தொடர்கள்
Daily Articles
உள்ளதைச் சொல்வேன்! - 8 - அண்ணாதுரை கண்ணதாசன்

லாக் பிரேக்கர்...

2020910225338511.jpeg

மேக்கர்கள் பிரேக்கர்கள் என்று நாம பலவிதமான ஆங்கிலப் பெயர்களை கேள்விப்பட்டு இருப்போம். லா மேக்கர்ஸ், லா பிரேக்கர்ஸ் இப்படி. ஆனால், முதல் முறையாக ஒரு திரைப்படத்தின் கதை விவாதத்தின் போது ஒரு பெயரைக் கேள்விப்பட்டேன். அது “லாக் பிரேக்கர்”.

சரி அது என்னது லாக் பிரேக்கர்?

ஒரு திரைப்படத்தின் கதை மற்றும் திரைகதையின் ஆதி அந்த கதைக்கான கரு. ஒரு கரு உருவானபிறகு அந்தக் கருவிற்கு ஒரு ஆரம்பம், ஒரு இடைவேளை, ஒரு முடிவு என்று மூன்று பகுதிகளை முடிவு செய்வார்கள். பிறகு அந்த ஆரம்பம் எப்படி இருக்கவேண்டும், அங்கிருந்து இடைவேளை வரையில் அந்த கதையின் போக்கு எப்படி இருக்கவேண்டும் என்று தீர்மானிப்பார்கள். இடைவேளைக்குப் பிறகு கிளைமாக்ஸ் வரையில் அந்தக் கதையின் போக்கினை விவாதித்து சரி செய்து கொள்வார்கள். அதன் பிறகு காட்சிகளை அமைப்பார்கள். இது தான் வழக்கம் என்று நான் சொல்லமாட்டேன். ஆனால், நான் பணிபுரிந்த படங்களில் இப்படித்தான் செய்திருக்கிறோம்.

சில நேரங்களில் கதையின் போக்கில் ஒரு இடத்தில் சிக்கிக் கொள்வோம். கதையை அந்த இடத்தில் இருந்து வளர்த்திச் செல்வது லாஜிக்கை மீறிய ஒன்றாக இருக்கும். கதாபாத்திரங்களின் தன்மையும் குணாதிசியமும் அதனை அனுமதிக்காது. மீறிப் போகலாம் என்றால் “சார்.. ஜனங்க காரித் துப்புவாங்க” என்று ஒரு கோஷ்டி மல்லுக்கு நிற்கும். புரியும்படியாக ஒரு நிகழ்ச்சியை சொல்கிறேன்.

ராபர்ட், ராஜசேகரன், அண்ணாதுரை(நான்). இந்த மூவரும் சேர்ந்து ARR FILIMS என்ற நிறுவனத்தை ஆரம்பித்து ஒரு திரைப்படத்தை துவக்குகிறோம். இயக்குனர் மணிவண்ணன் தன்னுடன் பணிபுரிந்த ஒருவருக்கு இயக்குனர் வாய்ப்புக் கிடைக்கவேண்டி, தான் செய்துவைத்த கதைகளில் இருந்து ஒரு கதையைத் தருகிறார். எனவே நாங்கள் இயக்காமல், அவரை இயக்குனராக அறிவித்து அந்தப் படத்திற்கு “ஊர்சட்டம்” என்று பெயர் வைத்து, அறிமுக இயக்குனருடன், அறிமுக இசையமைப்பாளராக வித்யாசாகரை அறிவித்தோம். பாடல் பதிவுடன் பூஜை சிறப்பாக நடந்தது. “பாட்டை எடுத்து விட்டேன் மாமோவ்” என்ற அந்தப் பாட்டை எழுதியவர் இசை அமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார்.

பூஜையெல்லாம் முடிந்த பிறகு கதை விவாதத்தில் இறங்குகிறோம். மணிவண்ணன் சொன்ன கதையின் கரு இதுதான்.

