தொடர்கள்
Daily Articles
ராக தேவதைகள்... - 8 - மாயவரத்தான் சந்திரசேகரன்

இந்தோளம்...

202091118354487.jpeg

(தொடர்ச்சி)

ஜெமினி ஸ்டூடியோஸ் தயாரிப்பில் வெளிவந்த ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்திற்கு பல சிறப்புகள் உண்டு. விகடன் எடிட்டராக பிற்காலத்தில் உயர்ந்த பாலசுப்ரமணியனின் இயக்கத்தில் வெளிவந்த முதல் படம். ஆங்கில படமொன்றின் தழுவலில் வந்த இதற்கு தமிழில் திரைக்கதை, வசனம் வேப்பத்தூர் கிட்டு. வாழ்க்கை படகு உள்பட பல நல்ல படங்களுக்கு வசனம் எழுதியவர். நடிகர் திலகம் சிவாஜி முதலில் தமிழில் நடிக்க மறுத்து, எஸ்.எஸ். வாசன் இந்தக் கதையை ‘கிரஹஸ்தி’ என்ற பெயரில் இந்தியில் ஹிட்டாக்கியவுடன் நடிக்க ஒப்புக் கொண்ட படம். தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் வசூலை அள்ளியது. இப்படி பல சாதனைகளுக்கு சொந்தமான இதில் ‘மனமே முருகனின் மயில் வாகனம்’ என்றொரு திரட்டிப்பால் பாடலை இந்தோளத்தில் அமைத்திருப்பார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அப்போது கொடிகட்டிப் பறந்த பாடகி சூலமங்கலம் ராஜலட்சுமியின் குரலில் அப்பாடல் இன்னும் ஜொலிக்கும்! வீணை மட்டும் பாட்டோடு பிரதானமாக கேட்டால் போதும் என்று விட்டிருப்பார் எம்.எஸ்.வி. மணிமாலாவும் சௌகார் ஜானகியும் பாட்டில் ஜமாய்த்திருப்பார்கள். குறைந்த பின்னணி வாத்தியங்களோடு சாஹித்யத்தை கம்பீரமாக தர அந்த இசையமைப்பாளர்களுக்குத் தெரிந்திருந்தது. மலையாளத்தில் இன்னமும் அப்படி பல பாடல்கள் வருகின்றன. நம்மூரில் இளம் இசையமைப்பாளர்கள், இரைச்சல்களுக்கிடையில் போனால் போகிறதென்று வார்த்தைகளை தெளிக்கிறார்கள்.

‘அவளுக்கென்று ஒரு மனம்’ படத்தில் இடம்பெற்ற ஜானகியின் ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ பாடலை மறக்க முடியுமா? ‘உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி’ என்று ஜானகி மேலே போய் வருவது அற்புதமான இடம். இந்தோளத்தை பாமரன் விரும்பும்படி தேன் தடவி தந்திருப்பார் மெல்லிசை மன்னர். அதேபோல ‘இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகிறாள்’ பாடல். எஸ்.பி.பி.யும், சுசீலாவும் மிக மென்மையாக காதல் சொட்ட பாடியிருப்பார்கள். ‘சாந்தி நிலையம்’ படத்தில் வரும் இதுவே எஸ்.பி.பி.யின் முதல் தமிழ் பாடல் என்று திரையுலக ரிக்கார்டுகள் சொன்னாலும், ‘பாடியது வேறு, முதலில் ரிலீசானது வேறு’ என்று வழக்கமாக கூறும் மறுப்பாளர்களை விட்டுவிடலாம்!

2020911183145859.jpeg

1969-ம் ஆண்டு ‘சாந்தி நிலையம்’ வெளிவந்தபோது, அப்போது ஒரு சரித்திரம் திரையுலகில் எழுதப்படுகிறது என்று யாருக்குத் தெரியும்? நெல்லூரிலிருந்து வந்த ஒரு குரல் தென்னிந்தியாவுக்கே பிடிக்கப் போகிறது என்று யார் அறிவார்? இப்போது நினைத்தாலும் பிரமிப்பே மிஞ்சுகிறது. ரயிலில் பாட்டு பாடிய கொடுமுடிகோகிலம் கே.பி. சுந்தராம்பாள் ஆவார் என்று யார் கண்டார்? காலச்சக்கரத்தின் அதிசயங்கள்.

