ரீதி கௌளை
ஸ்ரேயா கோஷல்
மலையாள சினிமா, சேட்டன் சேச்சிகளை ஒரு நிமிஷம் கண்டுவிட்டு அப்புறம் தமிழுக்கு வரலாம். கடந்த வருடம் ரிலீஸான ‘நீயும் ஞானும்’ படத்தில் ‘குங்கும நிற சூரியன் சந்தன வெய்யிலாலே...’ என்று ஸ்ரேயா கோஷல் கொஞ்சுவதை ஒருமுறை கேட்டுப் பாருங்கள். நகர மனது வராது. அவரது தித்திப்பான மயக்கும் குரலில் கேட்கிறபோது ரீதி கெளளை ராகமே இன்னும் சுகமாக இருக்கிறதோ எனத் தோன்றும். நான்கு நிமிடத்தில் இளம் மியூஸிக் டைரக்டர் வினு தாமஸ் ராகத்தின் மொத்த லட்சணத்தையும் கொண்டு வந்திருப்பார். இந்த ராகத்தை இழுத்து பாடப் பாட அழகு கூடும். கீழே போகிற போது நிறைய ஜீவனான சங்கதிகளை கொண்டுவர முடியும் என்பது இதன் சிறப்பு. 2018-ம் ஆண்டில் இன்னொரு சூப்பர் ஹிட் படமான ‘தீ வண்டி’யில் ‘ஜீவாம்ஷமாய்’ என்று ஒரு அழகான டூயட்டை ஸ்ரேயா கோஷலும், ஹரிஷங்கரும் சேர்ந்து பாடியிருப்பார்கள். இன்று வரை கேரளத்து இளசுகள் முணுமுணுக்கும் கனவுப் பாடல். இது மற்றொரு இளம் இசையமைப்பாளரான கைலாஷ் மேனனின் அசாத்திய ரீதி கௌளை!
மேற்கு வங்காளத்தில் இருந்து மும்பைக்கு வந்து இந்தி படவுலகம் மட்டுமின்றி தென்னிந்திய மொழி படங்களையும் ஒரு சூறாவளி போல ஆக்கிரமித்துள்ளவர் ஸ்ரேயாவாகத்தான் இருக்க முடியும். போஜ்புரியிலிருந்து தமிழ் வரை சுமார் 12 மொழிகளில் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் பாடுகிறார். சாதாரணமாக இந்திவாலாக்களுக்கு தமிழ் கூட சிரமப்பட்டால் பாடிவிட முடியும். மலையாள அட்சரங்களை சுத்தமாக உச்சரிக்க பெரிய புரிதல் வேண்டும். ஆங்கிலத்தில் effortless என்பார்களே... அப்படி துளிக்கூட கஷ்டப்படாமல் இவர் பாடுவது தான் ஆச்சரியம்! கடந்த சில வருடங்களாக ஓசையின்றி இந்திய திரை உலகை கலக்கும் ஒரே பாடகி. இத்தனைக்கும் முப்பத்தைந்து வயதில்! லதா மங்கேஷ்கர் சகோதரிகள் காலத்தில் கூட நடந்திராத அதிசயம்! அவர்கள் கூட எப்போதாவது ஒரு முறை ‘செண்பகமே’ எனப் பாடிவிட்டு போனவர்கள்.
சமீப காலத்தில் இந்த இரு மலையாள பாடல்களும் ஸ்ரேயாவின் அற்புதமான ரீதி கெளளையில் அமைந்ததால் சொன்னேன். தமிழில் கூட இவ்வளவு அழகாக சமீபத்தில் வரவில்லை!
பாலமுரளி கிருஷ்ணா
கோலிவுட்டில் இந்த ராகத்தை சொன்னாலே எனக்கு மூன்று பாடல்கள்தான் சட்டென்று நினைவுக்கு வருகின்றன. ‘சின்ன கண்ணன் அழைக்கிறான்’, ‘தலையை குனியும் தாமரையே’ மற்றும் ‘கண்கள் இரண்டால்’! கவிக்குயில் படத்தில் சங்கீத கலாநிதி பாலமுரளி கிருஷ்ணா பாடிய ‘சின்ன கண்ணன்’ இளையராஜாவின் ‘மாஸ்டர் பீஸ்’களில் ஒன்றாக சொல்லலாம். பாலமுரளி அற்புதமான கர்நாடக சங்கீத வித்வான் என்பதால் ராஜாவின் கற்பனையை நூறு சதம் பாடலில் கொண்டு வந்திருப்பார். ஆரம்பத்தில் வரும் புல்லாங்குழல் நாதம் சொக்க வைக்கும். ‘கண்கள் சொல்கின்ற கவிதை... இளம் வயதில் எத்தனை கோடி’ என்று மேல் ஸ்தாயிக்கு கம்பீரமாக பாலமுரளி சென்று வருவதை அனுபவிக்கத்தான் முடியும்! 17 வயதில் 72 மேளகர்த்தா ராகங்களுக்கும் சாஹித்யம் அமைத்தவராச்சே..! பாருபள்ளி ராமகிருஷ்ணய்யா பந்தலு என்ற மகாவித்வானிடம் ஆறு வயதிலேயே குரு குலம் சென்றவர். பாருபள்ளிக்காரர் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமியின் சிஷ்ய பரம்பரையில் வந்தவர். கேட்கவா வேண்டும்? ஞானம் ஞானத்தோடு சேரும்போது அதற்கு எல்லை ஏது? பாலமுரளி பாடுகிற போது சாஸ்த்ரிய சங்கீதம் ரொம்ப சுலபமோ என தோன்றும். புன்னகைத்தவாரே சர்வ அலட்சியமாக பாடுவார். ஸாரி... அப்படி நமக்கு தோன்றும்! படார்.. படார்.. என தொடையில் தாளம் தட்ட மாட்டார்.
