தொடர்கள்
Daily Articles
மாண்புமிகு மனிதர்கள்...!. - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

பாட்டி வீடு...

202092021440425.jpeg

எங்கள் பாட்டி வீடு மிகப் பெரியது. வாசலில் பாதாம் மரமும் பன்னீர் மரமும் இருக்கும். காய்கறி செடிகளும் கூட பாட்டி வீட்டில் இருக்கும். ஒரு பக்கம், பெரிய திண்ணையும் மற்றொரு பக்கம் சின்ன திண்ணையும் இருக்கும். பெரியதிண்ணையில் தாத்தா, பாட்டி படுத்துக்கொள்வார்கள். நான் சின்ன திண்ணையில் படுத்துக்கொள்வேன். என் பாட்டி நல்ல சிகப்பு, உயரம். தாத்தா, பாட்டியை விட உயரம் சற்று குறைவு, நிறமும் கருப்பு. ஆனால், அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு வந்ததே கிடையாது. என் பாட்டி கடுமையான உழைப்பாளி, ஆனால் அலுத்துக் கொள்ளவே மாட்டாள், தாத்தாவிடம் உரக்கப் பேச மாட்டாள், நன்றாக சமைப்பாள்.

காலையில் காபி சாப்பிட்டு விட்டு, சிறிது நேரம் விளையாடி விட்டு மீண்டும் உள்ளே நுழைந்ததும்... “டேய் வெந்நீர் போட்டு இருக்கேன், போய் குளி. எப்ப பார்த்தாலும் ஊரை சுற்றிக் கொண்டிருக்க... அம்மா வரட்டும், சொல்றேன். நாலு போடுவா வாங்கிக்கோ” என்பாள். ஆனால் அம்மாவிடம் “குழந்தை சமத்து டீ” என்பாள்.

குளித்து முடித்ததும், முந்தினம் மீந்துபோன ரசத்தை அது அடி வண்டல்ல நிறைய பருப்பு இருக்கும். அதை பழைய சாதத்துடன் கல் சட்டியில் போட்டு பிசைந்து உருக்கிய நெய்யை நிறைய ஊற்றிப் பிசைந்து பெரிய உருண்டையாக பிடித்து கையில் தருவாள், தேவாமிர்தமாக இருக்கும். சிலசமயம் தயிர்சாதம் ஊறுகாய் அதுவும் சூப்பராக இருக்கும்.

மறுபடியும் விளையாடப் போய்விடுவேன். மதியம் சாப்பாட்டுக்கு வரும்போது, “வீடு தங்காமல் சுத்திக்கிட்டே இரு” என்று சொல்லிவிட்டு, தட்டை எடுத்து வரச் சொல்வாள். சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருப்பேன். மறுபடியும் விளையாட போய்விடுவேன்.

இதன் நடுவே... நாகப்பழம், நுங்கு இவை இரண்டும் ஒரு கொட்டாங்குச்சி அரிசி கொடுத்தால் கிடைக்கும். அதையும் சாப்பிடுவேன். இரவு சூடான வேர்க்கடலை, இதெல்லாம் என் மாமா வாங்கித் தருவார்.

என் தாத்தா காலையில் இந்து பேப்பர் படிப்பார். அதன் பிறகு, பூஜை. சாப்பிட்டுவிட்டு பெரிமேசன் நாவல் படிப்பார். சென்னையிலிருந்து என் மாமா வாங்கிவந்து தருவார். பெரிமேசன் நாவல் புத்தகத்தை பார்க்கும்போதே, தாத்தா முகம் ஒளிரும், அதை நான் பல முறை பார்த்து ரசித்திருக்கிறேன். மாலை சகஸ்ரநாமம் படிப்பார். தாத்தா என்னை கண்டுகொள்ள மாட்டார் ஆனால், பாட்டியிடம் சாப்பிட்டானா என்று விசாரித்துக் கொள்வார். யாரும் விளையாட வரவில்லை என்றால் கீழே விழுந்து கிடக்கும் பாதாம் கொட்டையை உடைச்சி பாதாம் பருப்பு சாப்பிடுவேன்.

