தொடர்கள்
Daily Articles
சீன தூதரகத்தின் முன் தைவான் போஸ்டர்... - சங்கர்

2020913062559765.jpeg


புதுடெல்லியில் உள்ள சீன தூதரகம் சார்பில் கடந்த 7-ம் தேதி இந்திய ஊடக நிறுவனங்களுக்கு ஒரு சுற்றறிக்கை வெளியானது. அதில், ‘தைவான் தேசிய தினம் எனக் கூறி, இந்திய ஊடகங்களில் செய்தி வெளியிடாதீர்’ என அறிவுறுத்தியது.

இதற்கு பதிலடியாக, ‘இந்தியா துடிப்பான ஊடக சக்தி கொண்ட நாடு. அது சுதந்திரத்தை விரும்பும் மக்களை கொண்ட ஜனநாயக நாடு. அனைத்து நாடுகளின் மீது சீனா அடக்குமுறைகளை கையாள்கிறது. அவர்களின் கோரிக்கையை இந்தியா ஏற்கக்கூடாது’ என தைவான் வெளியுறவு அமைச்சகம் செய்தி வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து சீனாவின் சுற்றறிக்கைக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் அளித்த பதிலில், ‘இந்திய ஊடக சுதந்திரம் மற்றும் உரிமைகளை பாதுகாப்போம். ஊடகங்கள் தனது நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிக்க, அவர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது’ என குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், தைவான் நாட்டின் தேசிய தினமான கடந்த 10-ம் தேதி புதுடெல்லியில் உள்ள சீன தூதரகத்தின் எதிரே, தைவானுக்கு ஆதரவாக பாஜ இளைஞரணி தலைவர் தாஜிந்தர் பால்சிங் பாகா என்பவர் சில சுவரொட்டிகளை ஒட்டியிருக்கிறார். அது, தைவானின் தேசிய தினத்துக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அமைந்திருந்தது.
இதுகுறித்து சர்வதேச மீடியாவில் பரபரப்பான செய்தியாக வெளிவர, தனது அதிகாரபூர்வ நாளிதழான ‘குளோபல் டைம்ஸ்’ மூலமாக பாஜ நிர்வாகி பாகாவை சீனா அச்சுறுத்தியுள்ளது.

அதில் ‘புதுடெல்லியில் சீன தூதகரத்துக்கு எதிரே தைவானை ஆதரித்து சுவரொட்டிகள் ஒட்டியிருப்பதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது. அதில், இனிய தேசிய தினம் என குறிப்பிட்டுள்ளது. தைவானுக்கு ஆதரவாக இதுபோன்ற வேலைகளை செய்தவன் மூலம் பாகா நெருப்புடன் விளையாடுகிறார். அவரது செயல், எரிகிற தீயில் எரிபொருளை ஊற்றுவது போல் அமைந்துள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்கெனவே உறவு கசப்பாக உள்ளது. இதுபோன்ற செயல்கள் இருதரப்பு உறவை கெடுக்க மட்டுமே உதவும்’ என எழுதப்பட்டுள்ளது.