“எனக்கு மனசுல இருக்கு தாளம்” என சாதாரணமாக சொல்வார். அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு வரை பாடியிருக்கிறார். 86 வயதிலும் குரல் கெட்டுப் போகவில்லை. இத்தனக்கும் பெரிய உணவு கட்டுப்பாடு எதுவும் கிடையாது. “எனக்கு சங்கீதம் தெரியுமோ.. இல்லையோ... சங்கீதத்திற்கு என்னை நன்றாக தெரியும்” என்று சொல்வது அவர் வழக்கம். சென்னை மியூசிக் அகடமி அருகிலிருக்கும் கனகஸ்ரீ நகரிலுள்ள அவரது வீட்டுக்கு அடிக்கடி போயிருக்கிறேன். மாடியில் ஏகப்பட்ட போட்டோக்கள், ஷீல்டுகளுடன் தனியாக இருப்பார்.
‘என்கிட்ட பாட்டு கத்துக்காத சிஷ்யன் நீ’ என சிரிப்பார். ‘மூடு’ இருந்தால் பத்ராஜலம் ராமதாசர், அன்னமையா.. என யார் கீர்த்தனைகளை நான் விரும்பிக் கேட்டாலும் இரண்டு வரி பாடுவார். விடைபெறும்போது அன்றைய பேச்சு பிடித்திருந்தால் ஒஸ்தியான ஆந்திர ஆப்பிளை ஃப்ரிட்ஜிலிருந்து நீர் முத்துக்கள் சொட்ட எடுத்து தருவார். சமயத்தில் ஆப்பிள் கிடைக்காது. ‘என்ன குருஜி இன்னிக்கு ஆப்பிள்..’ என இழுப்பேன். ‘இன்னிக்கு உன் பேச்சு பிடிக்கலை.. போயிட்டு வா’ என்று பொய்க் கோபத்துடன் அனுப்புவார்!
இப்போதும் மயிலாப்பூர் போகிறபோது கனகஸ்ரீ நகரை எட்டிப் பார்ப்பேன். ஆட்டுக்குட்டிகள் மேயும் அமைதியான மதிய வேளையில் ‘நகுமோமு’, ‘சின்ன கண்ணனும்’ அந்த தெருவில் கேட்கும்! அவர் பெயரையே அந்த நகருக்கும் வைக்கலாமே?
சைலஜா
ராஜாவின் மற்றொரு தேன் டூயட் ‘ஒரு ஓடை நதியாகிறது’ படத்தில் ‘தலையைக் குனியும் தாமரையே’. எஸ்.பி.பி.யும், எஸ். ராஜேஸ்வரியும் மாலை நேர மார்கழி காற்று போல பரம சுகமாக பாடியிருப்பார்கள். வைரமுத்துவின் வைர வரிகள் மேலும் இதம்... பாட்டில் அனாவசிய சங்கதிகள் கிடையாது. படத்தில் வரும் காதல் ஜோடியான ரகுவரன், சுமலதாவும் இப்படியொரு டூயட் காட்சியில் வருவதே அபூர்வமான காட்சி! 1980-களில் இளையராஜா என்பவர் பெரிய நடிகர், பெரிய பேனர் என்கிற வஞ்சனையில்லாமல் அற்புதமான மெலடிகளை தந்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. அந்த காலகட்டத்தில் ரொம்ப குப்பையான படத்தில் கூட அவரது ‘பளிச்’ பாடல்கள் ஒன்றிரண்டு இடம் பெற்றிருக்கும்!
