
(உலகம் சுற்றிவிட்டு நேற்று வரவேண்டியது.. கொஞ்சம் வழி தவறியதால் ஒரு நாள் லேட்டு ஹி..ஹி.)
கருந் துளை. (ப்ளாக் ஹோல்)

விஞ்ஞானிகள் நம்மூர் அரசியல்வாதிகள் மக்கள் பணத்தை ஒரேயடியாக விழுங்கி ஏப்பம் விடுவதைப் போல, அத்தாம் பெரிய நட்சத்திரம் ஒன்றை கருந் துளை ஒன்று உறிஞ்சி எடுத்து நூடுல்ஸ் கணக்காக பிரித்து போட்டு விட்டதை கண்டு களித்திருக்கிறார்கள்.
இது குறிப்பிட்ட நாடு என்றில்லாமல் உலகம் முழுவதும் பிரத்யேக டெலஸ்கோப்பில் தெரிந்திருக்கிறது.
ஒரு பெரிய நட்சத்திரம் இப்படி ஒரு கருந் துளையின் ஈர்ப்பு சக்தியில் இழுக்கப்பட, செதில் செதிலாக பிரித்து விட்டது பார்ப்பதற்கு அதிசயமாக இருக்கிறது.
விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் AT2019qiz என்று பெயரிடப்பட்ட இந்த நட்சத்திரத்தை நினைத்துப் பார்க்க முடியாத தூரத்தில் கருந் துளை விழுங்கி ஏப்பம் விட்டதை துல்லியமாக டெலிஸ்கோப்பின் உதவியோடு பார்த்திருக்கிறார்கள்.
215 மில்லியன் ஓளி வருட தூரத்தில் இது நிகழ்ந்துள்ளது. ஒரு ஒளி வருடம் என்பது ஒளி ஒரு வருடத்தில் பாயும் தூரம். அப்படியென்றால் எவ்வளவு தூரம் என்று கணக்கிட்டுக் கொள்ளவும்.
அவர்கள் ஆய்வின் முடிவில் தெரிந்தது என்னவெனில் விழுங்கப்பட்ட நட்சத்திரம் ஏறக்குறைய நமது சூரியனின் எடையாம். கருந்துளைக்குள் அது ஏறக்குறைய பாதி எடையை இழந்து விட்டதாம்.
பயப்படாதீர்கள். நம் சூரியனை எந்த கருந் துளையும் அப்படியெல்லாம் லபக்கென்று விழுங்கி விடாது.
ஆசியா
ஹாங்காங்

அடிக்கடி பூமியை தோண்டி, மலையைக் குடைந்து, கடலுக்கடியில் சுரங்கம் அமைத்து இதே வேலையாகத் தான் இருப்பார்கள் ஹாங்காங்கில்.
தற்போது சென்ட்ரல் மற்றும் ஷாடின் என்ற இடங்களுக்கிடையே கட்டப்பட்டு வரும் இரயில் வழித் தடத்தில் நேற்று ஒரு சம்பவம்.
எக்ஸ்கவேடர் என்று சொல்லப்படும் தோண்டும் இயந்திரம் ஒன்று கயிறு கட்டி தூக்கப்படும் போது நிலைகுலைந்து படுகுழிக்குள் விழுந்தது ஹாங்காங்கில் நேற்றைய வைரல் வீடியோ.
நல்ல வேளையாக, தெய்வாதீனமாக, யாருக்கும் எந்த அடியும் படவில்லை என்று சொல்லப்படுகிறது.
இங்கே……..
வங்காள தேசம்.

வங்காள தேசம் ஒரு இஸ்லாமிய தேசம்.
ஆனால் இங்கு பெண்களுக்கெதிரான வன்முறை ஏகத்திற்கும் உண்டு.
ஒவ்வொரு முறை நான் வங்காள தேசம் செல்லும் போதும் செய்தித் தாளை எடுத்து படிப்பதற்கு தயக்கமாகவே இருக்கும்.
ஏதேனும் ஒரு பக்கத்தில் கற்பழிப்பு குற்றங்கள் பெட்டிச் செய்தியாக போட்டிருப்பார்கள்.
இதில் நெருங்கிய சொந்தத்தில் சின்னஞ்சிறுசுகளை வன் கொடுமை செய்வது சாதாரண விஷயமாக கூட அங்கு மாறி விட்டதோ என்று எண்ணுமளவிற்கு ஏகப்பட்ட குற்றங்கள்.
வருடத்திற்கு ஆயிரம் பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்.
கடந்த வாரத்தில் சிலட் மற்றும் நோகாகாலியில் நடந்த இரண்டு சம்பவங்கள் மக்களை தெருவில் இறங்கி போராட வைக்க, வங்காள தேசத்தின் சட்டத் துறை அமைச்சர் கற்பழிப்புக்கு மரண தண்டனை என்ற சட்டத்தை விரைவில் கொண்டு வரப்படும் என்று வாக்களித்திருக்கிறார்.
ஐயா அதை பொதுவில் தொலைக்காட்சியில் நேரலையாக செய்து இனி எவனும் பெண்களை தவறாக அணுக முடியாதவாரு செய்யுங்கள். புண்ணியமாகப் போகும்.
ஹைதராபாத்.

