
முன்னாள் முதல்வர் காமராஜர் இறந்தபோது... அவரின் சொத்தாக 4 கதர் வேட்டி, சட்டை, பணமாக ரு. 350 இருந்தது.
காமராஜ், பக்தவச்சலம் ஆட்சியில் வேளாண்மை, உணவு, சிறுபாசனம், மதுவிலக்கு, கால்நடை, பொதுப்பணி துறை, காவல்துறை, நீதித்துறை, சிறைதுறை மந்திரியாக இருந்தவர் அமைச்சர் கக்கன். அமைச்சர் பதவி முடிவுற்றதும் வாடகை வீடு தேடி அலைந்தவர். 1967 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தார். கக்கன் தன்னுடைய இறுதி நாட்களில் கோட்டகல் வைத்திய சாலையில் மருத்துவம் பார்த்தது, அதன்பின் மதுரை அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காமல் தரையில் படுக்க வைக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். தனக்கென்று சொத்துக்கள் ஏதும் சேர்க்காத அமைச்சர்.
ஒரு காலத்தில் தமிழகத்தினை ஆண்ட முதல்வர், அமைச்சர்கள்... மக்களுக்காக அரசியல் பணிகளில் ஈடுபட்டு உள்ளன்போடு சேவை மனப்பான்மையுடன் தன்னலமின்றி பொது நலத்தில் ஈடுபட்டனர். அரசியல்வாதிகள்... அதுவும் அதிமுக ஆளுங்கட்சி அமைச்சர்கள் என்றால் கடந்த ஐந்தாண்டுகளில் சொத்து மதிப்பு எவ்வளவு உயர்ந்துள்ளது என்ற கணக்கை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள அபிடவிட்டில் சொல்லியுள்ள தகவல்களை பார்த்து மூச்சடைத்து போனோம்…
தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் (திரு)விழா களைகட்டத் தொடங்கிவிட்டது. தமிழகத் தேர்தலில் 234 சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேட்புமனு தாக்கல் செய்வதில் இறுதி வடிவமாக 4000 பேர் தாக்கல் செய்து தகுதி பெற்றுவிட்டனர்.

நன்றி: தினமணி
வேட்புமனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்களில் பல கோடீஸ்வர வேட்பாளர்கள் இருந்தாலும், ஆளும் கட்சியில் உள்ள அமைச்சர்கள் தாக்கல் செய்துள்ள சொத்து குறித்த அப்பிடவிட்களை ஆராய்ந்தோம்.
கடந்த 2016 தேர்தலில் போட்டியிட்ட ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், அமைச்சர்களான பிறகு அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு பட்டியல் குறைந்தபட்சம் இருமடங்காக உயர்ந்ததை பார்த்து பிரமித்து போனோம்.
தமிழ்நாடு கடந்த ஐந்து வருடங்களில் நிதிநிலை அறிக்கைகளை சமர்ப்பிக்கும் போது, தமிழ்நாடு மிகப் பெரிய கடன் சுமையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது என்ற தகவலை நிதி அமைச்சர் பட்ஜெட் கூட்டத் தொடரில், பட்ஜெட்டில் துண்டு விழகிறது என்று வாசிப்பார்.
ஆளும் கட்சி அமைச்சர்களின் சொத்துக்களின் மதிப்போ, கடந்த ஐந்தாண்டுகளில் கிடுகிடுவென இமாலய வளர்ச்சி பெற்றுள்ளது.
