தொடர்கள்
பொது
கட்டாத வீட்டுக்கு மத்திய அரசு வாழ்த்து... - கோமதிநாயகம்

2020909224342651.jpg

அரியலூர் மாவட்டம், குறிஞ்சான்குளம் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் (60). கூலித் தொழிலாளி. இவருக்கு சொந்தமான கூரை வீட்டையும், இவரது சகோதரி ராணியின் வீட்டையும் புதுப்பிக்க, கடந்த ஆண்டு பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின்கீழ் மாணிக்கம் விண்ணப்பித்துள்ளார்.

அந்த 2 கூரை வீடுகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்து, அவர்கள் புதிய வீடு கட்டுவதற்கு அனுமதி அளித்துள்ளனர். அப்போது இருவரிடமும் போதிய பணம் கையிருப்பில் இல்லாததால், புதிய வீடு கட்டும் திட்டத்தை மாணிக்கமும், அவரது சகோதரியும் கைவிட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மாணிக்கத்துக்கும் அவரது சகோதரிக்கும் மத்திய அரசின் பிரதம மந்திரி நகர்ப்புற வீட்டுவசதி திட்ட இணை செயலாளர் அமரீத் அபிஜத் கையொப்பமிட்ட ஒரு கடிதம் வந்திருக்கிறது.

அதில், ‘மத்திய அரசின் வீட்டுவசதி திட்டத்தின்படி புதிய வீடு பெற்றமைக்கு வாழ்த்துக்கள். மேலும், புதிய வீடுகளில் சிறந்தவற்றை அங்கீகரிக்க, அந்த வீட்டை புகைப்படம் எடுத்து செயலியில் ஏற்றி அனுப்பினால், அவற்றுக்கு விருது வழங்கப்படும்’ எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இக்கடிதத்தை பார்த்து அதிர்ச்சியான மாணிக்கத்துக்கு, ‘தனக்கே தெரியாமல், தங்கள் இருவரின் பெயரில் மத்திய அரசிடம் இருந்து பணம் வாங்கப்பட்டு உள்ளதோ?’ என சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே, ‘இன்றைய தினம் வரையிலும் கட்டப்படாத தன் வீட்டுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ள விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து, தவறு செய்த அதிகாரிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என மாணிக்கம் வலியுறுத்தியுள்ளார்.