ஆசியா.
இந்தியா.
23 வயதேயான ஐஸ்வர்யா ஶ்ரீதர் இந்த ஆண்டு இங்கிலாந்தின், தேசிய வரலாறு அருங்காட்சியகத்தின் சிறந்த வன வாழ்வு புகைப்படக்காரர் விருதைப் பெற்றுள்ளார்.
லண்டனில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இந்த அறிவிப்பு இந்த வாரம் வெளியானது. “லைட்ஸ் ஆஃப் பேஷன்” என்று தலைப்பிடப்பட்ட புகைப்படத்திற்கு இந்த விருதைப் பெற்றிருக்கிறார் ஐஸ்வர்யா.
இது குறித்து ஐஸ்வர்யா சொல்கையில் முதல் இந்தியப் பெண்மணியாக இந்த விருதை வாங்குவதை பெருமையாக நினைக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
அவருடைய வெற்றி ஏதோ சாதாரணமானது அல்ல. 80 நாடுகளிலிருந்து சுமார் ஐம்பதாயிரம் புகைப்படங்களில் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
ஐஸ்வர்யா எடுத்த படம். ஃபயர் ஃப்ளைஸ் என்று சொல்லப்படும் மின்மினிப் பூச்சிகள் ஒரு மரத்தில் கூடியிருக்கும் போது
தன்னுடையா கானான் காமிராவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பந்தர்தாரா என்ற காட்டுக்குள் எடுத்த படம்.
ஐஸ்வர்யா புகைப்படக் கலைஞர், எழுத்தாளர், திரைப்பட இயக்குனர், இது தவிர சுற்றுப் புற சூழல் பாதுகாவலரும் கூட.
ஹூம், ஐஸ்வர்யா அழகான காட்டுக்குள் சென்று படமெடுப்பது இருக்கட்டும்.
அழகான ஐஸ்வர்யாவையே நாள் பூரா புகைப்படம் எடுக்கலாம் போல இருக்கிறதே..!!!
ஹாங்காங்.
இந்த வாரத்தில் ஒரு நாள் ஹாங்காங் விமான நிலயம் செல்ல வேண்டியிருந்தது. ஒரு நண்பரை வழியனுப்ப.
பரபரப்பாக இருக்கும் ரங்கநாதன் தெருவில் கிரிக்கெட் விளையாடியதைப் பார்த்த அதிர்ச்சி போல எனக்கு ஹாங்காங் விமான நிலயம் அதிர்ச்சி கொடுத்தது.
ஆளரவம் இல்லாத அமானுஷ்ய சூழல் கரோனா பயத்தை அதிகரித்தது என்றே சொல்லலாம்.
ஒரு குட்டி வீடியோ இங்கே…..
விண்வெளி
ஒசிரிஸ் ரெக்ஸ் என்ற விண்கலம். நம்மூர் ஓனிக்ஸ் போல ஒரு ஏறக்குறைய குப்பை வண்டி. (?) ஜஸ்ட், 330 மில்லியன் கிலோமீட்டர் தூரத்திற்கு சென்று பென்னு என்ற எரிகல்லுக்கு போய் லேசாக சுரண்டி ஒரு அறுபது கிராம் மண் எடுத்துக் கொண்டு பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
கண்ணை மூடிக் கொண்டு யோசித்துப் பாருங்கள். கற்பனைகெட்டாத ஒரு அறிவியல் கண்முன்னே விரியும்.
நாசா அனுப்பிய இந்த விண்கலம், நான்கு வருடங்களாக பயணித்து, இந்த எரிகல்லை, அதாவது அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் கட்டிட சைசுக்கு (சுமார் 1600 அடி விட்டம்) இருக்கும் ஒரு எரிகல்லை தேடிப் பிடித்து அதனருகே சென்று அதன் மேற்பரப்பை சுரண்டி கொண்டு வருகிறது.
ஒரு வேன் அளவுக்கு இருக்கும் விண்கலம், எரிகல்லின் அருகே செல்லும் போது ஒரு செகண்டுக்கு நாலு இன்ச் என்ற அளவில் மெதுவாக சென்று அதன் ரோபாடிக் கை எரிகல்லின் அருகே சென்று அதி அழுத்த நைட்ரஜனைப் பீய்ச்சி அதன் மேற்பரப்பை கொஞ்சம் தொளதொளப்பாக்கி ஒரு 60 கிராம் சாம்பிளை அள்ளிக் கொண்டு வந்து விட்டது. நினைவிருக்கட்டும். இது அத்தனையையும் செய்ய ஆணை கொடுத்தது 330 மில்லியன் கி.மீ தூரத்தில் பூமியில் இருந்து.