ஒரு அழகான கிராமம். அந்த ஊரே பண்ணையாரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. கதையின் வில்லனும் அவனே. அந்த ஊருக்கு புதிதாக வருகிறாள் கதாநாயகி. அந்த ஊருக்கு வந்த அவளுக்கு கதாநாயகனைப் பார்த்து பரிதாபம் ஏற்படுகிறது. காரணம் 21வயது இளைஞனான அவன் காலில் ஒரு சங்கிலி கட்டப்பட்டு, அது ஒரு பெரிய மரக்கட்டையுடன் இணக்கப்பட்டு இருக்கிறது. அவன் நடக்க வேண்டும் என்றால் கனமான அந்தக் கட்டையை தூக்கிக் கொண்டு தான் நடக்க வேண்டும். இதனால் அவன் வேகமாக ஓடவோ, சண்டை போடவோ முடியாது. ஊர்மக்களிடம் கதாநாயகனின் பின்ணணியை விசாரிக்கிறாள். அவனுடைய அப்பா தான் முன்னாள் ஊர்த்தலைவர். அவரது குடும்பத்தை வில்லன் கொலை செய்து அழித்து விடுகிறான். இந்த சிறுவன் மட்டும் எப்படியோ தப்பித்து விடுகிறான். வில்லனின் மனைவி அவனைக் கொல்லக்கூடாது என்று கணவனிடம் அழுது புலம்பி ஒப்புதல் வாங்கி விடுகிறாள். இவன் வளர்ந்து தன்னை எதிர்க்கக்கூடும் என்பதால் சிறுவனின் கால்களை ஒரு சங்கிலியால் பிணைத்து, அதை ஒரு கட்டையுடன் இணைத்து பூட்டி விடுகிறார்கள். அந்தப் பூட்டின் சாவியை கிணற்றுக்குள் எறிந்து விடுகிறான் வில்லன். கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் இடையே காதல் அரும்புகிறது. இப்போது அவள் வில்லனை எதிர்க்கிறாள். ஒரு நாள் அந்தப் பூட்டை உடைத்து, அவனை விடுவித்துவிட்டு வில்லனை பழிவாங்க சொல்கிறாள். இதுதான் படத்தின் இடைவேளை. இடைவேளைக்குப் பிறகு கதாநாயகன் நேரடியாக வில்லனை எதிர்பான். அப்படிப் பார்த்தால் அதிகபட்சம் பதினைந்து நிமிடங்களில் கிளைமேக்ஸ் வந்து விடும். எவ்வுளவோ விவாதங்கள், போராட்டங்கள் செய்தும் கதையை அதற்கு மேல் நகர்த்த முடியவில்லை. தன் முதல்பட வாய்ப்பு நழுவிவிடுமே என்ற பயத்தில் அந்த அறிமுக இயக்குனர் ஒருவரை அழைத்து வந்தார். ‘இவர் ஜகஜால கில்லாடி. பெரிய லாக் பிரேக்கர். கதையில் விழும் முடிச்சுக்களை இவர் சுலபமாக சரி செய்துவிடுவார்..”அது இது என்று ஏகத்துக்கு பில்டப் கொடுத்தார். லாக் பிரேக்கர் என்ற பெயரை நான் அப்போதுதான் முதல் முறையாக கேள்விப்படுகிறேன்.

சரி இயக்குனர் இவ்வுளவு சொல்கிறாரே என்று அவரையும் சேர்த்துக் கொண்டு கதை விவாதத்தை மீண்டும் துவங்கினோம். எடுத்த உடனேயே...

சார், ஒரு பாக்கெட் இண்டியாகிங்க்ஸ் சிகரெட், அப்புறம் டீலக்ஸ் ஹோட்டல்ல இருந்து ஸ்பெஷல் டீ வாங்கிக்கிட்டு வர சொல்லுங்க என்றார். அது வருவதற்குள் கதையை அவரிடம் சொல்லியாயிற்று.