எங்கள் பாட்டி வீட்டில், மாடு வைத்திருந்தார்கள். தாத்தா, பாட்டி இருவரும் அதை பார்த்துக்கொள்வார்கள். எங்கள் மாமாவும் கவனித்துக்கொள்வார். சில சமயம் சித்தி கூட மாட்டுக்கு தீவனம் எல்லாம் தருவாள். பொட்டு, புண்ணாக்கு, தவிடு எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீர் கலந்து தொட்டியில் வைப்பார்கள். புண்ணாக்கை முன்தினமே ஊற வைத்திருப்பார்கள். மாடு அதை அவசரமாக சாப்பிடும். வைக்கோல், புல், அகத்திக்கீரை என்று கன்று குட்டியையும் தனி கவனத்துடன் கவனிப்பார்கள். பால்காரர் பால் கறந்து கொடுத்துவிட்டு சென்ற பிறகு, என் பாட்டி ஒரு சொம்பை எடுத்து சென்று குறைந்தபட்சம் ஒரு ஆழாக்கு பாலாவது கறந்து வருவாள். என் பாட்டி, சித்தி இருவரும் தயிர் கடையும் அழகே தனி. மத்து கயிற்றை சுற்றி லாவகமாக இழுக்க வேண்டும். இழுத்து இழுத்துக் கடையும்போது வெண்ணை மேலே மிதக்கத் துவங்கும், அதை அப்படியே வழித்து பாத்திரத்தில் சேர்ப்பார்கள். உடனுக்குடன் அதை காய்ச்சி நெய்யாக உருக்குவார்கள்.

என் தாத்தா வெள்ளித் தட்டில் சாப்பிடுவார். தண்ணீர், பால், காபி எதுவாக இருந்தாலும் வெள்ளி டம்ளரில் தான் சாப்பிடுவார். சாப்பிட்ட தட்டை என் தாத்தா அப்படியே வைத்து விட்டு, கை அலம்பி கொள்வார். பாட்டி அதை எடுத்து அலம்பி வைப்பாள். பாட்டி, தாத்தா இருவரும் வெற்றிலைபாக்கு போடுவார்கள். பாட்டி வெற்றிலையை நன்றாக கிள்ளி பாக்கு, சுண்ணாம்பு எல்லாம் சரியாக கலந்து மடித்துக் கொடுப்பாள்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் என் மாமா வருவார். மாமாவுடன் ஏரிக்கு குளிக்க செல்வேன். எனக்கு நீச்சல் தெரியாது. ஒரு ஓரமாக குளித்துவிட்டு, என் மாமா நீச்சல் அடிச்சு குளிப்பதை வேடிக்கை பார்ப்பேன். கிணற்றில் குடம் விழுந்தால்கூட, கிணற்றில் குதித்து என் மாமா எடுத்து வருவார். இதெல்லாம் எனக்கு அதிசயம் ஆச்சரியம்.

எங்கள் தாத்தா வீட்டில் ரேடியோ இருந்தது. தாத்தா கிரிக்கெட் மேட்ச், செய்திகள் எல்லாம் கேட்பார். ஒரு சித்தி தேன்கிண்ணமும், ஒலிச்சித்திரமும் கேட்பாள். இன்னொரு சித்தி பாப்பா மலரை விரும்பிக் கேட்பாள். ஞாயிற்றுக்கிழமை அது ஒலிபரப்பாகும், மதியம் நானும் கேட்பேன். எங்கள் பாட்டி வீட்டில், கிராமபோன் பிளேயர் இருந்தது. எம்.எஸ். சுப்புலட்சுமி பாடல்கள் நிறைய வைத்திருப்பார்கள். என் சித்தி அந்த இசைத் தட்டை வைத்து, சரியாக அந்த ஊசியை பிளேயரில் பொறுத்தி கீ கொடுப்பாள். ஊஞ்சலில் ஆடியபடி என் சித்தியும் பாடுவாள், இதெல்லாம் எனக்கு வேடிக்கையாக இருக்கும் பார்ப்பேன்.

என் மாமா, என் தாத்தா இருவரும் அரசியல் பேசுவார்கள். இந்து பேப்பர், துக்ளக், விகடன் இவற்றில் படித்தது பற்றி எல்லாம் பேசுவார்கள், அதையும் கவனிப்பேன்.

என் தாத்தா வீட்டில், தபால் கார்டுகளை எல்லாம் ஒரு பெரிய கம்பியில் மாட்டி வைத்திருப்பார்கள். அதில் நான்கு வருடம், ஐந்து வருட கடிதாசிகள் இருக்கும். திருமண பத்திரிக்கை கூட அதில் மாட்டி வைத்திருப்பார்கள். சில சமயம் அவற்றை எல்லாம் எடுத்து பார்த்தேன். அதில் தாத்தாவிடம் பணம் அனுப்பச் சொல்லி என் அம்மா எழுதிய கடிதங்களும் இருக்கும். ஷேமம் ஷேமத்தை தெரியப்படுத்தவும்... இதுதான் எல்லா கடிதத்தின் ஆரம்ப வரிகளாக இருக்கும்

வாசல் திண்ணையில் சில சமயம் கேரம் போர்டு ஆடுவோம். ஒரு சதுரம் சாக்கில் வரைந்து, ஸ்ட்ரைக்கராக சீமை ஓடு, சில சமயம் ஹார்லிக்ஸ் பாட்டில் மூடி இவற்றை பயன்படுத்துவோம்.

