டேன். கட்டி முடித்து திரும்ப வந்து நானும் அவரும் சாப்பிட பக்கத்திலிருந்த ஒரு ஹோட்டலுக்குச் சென்றோம். அவர் முகம் கவலையில் இருந்ததை, அதே நேரம் கோபமாய் இருந்ததை காண்பித்தது. நான் என்ன என்று கேட்டவுடன்... “நீ இப்படி பண்ணுவ அப்படின்னு நான் எதிர்பார்க்கல... சிகரெட் பிடிக்கிறியா? எப்படி உன்கிட்ட இந்த பழக்கம் வந்துச்சு? நம்ம குடும்பத்துல இந்த மாதிரி விஷயங்கள் இதுவரைக்கும் கிடையாது. எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று தொடர்ந்து பேசிக்கொண்டே போய்விட்டார். எனக்கு பதில் சொல்ல சந்தர்ப்பமே தரவில்லை. ஒரு கட்டத்தில் நானே குரலை உயர்த்தி “அப்பா ஒரு நிமிஷம்” என்று கை அமர்த்தி, பின்னர் அவரிடம் சொன்னேன். ஒரு வார்த்தைதான் “நான் உங்க புள்ளப்பா”. சாப்பாட்டில் கை வைக்க போனவர், அப்படியே நிறுத்தி என்னை பார்த்தார். அவர் கண்களில் கண்ணீர் “டேய் என்ன மன்னிச்சிக்கோடா, நான் கொஞ்சம் ஜாஸ்தியா உணர்ச்சிவசப்பட்டுட்டேன். நீ சொன்னது ரொம்ப கரெக்ட், நீ என் பையன்” என்று சொன்னவர்... 3, 4 முறைகள் “சாரி சாரிப்பா” என்று சொல்லிக்கொண்டே இருந்தார். மறுநாள் ஊருக்கு போனவுடன் போய் சேர்ந்து விட்டேன் என்று எனக்கு போன் செய்து சொல்லும்போது, அவர் முதலில் துவங்கியது “டேய் மன்னிச்சிக்கோடா உன்ன தப்பா சொல்லிட்டேன்” என்பதுதான். தன் பிள்ளை தானே என்று யோசிக்காமல் அப்பா என்கிற கௌரவப் போர்வைக்குள் ஒளிந்து கொள்ளாமல், உடனே அவர் மன்னிப்பு கேட்டது என் மனதில் நிலைத்து விட்டது. நான் தவறு செய்தால், என் மனைவியிடமும் என் மகளிடமும் தயங்காமல் மன்னிப்பு கேட்கும் எண்ணத்தை என் மனதில் உருவாகியது அந்த நிகழ்வுதான்.

சரி நான் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால், அதை நான் கேட்பவர் ஒத்துக் கொள்ளாவிட்டால் அல்லது என்னை மன்னிக்க மறுத்துவிட்டால்? அது பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை. அவர் என்ன சொல்வார், இவர் என்ன கேட்பார் என்று தயங்கினால், கடைசி மூச்சு வரை மன்னிப்பு கேட்கப்போவதில்லை. வரும் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் மன்னிப்பு கேட்பதுதான் உயர்ந்த குணம். அதுதான் நாம் செய்த தவறுக்கு சிறந்த ஒரு பரிகாரம்.

சரி, நீங்கள் மன்னிப்பு கேட்க தயார். இதில் மூன்று முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. செய்த தவறை எந்தவித எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் இல்லாமல் அப்படியே ஒத்துக் கொள்வது

2. அதைப்பற்றி நான் எப்படி உணர்கிறேன் என்பதை அவருக்கு மனதில் உள்ள படி வெளிப்படையாக சொல்வது.

3. இதன் பிறகு நான் எப்படி நடந்து கொள்வேன் என்பதை ஒரு வாக்குறுதியாக சொல்வது.

இதை விளக்க மேலே சொன்ன என் தந்தை உதாரணத்தையே எடுத்துக் கொள்கிறேன். மறுநாள் தொலைபேசியில் பேசும்போது அவர் சொன்னது “டேய், என்ன மன்னிச்சிக்கோடா, நேத்தைக்கு ஃபிரண்ட்ஸ் உன்ன பத்தி சொன்னவுடனே எனக்கு கோவம் வந்துருச்சு... யோசிக்காம நீ இப்படி பண்ணிட்டியே அப்படின்னு நெனச்சு உன்ன திட்டிட்டேன். ஆனா ஒரே வார்த்தையில் என்ன நீ தலை நிமிர்ந்து நிற்க வச்சிட்ட... நான் உங்க புள்ள பா அப்படின்னு சொன்னே, அதுபோதும்... என்னை கன்னத்தில் அறைந்த மாதிரி இருந்தது. இதை அவர் தெளிவாக... ஆனால், சற்றே உடைந்த குரலில் சொன்னார். இனிமே உன்ன சந்தேகமே படமாட்டேன்டா” என்றார். அந்தக் குரல் இன்றுவரை என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. எனக்கு வழிகாட்டி கொண்டிருக்கிறது.

அவ்வளவு தான் நண்பர்களே... இந்த மூன்று விஷயங்களையும் குறிப்பிட்டீர்கள்... ஆனால், உங்கள் மன்னிப்பு முழுமையானது. மன்னிப்பு கேட்டபோது என் அப்பா மனது இளகி எப்படி எங்கள் உறவு பலப்பட, அதே அளவு என் மனதில் அவர் மலையளவு உயர்ந்து விட்டார்.
இனிமேல் தவறு நம் பக்கம் இருந்தால், தயங்காமல் மன்னிப்பு கேளுங்கள். சரியான முறையில் உணர்ந்து உங்கள் நடவடிக்கையில் திருத்தம் செய்து கொண்டு, பின்னர் கேளுங்கள். இந்த மன்னிப்பு உங்களிடம் இருந்த குறைகளை நீக்கி விடும். மனம் நிம்மதி அடையும்
உங்கள் மனதில் வெகுநாட்களாக கேட்காமல் இருக்கிற மன்னிப்பை இன்றே கேளுங்கள். புதிய உறவு மலர்வதை பாருங்கள். ஆல் த பெஸ்ட் ப்ரண்ட்ஸ்!!