தெலுங்கில் ‘சாகர சங்கமம்’, தமிழில் ‘சலங்கை ஒலி’யாக வெளிவந்து சக்கை போடு போட்டது மறந்திருக்க முடியாது. அதில் வரும் ‘ஓம் நமச்சிவாயா’ பாடலில் இந்தோளத்தை நூறு சதம் கிளாஸிக்கலாக தந்திருப்பார் இளையராஜா. பாட்டு நெடுக அற்புத சங்கதிகள் பல உண்டு. ‘பஞ்ச பூதங்களும் முகவரி காட்டும்’ என்ற அனுபல்லவி ஆரம்பிக்கும் இடத்தை அனாயசமாக பாடியிருப்பார் ஜானகி. பாட்டை ஞானத்தோடு பின் தொடரும் மிருதங்கத்திற்கே தனி சபாஷ் போடலாம். இந்த பாட்டிற்குத் தான் சைலஜா சரியாக அபிநயம் பிடிக்கவில்லை என போதையிலிருக்கும் இசை விமரிசகர் கமல் அவரை சந்தித்து ஆடி காண்பித்து ரகளை செய்வார்! தியேட்டர் அதிரும்.

202091118321065.jpeg

‘தரிசனம் கிடைக்காதா’, நான் தேடும் செவ்வந்திப் பூ, உன்னால் முடியும் தம்பி, தென்றல் தான், ராகவனே ரமணா, கண்ணா உனை தேடுகிறேன், ‘ஓ... ஜனனி, ஸ்ரீ தேவி என் வாழ்வில்’.. உள்பட பல வெரைட்டியான இந்தோளங்களை தந்துள்ளார் ராஜா. குறிப்பாக ‘தரிசனம் கிடைக்காதா’வில் ராஜாவின் கற்பனை இறக்கை கட்டி அட்டகாசமாக பறக்கும். அலைகள் மீது ராதா இளமை துள்ளலுடன் ஓடி வர... பின்னணியில் ஸ்வரங்கள் அலை அலையாக பின்தொடர, சட்டென்று காட்சி மாறி, வீட்டில் கமலா காமேஷ் முன் அமர்ந்திருக்கும் ராதா, பாடலை பாடுகிற போது அமர்க்களமாக இருக்கும். அங்கே பாரதிராஜாவும் இளையராஜாவும் ஒரு இசை யாகமே நடத்தியிருப்பார்கள். எஸ். ஜானகி பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டிய பாடல்! அதே பாடலை பிறகு இளையராஜா பாடுகிறபோது மெல்லிய சோகம் சேர்ந்து மனதை வருடும். இசைஞானி ஆரம்ப காலத்தில் சொந்த குரலில் பாடுகிற போது அது ஒரு தனி ருசியாக, கிராமத்து இளைஞனின் வேதனைக் குரலாக இருந்தது உண்மை. ஆனால் பிற்காலத்தில் குரலில் கனம் ஏறிப்போய், அவ்வப்போது ஸ்ருதியும் கலைந்து போனதை அவர் ஏன் கவனிக்கவில்லை என தெரியவில்லை! இத்தனைக்கும் ஊருக்கே ஸ்ருதி பற்றி வகுப்பு எடுப்பவர்! ஆர்கெஸ்ட்ரா மேடைகளில் புகழ்பெற்ற பாடகர்கள் சிறிய தவறு செய்தாலும் திரும்ப பாடச் சொல்லி சங்கடப்படுத்தியுள்ளவர்! நம் ஒவ்வொருவர் காதிலேயே ஒரு ஸ்ருதிபெட்டி உள்ளதே!