தற்போதைய அதிமுக ஆட்சியில் விஜயபாஸ்கர், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் விவசாயம் மற்றும் வாடகை வருமானங்கள் மூலம் சொத்து சேர்த்ததாக சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
பதிவுத்துறை மற்றும் கமர்ஷியல் வரி மந்திரியாக பொறுப்பு வகித்த கே.சி. வீரமணியின் 2016 ஆண்டில் இருந்த சொத்து மதிப்பு ரு.27.7 கோடி, 2021 ஆண்டில் அவரின் சொத்து மதிப்பு ரு. 68.7 என தனது தேர்தல் கமிஷனில் சமர்பித்துள்ள அபிடவிட்டில் தெரிவித்துள்ளார். அதிமுக அமைச்சரவையில் மந்திரியாக இருந்த இவர்தான் தற்போது அதிக சொத்து மதிப்பு உடையவர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
குடும்ப மற்றும் சுகாதார அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தன்னுடைய சொத்து மதிப்பாக 2016 ஆண்டில் ரூபாய் 9.18 கோடி என்று அறிவித்திருந்தார். தற்போது 2021 ஆண்டில் அவரின் சொத்து மதிப்பு ரூபாய் 61.5 கோடி என அறிவித்துள்ளார். அதிமுக அமைச்சரவையில் அதிக சொத்துக்களுடைய நபர்களில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இரண்டாமிடத்தில் வகிக்கிறார்.
2016 ஆம் ஆண்டில் தங்களின் சொத்து மதிப்பு ரூபாய் ஒரு கோடிக்கு கீழ் என தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்த அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ராயபுரம் ஜெயகுமார், ராஜலட்சுமி, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர், தற்போது தாக்கல் செய்துள்ள சொத்து விபர பட்டியலின் சொத்துவிவரப்படி கோடீஸ்வரர்கள் என தெரிய வருகிறது.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருக்கும் அன்பழகன், 2016 ஆண்டில் ருபாய் 2.4 கோடி என தனது சொத்து மதிப்பாக அறிவித்திருந்தார். 2021 ஆண்டில், தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்த அபிடவிட்டில் தன்னுடைய சொத்து மதிப்பு ரூபாய் 19.27 கோடி என அறிவித்திருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் அமைச்சர் அன்பழகனின் சொத்து மதிப்பு 8 மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது.
அதிமுக அமைச்சர்களின் சொத்து மதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் கிடுகிடுவென உயர்ந்து இருந்தாலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மாஃபா பாண்டியராஜன், தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சார அமைச்சரும் தாக்கல் செய்துள்ள அபிடவிட்டில், சொத்து மதிப்பு 2016 ஆண்டில் இருந்ததை விட 2021-ம் ஆண்டில் மிகவும் குறைத்து காட்டி தேர்தல் ஆணையத்தில் அபிடவிட் தாக்கல் செய்துள்ளது ஆச்சர்யமாக உள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 2016 ஆண்டில் தனது சொத்து மதிப்பாக ரூபாய் 7.8 கோடி காட்டியிருந்தார், தற்போது தனது சொத்தின் மதிப்பு ரூபாய் 6.7 கோடியாக குறைந்திருப்பதாக 2021 ஆம் அபிடவிட்டில் காட்டியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தன்னுடைய மகன், மகள், மற்றும் மருமகளது சொத்து விவரங்களை 2021 ஆம் ஆண்டு தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்துள்ள அபிடவிட்டில் தாக்கல் செய்யவில்லை. இது ‘இந்து கூட்டு குடும்ப’ (hindu undivided family) சொத்தாக இருப்பதால், முதல்வர் இதனை தாக்கல் செய்யவில்லை என அவருக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.
முதல்வர் எடப்பாடியின் சொத்து, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது எப்படி குறைந்தது என்ற விவரத்தை கண்டு அதிமுக தொண்டர்களே வாய்பிளந்து ஆச்சரியப்பட்டுப் போகிறார்கள்.
அமைச்சர் ராயபுரம் ஜெயக்குமார் தன்னுடைய மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 1.8 கோடி என தேர்தல் கமிஷனில் அபிடவிட் தாக்கல் செய்திருந்தாலும், 2021 ஆண்டில் தனது குடும்ப அங்கத்தினர்களின் வருமானம் ரூபாய் 1.2 கோடி என தனது அபிடவிட்டில் தாக்கல் செய்துள்ளார்.