தெலுங்கானாவில் டிரம்பின் தீவிர ரசிகர், மன்னிக்கவும் பக்தர், டிரம்புக்கு கரோனா என்று அறிந்து துக்கம் தாளாமல்மாரடைப்பு வந்து உயிர் துறந்தார்.
புசா கிருஷ்ணா.
இவரைப் பற்றி பல செய்திப் பத்திரிகைகளில் நீங்கள் படித்திருக்கக் கூடும்.
தினமும் டிரம்பை கடவுள் போல பாவித்து பூஜையெல்லாம் செய்து வந்தார் புசா கிருஷ்ணன்.
கடந்த சில நாட்களாக அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கரோனா என்றதும் அவரால் தாங்க முடியவில்லையாம்.

மிகவும் மன அழுத்ததிலிருந்து புசா கிருஷ்ணன் அன்று காலை எழுந்து வழக்கம் போல குளித்து விட்டு ஒரு டீ குடித்திருக்கிறார்.
ஆனால் திடீரென மாரடைப்பு வந்து கீழே விழுந்து இறந்து விட்டார்.
அவரது உறவினர் ஒருவர் சொல்கையில் அவரால் டிரம்புக்கு கரோனா வந்ததை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை அதானல் தான் இறந்து விட்டான் என்கிறார்.
தெலுங்கானாவில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு புசா கிருஷ்ணனுக்கு டிரம்ப் மீது பக்தி வந்தது எப்படி ??
உலகில் விசித்திரமான மனிதர்கள் இருக்கவே செய்கிறார்கள்.
இது போல பிரபலங்களை இப்படி கண்மூடித்தனமாக பின் தொடர்பவர்கள் எந்தக் காலத்திலும் இருக்கிறார்கள்.
பல வருடங்களுக்கு முன் எனக்கு தெரிந்து ஒரு அரசியல் தலைவரை அநியாயமாக கைது செய்து இழுத்துச் சென்றபோது தொலைக்காட்சியில் அதை பார்த்து மாரடைப்பு வந்து இறந்து போனவர்கள் சிலர்.
யாரோ சம்பந்தமில்லாத ஒரு பிரபலத்திற்காக எப்படி, இப்படி உயிர் போகிறது என்று நினைத்துக் கொள்வேன்.
பின்னொரு காலத்தில் கைது சம்பவத்தை ஒளிபரப்பிய தொலைக்காட்சியில் பணிபுரியும் ஒருவரை சந்திக்க நேர்கையில் இன்னொரு நண்பரை அறிமுகப்படுத்தி வைத்தார். “ நினைவிருக்கா ? ஐயையோ கொல்றாங்களே என்ற சத்தம், அந்த குரல் கொடுத்தது இவர் தான்.”
ஆஸ்திரேலியா.
கரோனா பொருளாதாரத்தில் புரடிப்போடாத துறையே இல்லை.
மருத்துவத் துறை தவிர.
ஆனால் அங்கேயுமே பலரது உயிரை காவு வாங்கி விட்டது சோகமோ சோகம்.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது அவ்வளவாக பொருந்தாவிட்டாலும் கப்பலுக்கு ஓரளவு உவமை சொல்லலாம் தான்.


