தொடர்கள்
Daily Articles
ஆரோக்கியம் நம் கையில்...!! - ஆரூர் சுந்தரசேகர்

20210028214905564.png


“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பதற்கேற்ப நம்
உடல் ஆரோக்கியம்தான், மற்ற செல்வங்களை நாம் பெறுவதற்கும், பெற்ற செல்வத்தை அனுபவிப்பதற்கும் மிகவும் இன்றியமையாதது. இன்றைய காலத்தில் மிகப் பெரும் சொத்து நமது ஆரோக்கியம் தான்.

“சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்” என்பார்கள். நமது ஆரோக்கியத்தை பேணி காப்பது நம் கையில்தான் உள்ளது. அதனை நாம் தெரிந்து கொண்டும், அதற்கேற்ப ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழவும் கற்றுக் கொள்ளவேண்டும்.

நமது வாழ்க்கையின் இப்போதைய துரித கால மாற்றத்தினால், பலரும் பல விதமான நோய்களுக்கு ஆளாகிறார்கள். அதில் கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவை சர்வசாதாரணமாகிவிட்டது. எனவே அனைவரும் ஆரோக்கியம் குறித்து தெரிந்துக் கொள்வது மிகவும் அத்தியாவசியம். இங்கு நமது உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல… உடலுடன் சேர்ந்து மனமும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்பது மிக முக்கியம்.

20210028221905541.png

நாம் கவனத்திற்கொள்ள வேண்டிய விஷயம்.. ஆரோக்கியத்தை எப்படி நாம் பராமரிப்பது? நாம் என்னதான் நமது ஆரோக்கியத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தாலும், சில சந்தர்ப்பங்களில்... சில நோய்கள் நம்மை அறியாமலேயே நம்மிடம் வந்து சேருகின்றன. நம் வயது முதிர்ச்சியின் காரணமாகவும் சில நோய்கள் நமக்கு வருகிறது.

முதலில், உடல் ஆரோக்கியம் பற்றி பார்க்கலாம்... உணவு, உடல் சார்ந்த ஒழுக்கம், மற்றும் உடற்பயிற்சி என்பனவற்றின் கூட்டே
உடல் ஆரோக்கியத்தின் அடிப்படை விதியாகும்.

ஆரோக்கியமான உடலுக்கு ஏற்ற உணவு, உணவின் அளவு, ஊட்டச்சத்தின் பங்கு போன்றவை மிகவும் முக்கிய விஷயங்களாக அமைகின்றன. உணவைப் போன்றே, உடல் சார்ந்த ஒழுக்கங்களும் உடல் நலத்தின் பிரதான தேவைகளாகும். சுற்றுச்சூழல் சுத்தம், உடல் சுத்தம், ஓய்வு, உறக்கம், உடல் உழைப்பின் அளவு போன்றனவும், முறையான உடற்பயிற்சியும் அவசியமாகின்றன.

அடுத்து நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியது… மனம் சார்ந்தது. மனம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே உடலும் ஆரோக்கியமாக இருக்கும். எத்தனை செல்வங்களும், வசதிகளும் இருந்தாலும் மனம் அமைதியாக இல்லாவிட்டால், உடல் ஆரோக்கியமில்லாமல் போய்விடும். எனவே திடமான, உறுதியான மனம் கொண்டவர்கள் தான் ஆரோக்கியமாக இருப்பார்கள். அடுத்து முக்கிய பங்கு வகிப்பது - தாழ்வு மனப்பான்மை. தாழ்வு மனப்பான்மை என்பது ஒரு கொடிய நோய், மோசமான எதிரியும் கூட... தனக்குள் தாழ்வு மனப்பான்மையைக் கொண்டிராதவர் மட்டுமே ஆரோக்கியமான மனிதராவார்.

நல்ல ஆரோக்கியம்:

உலக சுகாதார நிறுவனமான WHO – WORLD HEALTH ORGANISATION 1948-ல் ஆரோக்கியத்தைப் பற்றி “Health is a state of complete physical, mental and social well-being and not merely the absence of disease or infirmity” என்று கூறியுள்ளது. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நன்றாக இருந்து முழு வாழ்க்கையை, நீடித்த ஆயுளுடன் வாழச் செய்வதே ஆரோக்கியம் ஆகும்.

சிற்சில வியாதிகள், உடல் ரீதியான பிரச்சினைகளோ வந்தாலும் அதிலிருந்து சீக்கிரமே குணமடைந்து எழச் செய்வதும் நல்ல ஆரோக்கியம் தான்.

வியாதியே இல்லாமல் உடல் இயக்கங்கள் அனைத்தும் சரியாக இயங்குவதற்கு சரியான சமச்சீரான உணவு, உடற் பயிற்சி, தேவையான ஓய்வு ஆகிய மூன்றும் அவசியம் ஆகும்.

சரியாக சுவாசிப்பது, இதயத்தின் இயக்கம், தசைகளின் வலு, நெகிழ்வுத் தன்மை, உடல் அமைப்பு ஆகியவற்றிற்கு நல்ல ஆரோக்கியம் தருகிறது. புகையிலை, சிகரெட், மது ஆகியவற்றைத் தவிர்ப்பதும், போதை மருந்துகளையும் தடை செய்யப்பட்ட மருந்துகளையும் உட்கொள்ளாமல் இருப்பதும் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை ஆகும்.

“அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்பது அவ்வையின் அமுதமொழி.

நோயும் மனிதனும் மிக நெருக்கமாக வாழும் காலச் சூழல் இது. நாளொரு வியாதியும், பொழுதொரு மருந்துமாய் இன்று மனித வாழ்க்கை நகர்கின்றது.

இதற்கேற்றார்போல், அக்கு பஞ்சர், சித்த மருத்துவம், ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேதம், மற்றும் ஆங்கில மருத்துவம் என்று மருத்துவத் துறைப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

மனித உடலும் பஞ்சபூதமும்:

இயற்கையிலுள்ள பஞ்சபூதங்களான ஆகாயம், நெருப்பு, காற்று, நீர், மண் ஆகியவை நமது உடலிலும் இருக்கின்றன.

மண் - கேசம், தோல், சதை, எலும்பு மற்றும் நரம்பு.

நீர் - கொழுப்பு, இரத்தம், பித்தம், மற்றும் கழிவுநீர்.

நெருப்பு - பசி, தாகம், தூக்கம், மற்றும் சோம்பல்.

வாயு - அசைவு, சுருக்கம், விரிவு ஆகிய தன்மைகள்.

ஆகாயம் - வயிறு, இருதயம், மூளை ஆகியவற்றிலுள்ள இடைவெளிகள்.

இவற்றை சித்தர்கள் கண்டறிந்து, மருந்துகள் உட்கொள்ளாமல் வியாதி இன்றியும், உணவு உட்கொள்ளாமலே, பசியும் - தாகமும் இல்லாமலும், நெருப்பில் நின்றும், நீர் மேல் நடந்தும், காற்றில் பறந்தும் அபூர்வ சித்துகளை செய்துள்ளார்கள்.

(தொடரும்)