ஜேம்ஸ் வசந்தன்
ஜேம்ஸ் வசந்தன் என்றாலே ‘கண்கள் இரண்டால்’ பாடல் சட்டென்று நமக்கு நினைவுக்கு வரும் அளவிற்கு அந்தப் பாடலோடு ஐக்கியமானவர். அந்தப் பாடல் காட்சியில் தாடி ஜெய் தலையை ஆட்டிக் கொண்டே உற்சாகமாக சிரிப்பதும், பாவாடை தாவணியில் புதுமுகம் ஸ்வாதி வெட்கப்படுவதும், யுகபாரதியின் அழகான வரிகளும், ஜேம்ஸின் இசையும்... எல்லாமே அவ்வளவு கச்சிதமாக அமைந்திருக்கும்! முதல் சரணத்திற்கு முன்பு கல்யாண வரவேற்பு க்யுவில் இருக்கும்போது சட்டென ஒரு பர்ஃப்யூம் வாசம் வந்து போகுமே... அப்படி ஒரு புல்லாங்குழல் கீதம் சில நொடிகள் வந்து விட்டுப் போகும். அபாரமான பொருத்தமான கற்பனை அது. எங்கோ துவங்கி எங்கோ இழுத்துக்கொண்டு போகும் பாடல்கள் இன்று நிறைய வருகின்றன. இந்த ஆட்களுக்கு எது அபத்தம், எது வித்தியாசம் என்ற வரைமுறை தெரியவில்லை! சில பாட்டுக்கள் முடிந்தவுடன் வரும் நிசப்தமே காதுக்கு ரம்மியமாக உள்ளது. சுப்ரமணியபுரம் தவிர காதலர் குடியிருப்பு, யாதுமாகி, நாகராஜசோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ, வானவில் வாழ்க்கை... உள்பட சில படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஜேம்ஸ் என்றாலும் முதல் படத்திற்குப் பிறகு பெரிய அளவில் மற்ற படங்கள் பேசப்படாதது ஏன் எனப் புரியவில்லை. ‘யாதுமாகி’யிலும் அட்டாணாவில் அசத்தியிருப்பார். டி.வி. உள்பட பல துறைகளில் கால் வைப்பதால் கவனச் சிதறல் ஏற்படுகிறதோ எனவும் தோன்றுகிறது.
இத்தனைக்கும் ஜேம்ஸிடம் சங்கீத ஞானம் நிறைய உண்டு என்பதை அவரிடம் பேசியபோது அறிந்துள்ளேன். சினிமா ஏனோ ஞானஸ்தர்களை ரொம்பவும் சோதித்துவிட்டுத்தான் உள்ளே சேர்க்கிறது.
ஹரிஹரன் மகாலட்சுமி அய்யர்
ஹரிஹரனும், மகாலட்சுமி அய்யரும் பாடும் ‘மீட்டாத ஒரு வீணை’ மற்றும் எஸ்.பி.பி-யும், சைலஜாவும் ரகளை பண்ணும் ‘ராமனின் கதை கேளுங்கள்’ இரண்டுமே ராஜாவின் மேலும் சில ரீதி கெளளைகள். ‘ராமனின் கதை’யில் இந்த ராகத்தில் துவங்கி ராகமாலிகையாக போயிருப்பார் இசை ஞானி.
ஹரிணி
ஏ.ஆர். ரஹ்மானின் ‘அழகான ராட்சஸியே’ இன்னமும் நம் நினைவில் நிற்பதற்கு காரணம் அந்த ராகத்தை பொருத்தமாக தேர்ந்தெடுத்ததும் தான். ‘அதுவும் அடி மனசை அருவாமனையில் நறுக்கறியே’ என்று பல்லவியிலேயே ராகத்தின் பளிச் முகத்தை தெளிவாக காட்டி விடுவார் எஸ்.பி.பி. கூடவே மென்மையாக பாடியிருப்பவர் ஹரிணி! பாட்டு நெடுக கடத்தில் ராஜ நடை கேட்டுக் கொண்டே இருப்பது புதிய சிந்தனை. கடம் ஒலிக்கும் போதெல்லாம் எனக்கு விக்கு விநாயகராமின் முகம் தான் நினைவுக்கு வருகிறது. கடப் பானையை தூக்கிக் கொண்டு ஐ.நா. சபை வரை போனவர். எம்,எஸ்ஸுக்கு பல கச்சேரிகளில் வாசித்தவர். 1970களில் ‘சக்தி’ என்ற அமைப்பில் இணைந்து தலைசிறந்த இங்கிலீஷ் கிடாரிஸ்ட் ஜான் மக்லாஃப்லின், தபேலா மேதை ஜாஹிர் ஹுசேன் போன்றவர்களுடன் உலக நாடுகளில் எல்லாம் கச்சேரிகள் செய்து கடம் என்ற வாத்தியத்திற்கு அங்கீகாரம் அளித்தவர். காஞ்சி மகா பெரியவர் மீது உள்ள பக்தியால் சம்பாதித்ததில் பாதியை சங்கரமடத்தின் நல்ல காரியங்களுக்கு வாரி வழங்கிய இந்த பானைக்குப் பெரிய மனசு. எழுதினால் வளரும். போதும். ரீதி கௌளை என்றாலே அந்த பாலக்காடு முரட்டுக் குரலை எழுத வேண்டாமா?
அது வரும் வாரம்....
- இன்னும் பெருகும்
Leave a comment
Upload