கம்பீரமாக பாட்டும் கூத்தும் ஜல்சாவுமாக இருக்கும் குரூஸ் கப்பல் (பயணிகள் சொகுசுக் கப்பல்கள்) கரோனா காலத்தில் நேரடியாக, மிகப் பெரும் அளவில் பாதிக்கப்பட்ட வியாபாரம்.
எனக்கு நல்ல வேளையாக சென்ற வருடம் ஒரு மூன்று நாள் (மூணே நாள் தான்) இப்படி ஒரு சொகுசுக் கப்பலில் பயணிக்க நேர்ந்தது.
மிதக்கும் சொர்க்கம்.
வேளாவேளைக்கு அளவில்லாத சாப்பாடு, கேளிக்கைகள்….வாழ்ந்தால் இப்படி ஒரு வாழ்க்கை வாழவேண்டும் என்ற சென்ற வருட நினைப்பை ஒரேயடியாக கடலுக்குள் போட்டு அமிழ்த்தி விட்டது கரோனா.
ஏனெனில் சொகுசுக் கப்பல்களில் தான் தொற்று அதிகமாக வருமாம்.
செய்தி என்னவெனில் இது வரை சரக்கு கப்பல்கள் தான் கப்பல் உடைக்கப்படும் தளத்திற்கு அதிகமாக வரும்.
ஆனால் தற்சமயம் மூன்று சொகுசுக் கப்பல்கள் கப்பல் உடைக்கப்படும் இடத்திற்கு வந்து காத்திருப்பது இந்தத் துறையின் வேதனையான நிலையைக் காட்டுகிறது.
சொகுசுக் கப்பல் பயணிகள் இந்த படத்தைப் பார்த்தால் கண்ணீர் சிந்துவது உறுதி.
தென் அமெரிக்கா..
பிரேசில்

அமேசான் மழைக் காடுகள். வாழ்நாளில் ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்ற ஆசை அமேசான் மழைக் காடுகளைப் பார்க்கும் போது வரும்.
பாழாய்ப்போன சுற்றுப்புற மாசினால் சுமார் 40 சதவிகிதம் காடுகள் சதுப்பு நிலங்களாக போகும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் ஒரு கணிணியின் மாதிரியை வைத்து யூகித்திருக்கிறார்கள்.
சுற்றுப் புற சூழல் ஓசானிலேயே ஓட்டையைப் போடும் போது பூமி எம்மாத்திரம்.
நல்ல வேளையாக கரோனா வந்ததோ கொஞ்சம் பூமி தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ள ஒரு சின்ன அவகாசம் கிடைத்திருக்கிறது.
ஓட்டப் பந்தயத்தில் துரத்தப்படுபவனும் துரத்துபவனும் ஒரு கட்டத்தில் இளைப்பாறி மூச்சு விட, சில நிமிடங்களில் தொடுரா ஜூட் என்று கத்திக் கொண்டு ஓடுவது போல இயற்கைக்கும் மனிதனுக்கும் நடக்கும் ஓட்டப்பந்தயத்தில் கொஞ்சம் மூச்சு விட சில நிமிடங்கள் கரோனா கொடுத்திருப்பதாகவே தோன்றுகிறது.
அமேசான் காடுகள் அழிந்து போனால் அது உலகில் பேரழிவை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இனியாவது உலக மக்கள் அனைவரும் கொஞ்சம் உட்கார்ந்து யோசிக்க வேண்டிய நேரம்.
ஐரோப்பா.

என்னுடைய உடல் என்னுடையது. அதை பற்றி யாரும் கருத்து சொல்ல வேண்டாம்.
இது ஸ்பெயினில் எழும்பியிருக்கும் புதிய கூக்குரல்.
இதில் என்ன தவறு என்று கேட்பவர்களுக்கு இந்த குரல்களுக்கு சொந்தக்காரர்கள் 16 17 வயதான இளம்பெண்கள்.
நாங்கள் பெற்றோர்களின் சம்மதமில்லாமல் கருக்கலைப்பு செய்து கொள்ள உரிமை வேண்டும் என்று கேட்டு எழும்பியிருக்கும் போர்க்குரல் தான் இது.
1985 முதல் கருக்கலைப்பு ஸ்பெயினில் சட்ட பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் 2015 ல் வந்த ஒரு சட்டம் 16,17 வயது பெண்களுக்கு பெற்றோர்கள் சம்மதமில்லாமல் கருக்கலைப்பு செய்து கொள்ள முடியாது என்று திருத்தப்பட்டது.
அதாவது கருவுற்றிருக்கும் குழந்தைகள் (?) தங்கள் குழந்தைகளை கருக்கலைப்பு செய்து கொள்ள பெற்றோர்கள் அனுமதி வேண்டும்.

