இது மக்களுக்கு செய்யும் துரோகம்...
மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது. அது ஆளுநரின் ஒப்புதலுக்கும் அனுப்பப்பட்டு விட்டது. கிட்டத்தட்ட 30 நாட்களுக்கு மேல், ஆளுநர் இந்த சட்ட மசோதா மேல் எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார். ‘சட்டம் இயற்றி 32 நாட்கள் ஆகியும் ஆளுநர் தன் ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்கிறார். இங்கு நடப்பது ஆளுநர் ஆட்சியா?’ என்று கேள்வி கேட்டுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். பாமக, அதிமுக - பாரதிய ஜனதாவின் தோழமைக் கட்சி.
உயர்நீதிமன்றத்தில் இந்த இட ஒதுக்கீடு சம்பந்தமாக வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசுத் தரப்பு தலைமை வழக்கறிஞர், ‘ஆளுநர் சட்ட மசோதாவை ஏற்று ஒப்புதல் தரலாம், திருப்பியும் அனுப்பலாம்’ என்று சொன்னபோது... நீதிபதி, ‘ஆளுநர் முடிவெடுக்க ஒரு மாத கால அவகாசம் போதாதா?’ என்று கேட்டபோது... அரசு தலைமை வழக்கறிஞர், ‘நீதிமன்றம் ஆளுநருக்கு உத்தரவிட இயலாது, காலக்கெடுவும் விதிக்க முடியாது’ என்று நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதேசமயம் இட ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் தந்தால்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு எடுக்கும் முடிவில் ஆளுநர் தலையிட முடியாது என்பதை பல உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகள் ஏற்கனவே பலமுறை தெளிவுபடுத்தி இருக்கிறது. அப்படி இருக்கும்போது அரசு வழக்கறிஞர், ஆளுநரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று ஆளுநருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்தது ஆச்சரியமாக இருக்கிறது.
இதே ஆளுநர், பேராசிரியை நிர்மலாதேவி சம்பந்தப்பட்ட சர்ச்சையில் அவரே நிருபர்களை சந்தித்து தன்னிலை வாக்குமூலம் தந்தார். அதுமட்டுமன்றி, ஏற்கனவே இந்த விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, தன்னிச்சையாக நிர்மலாதேவி விஷயத்தில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தை விசாரித்து அறிக்கை தருமாறு உத்தரவிட்டார். சந்தானம் ஐஏஎஸ் விசாரணை அறிக்கையை ஆளுநரிடமே ஒப்படைத்தார். ஆனால், அந்த அறிக்கை விவரங்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. சிபிசிஐடி விசாரணைக்கும் இதே நிலைதான்.
நீட் விவகாரத்தில் கூட சட்டமன்றத்தில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்ப மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அந்த தீர்மானங்கள் எதையும் ஜனாதிபதிக்கு அனுப்பாமலே மத்திய அரசு கிடப்பில் போட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை இப்படி கொச்சைப் படுத்துவதை முதல்வர் எடப்பாடி அரசு எப்படி சகித்துக் கொண்டிருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இது தங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு செய்யும் துரோகம் என்று அவர்களுக்கு தெரியவில்லையா?! கூடிய சீக்கிரம் வாக்கு கேட்டு இதே மக்களிடம் தான் கையேந்த வேண்டும் என்பதை மறந்து விட்டார்கள் போலும்.
Leave a comment
Upload