தொடர்கள்
உணவு ஸ்பெஷல்
சேலம் மாநகரில் மோடி இட்லி... - மாலாஸ்ரீ

20210124144326953.jpg

சேலம் மாநகரில், அரசு மருத்துவமனை அருகே காலை 9 மணியளவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் மற்றும் ஏழை-எளிய மக்கள் கூடியிருந்தனர். அப்போது அங்கு ஒரு வேன் வேகமாக வந்து நின்றது.

அந்த வேனை பார்த்ததும் மக்கள் மளமளவென்று வரிசையில் நின்று ₹10 கொடுத்து ஒரு ‘ஹாட்பேக்’ வாங்கி சென்றனர். நமக்கும் ஆவல் அதிகரிக்க, நாமும் பணம் கொடுத்து வாங்கி பிரித்தோம்.

உள்ளே - சூடாக 4 இட்லிகளும் சுவையான சாம்பாரும் இருந்தது. நாம் அதையே உற்றுப் பார்க்க, நம்மிடம் வந்த ஒருவர், “என்ன… அப்படி பார்க்கறீங்க? இதுதான் ‘மோடி இட்லி’! எங்க நிலைமையை உணர்ந்து, மகேஷ் சார் போடற தரமான, சகாய விலை இட்லி, சாம்பார்!” என்றார் மகிழ்ச்சியாக.

மகேஷிடம் நம்மை அறிமுகப்படுத்தி கொண்டு, “உங்களுக்கு இந்த ஐடியா எப்படி வந்தது?” எனக் கேட்டோம்...

அவர் சற்று நிதானமாக, "கடந்தாண்டு கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு தடை காரணமாக ஏழை-எளிய, நடுத்தர மக்கள் மற்றும் போதிய வருமானமின்றி, ஒருவேளை உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தது எனக்கு வேதனை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, எங்களது அறக்கட்டளை மூலமாக ஒருசில மாதங்கள் சுமார் 7 ஆயிரம் பேருக்கு ஒருவேளை உணவு, உடை மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினோம்.

ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் பலர் வேலைக்கு சென்றாலும், உரிய சம்பளம் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இதைத் தொடர்ந்துதான், மோடி பெயரில் ₹10-க்கு 4 இட்லி மற்றும் சுவையான சாம்பார் வழங்கலாமே!’ என்று ஐடியா தோன்றியது. பின்னர் மளமளவென அதிகளவு இட்லி தயாரிப்புக்கான மெஷின்கள், மாவு அரைக்கும் ராட்சத இயந்திரம், குடிநீர் சுத்திகரிப்பு ஆர்ஓ பிளாண்ட் ஆகியவற்றை வாங்கி ஓரிடத்தில் நிர்மாணித்தேன்.

எல்லாம் ஓகே… பிரதமர் மோடி பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதி ‘மோடி இட்லி’ விற்பனையைத் துவங்கத் திட்டமிட்டேன். ஆனால், என்னுடன் சேர்த்து குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று தாக்கியது. பின்னர் நாங்கள் குணமடைந்ததும், 3 மாதங்கள் கழித்து டிசம்பர் 10-ம் தேதி மோடி இட்லி விற்பனையைத் துவங்கிவிட்டேன்.

தற்போது வேன்கள் மூலம் சேலம் அரசு மருத்துவமனை, ஸ்லாட்டர் ஹவுஸ், ராஜகணபதி கோயில் உள்பட 22 இடங்களில் குறிப்பிட்ட நேரத்தில் ‘ஹாட்பேக்’கில் இட்லி, சாம்பார் விற்பனை செய்கிறோம். எங்களிடம் படித்த, வேலை கிடைக்காத, ஆதரவற்ற விதவை பெண்கள் என மொத்தம் 60 பேர் வேலை செய்கின்றனர்.

கூலிவேலை செய்யும் தம்பதிகள் எங்களிடம் ₹20 கொடுத்து 2 ஹாட்பேக்கில் இட்லி, சாம்பார் வாங்கிச் செல்கின்றனர். ‘இட்லி பெரிதாக இருப்பதால் ஒரு பேக்கை பிரித்து இருவரும் காலை டிபனாகவும், மற்றொரு பேக்கை மதிய உணவாகவும் வைத்துக் கொள்வதால், எங்களால் குறைந்த சம்பளத்தில் குடும்பம் நடத்த முடிகிறது’ என வாய்நிறைய புன்னகையுடன் கூறுவது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

கடந்த இரண்டரை மாதங்களில் நாங்கள் 6.50 லட்சம் இட்லி விற்பனை செய்திருக்கிறோம். இதில் லாப நோக்கு எதுவுமில்லை. ஏனெனில், ஒரு இட்லி தயாரிக்க ₹3.70 செலவாகிறது. மேலும், தரமான மளிகை, காய்கறிகளைக் கொண்டு சாம்பார் தயாரிக்க கூடுதல் செலவு. எனினும், ₹10-க்கு 4 இட்லி, சுவையான சாம்பார் தயாரித்து வழங்கும் குறிக்கோளில் இருந்து மாறவில்லை!” என்றார் மகேஷ்.

மேலும்... மகேஷ், “எனது தந்தையார் ஜி.எஸ்.ஶ்ரீதரன். ஓய்வுபெற்ற அரசு கலைக்கல்லூரி பேராசிரியர். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரிடம் ‘சிறந்த சமூகசேவகர்’ விருது பெற்றவர். அவரது நினைவாக இந்த டிரஸ்ட் ஆரம்பித்து, மோடி இட்லி விற்பனையை செய்து வருகிறேன்!” என்று புன்னகைத்தார். அவரது சமூகசேவை மற்றும் பொது தொண்டுக்கு வாழ்த்து தெரிவித்து விடைபெற்றோம்.