ஏ.ஆர். ரஹ்மானும் தன் பங்கிற்கு இந்த ராகத்தில் சில நல்ல பாடல்களை தந்துள்ளார் என்றாலும் என் நெஞ்சில் எப்போதும் நிற்பது ‘மே மாதம்’ படத்தின் ‘மார்கழிப் பூவே’ மற்றும் ‘வரலாறு’ பட ‘இன்னிசை ஆளபடையே’! அவ்வளவு பெயர் தெரியாத பாடகி ஷோபா ஷங்கருக்கு சற்று காத்திரமாக பெங்களூர் ரமணியம்மாளை நினைவுபடுத்தும் குரல். ரமணியம்மாளுக்கு என்ன குரல் அது? ‘பால் மணக்குது பழம் மணக்குது பழனி மலையிலே’ என்று அவர் குரலெடுத்து பாடும்போது உடம்பு சிலிர்க்கும். அந்த கனத் தொண்டையிலும் ஒரு அதீத இனிமை அதற்குப் பிறகு யாருக்குமே வரவில்லை! ஒரு முறை ஏ.ஆர். ரஹ்மானிடம் பேட்டியின்போது, ‘ரமணியம்மாள், கே.பி.எஸ்., சிதம்பரம் ஜெயராமன் போன்றவர்கள் உங்கள் இசையில் பாடினால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து கொள்வேன். சுவாரஸ்யமாக இருக்கும்’ என்றபோது, பெரிதாக சிரித்துவிட்டு ‘எனக்கே கேட்க ஆசையாயிருக்கு’ என்றார் சிறு பையனின் துள்ளலுடன்!

‘மார்கழி பூவே’வில் ‘மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை’ என்று இந்தோளத்தின் மேல் பஞ்சமத்தை ஷோபா ஷங்கர் ஏகாந்தமாக தொட்டுவிட்டு வரும் அழகே தனி. பாட்டு ஆரம்பத்தில் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதத்தின் ‘கௌசல்யா சுப்ரஜா ராமா பூர்வா சந்தியா பிரவத்ததே’ என்னும் இரண்டு வரிகளை புல்லாங்குழலில் வாசித்த பின் பாடலுக்கு அருமையாக வந்திருப்பார் ரஹ்மான். அதே போல் ‘இன்னிசை அளபடையே’யில் மஹதி சுத்தமான இந்தோளத்தை தந்திருப்பார்.

2020911183424206.jpeg

‘உன் மார்பில் விழி மூடி தூங்குகிறேன்’ என்று சித்ரா பாடுகிறபோது உங்கள் காதில் ரகசியம் பேசி விட்டு போவது போல சுகமாக இருக்கும். ‘நினைத்தேன் வந்தாய்’ படத்தில் தேவாவின் இசையில் வரும் ஒரு கற்கண்டு! தேனிசை தென்றலிடம் உள்ள தனித்துவம், தேவையில்லாமல் வாத்தியங்களை உருட்டி விட்டு ட்யூனின் கம்பீரத்தை கெடுத்து விடாமல் பார்த்துக் கொள்வார். எந்த ராக தேவதைக்கு ஆபரணங்கள் தேவை, எதற்கு எதுவும் தேவையில்லை என்பதை உணர்ந்த ஞானஸ்தர்! அதே போல ‘ஜல்லிக்கட்டு காளை’ படத்தில் ‘சிறு மல்லி பூவே’ என்றொரு டூயட்டை மனோவும், சித்ராவும் பாடியிருப்பார்கள். பாட்டு நெடுக கோரஸ் கண்ணாமூச்சி காட்டும். பனி சொட்டும் அதிகாலையில் வரும் இரண்டாம் தூக்கம் போல அது பரம சௌக்கியம்.