டீ வந்தது.. குடித்தார்.. ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டார். அது முடிகிறவரையில் எதுவும் பேசவில்லை. அப்படி ஒரு சிந்தனை. நாங்கள் அவரைப் பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறோம். சிகரெட்டை ஆஷ் டிரேயில் அணைத்தார். தொண்டையை செருமிக்கொண்டார்.. “ம்ம்ம்ம்... ஒண்ணு செய்வோம். கிளைமேக்ஸிக்கு முன்னாடி ஹிரோயின் அந்த பூட்டை உடைச்சா?”

“அதை நாங்க பேசிப் பார்த்திட்டோம். அதுவரைக்கும் கதையை நகர்த்த போதுமான இன்ஸிடண்ட்ஸ் இல்லை” - இது கதை வசனகர்த்தா பிரசன்னகுமார்.

“ஒரு பெரிய மரக்கட்டையை தூக்கிக்கிட்டு படம் முழுக்க ஹீரோ வந்தா நல்லா இருக்காது” - இது ராபர்ட்.

“ஒரு டிரீம் சாங்க் வைக்கலாம். கிளைமேக்ஸ் வரைக்கும் எல்லா பாட்டையும் அப்படி வச்சா நல்லா இருக்காது. பூஜை பாட்டே ரொம்ப ஃபாஸ்ட் ரிதத்தில போட்டிருக்கு” - இது ராஜசேகர்.

“ஹீரோவே அந்தக் கட்டையை உடைச்சு இருக்கலாம்.. ஏன் அதை பண்ணலைனு வேற நாம லாஜிக்கா சொல்லணும்” - இது நான்.

லாக் பிரேக்கர் மெல்லமாக எழுந்தார். மீண்டும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டார், மேலும் கீழுமாக நடந்தார்.. திடீரென நின்றார் “இண்டர்வெல்ல அந்த சங்கிலியை உடைக்கணும்.. அவ்வுளவுதானே?” என்றார்.. மீண்டும் நடக்க ஆரம்பித்தார். அந்த அறைக்குள் ஒரு ஐந்து கிலோமீட்டர் தூரத்தை நடந்து, இருபது சிகிரெட்பிடித்த அவரிடம் இருந்து அன்று மாலை வரை வேறு எந்த ஐடியாவும் வரவில்லை.

“நான் ராத்திரி யோசித்துவிட்டு நாளைக்கு வரேன்” என்று சொல்லிவிட்டு அட்வான்ஸ் ஆக ஐயாயிரம் ரூபாய் வாங்கிகொண்டு போனார் அந்த லாக் பிரேக்கர்.

மறுநாள் காலை சொன்ன நேரத்திற்கு வந்தார் அவர். ஆபிஸ் பையனை அழைத்து “மவுண்ட் ரோடும் உஸ்மான் ரோடும் சேர்ற இடத்துல ஒரு ஹோட்டல் இருக்கும்... அங்க முட்டை, ஆப்பமும், பாயாவும் வாங்கிக்க, அப்புறம் ஒரு பாக்கெட் இண்டியாகிங்ஸ் சிகரெட், டீ என்றார். ராபர்ட் ராஜசேகரே இதையெல்லாம் கேட்டதில்லையே என்ற கேள்வியை தன் முக பாவனையாக்கி அவன் கிளம்பிப் போனான். இவர் வந்து உட்கார்ந்தார். “சார் நல்ல ஐடியா வந்திருக்கு.. டிபன் சாப்பிட்டுட்டு ஆரம்பிப்ப்போம்” என்றார்.

வசனகர்த்தா பிரசன்னகுமார் என்னிடம் “வாய்யா ஒரு தம் போட்டுட்டு வரலாம்” என்றார். இருவரும் வெளியே வந்தோம். “இந்தாளு சீன் சொல்லுவான்னு எனக்கு நம்பிக்கை இல்லை” என்றார் பிரசன்னா.

ஏன்?

டிபன் வரவரைக்கும் கதையை சொல்லல்லாம்ல.. அதுக்காக வெயிட் பண்ணி சாப்பிட்டதுக்கு அப்புறம் கதை சொல்றதுங்கிறது எனக்கு சரியா படலை.. பார்போம்.

