என் கண்மணித் தாமரை
எடுத்தால் கீழேயே வைக்க முடியாத பாலாவின் புத்தகங்களில் இதுவும் ஒன்று. அவரை நான் ஒரு ஆதர்ச எழுத்தாளராக பார்க்க துவங்கியபோது படித்தேன். நாவலை படித்து முடித்தபின் அவர் என் மனதில் ஒரு ஆன்மீக ஆசானாகவே உயர்ந்து விட்டிருந்தார். அபிராமி பட்டரின் கதையை கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் ஆதிபராசக்தி திரைப்படத்தில் பார்த்திருப்பீர்கள். நான் கூடுதலாக, திருக்கடையூர் கோவிலில் பட்டர் சொல்ல தெரிந்து கொண்டேன்.
அனால் இவர் அணுகும் விதமே வேறு. சக்தி உபாசனை, வாமாச்சாரம் என்று பல புதிய விஷயங்களை மிக நுணுக்கமாய் அணுகியிருப்பார். பெண் விடுதலை பேசுபவர்கள் எல்லாம் இதனை அவசியம் படிக்க வேண்டும், பெண்கள் எப்படி மதிக்கப்பட்டார்கள் என்பது புரியும், எங்கே தவறு நிகழ்ந்தது, எப்படி ஆணாதிக்க சமூகமாய் மாறிப்போனோம் என்பது விடை தெரியா கேள்வி.
மனைவிக்கு பூஜை செய்யும் காட்சி சொல்லப்பட்டிருக்கும் விதம், கண்களில் நீரை வரவழைக்கும், உணர்ச்சி வசப்பட்டு, புத்தகத்தை முடி வைத்து விட்டு, கண்ணை முடி அந்த நிகழ்வினை மனக்கண்ணால் பார்த்தேன். பாலா அதனை அனுபவித்தே எழுதியிருக்கிறார்.
சரபோஜி மன்னர், அபிராமி பட்டர் சந்திப்பு, அன்னை தாடங்கத்தை வானில் வீசி பௌர்ணமியை வரவழைத்தல் ஆகியவை மனதில் அப்படியே உறைந்து விடும். ஒவ்வொரு தை அமாவாசையும் நான் இந்த புத்தகத்தை படிப்பது வழக்கம். எனது நண்பர்களுக்கோ அல்லது தெரிந்த யாருக்கேனும் திருமணம் ஆகும்போது என் திருமணப் பரிசு இந்த புத்தகமே.
அட்டைப்படம் ஆயிரம் கதைகள் பேசும். ஒரு முறை படித்தால் புரிந்து கொள்ளமுடியாத கதை இது. போகப்போக, ஒவ்வொரு வாசிப்பிலும் பல உணர்வுகளையும், கதையை குறித்த பல கோணங்களையும் மனதில் எழுப்பிக்கொண்டே இருக்கும் அற்புதமான படைப்பு. அவசியம் படித்து இன்புறவேண்டிய புத்தகம்.
மற்றொரு புத்தகம் பற்றிய செய்தியோடு உங்களை சந்திக்கிறேன்.
Leave a comment
Upload