தொடர்கள்
கதை
கல்யாணமாம் கல்யாணம்... – பா.அய்யாசாமி

20210126082821372.jpeg

விஜியிடமிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்திருந்தது பிரபுவுக்கு, மாலை சந்திக்கவும்.

என்னவாக இருக்கும் என்ற குழப்பத்தில் அலுவலக வேலைகள் தேங்கின. இப்படி அழைக்கமாட்டாளே என்னவாக இருக்கும் என்று குழம்பினான் பிரபு.

விஜி, வயதும், வயதுக்கேற்ற வனப்பும் மிகுதியாய் உடையவள், பிரபுவிற்கு காதலியாகி இரண்டு வருடமாகிறது. அவ்வப்போது ஏற்படும் சண்டையில், பிரிந்து எப்போது சகஜமாவார்கள் என்று இருவருக்குமே தெரியாது.

என்னவாக இருக்கும் என்ற கவலையிலே வழக்கமாக சந்திக்கும் இடம் வந்து விஜியின் வருகைக்காக காத்திருந்தான்.

வழக்கம்போல் தாமதமாக வந்த விஜி... “நீ இப்படியே உட்கார்ந்திரு... எங்க அப்பா வேற யாருக்காவது என்னை கழுத்தை நீட்டுனு சொன்னால் நானும் கயிற்றை கட்டிக்கிட்டு போயிகிட்டே இருப்பேன்... அவ்வளவுதான்..” என்று பிரபு மீது எறிந்து விழுந்தாள்.

“ரிலாக்ஸ் விஜி. ஏன் இவ்வளவு டென்சன்? என்ன விஷயம் சொல்லு...”

“நீ எப்ப, எங்க வீட்டிற்கு வந்து அப்பாவை பார்த்துப் பேசப்போறே? நானும் உன்கிட்ட சொல்லிகிட்டே இருக்கேன்...” என்றாள்.

“என் தங்கைக்கு கல்யாணம் ஆகட்டும்னு நானும் உன்கிட்ட சொல்லிக்கிட்டே இருக்கேன். நாம் காதல் கல்யாணம் செய்வதால், என் தங்கையின் வாழ்க்கை பாதிக்கக் கூடாது என நினைக்கிறேன்.. அதுவரை சமாளிப்போம் என்றுதானே முன்பே பேசினோம். இப்படி அவசரப்பட்டு என்னை நெருக்கினால் என்ன செய்ய ?”

“அப்பாவின் நண்பர் ஒருவர் நேற்றுகூட வந்து அவரது சொந்தத்திலே வசதியான இடத்திலிருந்து பையன் வரன் ஒன்னு வந்திருக்கு, நல்ல இடம் முடிச்சுடுவோமா என்று பேசிவிட்டுப் போனார். இருவரும் ஒன்றாக ஆர்மியிலே வேலைப்பார்த்தவங்க. ஆர்வமாக அப்பாவும் என்ன ஏதுனு விசாரிக்க ஆரம்பிச்சுட்டார். இதுக்கு மேலே நான் காலம் கடத்தினேன் என்றால், அவருக்கு என் மேலே சந்தேகம் வந்திடும். தானாகவே ஏதும் தெரிஞ்சு என் மேலே கோபப்பட்டால், அதை மட்டும் என்னால தாங்கிக்கவே முடியாது” என தன் தந்தைமேல் உள்ள பாசத்தை அவனிடம் கொட்டினாள்.

“நல்லா இருக்கு உன் நியாயம். நீயாவும் உங்க வீட்டிலே சொல்லமாட்டே, நான்தான் உங்க அப்பாகிட்ட பேசனும். அவரோட முழியைப் பார்த்தாலே நான் பயந்துடுவேன். நான் வந்து அவர்கிட்டே பேசி சம்மதிக்க வைத்து, உன்னை கல்யாணம் செய்யறத நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கு” என்றான் பிரபு.

“இதெல்லாம் காதலிக்கிறதுக்கு முன்னே யோசித்திருக்கணும். மேலும் சில பல நல்ல விஷயம் நடக்கனும்னா, சில விஷயங்களை தைரியமா சந்திக்கனும் பிரபு. நீ வந்து அப்பாவிடம் பேசினால்... நானும், ஆமாம்பானு சொல்லிடுவேன்” என்றாள்.

“ஓகே.. ஓகே.. நாளைக்கே வருகிறேன், பேசறேன்” என்ற பிரபு மறுநாள் விஜியின் வீட்டிற்கே கிளம்பி போய்விட்டான்.