இது ஏதோ மதுரைக்கு பக்கத்தில் கிரானைட் கல்லை உடைத்து எடுக்கும் வியாபரம் அல்ல.
12 வருடங்களுக்கு முன் துவங்கப்பட்டது இந்த பிரம்மாண்ட திட்டம்.
ஆளில்லாத இந்த விண்கலம், அவ்வளவு தூரம் சென்று இப்படி ஒரு சுரண்டலை செய்ய வேண்டிய அவசியம் ?
இந்த எரிகல் மீது ஆர்வம் வரக் காரணம் நம் கிரகங்கள் உருவானதைப் போலவே, உருவானவை தான் இந்த எரிகட்களும். அதனால் இந்த எரிகல் மாதிரியை ஆராய்ந்து பார்த்தால் நம் சூரியக் குடும்பத்தின் ரகசியத்தை சூட்சுமத்தை தெரிந்து கொள்ளலாம் என்பது தான்.
குறிப்பாக பென்னுவை தேர்ந்தெடுக்க காரணம் சூரியக் குடும்பம் துவங்கியதிலிருந்து பத்து மில்லியன் வருடங்களுக்குள் தோன்றியதாம் இந்த எரிகல். அதிகமல்ல 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பு தான்.
எல்லாம் நல்ல படியாக சென்றால் 2023ல் பூமியை வந்தடையும் ஒசிரிஸ் ரெக்ஸ்,
330 மில்லியன் கிலோமீட்டர் தாண்டி, ஒரு எரிகல்லை சுரண்ட முடிந்த விஞ்ஞானத்திற்கு இங்கே கொத்து கொத்தாக கொன்று குவிக்கும் கரோனா வைரசை சுரண்டி அழிக்க முடியவில்லயா என்று கேட்டால் மன்னிக்கவும். இந்த நிமிடத்தில் பதில் இல்லை தான்.
ஆப்பிரிக்கா
நைஜீரியாவின் லாகோஸ் நகரம்
இந்த வாரம் சார்ஸ் என்ற சிறப்பு போலீஸ் துறைக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து நகரை ஸ்தம்பிக்க வைத்து விட்டனர்.
இளைஞர்கள், கொடியசைத்துக் கொண்டு, கோபத்துடன் வீதிகளில் இறங்கி போராட, ஒரு சாரார் விமான நிலயத்தை முற்றுகையிட நகரமே ஸ்தம்பித்தது.
பத்து நாட்களுக்கு முன்பே துவங்கி விட்ட இந்த போராட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று முற்றுகையில் வந்து நிற்கிறது.
காரணம் ஸ்பெஷல் ஆண்டி ராபரி ஸ்குவாடு என்கிற போலீஸ் பிரிவின் அராஜகத்தை தாங்க முடியாததால் இந்த போராட்டமாம்.
சிறப்பு போலீஸ் பிரிவு ஒரு ஆளை அடித்துக் கொன்று விட, இந்த போராட்டம் துவங்கியிருக்கிறது.
தற்போது அரசு அந்த சிறப்பு போலீஸ் படையை கலைத்து விடுவதாக அறிவித்திருக்கிறது.
ஆனாலும் போராட்டம் ஓய்வதாக இல்லை.
வாழும் வரை போராடு என்ற சினிமா பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
தென் அமெரிக்கா
மெக்சிகோ.
சினிமாக்களில் மட்டுமே பார்த்திருப்போம். அதிலும் நம்ப முடியாத காட்சிகள் வைக்கும் கெளதம் மேனன், மணிரத்னம் படங்களாகத் தான் இருக்கும்.
அப்படி ஒரு சம்பவம் மெக்சிகோவில் நடந்திருக்கிறது.
மெக்சிகோ நகரம் ஒரு போதை நகரம். இங்கே போதை மருந்து கும்பல்கள் சர்வ சாதாரணமாக கோலோச்சும் நகரம்.
இதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவிற்கு பக்கமாக இருப்பது தான். அமெரிக்காவிற்கு போதை மருந்தை கடத்த முடிபவன் அங்கே தாதா. ஏராள பணம்.
இதற்குத் தான் அங்கே பல குழுக்கள் இந்த போதை மருந்து வியாபாரத்தை பிடிப்பதற்காக யுத்தமே நடத்திக் கொண்டிருக்கிறது எப்போதும்.
2012 முதல் 18 வரை இராணுவ தலைவராக இருந்தவர் ஜெனரல் சால்வடோர் சியன்ஃபுகோஸ்.
கடந்த வாரம் இவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இறங்கியவுடன் அமெரிக்க போலீஸாரால் கைது செய்யப்பட்டார். காரணம் அவர் பதவியில் இருந்த ஆறு வருடங்களில் மெக்சிகோவில் போதை மருந்து குழுக்களுக்கு எதிராக செயல்பட்டார்.