ஆனால் ஸ்பெயில் உள்ள சமஉரிமை அமைச்சர் சொல்கையில் “எங்கள் உடல் எங்கள் உரிமை. இஷ்டம் போல கருத்தரிக்கவும்,கலைக்கவும், செக்ஸ் வாழ்க்கையும் எங்கள் உரிமை. இதில் தலையிட அரசுக்கு உரிமையில்லை” என்று முழக்கமிட்டுள்ளார்.
ஒரு புள்ளி விபரத்திற்கு
ஸ்பெயினில் கடந்த ஆண்டு நடந்த 95917 கருக்கலைப்பில் 310 பேர் பதினைந்து வயதிற்கும் குறைவானவர்கள், 9518 பேர் பதினந்திற்கும் பத்தொன்பதிற்கும் இடைப்பட்டவர்கள்.
இதைக் கலாச்சார சீரழிவு என்று சொல்ல முயன்றால் அதற்கும் அடிக்க வருவார்களோ என்று பயமாக இருக்கிறது.
ஆப்பிரிக்கா.
சூடான்.

எப்போதுமே எதிர்மறையான செய்திகளே ஆக்கிரமிக்கும் இன்னாளில் சூடானில் அமைதி திரும்புவது ஆறுதலான செய்தி.
பதினேழு வருடங்களுக்குப் பின் உள் நாட்டு போர்கள் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு அமைதி திரும்புகிறது.
மேற்கத்திய பகுதி சூடானில் 2000 முதல் சண்டையும் கலகமும் தான்.
வன்முறை மற்றும் உள்நாட்டு போரால் இது வரை சுமார் மூன்று லட்சம் பேர் இறந்து போயிருக்கிறார்களாம்.
சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகளாகியும் தீராத பிரச்சினை ஒரு வழியாக அரசிலும், இராணுவத்திலும் இடம் கொடுக்கிறோம் என்று ஒப்பந்தம் போடப்பட்டு போராளிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி இந்த அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
பூகோளத்தில் அரபு நாடுகள் ஆப்பிரிக்காவை சந்திக்கும் இடம் சூடான்.
தெற்குப் பகுதி கிருத்துவர்கள் நிறைந்திருக்க வடக்குப் பகுதி இஸ்லாமிய பெரும்பான்மை உள்ள நாடு. எப்படியோ அமைதி திரும்புகிறதே. சந்தோஷம்.
எதுக்கும் போராளி பசங்களை இனிமே துப்பாக்கி தூக்க மாட்டோம் என்று “சூடனை” அணைத்து சத்தியம் வாங்கிருங்கப்பா.
எகிப்து.
பல ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை எகிப்து செல்ல நேர்ந்தது.

(பிரமிடை சுற்றிப் பார்க்க படு செளகரியம் குதிரைதான்.)
இந்த படம் நான் எகிப்து போனேன் என்பதை சொல்வதற்காக இல்லை. ஆனால் இந்த சந்தர்ப்பத்தை விட்டு விட்டால் இந்தப் படத்தை போடல் முடியாது போய் விடும் என்ற கவலையில் தான்.
என்னுடன் வந்த அபு யாரா மிகுந்த தோஸ்தாகி விட்டார்.
கடைசி நேரத்தில் கதவை மூடும் சமயத்தில் உள்ளே விடமாட்டேன் என்றவரிடம் அரபு மொழியில் சண்டை போட்டு கெஞ்சி என்னை அழைத்துச் சென்று பிரமிடுகளைக் காட்டினார். அதில் ஒரு குதிரை தலை தெறிக்க ஓடி என்னை தெறிக்க விட்டது.
அபு யாரா சொன்னது என்னவென்றால் எகிப்து முழுக்க கிராமங்களிலும், நகரங்களில் ஆங்காங்கே படு பள்ளமாக மக்கள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக தோண்டிக் கொண்டே இருப்பார்களாம்.
ஏனெனில் எப்படியாவது எங்கேயாவது புதையல், கிதையல் கிடைக்காதா என்று தானாம். நிறைய பேருக்கு கிடைத்திருக்கிறதாம்.
கடந்த வாரம் சுமார் 2500 வருடங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட 59 மம்மிக்களை எகிப்தில் கண்டெடுத்திருக்கிறார்கள்.

தலைநகர் கெய்ரோவிற்கு தெற்கே ஒரு இடுகாட்டை தோண்டும் போது இப்படி ஒரு மிகப் பெரும் புதையல் மாட்டியிருக்கிறது.

