தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம்

20210022172158586.jpeg

நாவடக்கம் தேவை...

சமீபத்தில் புதுச்சேரி திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அரக்கோணம் திமுக பாராளமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், புதுச்சேரியில் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது “கடந்த 10 ஆண்டுகளாக புதுச்சேரியில் இருண்ட ஆட்சி தான் நடைபெற்றுள்ளது. புதிய தொழிற்சாலைகள், வேலை வாய்ப்புகள் எதுவும் இல்லை. பல நூற்பாலைகள், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. புதுச்சேரியில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டம் திமுக தலைமையிடம் உள்ளது” என்று பேசியிருக்கிறார். தேர்தல் நேரத்தில்தான் திமுக பொறுப்பாளருக்கு இத்தனை ஆண்டுகளாக புதுச்சேரியில் தெரியாத இருள், இப்போது தெரிந்திருக்கிறது. காலம் கடந்த ஞானோதயம் தான்.

காங்கிரஸ், திமுக ஆதரவுடன்தான் புதுச்சேரியில் போட்டியிட்டு ஆட்சி அமைத்தது. சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் யாரும் புதுச்சேரியில் இருண்ட ஆட்சி என்று சொல்லவில்லை. தொழிற்சாலைகள் இல்லை, வேலை வாய்ப்பு இல்லை, நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளது, தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது என்றெல்லாம் பேசியதாக தெரியவில்லை. இப்போது தேர்தல் நேரம் என்பதால் பேச வேண்டிய கட்டாயத்திற்கு திமுக வந்து விட்டதோ என்னவோ தெரியவில்லை. அதுமட்டுமல்ல ஜெகத்ரட்சகன் ‘30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறாவிட்டால், இதே மேடையில் நான் தற்கொலை செய்து கொள்வேன்’ என்றும் சொல்லியிருக்கிறார். இப்படி வெற்றி சவால்கள் விட்ட அரசியல் தலைவர்கள் நிறைய பேர் இப்போதும் இருக்கிறார்கள் என்பது நீண்டநாள் அரசியலில் இருக்கும் ஜெகத்ரட்சகன் எப்படி அறியாமல் போனார் என்பது ஆச்சரியம்தான்.

‘தனித்துப் போட்டியிடுவோம்’ இதை நான் பத்திரத்தில் எழுதி தர தயார்... அப்படி இல்லை என்றால் முச்சந்தியில் என்னை சவுக்கால் அடியுங்கள் என்று சொல்லிவிட்டு கூட்டணி அமைத்தார் டாக்டர் ராமதாஸ். அப்போது ‘சவுக்கு இங்கே ராமதாஸ் எங்கே?’ என்று கேட்டார்கள். புதுச்சேரி தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக இருந்தால், ஜெகத்ரட்சகனை தற்கொலைக்கு ரெடியா என்று கேட்டால்... ஜெகத்ரட்சகன் அப்போது என்ன செய்வார்? அதிகார போதைக்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைத்து மக்களின் ஏளனத்திற்கு அரசியல் தலைவர்கள் ஆளாகக் கூடாது, நாவடக்கம் தேவை.