கவிஞர் சுப்பு ஆறுமுகத்தின் அம்மா விபூதி பூசியதைப் பார்த்த மக்கள் -
கலைவாணரை விபூதி, குங்குமத்தோடு பார்த்த நெல்லை - சத்திரம் புதுக்குளம் கிராம மக்களுக்கு வியப்புடன் கலந்த ஆச்சரியமாக இருந்தது1
அந்த ஆச்சரியத்துக்கு விடை கிடைக்க, சற்று நேரமாகியது - அன்றைய சூழலில்!
மக்கள் எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்தி வழியனுப்பி வைத்த கலைவாணருடன் புறப்பட்டார் கவிஞர் சுப்பு ஆறுமுகம், 16 வயது பாலகனாக..!
ரயில் சென்று கொண்டிருக்கிறது! பயணித்த சக பயணிகள், கலைவாணரை ரசித்து மகிழ்ச்சியாகவும், சற்று வியப்பாகவும் பார்க்கிறார்கள்.
‘‘அட… சாமியே இல்லைனு சொல்ற கலைவாணரின் நெற்றியில் விபூதி, குங்குமம்..!’’ என்ற வியப்பு…
என் அப்பா, கலைவாணரிடம்... ‘‘அண்ணே..! உங்க நெற்றியிலே விபூதியும், குங்குமமா பார்க்கும்போது, எல்லோருக்கும் வரும் வியப்பு… எனக்கும் வருகிறது..! அண்ணே… எப்படிண்ணே எங்கம்மா விபூதி, குங்குமம் வெச்சு விடும்போது பூசிக்கிட்டீங்க..? வெளியில வந்ததும் நீங்க அதை அழிக்கலை! ஏன் அண்ணே... நான் காரணம் தெரிஞ்சுக்கலாமா..?’’ என்றார்.
கலைவாணர் அதற்கு... ‘‘ஏலே… சுப்பு ஆறுமுகம்..! கண்காணாத தெய்வத்துக்காக… கண்கண்ட தெய்வம் அம்மா மனசு கவலைப்படக்கூடாதுல்ல… அதான்..! அது அப்படியே இருக்கட்டும்…’’ என்றாராம்!
இதற்குப் பெயர் என்ன தெரியுமா..?
‘‘பகுத்தறிவு பக்தி…
அன்பை நேசிக்கும் ஆத்ம பக்தி…’’
- உடன் பயணித்த அப்பாவுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாம்..!
கம்பெனிக்குள் இருவரும் உள்ளே நுழைகிறார்கள்… இருவரும் அவரவர் discussion-க்குத் தயாராகிறார்கள்..!
கலைவாணர் அறையில் தயாராகி இருக்கிறார். கவிஞர் சுப்பு ஆறுமுகம் குறித்த நேரத்தில் உள்ளே நுழைகிறார்..!
அப்போது நடந்த ஒரு சம்பவம்…
இதை கலைவாணர் பிற்காலத்தில் அடிக்கடி கவிஞரிடம் சொல்லி ரசித்தாராம்..!
நுழையும்போது - ‘WELCOME’ - கால்மிதி… அது… கோணல் மாணலாகக் கிடந்ததாம்..!
எல்லோரும் அதை தாண்டித் தாண்டி சென்றிருக்கிறார்கள்… ஆனால், அதை யாரும் சரிசெய்யவில்லை; செய்யத் தோன்றவுமில்லை..!
கவிஞர் உள்ளே நுழையும்போதே - அதைக் காலால் சரிசெய்தபடியே உள்ளே நுழைந்தாராம்..!
எதுவும் கோணலாக இருந்தால் பிடிக்காதபடி - ‘ஒழுங்கு உள்ளத்தை’க் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள், என் ஆச்சி… கவிஞரின் அம்மா..!
‘Discipline…’ என்று இதைச் சொல்வார்கள்..!
அந்த ஒழுங்கினை - ஒழுக்கத்தை உள்ளத்தில் பதிய வைத்துக்கொண்டு - கவிஞர்மீது அதிக மதிப்பும் நேசமும் வைக்க… பிற்காலத்தில் ஒரு நாள் சொன்னாராம்…
‘‘ஏலே… சுப்பு ஆறுமுகம்..! நீ ஒழுக்கமான பிள்ளைன்னு வந்த அன்றே தெரியுமப்பா… கோணலா கிடந்த கால்மிதியை - வரும்போதே சரிபண்ணிட்டு வந்தியே… அதான், உன் தனிச்சிறப்பு..!’’ என்றாராம் கலைவாணர்.
இன்றும் அப்படித்தான்..!
கலைவாணர் கம்பெனி - ஆலோசனை பேச்சரங்கம் ஆரம்பித்தது. சுவாரஸ்யமான பேச்சு - சீனியர் கலைஞர்கள் சபை… என்னதான் அப்படி பேசினார்கள்..?
- ஒரு வாரம் கழித்து சொல்லட்டுமா..?
Leave a comment
Upload