
கடலூர் மாவட்டம், மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது தெற்கு திட்டை ஊராட்சி. இதன் தலைவராக, தலித் சமூகத்தை சேர்ந்த ராஜேஸ்வரி (48) என்ற பெண் பொறுப்பு வகிக்கிறார். இங்கு மோகன்ராஜ் என்பவர் துணை தலைவராக இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்தில் தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர்ந்திருப்பதை போல் ஒரு புகைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் சமூகவலை தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி கூறுகையில், ‘நான் ஊராட்சி மன்றத் தலைவராக பதவியேற்ற நாளிலிருந்து, என்னை தரையில் தான் அமரவைத்து வருகின்றனர். கடந்த சுதந்திர தினத்தன்று கூட என்னை கொடியேற்ற விடாமல், துணை தலைவர் மோகன்ராஜ் கொடியேற்றினார்’ என கண்ணீருடன் தெரிவித்தார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் கடந்த 10-ம் தேதி புவனகிரி காவல் நிலையத்தில் வைத்து, ஊராட்சி பெண் தலைவர் ராஜேஸ்வரி மற்றும் அவரது கணவர் சரவணன் ஆகியோரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் விசாரணை நடத்தினார். அப்போது விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.

விசாரணையின் முடிவில், ஊராட்சி துணை தலைவர் மோகன்ராஜ், ஊராட்சி செயலாளர் சிந்துஜா ஆகியோர் மீது ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரியிடமிருந்து புகார் பெறப்பட்டது. ஊராட்சி பெண் தலைவரை தரையில் அமரவைத்து அவமதிப்பு செய்ததற்காக, இருவர்மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி, மாவட்ட எஸ்பி. அபினவ், மாவட்ட கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்காரா, சிதம்பரம் சப்-கலெக்டர் மதுபாலன் ஆகியோர் கடந்த 11-ம் தேதி தெற்கு திட்டை கிராமத்துக்கு வந்து தீவிரமாக விசாரித்தனர். பின்னர் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரியை ஊருக்குள் அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் துணை தலைவர் மோகன்ராஜ், கவுன்சிலர் ராஜதுரை ஆகியோர் ஆஜராகவில்லை. மற்ற 4 கவுன்சிலர்களும் பங்கேற்றனர். அவர்களிடம் கலெக்டர், எஸ்பி ஆகியோர் சுமார் ஒரு மணி நேரம் விசாரித்தனர். இதையடுத்து தெற்கு திட்டை கிராமத்திலும் ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி வீட்டிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே கடந்த 10-ம் தேதி மாலை ஊராட்சி செயலாளர் சிந்துஜாவை, ஊரக வளர்ச்சி துறை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. மேலும், ஊராட்சி மன்றத் தலைவரை தரையில் அமரவைத்து இழிவுபடுத்தியதாக 5-வது வார்டு கவுன்சிலர் சுகுமார் (37) 2-வது குற்வாளியாக சேர்க்கப்பட்டார்.
மேலும் 5 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2-வது குற்றவாளியாக சுகுமார், 3-வது குற்றவாளியாக ஊராட்சி செயலர் சிந்துஜா ஆகியோரை கைது செய்தனர். பின்னர் இருவரையும் கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து தலைமறைவான துணை தலைவர் மோகன்ராஜ் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அங்கு இன்னும் பரபரப்பாகவே உள்ளது.

Leave a comment
Upload