ஒரு வழியாக பலகாரக்கடை முடிந்தது. ஹ்ம்ம்ம்.. என்று கனைத்துவிட்டு பேசத் துவங்கினார். “நைட்டு ஒரு சூப்பர் ஐடியா வந்திச்சு.. ஒரே செகண்ட்ல மொத்த லாக்கும் உடைஞ்சிடுச்சு..

எல்லோரும் அவரையே பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஒரு சிகரெட்டின் முடிவில் இருந்து இன்னொரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு கண்டினியூ பண்ணினார். “இண்டர்வெல்ல ஹீரோயினி சங்கிலியை உடைக்கிறா, சார்.. இண்டர்வெல்லுக்கு அப்புறம் என்ன நடக்குமோன்னு ஆடியன்ஸ் வெயிட் பண்னுவாங்க.. இண்டர்வெல் முடிஞ்சு ஓப்பன் பண்ணுனா ஹீரோ சொல்றான் “அந்த பண்ணையார் ரொம்ப பலசாலி.. அவனை எதிர்க்க நான் என் சக்தியை கூட்டிக்கணும்.. அதுனால இந்த பூட்டை ஒடச்சதை காமிச்சுக்காம பழைய மாதிரியே நடிக்கிறேன்.. நேரம் வரும் போது கழட்டிட்டு அவனை பழி வாங்குறேன்”னு சொல்றான். இப்படி போனா நாம எப்ப வேணும்னாலும் கிளைமாக்சை வச்சுக்கலாம்…எப்படி?

“இதுக்கு எதுக்கு அவன் ஹீரோயின் வரவரைக்கும் காத்திருக்கணும்? அவனுக்கு விவரம் தெரிஞ்ச உடனேயே அவனே சங்கிலியை உடைச்சிட்டு காத்துகிட்டு இருக்கலாமே? – பிரசன்னா.

ஓ.. லாக்பிரேக்கர் எழுந்தார். ஜன்னல் அருகே சென்று வானத்தை பார்த்தபடி நின்றார்.. “நான் சொன்னது வேணாம்ல?” சரி, இது எப்படி இருக்குனு பாருங்க.. ஹீரோவுக்கு பதிலா ஹீரோயினுக்கு சங்கிலி போட்டு கட்டிட்டா? கதைக்கு புது டைமென்ஷன் கிடைக்குமே?”

எல்லோரும் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் உட்கார்ந்து இருக்கிறோம்.
முட்டை ஆப்பமும், பாயாவும் ஜீரணம் ஆனதன் அறிகுறியாக அவரிடம் இருந்து ஒரு பெரிய ஏப்பம் எழுந்தது. இனிமே இங்கு கடை விரிக்க முடியாது என்பதை தெரிந்து கொண்டார்.. “சார். இது முடிஞ்சிடும்னு நினைச்சேன்.. முடியலை. மத்தியானம் வேற ஒரு கம்பெனிக்கு வரதா ஒத்துகிட்டு இருக்கேன்.. நாளைக்கு காலையில வரேன் ஃபைனல் செஞ்சிடலாம்” ஆட்டோவுக்கு பணம் வாங்கிக் கொண்டு கிளம்பிப் போனார்.

முப்பது வருடங்கள் ஆகின்றன. இன்றுவரை அவர் வரவில்லை.. அந்தக் கதை சரிப்பட்டு வராததால் பாடல் பதிவுடன் அந்தப் படம் கைவிடப்பட்டது.. சுலபமாக ஐயாயிரம் சம்பாதித்த அந்த லாக் பிரக்கர் இன்னும் என் நினைவில் இருக்கிறார்.

இந்தக் கட்டுரையை படிக்கின்ற உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.. நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களோ படம் எடுக்கும் போது, கதையில் இது போன்ற சிக்கல் வந்தால், புது லாக் பிரேக்கர் நான் இருக்கிறேன். என்னை அனுகலாம். நன்றி.