தொடர்கள்
Daily Articles
உலகை குலுக்கிய வழக்குகள் ! - ஆர். ராஜேஷ் கன்னா

2020920004209301.jpg

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.!!

ஆனால் இதுவரை எந்த காக்கையும் தன் குஞ்சுகளைக் கொன்றதாக படித்ததில்லை.

தெற்கு கரோலினாவின் பிக்கன்ஸ் நகரம்.

தன் மனைவிக்கு ஆயுள் தண்டனை கொடுத்து தீர்ப்பு வழங்கிய போது கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தார் மைக் சிம்சன்.

அவருடைய மண்டையோட்டில் இன்னமும் ஒரு புல்லட் தங்கியிருந்தது. அவருக்கு தங்களுடைய ஏழு வயது மகளின் நினைவும், 5 வயது மகனின் நினைவும் நிலையாக இருக்கவில்லை. வந்து வந்து போனது.

காரணம் தலையில் பாய்ந்த புல்லட்.

2020920004335863.png

38 வயதான சூசானா சிம்சனுக்கு இப்படி ஒரு தீர்ப்பு வழங்கி கோர்ட் உத்தரவிட்டதும், மைக் சிம்சனின் மொத்த குடும்பத்தையும் விதி வாரிச் சுருட்டி அவரிடமிருந்து பறித்துக் கொண்டது என்று பார்வையாளர்கள் மத்தியில் சோகம் சூழ்ந்து கொண்டது.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரமும் மனோ வியாதியும் சமூகத்தில் எந்த அளவு புரையோடிப் போய்விட்டிருந்தது என்பதை காட்ட இந்த வழக்கும் ஒரு உதாரணம்.

ஏனெனில் இதே நீதிமன்றத்தில் ஒரு மாதம் முன்பு சூசானா ஹென்ட்ரிக்ஸ் என்ற இன்னொரு பெண்மணி தன்னுடைய இரண்டு மகன்களையும் முன்னாள் கணவரையும், அவருடைய தாயாரையும் சுட்டுக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றார்.

என்ன நடந்தது மைக் சிம்சன் குடும்பத்திற்கு...???

2020920004406373.png

மைக் சிம்சனின் மனைவி சூசானா சிம்சன் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு மன நிலை சரியில்லாமல் மன நோய் மருத்துவமனையில் ஆறு நாட்கள் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

அப்போதே அவருடைய கணவர் மைக் சிம்சனை அழைத்து மருத்துவர்கள் சூசானாவின் நிலைமையை எடுத்துக் கூறி.... துப்பாக்கி ஏதேனும் வைத்திருந்தால், அதை சூசானா கண்ணில் படாமல் மறைத்து வைக்கச் அறிவுறுத்தினர்.

இது நடந்து ஒரு வருடம் ஆன நிலையில் ஒரு நாள்…..

அதிகாலை 4 மணி.

சூசானா விழித்துக் கொண்டார்.

வீட்டில் இருட்டு சூழ்ந்திருந்தது.

தன்னுடைய தலையில் ஒரு டார்ச் லைட் வைத்த பாண்ட் ஒன்றை கட்டிக் கொண்டார்.

மைக் சிம்சன் ரகசிய எண் காம்பினேஷனைப் போட்டு வைத்திருந்த லாக்கரை திறந்து, துப்பாக்கியை எடுத்தார். அந்த ரகசிய எண் எப்படி அவருக்குத் தெரிந்தது என்பது பற்றி தெரியவில்லை.

மெதுவாக நடந்து சென்று, முதலில் அவர் சுட்டது கணவர் மைக்கைத் தான். ஏனெனில் அவர் எழுந்து குழந்தைகளை காப்பாற்றுவதை அவர் விரும்பவில்லை.

பின்னர் மெதுவாக நடந்து சென்று 7 வயது மகளை சுட்டார். அதன் பின் 5 வயது மகனை. (மகனும் மகளும் அங்கேய இறந்தனர். கணவர் மைக் சிம்சன் மட்டும் தலையில் பாய்ந்த குண்டோடு குற்றுயிரும் குலையுயிருமாக உயிர் பிழைத்தார். ஆனால் நினைவுகள் அடிக்கடித் தப்பிப் போனபடி பிழைத்திருந்தது, அவரது உறவினர்களை மேலும் கலங்கடித்தது.)

இது முடிந்ததும், தன்னைத் தானே சுட்டுக் கொல்ல முயற்சித்ததாக அவர் கொடுத்த வாக்குமூலத்தை போலீஸ் நம்ப மறுத்தது.

ஏனெனில், அதுவரை சரியாக துப்பாக்கியில் குண்டுகளைப் போட்டு சுடத் தெரிந்த சூசானாவிற்கு, தன்னை சுட்டுக் கொள்ளும் போது மட்டும் குண்டுகளை சரியாக பொறுத்த தெரியாமல் துப்பாக்கி வெடிக்காமல் விட்டது இடிக்கிறது என்பது போலீஸ் தரப்பு வாதம்.