அதிமுகவின் மந்திரிகள் பலர் தங்களின் சொத்து மதிப்பினை பிரிக்கப்படாத, இந்து கூட்டுக்குடும்ப சொத்து என்றும் அதனால் தங்களுக்கு வரும் வருமானத்தைப் பற்றி சரியான தகவலை தற்போது தர இயலாது என்ற ஒரு வாதத்தையும் முன்வைத்து தேர்தல் கமிஷன் முன்பு தங்கள் சொத்து விவரத்தினை குறைத்து காண்பித்து உள்ளார்கள் என்று விவரம் அறிந்த ஆடிட்டர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.
அதிமுகவில் இருக்கும் பல மந்திரிகள் சொத்து மதிப்பை காட்டியுள்ள அபிடவிட்டில் தங்கள் வங்கி கடன் மற்றும் தனது குடும்ப உறுப்பினர்களிடம் பெற்ற கடன் தொகை என, தங்களின் சொத்தினை பெருக்கி கொண்டதாக தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்த அபிடவிட்டில் கூறியுள்ளது நகைச்சுவையாக இருக்கிறது என தேர்தல் அதிகாரி ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.
சில மந்திரிகள், தங்களுடைய தேர்தல் கமிஷன் அறிக்கையில் தங்கள் சொத்துக்களை குறித்து முன்னுக்குப்பின் முரண்பாடான தகவல்களை தந்து உள்ளதை பார்த்து, என்ன செய்வது என்று தெரியாமல் தேர்தல் கமிஷன் முழி பிதுங்கி நிற்கிறது (ஆளுங்கட்சி ஆயிற்றே..!).
சட்டமன்ற வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் வீரமணி, தனது வேட்பு மனுவில், 2016 ஆம் ஆண்டில் என்ன சொத்து விவரங்களை தெரிவித்திருந்தாரோ... அதையே தற்போது 2021-ம் தேர்தலிலும் அப்படியே கட் அண்ட் பேஸ்ட் முறையில் சொத்துவிவரங்களை தாக்கல் செய்திருக்றார். 2021 ஆண்டு தாக்கல்செய்த வேட்பு மனுவில் தனது சொத்துக்கள் குறித்த விவரங்களை தவறாக தாக்கல் செய்துள்ளார் என்ற விவரம் வெளியாகியுள்ளது. ஆனால், தேர்தல் கமிஷன் அதிகாரிகள், சொத்து மதிப்பில் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டாமல் அனைத்து ஆளுங்கட்சி அமைச்சர்கள், சட்டமன்ற வேட்பாளார் மனுக்களும் சரியாக இருக்கிறதென்று தேர்தல் அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனர் என்ற பரவலான செய்தியும் உலா வருகிறது.
அதிமுக அமைச்சரவையில் உள்ள 30 அமைச்சர்களில் 27 அமைச்சர்களுக்கு மட்டுமே தற்போது சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்பட்டுள்ளதால், இவர்களின் சொத்து மதிப்பு மட்டும் தற்போது ஆராயப்பட்டுள்ளது.
தற்போது தமிழ்நாடு அமைச்சர்கள் அவர்களது மனைவிமார்கள் மற்றும் குடும்பத்தாரின் அசையா சொத்துகள் 2016 ஆம் ஆண்டில் ரூபாய் 154.65 கோடி எனவும், தற்போது 2021-ல் அவர்களது அசையா சொத்தின் மதிப்பு 326.47 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக டாப் 5 அமைச்சர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிக அளவில் சொத்து சேர்த்த கே.சி. வீரமணி ரூபாய் 68.7 கோடி, சி. விஜயபாஸ்கர் ரூபாய் 61.5 கோடி, பெஞ்சமின் ரூபாய் 25.6 கோடி, அன்பழகன் ரூபாய் 18.8 கோடி, கே.சி. கருப்பண்ணன் ரூபாய் 18.2 கோடி என தாங்கள் தாக்கல் செய்த சொத்து மதிப்பு விவர பட்டியலில் தங்களின் சொத்து மதிப்பை அறிவித்து இருந்தனர்.
