தொடர்கள்
கவிதை
இலவசங்களின் இறுதியாண்டு... - கே.ராஜலட்சுமி.

20210226224600577.png

கடையேழு வள்ளலும்,
மடை திறந்தாற் போல்
அள்ளிக் கொடை கொடுத்து
உயிர் விடுத்த கர்ணனும்
கூட நாணுவர், இலவசம்
இறையும் பறையிங்கு கேட்கின்!..

முச்சந்திகளில் முழங்கும்
தானத்தால் தளர்ந்து
வானத்தை நினைந்து
வாய் பிளப்பர் வறியர்,
வறுமைக்கு நிவாரணம்
நிறைந்து வருமென்று!...

அருள் வாக்காய் அள்ளித்
தரும் கட்சி வாக்குறுதிகள்
வாக்குகளாய் வந்தேறும்
என்றவர் எதிர்பார்க்க,
மாறாய் வகுக்கப்படும்,
அவருக்குள் பகுக்கப்படும்!...

கல்வியும் மருத்துவமும்
கொள்ளை விலை போகும்
நாட்டில் இலவசங்கள் காட்டி,
பல்லிளிக்கும் இழிநிலைக்கு
இறங்கியோர் கவனமெல்லாம்
வாக்கு வங்கியன்றி வேறென்ன?

இலவசங்களின் இறுதியாண்டு
இதுவாக இருக்கட்டும்!...
வரிகளெல்லாம் வளங்களாய்
தமிழ் நாட்டின் வரைபடத்தில்
இனியாவது இடம் பெறட்டும்!..

வாக்களித்தல் கடமையெனில்,
இயற்றலும், ஈட்டலும், காத்தலும்,
காத்த வகுத்தலுமாய் உள்ள
அரசுக்கு, வள்ளுவர் சொன்ன
வல்லரசுக்கு வாக்களிப்பதே
கடமையில் முதன்மையாகும்!..

காட்சிப் பிழையால் தேரும்
ஆட்சி மக்களாட்சியின்
மாபெரும் வீழ்ச்சி !...
சூழ்ச்சிகள் செய்து சிறை
பிடிப்போர் வலை சிக்காமல்
சிந்தித்து வாக்களியுங்கள்!...