தொடர்கள்
உணவு ஸ்பெஷல்
மடப்பள்ளி மகிமைகள்.. - 4 - ஆரூர் சுந்தரசேகர்

பிரபல கோயில்களில் ஆகம மற்றும் நியம விதிகளின்படி மடப்பள்ளிகளில் விசேஷ முறையில் என்னென்ன பிரசாதங்கள் மற்றும் உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன என்பதில் ஒரு சிலவற்றை பார்க்கலாமா?

ஆழ்வார் திருநகரி (வங்கார தோசை) - இது இஞ்சி, மிளகு மற்றும் ஜீராவுடன் தயாரிக்கப்பட்ட நெய் மற்றும் வெல்லம் சிரப் கொண்டு பூசப்பட்ட ஒரு காரமான தோசை.

வள்ளிமலை (தேனும், தினை மாவும்) - வள்ளி குறவர் வேடர் குலத்தில் வளர்ந்ததால், அர்த்தஜாம பூஜையில் தேனும், தினை மாவும் நைவேத்யம் செய்து பிரசாதமாக வழங்கப்படும்.

கொல்கத்தா (ரசகுல்லா) - கொல்கத்தா காளிதேவிக்கு ரசகுல்லா நைவேத்தியம் செய்யப்படுகிறது. அதுவே பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

குருவாயூர் (பாலடை பிரதமன்) - குருவாயூர் கோயிலில் பாலடை பிரதமன் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

நாத்வாரா - ராஜஸ்தான் (கோதுமைப் பொங்கல்) - ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ‘நாத்வாரா’ என்னும் திருத்தலத்தில் அருள்பாலிக்கும் பகவான் கண்ணனுக்கு கோதுமைப் பொங்கல் நைவேத்தியம் செய்யப்படுகிறது.

சிங்கிரி குடி (பானகம்) - கடலூர் மாவட்டம், சிங்கிரி குடியில் உள்ள லக்ஷ்மிநரசிம்மர் ஆலயத்தில் பானகம் நைவேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

திருப்புல்லாணி (பால் பாயசம்) - திருப்புல்லாணி ஆதிஜகந்நாதர் கோயிலில் பால் பாயசம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

திருச்சானூர் (மாலாடு) - திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு மாலாடு நைவேத்தியம் பிறகு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

பிள்ளையார்பட்டி (மோதகம்) - பிள்ளையார்பட்டியில் மோதகம் நைவேத்தியம் செய்த, பின்பு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

காஞ்சி காமாட்சி அம்மன் (புட்டு) - காஞ்சி காமாட்சி அம்மனுக்கு ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தன்று புட்டு நிவேதனம் செய்யப்படுகிறது.

கொல்லூர் (சுக்கு கஷாயம்) - கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் சுக்கு கஷாயம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.