இந்த சவப்பெட்டிகள் பயங்கர வேலப்பாடுகளுடன் அகழ்வாராய்ச்சியாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

உள்ளே வெறும் மம்மிக்கள் மட்டுமல்லாது நிச்சயம் பொன்னும் பொருளும் இருக்கக் கூடும்.
சில சமயங்களில் இது போன்ற வரலாற்று அகழ்வாராய்ச்சி செய்திகளைப் பார்க்கும் போது கால இயந்திரத்தில் ஏறி இறந்த காலத்திற்கு பயணித்து, அதன் தொடர்ச்சியாக எதிர்காலத்தில் இப்படி என்னென்ன கண்டு பிடித்து மாய்ந்து போவர்கள் என்று நினைக்கையில், தத்துவார்த்தமாக இந்த உலகைப் பற்றியும் நிலையாமையைப் பற்றியும் அதிகமாக சிந்திக்கத் தோன்றுகிறது. என்ன கொண்டு வந்தோம் என்ன கொண்டு செல்வோம் இதற்குத் தான் இத்தனை போராட்டங்களா ???
அது இருக்கட்டும்.
அடுத்த முறை எகிப்து போக வாய்ப்பு கிடைத்தால் கையோடு ஒரு மண்வெட்டி கொண்டு போக வேண்டும்.
வட அமெரிக்கா
அமெரிக்கா.

இந்த வார ஹாட் நியூஸ் ஆப்பிளின் புதிய அறிவிப்புகள் தான்.
ஐபோன் 12, 12 மினி 12 ப்ரோ 12 ப்ரோ மாக்ஸ்.
சென்ற வாரமே சொல்லியிருந்தோம் ஒரு வலது கையும் கிட்னியும் விற்க தயாராக இருங்கள் என்று. ஒரு நல்ல செய்தி.
அதாவது இந்த வாரமே நீங்கள் கிட்னி வியாபாரத்தை துவக்க வேண்டாம். நவம்பரில் துவக்கினால் போதும்.
12 ப்ரோ மாடல்கள் நவம்பரில் தான் வர விருக்கிறது.
என்ன ஸ்பெஷல் ??

பெரிதாக ஒன்றுமில்லை. வழு வழுவென்று இருந்த மூலைகள் தற்போது சதுர வடிவில் மாற்றப்பட்டு பழைய ஐபோன் 4/5 போன்ற வடிவத்தை மாற்றியிருக்கிறது ஆப்பிள்.
A14 சில்லு வைத்து முன்னை விட வேகம், முன்னை விட துல்லியம் என்ற வழக்கமான முன்னேற்றங்கள்.
முன்னை விட சிறந்த காமிரா அம்சங்கள்.
இவையெல்லாவற்றையும் விட குறிப்பான மாற்றம் 5G.
இந்த 5G யும் நன்றாக உற்றுக் கவனிக்க வேண்டிய சமாச்சாரம்.
எம்.எம்.வேவ் என்று சொல்லப்படும் மில்லி மீட்டர் வேவ் அதிக அலைவரிசை உபயோகப்படுத்தி வேகமாக செயல்படக்கூடிய 5 ஜி. இதில் சிக்கல் என்னெவெனில் அதிக தூரத்தை கடக்காது. கூட்டம் அதிகமுள்ள இடங்களில் இந்த அலைவரிசை வேலைக்காகும்.
அது போலவே லோ பாண்ட் என்று சொல்லப்படும் 5G யானது 4G யை விட வேகமானது. ஆனால் கண்ணிமைக்கும் வேகமெல்லாம் கிடையாது. ஆனால் இது அதிக தூரத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்.
இது இரண்டுக்கும் நடுவில் மிட் பாண்ட் என்பதும் இருக்கிறது.
ஐபோன் 12 குடும்பம் மி.மீட்டர் வேவ் என்று சொல்லப்படும் அலைவரிசையில் இருந்து சப்-6 கிகா ஹெர்ட்ஸ் என்று சொல்லப்படும் அலைவரிசை வரை வேலை செய்யும். எந்த மாதிரி 5G வேண்டுமென்பது நெர்வொர்க் நிறுவனத்தைப் பொறுத்தது.
இன்னொரு விஷயம். இந்த கரோனா வந்ததற்கும் 5 G தொழில் நுட்பத்திற்கும் சத்தியமாக ஸ்நானப் பிராப்தி கூட இல்லை.
தைரியமாக ஐபோன் வாங்குங்கள். பல்லு இருப்பவர்கள் பக்கோடா சாப்பிட என்ன தடை ?????
இந்தியாவில் 5 G அடுத்த வருடத்தில் வந்து விடும் என்று சொல்கிறார்கள்.
ஐபோன் 5G இருப்பவர்கள் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களை சில விநாடிகளில் தரவிறக்கம் செய்து கொடுமைக்கார மாமியார்கள் கையில் மருமகள்கள் படும் பாட்டை பார்த்து பொல பொலவென வேகமாக கண்ணிர் விட ஏதுவாக இருக்கும்.

Leave a comment
Upload