சதுரத்துக்கு உள்ளே கோல்ட் ஸ்பாட், காளிமார்க், ஸ்ப்பூட்னிக் குளிர்பானங்களின் மூடிகளை காய்ன்களாக பயன்படுத்துவோம்.

இரவு நேரத்தில் ஐஸ் பாய் எனப்படும் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுவோம். இது இரவு பத்து மணிக்குத் துவங்கி 12 மணி வரை நடக்கும். பெரும்பாலும் பசங்கள் படுப்பது திண்ணை அல்லது மொட்டை மாடி என்பதால், வீட்டு கதவை தட்ட வேண்டிய தேவை இல்லை. ஊரே தூங்கிய பிறகு, எங்கள் கூச்சல் மட்டும்தான் கேட்கும். தூக்கத்திற்கு இடைஞ்சல் என்று யாரும் எங்களை ஆட்சேபிக்க மாட்டார்கள். கோலி விளையாடுவோம், சைக்கிள் டயரை துண்டு வளையம் ஆக்கி, பேப்பரை சுருட்டி பந்தாக்கி கிரிக்கெட் விளையாடுவோம்.

மாமா வேண்டாம் என்று தூக்கி போட்ட சட்டை எல்லாம் போட்டுக் கொள்வேன். மாமா பெரும்பாலும் ஒரு சட்டையை ஒரு மாதத்திற்கு மேல் பயன்படுத்த மாட்டார், எல்லாம் புத்தம் புதுசாக இருக்கும். அவர் உபயோகித்த செருப்பை, பட்டை மட்டும் புதுசாக மாற்றித் தருவார், அதை காலில் மாட்டிக் கொள்வேன். அப்போது கிடைக்கும் சந்தோஷமே அலாதி.

பாட்டி வீட்டில் காப்பி பொடி எப்போதும் பிரஷ்ஷாக இருக்கும். சென்னை காபி போர்டில் இப்போது பீப் பிரி ஏ என்று வகைப்படுத்துகிற காபி கொட்டையை என் பாட்டி குண்டுகொட்டை, தட்டை கொட்டை என்று சொல்லுவாள். மாமா வரும்போதெல்லாம் வாங்கி வருவார். அதை வறுத்து, எவர்சில்வர் டப்பாவில் போட்டு வைத்திருப்பார். தேவைப்படும் போதெல்லாம் காப்பி மெஷினில் அரைத்து கொள்வார். சில சமயம், நான் கூட அரைப்பேன். இதேபோல் மாவு அரைக்க இயந்திரம், இட்லி மாவு அரைக்க உரல், துவையல் அரைக்க அம்மிக்கல் என்று எல்லாம் வைத்திருப்பாள். பாட்டி அலுக்காமல் எல்லா வேலையும் செய்வாள். இயந்திரத்தில் அரைத்த மாவை தள்ளுவதற்கு என்று ஒரு தபால் கார்டு வைத்திருப்பார், அதை மறக்காமல் பத்திரமாக எடுத்து வைப்பார். எல்லாவற்றிலும் பொறுப்பாகவும் மெனக்கெடலுடன் பாட்டி வேலை செய்வாள். எனக்கு பாட்டியை ரொம்பவும் பிடிக்கும்.

தாத்தா பாட்டி இருவருமே கள்ளங்கபடமற்ற, யாருக்கும் தீங்கு நினைக்காத அப்பாவிகள். எதற்கும் சலித்துக் கொள்ள மாட்டார்கள், முகம் சுளிக்க மாட்டார்கள். விடுமுறை முடிந்து ஊருக்குக் கிளம்பும்போது, பாட்டி மெலிதாக தலையாட்டுவாள். தாத்தா அடுத்த லீவுக்கும் வா என்பார்.

என் தாத்தா பாட்டி இறந்தபோது, நான் அழுதேனா இல்லையா என்பதே எனக்கு இப்போது நினைவுக்கு வரவில்லை. ஆனால் இப்போது ஓவென்று அழவேண்டும் போல் தோன்றுகிறது.