‘மண்ணுக்குள் வைரம்’ படத்தில் ‘இதழோடு இதழ் சேரும் நேரம்’ பாடலை கேட்கிறபோது அந்த ரம்மியமான ‘கிளாஸிகல்’ வாசனையைப் பார்த்து தேவாவோ என்று நினைக்கத் தோன்றும். அல்ல.. ஸ்ரீவில்லிபுத்தூர்காரர் தேவேந்திரன். தரமான பாடல்களை தந்த இந்த கலைஞருக்கு ஏன் பெரிய வாய்ப்புகள் அமையவில்லை என்ற கேள்விதான் எழுகிறது. இந்தப் பட்டியலில் சிற்பியும் கூட உண்டு. இங்கே பெரிய ‘பேனர்’களின் அரவணைப்பு முக்கியம். அது இல்லாவிட்டால் பீதாம்பரத்தை கூட குப்பையில் போட்டுவிடும் கோடம்பாக்கம். ‘தேவராகம்’ படத்தில் எம்.எம். கீரவாணியின் ‘சின்ன சின்ன மேகம்’ பாடல் ஈர காற்றாக வீசும் இந்தோளம்தான். ஆனால், ராக லட்சணங்கள் பட்டும் படாமலும் இருக்கும்!

யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத்தின் பாடல்கள் ஏதாவது இந்த ராகத்தில் தேறுகிறதா என சல்லடை போட்டு தேடினேன். அவர்கள்தான் கிளாஸிகல் பக்கம் வர மாட்டோம் என சங்கல்பம் எடுத்துள்ளார்களே!

சாஸ்த்ரிய சங்கீதத்திற்கு வந்தால் ஆப்பிள் மூட்டையை அவிழ்த்தால் உருண்டு ஓடி வருவது போல் அத்தனை கீர்த்தனைகள் உள்ளன. தியாகராஜரின் சாமஜவர கமணா, மாமவது ஸ்ரீ சரஸ்வதி, மனசுலோனி, பத்மநாபா பாஹி, மா ரமணன் என்று அடுக்கி மாளாது. இவை தவிர, தஞ்சாவூர் சங்கர அய்யரின் லட்டான கீர்த்தனைகள், பாலமுரளியின் தில்லானாக்கள் என்று தனி தனி பட்டியலே போடலாம். வட இந்திய உஸ்தாத்கள் மத்தியிலும் இந்த ராகம் மிகவும் பிரபலம். அவர்கள் இதை ‘மால்கவுன்ஸ்’ என்பார்கள். வடக்கே கெளஷிகி சக்ரபர்த்தி என்றொரு அழகு பாடகி இருக்கிறார். முப்பெத்தெட்டு வயது இருக்கலாம். அவர் புன்னகைத்தவாறே பாடுவதை நீங்கள் கேட்டால், உங்களுக்கு வேறு எந்தப் பெண் பாட்டும் பிடிக்காது! அவர் மால்கவுன்ஸ், பிம்ப்ளாசி, சுத்த சாரங் போன்ற இந்துஸ்தானி ராகங்களை பாடுகிறபோது ஜெய்ப்பூர் அரண்மனையில் நீங்கள் மிதப்பீர்கள். அவர் தந்தை ‘அஜய் சக்ரபர்த்தியும் அங்கே பெரிய வித்வான். (நமக்குதான் ‘வர்த்தி’ பெங்காளிகளுக்கு ‘பர்த்தி’). நம் பாலமுரளியுடன் பல மேடைகளில் பாடியுள்ளார். நம்மவர்களுக்கு உள்ள பிரச்சனை, கேட்டதையே வருடக்கணக்காக அலுக்காமல் கேட்பதுதான்! ‘பொத்தி வச்ச மல்லிகை மொட்டு’க்கு மேல் போக மாட்டேன் என்று அடம் பிடிப்பவர்கள். ஐம்பது வருடத்திற்கும் மேலாக திரும்பத் திரும்ப இரண்டு திராவிட கூட்டணிகளுக்கே வாக்களிக்கிறார்களே. அதுவும் அப்படித்தான்!

- இன்னும் பெருகும்