இதில் ஒரு வேடிக்கை குறைந்த அளவு சொத்து மதிப்பு உள்ள மந்திரிகள் வெல்லமண்டி நடராஜன் ரூபாய் 2.1 கோடி, தங்கமணி ரூபாய் 1.86 கோடி ஆர்.பி. உதயகுமார் ரூபாய் 1.83 கோடி, ஜெயகுமார் ரூபாய் 1.8 கோடி, ஓ.எஸ். மணியன் ரூபாய் 1.61 கோடி சொத்து மதிப்பு உடையவர்கள் என்று தேர்தல் கமிஷன் அபிடவிட் தெரிவிக்கிறது.
கடந்த ஐந்தாண்டுகளில் அதிமுக ஆட்சியில் சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்த 5 மந்திரிகளின் பட்டியலில் தற்போது வெளியாகியுள்ளது. சேவூர் ராமச்சந்திரன் 14.9 கோடி அதாவது 581 சதவீதம் சொத்து மதிப்பு என்று உள்ளது.
செல்லூர் ராஜு 6.5 கோடி கடந்த 5 ஆண்டுகளில் 445 சதவீதம் அவரின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.
துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், இவரின் சொத்து மதிப்பு ரூபாய் 7.2 கோடி 409 சதவீதம் உயர்ந்துள்ளது. வி.எம். ராஜலட்சுமி ரூபாய் 2.66 கோடி தான் என்றாலும் இவர்து சொத்து மதிப்பு 359 சதவீதம் உயர்ந்திருக்கிறது. எம்.ஆர். விஜயபாஸ்கர் ரூபாய் 9.5 கோடிதான். அதாவது 173 சதவீதம் இவரின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் உயர்ந்துள்ளது.
கடந்த ஓராண்டு காலமாக கொரோனா நோய் பரவலால், தமிழகத்திலே லாக் டவுன் செய்யப்பட்டு இருந்தாலும், ஆளுங்கட்சி மந்திரிகளினுடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் வளர்ச்சி விகிதம் பிரமிக்க வைக்கிறது என்பதை அவர்கள் தாக்கல் செய்துள்ள தேர்தல் கமிஷன் அபிடவிட் தெளிவாக்கிறது.
கடந்த ஐந்தாண்டுகளில் அமைச்சர்களின் சொத்து இரட்டிப்பாகி உள்ளது… அதிமுக மந்திரி ஒருவரின் சராசரி கடன் ரூபாய் 1.98 கோடி எனவும், அதே போன்று அதிமுக மந்திரியின் ஒவ்வொருவரின் குறைந்தபட்ச சொத்து மதிப்பு ரூபாய் 12.9 கோடி என்ற தகவல் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள அபிடவிட் மூலம் தெரிகிறது.
என்னதான் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, அளவுக்கு அதிகமான சொத்து குவிப்பு சட்டங்கள், பினாமி சட்டங்கள் இருந்தாலும் பதவியில் இருக்கும் அமைச்சர்களுக்கு இது பொருந்தாது என்பது எழுதப்படாத விதியாக உள்ளது என்று தேர்தல் கமிஷனிலுள்ள ஓர் உயர் அதிகாரி வேதனையுடன் தெரிவித்தார்.
தற்போது அமைச்சர்கள் மீண்டும் சட்டமன்ற வேட்பாளராக உங்கள் முன் போடுங்கமா ஓட்டு..! என்ற கேட்டு வலம் வந்து கொண்டு இருக்கின்றனர். எப்படி இருந்த தமிழகம்…! இன்று இப்படி மாறிப் போனதற்கு யார் காரணம்?! என்பதை வாக்காளர்கள் ஏப்ரல் 6 தேதி வாக்களிக்கும் முன் சிந்திக்க வேண்டும்!

Leave a comment
Upload