முதுகுத் தண்டை சில்லிட வைக்கும் இந்த கொலைபாதகச் செயலுக்கு சூசானா மனநல மருத்துவர்களிடம் சொன்ன காரணம்.

மறு ஜென்மம்.

ஆம். மறு ஜென்மமே தான்.

இந்த உலகை விட்டு இன்னொரு உலகில் தன் குடும்பம் மறு ஜென்மம் எடுத்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்று தான், எல்லோரையும் கொன்று விட்டு தானும் சுட்டுக் கொள்ள முடிவெடுத்ததாக சொன்னார் சூசானா.

நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கோர்ட்டிலிருந்து சூசானா கூட்டிச் செல்லப்படும் போது எந்தவித உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் “பை” என்று சொல்லி விட்டு சென்றது அங்கிருந்த அவர் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பிராசிக்யூஷன் தரப்பில் சொல்லும் போது, அவருக்கு மன நிலை சரியில்லாமல் இந்த கொலைகளை செய்திருக்கலாம்.

ஆனால், தன்னை சுட்டுக் கொள்ளும்போது மட்டும் துப்பாக்கி ரவைகளை தப்பாக போட்டுக் கொண்டு சாகாமல் இருக்க தெரிந்திருக்கிறது.

அது மட்டுமல்ல.... இருட்டில் விளக்கை போட்டால் எல்லோரும் எழுந்து விடுவார்கள் என்று தலையில் டார்ச் கட்டிக் கொண்டு எல்லோரையும் தீர்த்துக் கட்ட திட்டமிட்டவருக்கு, நீதிமன்றம் கருணை காட்டக் கூடாது என்று விவாதித்தனர்.

அவர்கள் விவாதம் தான் ஜெயித்தது.

டிஃபென்ஸ் தரப்பில் சொல்லும் போது “இது போன்ற மன நிலை சரியில்லாத மக்களை நாம் உதாசீனப்படுத்தக் கூடாது. அவர்களை நாம் அரவணைத்து இந்த சமூகத்தின் ஒரு அங்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

யோசித்துப் பார்த்தால், இது போன்ற மன நிலை சரியில்லாத மக்களை கண்டு கொள்வதும் கடினம் தான்.

2020920004621986.jpg

ஏனெனில், அவர்களிடம் வன்முறை எப்பொழுது அதிகமாகும் என்பதை கணிப்பது கடினம். உதாரணத்திற்கு பல வருடங்களாக வங்கி ஒன்றில் சமர்த்தாக வேலை பார்த்தவர் தான் சூசானா. யாரும் அவரை இப்படி கணித்திருக்க வாய்ப்பில்லை.

நீதிமன்றத்தில் இரண்டு மணி நேர வாதப் பிரதிவாதங்களுக்குப் பின் ஜூரி நீதிபதியைப் பார்த்து கேட்டனர்.

குற்றம் செய்தேன் என்று ஒப்புக் கொள்வதற்கும், ஒப்புக் கொள்கிறேன் ஆனால் மன நிலை சரியில்லை என்பதற்குமான வித்தியாசம் என்ன என்று கேட்டனர்!

சூசானாவைப் பொறுத்தவரை இந்த சம்பவம் நடக்கும் முன் சுமார் 34 தடவை, அவருடைய மன நல மருத்துவரை சந்தித்து ஒழுங்காக மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

நான்கு மாதங்களாகத்தான் மன நல மருத்துவரைப் பார்க்கவில்லையாம்.

சூசானாவின் மன நல மருத்துவர் ஜெஃப் ஸ்மித் சொல்கையில் “என்னுடைய 26 வருட மருத்துவ அனுபவத்தில் இந்த கேசைப் போல என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது எதுவுமேயில்லை” என்றார்.

உண்மையில் சூசானாவிற்கு மறு ஜென்மம் தான் குறிக்கோளா என்றால், அவருடைய குடும்ப உறுப்பினர்கள் சொல்கையில் சூசனாவின் மனநிலை காரணமாக, குழந்தைகளை சரிவர கவனிக்காமல் இருந்த நிலையில், அவரிடம் மைக் சிம்சன் ஒரு நாள்....

“இட்ஸ் ஓவர்” (எல்லாம் முடிந்தது) என்று சொன்னாராம்.

இந்த ஒரு வாக்கியம் தான், சூசானாவிற்கு இப்படி ஒரு விபரீத மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்று கருதுகிறார்கள்.

இந்த ஜென்மத்தில், கணவனையும் குழந்தைகளையும் தான் சரிவரக் கவனிக்க முடியவில்லை. ஒரு வேளை, மறுஜென்மத்தில் தன் வாழ்க்கையை சரி செய்து விடலாம் என்று எண்ணியிருக்கக் கூடும். பாவம், சூசானா...

‘மைக் சிம்சனின்’ அந்த ஒரே ஒரு வாக்கியத்தில், வாழ்க்கையில் ‘எல்லாம் முடிந்தது’. !!