தொடர்கள்
கவிதை
காதல் பொது மறை - 25 - காவிரிமைந்தன்

2021011206342310.jpg

20210104161412313.jpg

காவிரி மைந்தன்

20210125191900343.jpg

அதையும் நீ அறிவாயல்லவா?
அன்பிற்கினியவளே..
ஆயிரமாயிரம் எண்ண அலைகள்.. எல்லாவற்றிலும் உன் அன்பு முகம்!

எத்தனை சுகம்! மூன்றாம் தமிழோடு நீ காட்டும் பாவனைகள்!

அத்தனையும் அன்பின் சுகவரிகள்!

மன்றத்தில் வீசும் தென்றல் மனதுக்குள் வீசினால் அன்றைக்கே காதல் வந்தது என்று அர்த்தம்!

சோலையில் பூத்திருக்கும் பூக்களெல்லாம் உன்னைப் பார்த்து புன்னகை சிந்தினால் காதலியை சந்திக்கப் போகிறாய் என்று அர்த்தம்!

வானிலே வருகின்ற வெண்ணிலா உன் வாசல்வந்து நிற்பது போல தோன்றினால் அங்கே காதலர் சந்திப்பு நடந்து கொண்டிருக்கிறது என்று பொருள்!

இயற்கையின் படைப்பான இந்த உலகம் இனிமை இனிமை என்று இதயம் சொன்னால் அடிமனதில் அவள் குடிபுகுந்துவிட்டாள் என்று பொருள்!

இதுவரை நான் எழுதியபோது இனியவளே நீ வந்தாய்!

‘ம்’ அவ்வளவு தானா.. என்று ஆசைநிறைய கேட்டாய்!

கழுத்தினில் மாலையிடுவதுபோல் உன் கரங்களைக் கோர்த்தபடி எனில் சாய்ந்தாய்!

கருத்தினில் தோன்றியவற்றை காகிதத்தில் வடிக்கிறேன் என்றேன்.. அதனால்தான் ஒரு வெற்றுத்தாளில்கூட வார்த்தைப்பூக்கள் கொட்டிக்கிடக்கின்றன என்று பதில் சொன்னாய்!

என்னவளாய் நீயிருக்கும்போது எந்நாளும் இங்கே எழுத்துக்களுக்கு பஞ்சமிருக்காது!

அன்போடு நீ உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லும் என்னை மேலும் எழுதுங்கள்! எழுதுங்கள் என்றே சொல்லும்!

கண்வழியே நீ காட்டும் அடையாளங்கள் எல்லாம் களிப்பினிலே என்னை வாழ்ந்திருக்க வைக்கும்! இமைமூடி வருகின்ற உறக்கத்தின்போது இனிப்பாக இதழ்முத்தம் பதமாக தந்து உன்மடிமீது போட்டு தாலாட்டுவாயே.. அது சொர்க்கம்!

அன்பின் முத்தாரங்கள் அங்கே ஆரம்பமாகட்டும்.. என்று அழைக்கிற விழிகள் வேண்டி உன் முகம் நோக்கினேன்.. என்ன அவசரம் என்று கள்ளச்சிரிப்பு காட்டினாய்!

ஏதோ தேவிக்கு அதெல்லாம் தேவையில்லை என்பதுபோல் இது என்ன பாசாங்கு என்றேன் நான்!

பெண்மைக்கென்று உள்ள குணங்கள் என்ன தெரியாதா உங்களுக்கு என்றாய் பதிலுக்கு!

பேசத்தான் நேரமில்லை.. என்று என் ஆசையை முன்மொழிந்தேன்!

கருவிழியருகில் கன்னத்தில் கொஞ்சம்.. காதினில் கொஞ்சம் என்று போனதுபோக மீதிதான் வந்தது இதழுக்கு என்றேன்!

கொடுத்ததை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கொஞ்சும் மொழியில் சொன்னாய்!

கோவை இதழ்சிவப்பை.. பாவை தரும் மதுவை.. வேண்டும்வரை நானருந்த.. பரிமாறும் நேரத்திலேயே நீ பசியாறினாய் என்பது உண்மைதானே?

இல்லை.. இல்லை.. எடுத்ததைக் கொடுத்துவிடுங்கள் என்று சொன்னேன் என்று சொல்லி புன்னகைத்தாய்!

ஓவியம்போல் ஒய்யாரம் உன்மேனி காட்ட.. ஓரங்க நாடகங்கள் அங்கே நான்வந்து காட்ட.. பூமேனி தாங்காது கண்ணா என்று மெல்லமாய் சிணுங்க.. தாளாதபோது நான் தாங்கிக்கொள்வேன் என்று வாய்மொழிந்தேன்!

‘ம்’ என்றாய்.. மறுபடியும்..எதற்கென்று புரியவில்லை.. என்ன கவிஞர் நீங்கள்.. என்ன வேண்டும் என்று கேட்பதைத்தான் ‘ம்’ என்று அடையாளம் காட்டினேன்.. என்றாய்!

உன் திருவாய் மலர்ந்து அந்த வார்த்தை வரட்டும் என்றுதான் காத்திருந்தேன்.. அதையும் நீ அறிவாயல்லவா?