அதிலும் குறிப்பாக போதை மருந்து தாதா குஜ்மான் என்பவனை இரண்டு முறை கைது செய்து உள்ளே வைத்தார்.
பல போதை மருந்து தாதாக்களை எண்கெளண்டரில் போட்டுத் தள்ள ஏற்பாடு செய்தார்.
இதெல்லாம் நல்ல விஷயம் தானே என்று கேட்கத் தோன்றலாம். பொறுங்கள்
இதையெல்லாம் அவர் செய்தது அவருக்கு வேண்டிய எச்.2 என்ற போதை மருந்து கும்பலுக்கு உதவி செய்யத்தானாம். அது மட்டுமல்ல எச்.2 குழுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றே உத்தரவு போட்டிருந்தாராம்.
இந்த குழு மூலமாக கிலோக்கணக்கில் ஏகப்பட்ட டாலர்கள் புழங்கும் போதை மருந்து கடத்தப்பட்டுள்ளதாம்.
இது அத்தனையும் அவரின் நேரடி உத்தரவு. ஆனால் அவர் பெயரில் இல்லை. “காட் ஃபாதர்” என்ற இரகசிய சங்கேத பேரில் இது அத்தனையையும் நடத்தியதே இவர் தானாம்.
இதனால் தான் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றம் நிரூபணமானால் முப்பது நாற்பது வருடங்களுக்கு இவர் வெளியே வர முடியாது.
72 வயதான இவருக்கு இது தேவையா என்று தோன்றுகிறதா ??
இவருடைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது தான் 43 மாணவர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனார்கள். இன்று வரை என்னவானார்கள் என்று கூடத் தெரியவில்லை.
இவர் தனியாள் இல்லை. இன்னும் இவருடன் பலர் மாட்டுவார்கள் என்கிறார்கள் மெக்சிகோவில்….
வட அமெரிக்கா
அமெரிக்க அதிபர் டிரம்ப் சி.பி.எஸ். தொலைக்காட்சியின் 60 நிமிடம் நிகழ்ச்சியை பாதியிலேயே சுமார் 45 நிமிடங்களிலேயே நிறுத்தி விட்டு எழுந்து சென்று விட்டார்.
உங்களுக்கு அதிமுக அரசு 1500 கோடி கொடுத்ததாமே என்றவுடன் பறவை முனியம்மா எடை தூக்கும் பளுவையெல்லாம் தூக்கி போட்டு விட்டு இதை யார்ர இங்கனக்குள்ள வெச்சிருக்காங்க என்று தில் படத்தில் தூக்கி போடுவது போல், காதில் செருகியிருந்த வயரையெல்லாம் தூக்கி போட்டு விட்டு போனாரே வைகோ அவருக்கும் டிரம்புக்கும் ஏறக்குறைய வித்தியாசமே இல்லை.
இத்தனைக்கும் அவரை சீண்டுவது போல கேள்வி கேட்கப்பட்டதா தெரியவில்லை. ஆனால் அவருடைய எதிர்வினையைப் பார்த்தால் நிச்சயம் உசுப்பேத்தியிருப்பார்கள் என்று புரிகிறது.
சி.பி.எஸ்ஸின் மூத்த நிருபர் லெஸ்லீ ஸ்டால் முகக்கவசம் அணியவில்லை. மேலும் சி.பி.எஸ் இந்த நேர்முகத்தை ஒளிபரப்புவதற்கு முன் நான் என்னுடைய வலைப் பக்கத்தில் வெளியிடப் போகிறேன் என்று சின்னப் புள்ளத் தனமாக பேசியிருக்கிறார் டிரம்ப். ஆனால் வெள்ளை மாளிகை ஒப்பந்தப்படி இதை ஒளிபரப்ப டிரம்புக்கு அதிகாரமில்லை என்கிறது சி.பி.எஸ். ஆளாளுக்கு டி.ஆர்.பி கவலை.
அப்படி என்ன கேள்வி கேட்டார் இவ்வளவு கோபம் வர என்று அமெரிக்கர்கள் சி.பி.எஸ். 60 நிமிட நிகழ்ச்சியை பார்க்க ஆவலோடு காத்திருப்பார்கள் என்றும் நம்புவதற்கில்லை.
ஏனெனில் டிரம்ப் இப்படி பாதியில் கோபப்பட்டு எழந்து போன கேள்வி பதில் நிகழ்ச்சிகள் ஏராளம்.
சரி இப்படி பாதியிலாவது எழுந்து போகிறாரே நம்ம பிரதமர் எந்த பத்திரிகையையும் தொலைக்காட்சியையும், சந்தித்து பேசாமல் இருப்பதற்கு இது தேவலாம் என்று மோடி எதிப்பாளர்கள் சொல்லக் கூடும்.
