உடல் நலனை விரும்புவோர் முறையான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டால் நெடுநாள் நலமாக வாழலாம். உண்பதற்காக வாழாது வாழ்வதற்காக உண்டால் மருந்து என்பதே உடலுக்குத் தேவை இல்லை.
வள்ளுவர் மருந்து எனும் அதிகாரத்தில் ‘உணவே மருந்தாகும்’ தன்மையை எடுத்துக் கூறுகின்றார். உண்ட உணவு செரித்த பின்னரே, மீண்டும் உண்ண வேண்டுமென தமிழ் மருத்துவம் கூறுகிறது. முன் உண்டது செரித்தது கண்டு உன்பார்க்கு மருந்துண்ணும் தேவையே ஏற்படாது.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
தமிழகத்து உணவு வகைகள் தொன்றுதொட்டு உடல் நலத்திற்கு பொருந்திய உணவாகவே இருந்து வருகிறது.
அந்தந்த பருவ காலங்களுக்கு ஏற்ப, அந்த இடத்தில் விளையும் காய்கறிகள், பழ வகைகள், கீரைகள் ஆகியவையே நமது உணவாய் சமைக்கப்படும்.
நாக்கின் சுவை கருதி உண்ணாமல், உடம்பின் நலம் கருதி உண்ணுதல் ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை.
திட உணவு அரைவயிறு தினமாக கால்வயிறு மிகுதி கால்வயிறு வெற்றிடமாக விடுவதே சிறப்பான உணவுப் பழக்கமாகும்.
ஔவையாரும் உணவு குறித்துச் சொல்லும்போது “மீதூண் விரும்பேல்” என்று சொல்கிறார்.
திருமந்திரம் தந்த திருமூலர் உடலைக் காத்தலின் தேவையை வலியுறுத்தியுள்ளார். நாடு நலம் பெற நல்லுடல் பெற்ற மக்கள் அவசியம் தேவை, நலன் பெற நல்ல உணவு முறையை மேற்கொள்ளுதல் அவசியம்.
உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.
இது திருமூலர் வாக்கு சரியான வகையில் எடுத்துக் கொள்ளப்படும் உணவு நமது உடலை மட்டுமல்லாமல் நமது மனதையும் ஆரோக்கியமான நிலையில் வைக்கிறது. ஆகவே உண்ணும் உணவை மருந்தாக்கி தேவையான அளவு உண்டு திடகாத்திரமாய் நீண்ட நாள் வாழ்வோம்.
உணவே மருந்து - என்று உலகிற்கே சொல்லிக்கொடுத்த சித்தர்கள் நம் முன்னோர்கள்..
நாம் இயற்கையாக உண்ணக்கூடிய உணவுப் பொருட்கள் மூலம் சிறப்பான பலன்களை பெறமுடியும்.
தமிழ் மண்ணுக்கு ஒரு அற்புதமான சக்தி உண்டு. மண்ணில் முளைக்கும் அனைத்து செடி, கொடிகளுக்கு ஒரு மருத்துவ குணம் இருக்கின்றது. காய்கறி, கீரை வகைகள், சமையலுக்கு பயன்படுத்தும் மளிகை சாமான்களான மஞ்சள், பூண்டு, கடுகு, மிளகு, சீரகம் சுக்கு, வெந்தயம் மற்றும் எண்ணெய் வகையில் கடலை, எள்ளு, தேங்காய், வேம்பு, இலுப்பை, சூரியகாந்தி... இதைதவிர பால், பாலில் இருந்து கிடைக்கும் தயிர், மோர், வெண்ணெய், நெய் என அனைத்தும் மருத்துவ குணமுடையது. இவற்றின் தன்மைகள், பயன்கள் ஆகியவற்றை அனைவரும் புரிந்து அதற்கேற்றாற் போல் அன்றாட உணவை உட்கொண்டால் நோய் என்பதற்கே இடமில்லை. நோயில்லா வாழ்வை உணர்த்துவது உணவு நெறியாகும்.
ஐம்பொறிகளையும் இயக்குவது நாம் உண்ணும் உணவே. தலைமுடி, நகம் சருமத்தின் தன்மையை வைத்தே ஒருவரின் ஆரோக்கியத்தை மதிப்பிடலாம் என்றும் சொல்வதுண்டு. இவை வெறும் வாய்ச்சொல் அல்ல. இதில் பல அர்த்தங்கள் உள்ளன.