“சார், என் பெயர் பிரபு. இங்கே உள்ள வரதராஜப்பெருமாள் கோயிலிலே பட்டரா இருக்காரே அவர்தான் என் அப்பா.” என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

“ஒஹோ” என்றார் அவனைப் பார்த்தபடி..

“நான் உங்க பெண் விஜியை…” என இழுத்தான் எச்சில் விழுங்கியபடி...

“என்ன? விஜியை..” என்று அவர் திரும்பி முறைத்தபடி கேட்க...பிரபுவிற்கு கழுத்துக்கு கீழே அனைத்தும் அடைத்த மாதிரி இருந்தது.

அடுப்படியிலேயிருந்து தாயும் மகளும் நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.

படுபாவி, நம்மளை இப்படி எக்கச்சக்கமா மாட்டி விட்டுட்டாளே? என மனத்திற்குள் நினைத்த பிரபு... “கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்கச் சொன்னாள்?”

“யாரோட?”

“உங்களோட….”

விஜியும், அம்மாவும் உள்ளே இருந்து களுக்… என்று சிரித்தனர்.

“வாட் ?” என்றார்

“சாரி சார்.. உங்க மகளோடதான்...”

“அவ கேட்கச் சொன்னாளா? இல்லை நீயா வந்து கேட்கிறீயா?”

“நான்தான். இல்ல.. அவதான்” என்றான் பிரபு படப்படப்பாக.

“என்னடி இது? ஓவரா ஜாம் ஆவுது” என்றாள் அடுப்படியில் அம்மா.

“ரிலாக்ஸ்! மை டியர்....” என இழுத்தாவரிடம்...

“பிரபு..” என்றான்.

“எஸ். மை டியர் பிரபு.. ஏற்கனவே அவளுக்கு ஒரு இடம் பார்த்தாச்சு. அவங்களும் எங்களை மாதிரியே நல்ல வசதியான இடம். அங்கே சென்று வாழ்ந்தால் என் பொண்ணு வாழ்க்கை வசதியோட நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நீ என்ன நினைக்கறே?” என்று அவனிடம் திருப்பிக் கேட்டார்.

நான் என்ன நினைக்கிறது என சிறிது நேரம் யோசித்தவன்...

“அப்படி என்றால் உங்க பொண்னுக்கும் அந்தப் பையனுக்கும் கல்யாணம் இல்லையா?” என திடீரென திருப்பிக்கேட்டான் பிரபு.

“வாட் டூ யூ மீன்? என்ன குழப்புகிறாய்?” என்றார்.

“இப்போ போடுவான் பாரு என் ஆளு ஒரு யார்க்கர்...” - என்றாள் விஜி, அம்மாவிடம்.

“அப்போ, அவர்கள் பணத்துக்கும், உங்கள் பணத்துக்கும்தான் கல்யாணம் இல்லயா சார்? அவர்கள் வசதிக்கும், உங்கள் வசதிக்கும்தான் கல்யாணம் இல்லையா?” எனக் கேட்க..

“அப்படிதான்னு வச்சுக்கோயேன்” என்று குழம்பிய விஜியின் அப்பாவிடம்...

“நாங்கள் ஒருவரை ஒருவர் மனசார விரும்புகிறோம் சார், ஒன்றாக வாழ்ந்தால் மகிழ்ச்சியாக இருப்போம். மேலும், நீங்க கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து சேமித்ததை கல்யாணத்திற்கு ஆடம்பரச் செலவு செய்துவிட்டு, பின்னாளில் நீங்கள் கஷ்டப் படறதிலே என்ன அர்த்தம் இருக்கு சார்? சிம்பிளா கோயிலில் எங்க திருமணத்தை முடித்துவிட்டு, அந்த பணத்தை நீங்களே வைத்துக்கொண்டு உங்கள் வாழ்க்கையை ஜாம்ஜாம்னு வாழலாமே.. சார்” என்று மாற்று சிந்தனையாக கூறினான் .

அந்த யார்க்கரில் கிளீன் போல்டாகி உள்ளே சென்றார் அப்பா.

“என்னப்பா? என் ஆளு எப்படி?” என்று விஜி கேட்டதற்கு..

“இவன் பட்டர் பையன் மட்டும் இல்ல விஜி... பெட்டர் பையனும் கூட!” என்று அவர்களது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார் அப்பா.