எதற்கு வம்பு ???
ஆஸ்திரேலியா
ஆஸ்திரே லியா பிரதமர் ஸ்காட் மாரீசன் குவீன்ஸ்லாந்து பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த போது அவரது காரை அலங்கோலப்படுத்தியிருக்கிறார்கள் ஒரு குழுவினர்.
கோவிட் தடுப்பு மருந்து கண்டு பிடிக்கும் வேலை நடந்து வருகிறது இந்த பல்கலைக்கழகத்தில்
அந்த விஷயமாக வந்திருந்தார் பிரதமர்.
அப்போது அவரது வெள்ளை நிறக் காரில் தக்காளி, சிவப்பு பெயிண்ட், ரத்தம் என்று கலந்து கட்டி அடிக்க, அவர் மீதும் அதை அடிக்க முயற்சி செய்திருக்கிறது ஒரு குழு.
அகதிகள் குழுவான அவர்கள் சாலிடரிடி மீன்ஜின் கம்யூனிட்டி குரூப் என்ற பெயரில் இந்த போராட்டத்தை நடத்தியிருக்கின்றன.
காரணம் ??
அகதிகளாக ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்களை கைது செய்து காலவரையரையின்றி அடைத்து வைத்து மனித உரிமைக்கு மீறலான விஷயங்களை ஆஸ்திரேலிய அரசு செய்து வருகிறது. அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தான் அவர்களுக்கு.
அவர்களின் கேள்வி, சுதந்திரமாக வாழ்வதற்கு மனிதனுக்கு உரிமை இருக்கிறது. அவன் நிம்மதியாக வாழ்வதை தடுப்பதற்கு இந்த பிரதமருக்கு என்ன உரிமை இருக்கிறது என்று கேட்கிறார்கள்.
நியாயமான கேள்விதான். ஆனால், அதை அகதிகளாக அடுத்த நாட்டுக்குள் அத்து மீறி புகுந்து கேட்பது தான் கொஞ்சம் இடிக்கிறது.
இதைத்தான் வங்காள தேசத்திலிருந்து சுவரேறி குதித்து இந்தியாவுக்கு வரும் பங்களாதேஷ் அகதிகளும் மம்தா புண்ணியத்தில் கேட்கிறார்கள்.
ஐரோப்பா
உலக சுகாதார நிறுவனம் கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஐரோப்பா, அமெரிக்கா நாடுகள் ஆசிய நாடுகளிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கொட்டு வைத்திருக்கிறது.
தொற்று நோய்க்கு எதிராக ஆசிய நாடுகள் எடுத்திருக்கும் கடுமையான சட்ட திட்டங்களை ஐரோப்பா மற்றும் அமெரிக்கா பின்பற்றுவதில்லை என்று வருத்தம் தெரிவித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம்.
கரோனாவைப் பொறுத்தவரை இன்னமும் மனித இனம் இந்த வைரசை ஜெயிக்கவில்லை.
முதல் லாக் டவுன் இரண்டாவது லாக் டவுன் என்றெல்லாம் உலகம் முழுவதும் உஷாராக இருந்தாலும், போகப் போக அடப் போங்கடா என்று பிடியை தளர விட்டது ஐரோப்பாவும் அமெரிக்காவும்.
இங்கு தான் உலக சுகாதார நிறுவனம் ஆசியாவைப் புகழ்ந்திருக்கிறது.
அவர்கள் வெற்றிக் கோட்டை தாண்டி விட்டாலும் ரிலாக்ஸ் ஆகாமல் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் எந்த நேரமும் கரோனா தொற்று பெருமளவில் சமாளிக்க முடியாமல் மீண்டும் வரும்.
உஷாராக இருக்க வேண்டும் என்று அறிவுறித்தி உள்ளது.
நவராத்திரி சமயங்களில் தாங்கள் வாங்கியிருக்கும் பட்டுப் புடவைகளையும் புதிய நகைகளையும்
அடுத்த வீட்டுக்கு காட்டியே தீருவது என்ற ஆசைகளையே நம்மூர் பெண்கள் கட்டுப் படுத்திக் கொண்டு வெற்றிலை பாக்கு கூட வாங்க செல்லுவதில்லை.
ஆக ஆசிய நாடுகள் சமர்த்து தான்.
இப்படியே வரும் தீபாவளி கிறிஸ்துமஸ் பண்டிகைகளை அடக்கி வாசியுங்கள்.
எல்லாம் கரோனாவை ஜெயித்த பின் ஒரு கை பார்த்துக் கொள்ளலாம்.
மீண்டும் அடுத்த வாரம் சுற்றுவோம். !
Leave a comment
Upload