நமது வீட்டில் உள்ள உணவுப் பொருட்களின் மகத்துவத்தை ஒவ்வொரு வாரமும் இங்கே தெரிந்து கொள்ளுவோம்!!
அகத்தி கீரை...
அகத்தை சுத்தம் செய்யும் அகத்தி பற்றி தெரிந்துக் கொள்வோம்...
முன்பு வீட்டில் அம்மாவும், பாட்டியும் தினமொரு கீரையை மதிய உணவில் சேர்த்து சமைப்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருந்தது. ஆனால் இன்று கீரையும் உணவில் குறைய, நமது ஆரோக்கியமும் குறைந்து விட்டது.
உடல் என்பதன் இன்னொரு பொருள் அகம் என்பதாகும். அகத்தை சுத்தம் செய்யும் தன்மை கொண்டதால் இந்த கீரை அகத்தி கீரை என அழைக்கப்படுகிறது. அகத்தி மரத்தின் இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகிய அனைத்தும் மருந்தாக பயன்படுகின்றன.
மரம் போல் உயரமாக வளரக் கூடியது. எனினும் இது செடி வகையைச் சேர்ந்தது. வெற்றிலைக் கொடியை படர வைக்க நட்டு இருப்பார்கள். தை – மாசியில் பூ பூக்கும். பூக்கள் வெண்மை நிறமாய் இருக்கும். சிகப்பு நிறமாகவும் பூக்கும். பூ வேர் – பட்டை ஆகியவை மருத்துவ குணங்கள் நிறைந்தது. குளிர்ச்சி தன்மை உள்ளது.
சித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக கூறுகிறது. இதில் 8.4 விழுக்காடு புரதமும், 1.4 விழுக்காடு கொழுப்பும், 3.1 விழுக்காடு தாது உப்புகளும் மற்றும் மாவுச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி ஆகிய சத்துகளும் உள்ளன.
அகத்திகீரையின் மருத்துவ குணங்கள்:
அகத்திக் கீரையை சாப்பிடுபவர்களுக்கு பித்த சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் உணவு எளிதில் ஜீரணமாகும். வாரத்திற்கு ஒரு முறையாவது அகத்திக் கீரை சாப்பிட்டு வர, உடல் உஷ்ணம் குறைந்து கண்கள் குளிர்ச்சி பெறும்.
இக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன்படுத்தும் இயல்புடையது. குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு, தொண்டைப்புண் மற்றும் தொண்டைவலி, தோல் நோய்கள் போன்றவற்றிற்கு இக்கீரை மிகசிறந்த மருந்தாகும்.
அகத்தி கீரையில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருப்பதால், அது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இலைகளை உலர்த்தி பொடி செய்து காலை, மாலை இருவேளை பாலில் அரைக் கரண்டி அளவு கலந்து குடித்து வந்தால் வயிற்றுவலி குணமாகும்.
உயர்ந்த இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது அகத்தி கீரையை உணவில் சேர்த்து கொண்டால் இதிலிருந்து விடுபடலாம்.
அகத்தி கீரை வயிற்றில் உள்ள புழுக்களை கொள்வதோடு, மலச்சிக்கலையும் தீர்க்கும்.
அகத்திக் கீரையை சாறுடன் சிறிதளவு தேன் கலந்து நீர்க்கோவை பிடித்துள்ள குழந்தைகளுக்கு உச்சித் தலையில் தடவினால் குணமாகும். காயங்களுக்கு இலையை அரைத்துப் போட புண்கள் ஆறும்.
இதில் வைட்டமின்- சி இருப்பதால், உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரொனோ போன்ற நோய் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள வாரம் ஒருமுறை அகத்தியை எடுத்துக் கொள்ளலாம்.
அகத்திக்கீரையை பொதுவாக யாரும் விரும்பி உண்ண மாட்டார்கள். காரணம் அதில் கசப்புத் தன்மை கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. இதன் மருத்துவ நன்மைகளை பற்றி தெரிந்து கொண்டால் யாரும் இந்த கீரையை தவிர்க்கமாடார்கள்.
அடுத்தவாரம் நமது வீட்டுக் கொல்லை புறங்களில் வளரும் முருங்கை கீரையை பற்றி தெரிந்துக் கொள்வோம்!!
Leave a comment
Upload