பசி எடுத்தால் மட்டும் சாப்பிட வேண்டும்...
“பசித்துப் புசி என்பது சான்றோர் வாக்கு”..
பசித்த பின்பே உணவருந்த வேண்டும். பசியாமல் உண்பது அஜீரணத்துக்கு வழிவகுக்கும். அஜீரணத்தால் உடல் இயக்கம் தடைப்பட்டு பல நோய்கள் உருவாகக் காரணமாகிறது.
பசி என்றால் என்ன..?
நம் உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஒன்று சேர்ந்து, உணவை நல்லபடியாக ஜீரணமாக்கி இரத்தத்தில் கலப்பதற்குத் தயார் என்று உடல் நம்மிடம் பேசும் மொழியே பசி. பசி இல்லாமல் சாப்பிடுகிற ஒவ்வொரு உணவும் கழிவாகவோ, விஷமாகவோ மாறுகிறது. எனவே பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்”.
தான் முன்பு உண்ட உணவு செரித்துவிட்டது என்பதை அறிந்து அடுத்தவேளை உண்பானேயானால், அவனுக்கு மருந்து என்ற ஒன்று தேவையில்லை என்பதே வள்ளுவர் நமக்கு அருளிய இந்த திருக்குறளின் பொருள்.
நேரம் பார்த்து சாப்பிட்டால்...
காலை எட்டு மணிக்குச் சாப்பிடுகிறீர்கள். அதன் பிறகு எந்த வேலையும் செய்யவில்லை. பெரிதாக உடலுக்கு நீங்கள் எந்த உழைப்பும் கொடுக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். மதியம் ஒரு மணியைக் கடிகாரத்தில் பார்த்தவுடன் நாம் மணி ஒன்றாகி விட்டது சாப்பிடலாம் என்று நினைக்கிறோம். ஆனால் பசிக்கிறதா என்றால் இல்லை. காலை சாப்பிட்ட உணவே இன்னும் ஜீரணம் ஆகாமல் இரத்தத்தில் கலக்காமல் இருக்கும் பொழுது, பசி இல்லாமல் நேரம் பார்த்து ஒரு மணிக்கு மதியம் உணவு சாப்பிட்டால், உடலுக்கு நோய் வரும். ஏற்கனவே வயிற்றில் இருக்கும் உணவும் ஜீரணமாகாது. இப்பொழுது புதிதாகச் செல்லும் உணவும் ஜீரணமாகாது. எந்த வேலையும் இல்லாமல் நேரம் பார்த்து சாப்பிடுபவர்களுக்கு கண்டிப்பாக நோய் வரும்.
உணவு உண்பதில் ஒரு வரைமுறை வேண்டும். ஒரு கட்டுப்பாடு வேண்டும். கால இடைவெளி வேண்டும்.
“ஒருவேளை உண்பான் யோகி
இருவேளை உண்பான் போகி
முப்போதும் உண்பான் ரோகி
எப்போதும் உண்பான் துரோகி”
இப்பாட்டிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே ஒருவன் இருப்பானேயானால், அவன் தனக்குத்தானே துரோகம் செய்துகொள்கிறான் என்ற பொருளாகிறது.
எப்போதும் எதையாவது உண்டு கொண்டே இருந்தால் வயிறு ஒரு அரவை இயந்திரமாகி, அதற்கு ஓய்வில்லாமல் போகிறது. இது வயிற்றில் சுரக்க வேண்டிய சுரப்பி நீர்களை அதிகமாகவோ, குறைவாகவோ நேரம் கெட்ட நேரத்தில் சுரக்க வைக்கிறது. இதனால் நமக்கு தேவையில்லாத அஜீரணக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இது பல நோய்கள் உருவாக அடித்தளமாகிறது. அதனால் எவன் ஒருவன் தான் உண்ட உணவு செரிமானமாகிவிட்டது என்பதை உணர்ந்து சாப்பிடுகிறானோ, அவனை எந்த நோயும் அணுகாது. மருந்துகளும் அவன் உடலுக்குத் தேவையில்லை.
“காலையில் ராஜாவைப் போல் சாப்பிட வேண்டும். மதிய உணவை மந்திரியைப் போல் சாப்பிட வேண்டும். இரவு உணவை பிச்சைக்காரனைப் போல் சாப்பிட வேண்டும்” என்னும் பழமொழிக்குள் ஆரோக்கியம் குறித்த அத்தனை விஷயங்களையும் அடக்கி உள்ளார்கள் நம் முன்னோர்கள். மிகச் சரியான வார்த்தை. காலையில் தாரளமாகவும், இரவில் சுருக்கியும் எவர் ஒருவர் சாப்பிடுகிறாரோ அவர் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்.
தொடரும்...
Leave a comment
Upload